பாலின விகிதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாலின விகிதம் அல்லது பால் விகிதம் (Sex ratio) என்பது மக்கள்தொகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயுள்ள விகிதத்தைக் குறிக்கிறது. பாலின விகிதம் பிற உயிரினங்களிலும் கணக்கிடப்படுகிறது. மானிடவியலாளர்கள் (anthropologists), மக்கள் தொகையியலாளர்கள் (demographers) போன்றவர்கள் மனிதர்களின் பாலின விகிதத்தைக் குறித்து அறிவதில் பெரும் ஆர்வமுடையவர்களாக உள்ளார்கள். என்றாலும் குழந்தைப் பிறப்பின்போது கணக்கிடப்படும் பாலின விகிதாச்சாரங்கள் தாய்மார்களின் வயது[1], தேர்ந்தெடுத்த கருக்கலைப்பு/சிதைப்புகள்[2][3], சிசுக் கொலைகள்[4][5][6] ஆகியக் காரணிகளால் பெருமளவு ஒருபக்கச் சாய்வினைக் கொண்டவையாக உள்ளன. உயிர்கொல்லி மருந்துகள் (pesticides), பிற சுற்றுச்சூழல் மாசுகளுக்கு ஆட்படுதல் போன்றவை பாலின விகிதத்தை பாதிக்கும் முக்கியமானக் காரணிகளுள் ஒன்றாக இருக்கலாம்[7]. 2014 ஆம் ஆண்டுக் கணக்கின்படி குழந்தைப் பிறப்பின்போது உலகளாவியப் பாலின விகிதம் 107 ஆண்குழந்தைகளுக்கு 100 பெண்குழந்தைகள் (1000 சிறுவன்களுக்கு 934 சிறுமிகள்) என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது[8].
Remove ads
பாலின விகித வகைகள்
பெரும்பாலான உயிரினங்களில் பாலின விகிதமானது அவ்வுயிரினங்களின் ஆயுட்கால விவரங்களைப் பொறுத்து மாறுபடுகிறது[9]. இது, பொதுவாக நான்கு உட்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது:
- முதன்மைப் பாலின விகிதம் — கருத்தரிப்பின்போதுள்ள பாலின விகிதம்
- இரண்டாம்நிலைப் பாலின விகிதம் — பிறப்பின்போதுள்ள பாலின விகிதம்
- மூன்றாம்நிலைப் பாலின விகிதம் — இனச்சேர்க்கைக்கு உகந்த உயிரினங்களின் பாலின விகிதம் [இது வயது வந்தோர் பாலின விகிதம் (adult sex ratio; ASR) என்றும் அழைக்கப்படுகிறது. மக்கள்தொகையில் வயது வந்தோரில் உள்ள ஆண்களின் வீதத்தை வயது வந்தோர் பாலின விகிதம் குறிக்கிறது[10]].
- நான்காம்நிலைப் பாலின விகிதம் — இனப்பெருக்க நிலையைக் கடந்த உயிரினங்களின் பாலின விகிதம்
என்றாலும் தெளிவான வரையறைகள் (எல்லைகள்) இல்லாததால் மேலுள்ள விகிதங்களை கணக்கிடுவது கடினமாக உள்ளது.
Remove ads
பால் விகிதக் கோட்பாடு
பால் விகிதக் கோட்பாடு என்பது இனப்பெருக்க உயினங்களின் பாலின விகிதத்தை அவ்வுயிரினங்களின் இயற்கையான வரலாற்றை கொண்டு துல்லியமாகக் கணிப்பதைக் குறித்துப் படிப்பதாகும். இத்துறையில் பாலின ஒதுக்கீடு (Sex Allocation) என்னும் தலைப்பில் எரிக் சார்நோவ் என்பவரால் 1982 ஆம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகத்தின் தாக்கம் இன்றளவும் பெருமளவு உள்ளது[11]. இவர் ஐந்து முக்கியமான கீழ்காணும் கேள்விகளைப் புத்தகத்திலும், பொதுவாக இத்துறையிலுள்ளவர்களை நோக்கியும் எழுப்புகிறார்:
- இருமயக்கலப்பினத்தில் (dioecious species) எவ்விதம் இயற்கைத்தேர்வு முறையில் பாலினவிகிதச் சமநிலைப் பராமரிக்கப்படுகிறது?
- தொடர் இருபாலியில் (sequential hermaphrodite) எத்தகு பாலினச்சீர்மைச் சமநிலை நிலவுகிறது? இவ்வுயிரிகளில் எப்பொழுது பாலின மாற்றம் நிகழ்கிறது?
- சமகால இருபாலியில் (simultaneous hermaphrodite) ஒவ்வொரு இனப்பெருக்கக் காலத்திலும் ஆண், பெண் செயற்பாடுகளுக்குத் தேவையான வளங்கள் எவ்விதம் சமமாக ஒதுக்கீடுச் செய்யப்படுகிறது?
- இருபாலி அல்லது இருமயக்கலப்பினத்தின் பல்வேறு நிலைகளும், பரிணாமக் கூற்றின்படி எவ்விதமானப் படிநிலைகளில் நிலையாக உள்ளன?
- குறிப்பிட்டச் சூழல் அல்லது வாழ்க்கைப் பருவத்திற்கு ஏற்றபடி ஒரு உயிரினம் ஆண், பெண் செயற்பாடுகளுக்குத் தேவையான வளங்களை மாற்றி உபயோகப்படுத்திக் கொள்ளும் திறனை எப்பொழுது இயற்கைத்தேர்வு சாதகமாகச் செயற்படுத்துகிறது?
பாலின விகிதத்தை அறிந்து கொள்வதைக் காட்டிலும், பாலின ஒதுக்கீடு (ஒவ்வொரு பாலினத்திற்கும் ஒதுக்கப்படும் சக்தி ஒதுக்கீடு) குறித்து அறிவதையே உயிரின ஆய்வுகள் முதன்மையாகக் கருத்தில் கொள்கின்றன.
Remove ads
பிஷரின் கோட்பாடு
பெரும்பாலான உயிரினங்களில் பாலின விகிதம் ஏறத்தாழ 1:1 ஆக இருப்பது ஏன் என்பது குறித்து பிஷரின் கோட்பாடு விளக்குகிறது. 1967 ஆம் ஆண்டு, பில் ஹாமில்டன் என்பவர் "அசாதாரணப் பாலின விகிதம்" என்னும் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையில்[12] (ஆண், பெண் இரு சந்ததிகளுக்கும் பெற்றோரின் பராமரிப்பு சமமாக இருப்பதாக கொள்ளும் பட்சத்தில்) பிஷரின் கோட்பாட்டை கீழ் கண்டவாறு விளக்குகிறார்:
- முதலில் ஆண் பிறப்புகள், பெண் பிறப்புகளைக் காட்டிலும் குறைவாக இருப்பதாகக் கொள்வோம்.
- இச்சூழலில் புதிதாகப் பிறந்த ஆணுக்கு, புதிதாகப் பிறந்தப் பெண்ணைக் காட்டிலும் இனச்சேர்க்கைக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். எனவே, அதிகமான சந்ததிகள் உருவாகும் வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது.
- எனவே, பரம்பரையாக ஆண் குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர்களுக்கு சராசரியைக் காட்டிலும் அதிகமாகப் பேரக் குழந்தைகள் பிறப்பது சாத்தியமாகிறது.
- இதனால், ஆண் குழந்தைகள் உருவாவதற்கு சாதகமாக உள்ள மரபணுக்கள் பரவலாகி, ஆண் பிறப்புகள் அதிகமாகிறது.
- பாலின விகிதம் ஏறத்தாழ 1:1 ஐ நெருங்கும்போது, ஆண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதின் ஆதாயம் குறைந்துவிடுகிறது.
- மேற்கூறிய அனைத்து சூழல்களிலும் ஆண் பிறப்புகளுக்கு பதிலாக பெண் பிறப்புகளை மாற்றீடாகக் கொண்டாலும், இதேக் காரணங்களினால் பாலின விகிதம் ஏறத்தாழ 1:1 வீதமாக இருப்பது சாத்தியமாகிறது. எனவே, பாலின விகிதம் 1:1 ஆக இருப்பதே சமநிலையாகும்.
நவீன வழக்கில், பாலின விகிதம் 1:1 ஆக இருப்பதே பரிணாமத்தின்படியான நிலையான உத்தி (evolutionarily stable strategy; ESS) எனக் கருதப்படுகிறது[13].
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads