நான்மணிமாலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நான்மணிமாலை என்பது தமிழில் உள்ள 90 பிரபந்த வகைகளுள் ஒன்று. அந்தாதியாக நாற்பது செய்யுள்களில் அமையும் இப் பிரபந்த வகையில் வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் என்னும் பாடல் வகைகள் மாறி மாறி அமைந்து வரும். இவ்வாறு நான்கு பா வகைகள் மாலை போல் கோர்வையாக அமைவதாலேயே இது நான்மணிமாலை எனப்படுகின்றது.
எடுத்துக்காட்டு
சுப்பிரமணிய பாரதியார் பாடிய விநாயகர் நான்மணிமாலையில் இருந்து முதல் நான்கு பாடல்களும், ஐந்தாம் பாடலின் பகுதிகளும் எடுத்துக் காட்டாகத் தரப்பட்டுள்ளன. முதல் பாடல் முடியும் சொல்லில் இரண்டாம் பாடல் தொடங்குவதையும் அவ்வாறே இரண்டாம், மூன்றாம், நான்காம் பாடல் முடியும் சொற்களில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பாடல்கள் தொடங்குவதையும் காணலாம். முதல் நான்கு பாடல்களும் வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய செய்யுள் வடிவில் அமைந்திருப்பதையும், ஐந்தாம் பாடல் மீண்டும் வெண்பாவாக அமைந்துள்ளதையும் காணலாம்.
விநாயகர் நான்மணிமாலை
வெண்பா
- சக்திபெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
- சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தனே!
- நின்றனுக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யுநூல்
- இன்றிதற்குங் காப்பு நீயே.
கலித்துறை
- நீயே சரணம் நின தருளே சரணஞ் சரணம்
- நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்
- வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்
- தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே.
விருத்தம்
- செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;
- சீர்பெற்றிட நீ யருள் செய்வாய்,
- வையந் தனையும் வெளியினையும்
- வானத்தையு முன் படைத்தவனே!
- ஐயா, நான் முகப் பிரமா,
- யானைமுகனே, வாணிதனைக்
- கையாலணைத்துக் காப்பவனே,
அகவல்
- கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
- சிற்பர மோனத் தேவன் வாழ்க!
- வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
- ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
- படைப்பபுக் கிறையவன் பண்ணவர் நாயகன்
- இந்திர குரு என திதயத் தொளிர்வான்
- சந்திரமவுலித் தலைவன் மைந்தன்
- கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
- குணமதிற் பல வாம்; கூறக் கேளீர்;
- உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
- அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
- திக்கெல்லாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்
- கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
- விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
- துச்ச மென்றெண்ணித் துயரிலா திங்கு
- நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்றோங்கலாம்;
- அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
- வித்தை வளரும்; வேள்வி யோங்கும்;
- அமரத் தன்மையு மெய்தவும்
- இங்கு நாம் பெறலாம்; இ·துணர் வீரே.
வெண்பா
- உணர்வீர், உணர்வீர் உலகத்தீரிங்குப்
- புணர்வீர் அமரருறும் போகம் - கணபதியைப்
- ..............
Remove ads
நான்மணிமாலைகள் சில
- கதிரை நான்மணிமாலை - நெ. வை. செல்லையா (வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்)
- கந்தவனக்கடவை நான்மணிமாலை - சோமசுந்தரப் புலவர் (நவாலி, யாழ்ப்பாணம்)
- நல்லை நான்மணிமாலை - ச. சபாரத்தின முதலியார் (கொக்குவில், யாழ்ப்பாணம்)
- பாண்டித்துரைத்தேவர் நான்மணிமாலை - சிவசம்புப் புலவர் (உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)
- புலோலி நான்மணிமாலை - சிவசம்புப் புலவர் (உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்)
- நால்வர் நான்மணிமாலை - சிவப்பிரகாச சுவாமிகள்
- கோயில் நான்மணிமாலை - பட்டினத்தார்
- விநாயகர் நான்மணிமாலை - சுப்பிரமணிய பாரதியார்
- திருவாரூர் நான்மணிமாலை -குமரகுருபரர்
Remove ads
உசாத்துணைகள்
- சதாசிவம், ஆ. (தொகுப்பாசிரியர்), ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம், சாகித்திய மண்டல வெளியீடு. கொழும்பு. 1966.
- குப்பன், நா., நால்வர் நான்மணிமாலை உரை ஆய்வு, தமிழ் மலர்ப் பதிப்பகம், சென்னை. 1994.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads