உயிரினம்

From Wikipedia, the free encyclopedia

உயிரினம்
Remove ads

உயிரியியலிலும், சூழ்நிலையியல் அல்லது இயற்கை அறிவியலிலும் (ecology), ஓர் உயிரினம் என்பது நிலம், நீர், காற்றில் காணப்படும் உயிர் வாழும் பண்புடைய அனைத்து வகை நுண்ணுயிர்கள், தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றைக் குறிக்கும். வாழும் உயிர்த்தொகுதிகளனைத்தும் உயிரினங்களாகும். இதுவரை 'உயிர்' என்ற சொல்லுக்கான முறையான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. எனினும் அவற்றுக்கிடையில் காணப்படும் சில பொதுவான பண்புகளைக் கொண்டு அவற்றை உயிரற்ற பொருட்களிலிருந்து இலகுவாக வேறுபடுத்திக் கொள்ள முடியும். உயிரினங்களின் மிக அடிப்படையான பண்புகள் அனுசேபமும் இனப்பெருக்கமுமாகும். இவ்விரு அடிப்படை இயல்புகளைக் காட்டாதவை உயிரினமாகக் கருதப்படுவதில்லை. உதாரணமாக வைரஸ் என்பதை ஒரு மூலக்கூறாகவே அறிவியலாளர்கள் கருதுவர். வைரஸ்களால் சுயமாக அனுசேபத்திலோ இனப்பெருக்கத்திலோ ஈடுபட முடியாது.


மேலதிகத் தகவல்கள் உயிரினங்கள் பட்டியல்கள் ...
Thumb
நண்டுகள் - உயிரினத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு

உயிரினங்கள் ஒருகல உயிரினமாகவோ பல்கல உயிரினமாகவோ காணப்படலாம். பல்கல உயிரியின் ஒவ்வொரு தனிக்கலமும் மற்றைய கலங்களில் தங்கியுள்ளன. ஒவ்வொரு கலத்தாலும் தனித்துச்செயற்பட முடியாது.

உயிரினங்களை கலத்தில் கருவுள்ள மெய்க்கருவுயிரிகளாகவும் கலத்தில் கருவற்ற நிலைக்கருவிலிகளாகவும் பாகுபடுத்தலாம். ஆர்க்கியா மற்றும் பக்டீரியா ஆகிய பேரிராச்சியங்கள் நிலைக்கருவிலிகளுக்குள் அடங்குவதுடன் மெய்க்கருவுயிரி தனியான பேரிராச்சியமாக உள்ளது. மனிதன் உட்பட விலங்குகள், தாவரங்கள், புரட்டோசோவாக்கள், பங்கசுக்கள், அல்காக்கள் என்பன மெய்க்கருவுயிரிகளாகும்.

Remove ads

வரையறை

ஒன்றாக தொகுக்கப்பட்ட மூலக்கூறுகள் செயல்பட்டு அதிகமாகவோ அல்லது பகுதியளவோ நிலைப்புத்தன்மையுடையன வாழ்வியல் பண்புகளை வெளிப்படுத்துபவை என உயிரினங்களைக் கருதலாம்.உயிரினங்கள் என்பதற்கு அகராதிகளில் கூறப்படும் வரையறைகள் பரந்து பட்டதாக இருக்கலாம் “தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியங்கள் போன்ற எந்த எந்தவொரு வாழும் உயிரின அமைப்பும் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை மேற்கொள்கின்றன” [1].இது போன்ற பல வரையறைகள் தீ நுண்மங்கள் (வைரஸ்கள்) மற்றும் சாத்தியமான மனிதனால் உருவாக்கப்பட்ட கரிம அல்லாத உயிரினங்களைப் பற்றி விளக்குகிறது, ஏனெனில் வைரஸ்கள் என்றழைக்கப்படும் தீ நுண்மங்கள் இனப்பெருக்கம் மேற்கொள்ள ஒரு ஓம்புயிர் செல்லின் உயிர்வேதியியல் இயங்குமுறையைச் சார்ந்தே உள்ளன[2].கரையான் உள்ளிட்ட சிறப்புயிரினங்கள் (superorganism) ஒன்றாகச் சேர்ந்து ஒரே பணியைச் செய்யும் ஒவ்வொரு தனிப்பட்ட உயிரினங்களைக் கொண்ட ஒற்றைச் செயல் அலகுகளாகவோ அல்லது சமூக அலகுகளாக செயல்படுகின்றன [3]. உயிரினம் என்ற சொல்லை வரையறை செய்வதில் சிறப்பான முறை எது என்பது பற்றிய சர்ச்சைகள் நீடிக்கின்றன [4][5][6][7][8][9][10][11][12] அத்தகைய வரையறை அவசியமா இல்லையா என்பதைப் பற்றிய விவாதங்களும் நடைபெறுகின்றன [13][14] .

உயிரணுசாரா வாழ்க்கை

தீ நுண்மங்கள் அல்லது வைரசுகள் (Viruses) தன்னியக்க இனப்பெருக்கம், வளர்ச்சி அல்லது வளர்சிதை மாற்றம் ஆகிய செயல்களைச் செய்ய இயலாமல் இருப்பதால், பொதுவாக அவை உயிரினங்களாக கருதப்படுவதில்லை.இத்தகைய சர்ச்சை சிக்கல் வாய்ந்தது ஏனெனில் சில உயிரணு உயிரினங்கள் (cellular organisms) சுயாதீனமான உயிர்வாழ்வதற்கு இயலாது. (ஆனால் அவை சுயாதீனமான வளர்சிதை மாற்றமும் வளர்ச்சியும் உடையவையாகும்) மற்றும் உயிரணுக்குள்ளே கடமைப்பாடுள்ள ஒட்டுண்ணிகளாக வாழ தகவமைத்துக்கொண்டுள்ளன.வைரசுகள் ஒரு சில நொதிகள் மற்றும் உயிரினங்களின் பண்புக்கூறுகளின் மூலக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன என்றாலும், அவை அவற்றின் சொந்த வளர்சிதை மாற்றத்தை கொண்டிருக்கவில்லை. மேலும் வைரசுகளால் அவை உருவாக்கப்பட்டிருக்கும் கரிமச் சேர்மங்களை ஒருங்கிணைக்கவோ தொகுக்கவோ முடியாது.வைரசுகள் ஓம்புயிரி உயிரணுக்களில் மட்டுமெ வலிமையாக செயல்பட்டு இனப்பெருக்கம் போன்ற செயல்களைச் செய்கின்றன. ஆனால் ஓம்புயிரி செல்களுக்கு வெளியே ஒரு உயிரற்ற சடப்பொருளாகவே கருதவேண்டியுள்ளது. வைரஸ்கள் சுயாதீனமான வளர்சிதை மாற்றத்தைத் தக்கவைக்கவில்லை ஆதலால் அவை வழக்கமாக உயிரினங்களாக வகைப்படுத்தப்படவில்லை இருப்பினும் அவற்றில் சொந்த மரபணுக்கள் இருக்கின்றன, அவை உயிரினங்களின் பரிணாம வழிமுறைகள் போன்ற இயங்குமுறைகளால் உருவாகின்றன. உயிரினங்களாக வைரஸ்கள் ஆதரிக்கும் மிகவும் பொதுவான வாதம், அவை பரிணாமத்திற்கு உட்பட்ட மற்றும் தன்னியக்கமாக பெருக்கமடையும் திறனுடைவதாகும்.சில விஞ்ஞானிகள் வைரசுகள் உருவாகவுமில்லை சுய-இனப்பெருக்கம் செய்யவுமில்லை என்றும் வாதிடுகின்றனர்.உண்மையில், வைரசுகள் தங்கள் ஓம்புயிர் அல்லது புரவலன் செல்கள் (host cells) மூலம் உருவாகின்றன, அதாவது, இதில் வைரஸ்கள் மற்றும் ஓம்யிபுர் செல்களின் இணை-பரிணாமம் இருப்பதாக அறியப்படுகிறது.ஓம்புயிர் செல்கள் இல்லாவிட்டால், வைரசுகளின் பரிணாமம் சாத்தியமற்றதாக இருக்கும்.இனப்பெருக்கம் செய்வதைப் பொறுத்தவரை, வைரசுகள் பெருமளவில் ஓம்புயில் செல்களின் இயங்கு செயல்முறைகளை நம்பியிருக்கின்றன [15].

Remove ads

பல உயிரினங்களில் காணப்படும் பொதுப் பண்புகள்

Thumb
நிலைக்கருவிலிகளுக்கு உதாரணமாக எஸ்சீரியா கொலி பக்றீரியா
Thumb
மெய்க்கருவுயிரிக்கு உதாரணமாக ஒரு காளான்

கட்டமைப்பு

வேதியியல்

உயிரினங்கள் அனைத்தும் மிகவும் சிக்கலான இரசாயனத் தொகுதிகளாகும். இவை தப்பி பிழைப்பதையும் இனப்பெருக்கத்தையும் நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. புவியிலுள்ள அனைத்து உயிரினங்களும் கார்பனையும் நீரையும் மைய இரசாயனக் கட்டமைப்புப் பொருட்களாகக் கொண்டு கூர்ப்படைந்துள்ளன. கார்பன் மற்றும் நீரின் இரசாயன இயல்புகள் இதற்குக் காரணமாய் அமைந்துள்ளன. கார்பனே ஐதரசனுக்கு அடுத்த படியாக மிக அதிகளவான சேர்வைகளை உருவாக்கும் தனிமமாகும். கார்பனால் ஒற்றை, இரட்டை, மற்றும் முப்பிணைப்புகளை உருவாக்க முடியும். அத்தோடு கார்பன் குறைந்த சார்பணுத்திணிவையும் சார்பளவில் அதிகமாகக் கிடைக்கும் தனிமமாகும். எனவே தான் புவியில் கார்பனை மையமாக வைத்து உயிரினங்கள் கூர்ப்படைந்துள்ளன.

நீரின் இரசாயன இயல்புகளும் புவியில் உயிரினங்களின் கூர்ப்பில் பெரும் பங்கு வகித்துள்ளது. உயிரினங்களின் நிலவுகைக்கு உதவிய நீரின் பண்புகளான உயர் தன்வெப்பக் கொள்ளளவு, உயர் உருகல், ஆவியாதல் வெப்பம், ஒட்டற்பண்பு, மயிர்த்துளைமை, மேற்பரப்பிளுவை போன்ற பண்புகளுக்கு நீரில் காணப்படும் ஐதரசன் பிணைப்பு காரணமாகும். நீர் அயனாக்கும் சக்தியையும் கொண்டுள்ளது. எனவே தான் நீரை நேரடியாக உட்கொள்ளாத பாலைவன உயிரினங்களின் உடல்களில் கூட நீர் கணிசமான சதவீதத்தைப் பிடித்துள்ளது.

மாமூலக்கூறுகள்

உயிரினங்களை புரதங்கள், காபோவைதரேட்டுக்கள், இலிப்பிட்டுக்கள் மற்றும் கருவமிலங்கள் ஆகிய நான்கு பிரதான மாமூலக்கூறுகள் (பெரிய மூலக்கூறுகள்) ஆக்கின்றன. தலைமுறையுரிமைத் தகவல்களைச் சேமிப்பதற்கும (டி.என்.ஏயில்) அத்தகவல்களை ஈடுபடுத்துவற்கும் (ஆர்.என்.ஏயின் மூலம்) கருவமிலங்கள் பயன்படுகின்றன.

புரதங்கள் உயிரினத்தில் பல்வேறு செயற்பாடுகளைப் புரிகின்றன.

  1. நொதியங்களாகத் தொழிற்பட்டு உயிர்வேதியியல் தாக்கங்களை ஊக்கப்படுத்துகின்றன.
  2. கட்டமைப்பு ரீதியான பலத்தை வழங்குகின்றன.
  3. கலச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன
  4. ஹோர்மோன்களாகச் செயற்படுகின்றன.
  5. நுண்ணுயிர்களுக்கு எதிராகத் தொழிற்பட்டு, உடலுக்குப் பாதுகாப்பு வழங்கும் பிறபொருளெதிரியாகச் செயற்படுகின்றன.

இலிப்பிட்டுகள் கலமென்சவ்வுகளை ஆக்கவும் சக்தி வழங்கவும் பயன்படுகின்றன. பொஸ்போலிப்பிட்டுகளே கலமென்சவ்வை ஆக்கும் பிரதான கூறாகும். பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வு சில வகை (கலத்துக்குத் தேவைப்படும்) பொருட்களை மாத்திரமே உள்ளனுப்பும் ஆற்றலுடையது. சில விலங்குகளிலும் தாவரங்களிலும் சக்தி சேமிக்கும் கூறாகவும் இலிப்பிட்டுக்கள் உள்ளன.

காபோவைதரேற்றுகளே உயிரினங்களில் சக்தி வழங்கலுக்குப் பயன்படும் பிரதான மாமூலக்கூறுகளாகும்.

பௌதிகக் கட்டமைப்பு

உயிரினங்களின் அடிப்படைத் தொழிற்பாட்டலகு கலமாகும். ஒருகல உயிரினங்களில் இதுவே முதன்மையானதும் இறுதியானதுமான கட்டமைப்பலகாகும். எனினும் பலகல உயிரினங்களில் கலங்கள் இழையங்களாக, அங்கங்களாக, அங்கத் தொகுதிகளாக இறுதியில் ஒரு பல்கல உயிரினமாக ஒன்று சேருகின்றன. மனிதரில் தனித்தனியான உடலியக்கங்களைக் கொண்ட, அதேசமயம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இயங்கும் பல உடல் தொகுதிகள் காணப்படுகின்றன. பல்கல உயிரினத்தில் உள்ள அனைத்து கலங்களும் ஒரே மாதிரியான டி.என்.ஏ க்களைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு கலமும் தனக்கென ஒதுக்கப்பட்ட தொழிலைச் செய்கின்றது.

கலம்

கலக்கொள்கை 1839ஆம் ஆண்டு ஸிச்சுவான் மற்றும் ஸ்க்லெய்டன் ஆகியோரால் முன்மொழியப்பட்டது. 'எல்லா உயிரினங்களும் கலங்களால் ஆக்கப்பட்டுள்ளன', 'கலமே உயிரின் அடிப்படையலகு' என்பனவே இக்கொள்கையின் அடிப்படை வசனங்களாகும். கலத்தை விடச் சிறிய கலப் புன்னகங்கள் காணப்பட்டாலும் அவற்றால் சுயமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது. எனவே கலம் என்பதே உயிருள்ளவற்றின் பண்புகளைக் காட்டும் மிகச் சிறிய அலகாகும். எல்லாக் கலங்களிலும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ உள்ளன. கலம் இரட்டை பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வால் சூழப்பட்டிருக்கும்.

Remove ads

ஆயுட்காலம்

ஒரு உயிரினத்தின் அடிப்படை அளவுருக்களில் அதனுடைய ஆயுட்காலமும் ஒன்றாகும். சில உயிரினங்கள் குறுகிய காலம் உயிர் வாழ்வதைப் போன்று சில தாவரங்களும் பூஞ்சைகளும் ஆயிரக்கணக்கான வருடங்கள் உயிர் வாழக் கூடியனவாக உள்ளன.

பரிணாமம்

பால் இனம்

தற்போதுள்ள மெய்க்கருவுயிரிகளிடையே பாலியல் இனப்பெருக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. இது மெய்க்கருவுயிரிகளின் அடிப்படை இயல்புகளில் ஒன்றாகும்.

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads