படிக்காத மேதை

ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

படிக்காத மேதை (Padikkadha Medhai) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். வி. ரங்கராவ், கண்ணாம்பா, சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது ஆஷாபூர்ணா தேவியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 1953 ஆம் ஆண்டு வங்கமொழித் திரைப்படமான ஜோக் பியோக் என்ற படத்தின் மறு ஆக்கம் ஆகும். இப்படம் 1960, சூன், 25 அன்று வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. பின்னர் இது தெலுங்கில் ஆத்மபந்துவு (1962) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது, ரங்கா ராவ் மற்றும் கண்ணாம்பா அவர்களின் பாத்திரங்களில் மீண்டும் நடித்தார்.[2] மேலும் இந்தியில் பீம்சிங்கால் மெஹர்பான் (1967) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யபட்டது.[3]

விரைவான உண்மைகள் படிக்காத மேதை, இயக்கம் ...
Remove ads

கதை

ராவ் பகதூர் சந்திரசேகர், ஒரு பணக்காரர், அவரது மனைவி பார்வதி, மூன்று மகன்கள் (தியாகு, ஸ்ரீதர், ரகு), அவர்களது மனைவிகள் மற்றும் இரண்டு மகள்கள் (ஒரு மகள் கைம்பெண் மற்றொருவர் திருமணமாகாதவர்) ஆகியோருடன் வசிக்கிறார். அந்தக் குடும்பத்தின் படிக்காத, அப்பாவியான, விசுவாசமிக்க வேலைக்காரன் ரங்கன். அவன் இந்த குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே உள்ளான். அவனை ஒரு தத்துப் பிள்ளை போலவே சந்திரசேகரும், பார்வதியும் வளர்க்கின்றனர். தன் தோழியின் மகள் இலட்சுமியை பார்வதியின் மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாக பார்வதி இறக்கும் தருவாயில் உள்ள ஏழை தோழிக்கு உறுதியளிக்கிறாள். ஆனால் அவளது மகன் வேறொரு பெண்ணைக் காதலிப்பதால், பார்வதியின் வாக்கைக் காப்பாற்ற ரங்கன் இலட்சுமியை மணக்க சம்மதிக்கிறான். தன் இளைய மகளின் நிச்சய நாளன்று, சந்திரசேகர் பங்குச் சந்தையில் பெரும் நட்டம் அடைகிறார். பொருளாதாரத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தைக் கண்டு மணமகனின் தந்தையால் நிச்சயதார்த்தம் இரத்து செய்யப்படுகிறது. குடும்பம் கடனில் மூழ்குகிறது. இதனால் வீட்டின் தலைவிதி தலைகீழாக மாறுகிறது. மகன்களின் நடத்தையும் கடுமையாக மாறுகிறது.

ரகுவும் இலட்சுமியும் சந்திரசேகரையும், பார்வதியையும் நன்றாக கவனித்துக் கொண்டாலும், குடும்ப உறுப்பினர்கள் இப்போது அவர்களை அவமதித்து, மதிப்புமிக்க பொருட்களை இலட்சுமி திருடியதாக பொய்யாக குற்றம் சாட்டுகிறார்கள். இலட்சுமி ரங்கனிடம் வீட்டை விட்டு வெளியேறவேண்டுமென்று கெஞ்சுகிறாள், ஆனால் அவன் அதற்கு மறுக்கிறான். நிலைமையைப் புரிந்து கொண்ட சந்திரசேகரும் பார்வதியும் ரங்கனையும், இலட்சுமியையும் வலுக்கட்டாயமாக அனுப்பி, அவர்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்கின்றனர். அப்பாவியான ரங்கன் அங்கிருந்து வெளியேறி ஒரு தொழிற்சாலையில் வேலை பெறுகிறான். சந்திரசேகர் ரங்கன் இல்லாமல் வாழ முடியாது தத்தளிக்கிறார். ரங்கன் அவருக்கு பிடித்த சுருட்டுகளை பரிசளிக்க பணத்தைச் சேமிக்கிறார். சந்திரசேகரைப் பார்க்கவரும் ரங்கன் அவருக்கு சுருட்டுகளை வழங்கும்போது, ​​சந்திரசேகரின் குடும்பத்தினரால் செலவளி சந்திரசேகர் என்று கண்டிக்கப்படுகிறார். ரங்கன் மனம் உடைந்து வெளியேறுகிறான்.

ரங்கன் சந்திரசேகரின் குடும்பத்துக்கு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உதவ முயற்சிக்கிறான். சந்திரசேகர் கடன் வழக்குகளில் உழல்கிறார்; மன அழுத்தத்தை தாங்க முடியாமல் கடைசியில் அவர் இறந்து விடுகிறார். பார்வதி தன் பிள்ளைகளால் புறக்கணிக்கப்படுகிறாள்; அவள் நோய்வாய்ப்பட்டுகிறாள், ரங்கன் அவளின் சிகிச்சைக்கு உதவுகிறான். கடன்காரர்கள் தங்கள் மீதிக் கடன் தொகையை வசூலிக்க சந்திரசேகரின் வீட்டை ஏலம் விடுவதாக அறிவிக்கின்றனர். சந்திரசேகரின் மகன்கள் தங்கள் வீட்டைக் காப்பாற்ற எதுவும் செய்யாமல் இருக்கின்றனர். தொழிற்சாலை முதலாளியின் மகனை (சந்திரசேகரின் மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்வதாக இருந்து ரத்து செய்யப்பட்டவர்) ஒரு விபத்தில் இருந்து ரங்கன் காப்பாற்றுகிறான். முதலாளி ரங்கனுக்கு பணத்தை வழங்குகிறார், ஆனால் பணத்தை வாங்க மறுக்கிறான். ஆனால் அவரது மகனுக்கு சந்திரசேகரின் இளைய மகளை திருமணம் செய்து வைக்கும்படி அவரை வேண்டுகிறான். முதலாளி சந்திரசேகரின் வீட்டை ஏலத்தில் வாங்கி, அதை தனது மகனைக் காப்பாற்றியதற்காக ரங்கனுக்கு பரிசளிக்கிறார். அதை ரங்கன் சந்திரசேகரின் குடும்பத்திற்கு கொடுக்கிறான். இறுதியில் ரங்கன் குடும்பத்தினர் அனைவரையும் ஒன்றுசேர்க்கிறான்.

Remove ads

நடிப்பு

நடிகர்கள்
நடிகைகள்
Remove ads

தயாரிப்பு

படிக்காத மேதை என்பது 1953 ஆம் ஆண்டு வங்கமொழித் திரைப்படமான ஜோக் பியோக்[6] என்ற படத்தின் மறு ஆக்கம் ஆகும். இது ஆஷாபூர்ணா தேவியின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.[7] இப்படத்தை தமிழில் மறு ஆக்கம் செய்யும் உரிமையை தயாரிப்பாளர் என். கிருஷ்ணசாமி வாங்கினார். பிறகு, சி. வி. ஸ்ரீதர் உரையாடல் எழுதினால் நன்றாக இருக்கும் என்று கருதி, அவரை படம் பார்க்கவேத்தார். இந்தப் படம் ஒடாது என்று கருதிய ஸ்ரீதர், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த வாய்ப்பை நிராகரித்தார். தனக்கு பதிலாக தனது உதவியாளர் கே. எஸ். கோபாலகிருஷ்ணனை பயன்படுத்திக் கொள்ளுமாறு பரிந்துரைத்தார். வங்க மொழிப் படத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட சிவாஜி கணேசன் படத்தின் மறு ஆக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஏ. பீம்சிங்கையும் இயக்குநராக அமர்த்துமாறு பரிந்துரைத்தார். தயாரிப்பாளர் முதலில் நாயகி பாத்திரமான இலட்சுமி பாத்திரத்துக்கு கவர்ச்சியான நடிகையை நடிக்க வைக்க விரும்பினார், ஆனால் கோபாலகிருஷ்ணன் சவுகார் ஜானகியை பரிந்துரைத்து, அவரை ஒப்பந்தம் செய்யாவிட்டால் படத்திலிருந்து விலகுவதாக மிரட்டினார்.[8] இயக்குநர் பீம்சிங் கோபாலகிருஷ்ணனுக்கு வசனம் எழுத போது முழு சுதந்திரம் கொடுத்தார்.[9]

பாடல்கள்

படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[10][11] மத்தியமாவதி இராகத்தில் அமைந்த "எங்கிருந்தோ வந்தான்" பாடல், சுப்பிரமணிய பாரதியின் கவிதையை அடிப்படையாகக் கொண்டது.[4][12][13]

மேலதிகத் தகவல்கள் பாடல், பாடகர்கள் ...
Remove ads

வெளியீடும் வரவேற்பும்

படிக்காத மேதை 1960, சூன், 25 அன்று வெளியானது.[14] இந்தியன் எக்சுபிரசு படத்தை விமர்சனம் செய்தது, குறிப்பாக சிவாஜி கணேசனின் நடிப்பை பாராட்டியது.[15] கல்கியின் காந்தன் கோபாலகிருஷ்ணனின் உரையாடல்களையும், சிவாஜி கணேசன் உட்பட பல்வேறு நடிகர்களின் நடிப்பையும் பாராட்டினார், ஆனால் இசையை விமர்சித்தார், "ஒரே ஒரு ஊரிலே" பாடல் மட்டுமே மறக்க முடியாத பாடல் என்று கூறினார்.[5] எல்லோரும் நன்றாக நடித்திருந்தாலும், விமர்சகர் திரையரங்கை விட்டு வெளியேறிய பிறகும் அவர்களின் கண்களில் நிலைத்திருப்பது சிவாஜி கணேசனின் நடிப்பு என்று ஆனந்த விகடன் கூறியது. எழுத்தை வெற்றியாக மாற்றும் கலையை கோபாலகிருஷ்ணன் கற்றுக்கொண்டதற்காக சி. வி. ஸ்ரீதர் பாராட்டினார். இப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[9]

Remove ads

மரபு

படிக்காத மேதை தமிழ்த் திரைப்படத்தின் ஒரு டிரெண்ட்செட்டராக கருதப்படுகிறது, இதில் உண்மை நிறைந்த படிக்காத வேலைக்காரன் குடும்பத்திற்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்து அவர்களின் நல்வாய்ப்பில் மாற்றத்தை கொண்டு வருவான், ஒரு நல்ல மனிதனுக்கு கல்வி தேவையில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது. முத்து எங்கள் சொத்து (1983), வாழ்க்கை (1984), பேர் சொல்லும் பிள்ளை (1987), பொன்மனச் செல்வன் (1989) ஆகியவை இந்தப் போக்கைப் பின்பற்றிய திரைப்படங்களாகும்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads