பொம்மலாட்டம்

From Wikipedia, the free encyclopedia

பொம்மலாட்டம்
Remove ads

பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இருப்பினும், உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை, மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது.

Thumb
கட்ட பொம்மலாட்டம், தமிழ்நாடு

இக்கலை, வட்டாரக்கலையோ, சடங்கியலாக நிகழ்த்தப்படும் கலையோ அல்ல. இது மரபுவழிக்கலை. பொம்மலாட்டக் கலையை நிகழ்த்துவோர் தற்போது 2 - 3 குடும்பங்கள் மட்டுமே; தோல் பாவைக்கூத்தை நிகழ்த்துவோர் மதுரை, கன்னியாகுமரி, கோவில்பட்டி, தேனி மாவட்டங்களிலும் சென்னை அருகிலும் மிகக்குறைவான அளவிலே வசிக்கிறார்கள்.[1] பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும். குறிப்பாகத் தமிழகத்தில், அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுவதுண்டு. எந்தக் கதையை எடுத்தாண்டாலும் இடையில், கரகாட்டம், காவடியாட்டம், பேயாட்டம், பாம்பாட்டம் ஆகியவற்றில் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பது மரபு. திருமகள் பொம்மலாட்டம் நிகழ்த்தி அசுரர்களையும், பேய்க் கூட்டங்களையும் விரட்டினர், என்பது வாய்மொழியாக விளங்கும் புராணக்கதையாகும்.[2]

தமிழ்நாட்டில் பொம்மலாட்டம் என்றழைக்கப்படும் இக்கலை, ஆந்திராவில் கொய்யா பொம்மலாட்டா எனவும், கருநாடகத்தில் சூத்ரதா கொம்பயேட்டா எனவும் ஒரிசாவில் கோபலீலா எனவும் மேற்கு வங்கத்தில் சுத்தோர் புதூல் எனவும் அசாமில் புதலா நாச் எனவும் இராசத்தானில் காத்புட்லி எனவும் மகாராட்டிரத்தில் காலாசூத்ரி பகுல்யா எனவும் அழைக்கப்படுகின்றது.[1] ஆங்கிலத்தில் பொம்மலாட்டத்தை மேரியோனெட்டு (marionette) என்பர்.

Remove ads

பொம்மலாட்ட முறை

பொம்மலாட்டத்தில் மொத்தமாக 9 கலைஞர்கள் பங்கேற்பார்கள். இவர்களில் 4 கலைஞர்கள் பொம்மைகளை இயக்குவார்கள். மற்றைய 4 கலைஞர்கள் இசைக்கலைஞர்களாக இருப்பார்கள். ஒருவர் உதவியாளராக இருப்பார். ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், கைத்தாளக் கருவி, முகவீணை ஆகிய இசைக்கருவிகள் இக்கலை நிகழ்த்தலுக்குப் பயன்படுத்தப்படும். தற்போது சிலர் மின் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் மரபுரீதியாக இந்தக் கலை நிகழ்த்தப்படும். அரங்கின் வலதுபுறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள். முன்புறத்தில் 1 மீட்டர் இடைவெளி விட்டு கறுப்புத் திரைச்சேலை ஒன்று கட்டப்பட்டிருக்கும். இந்தத் திரை, பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கறுப்புத் திரையின் மேல் கட்டப்பட்டிருக்கும்.

Remove ads

பொம்மைகள்

பொம்மலாட்டத்துக்குப் பயன்படும் பொம்மைகளை கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை என அழைக்கப்படும் மரத்தில் இருந்து செய்கிறார்கள். இந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்துப் பின் உலர வைத்து தலை, கால், கை என பொம்மையின் உருவங்களை தனித்தனியாக வெட்டிச் செதுக்குவார்கள். பின் மீண்டும் நன்றாக உலர வைத்து உறுப்புகளை இணைப்பார்கள். இணைக்கப்படும் உறுப்புகள் தனித்தனியாக இயங்கும் வண்ணம் இருக்கும். இந்த பொம்மைகள் 45 செ.மீட்டர் முதல் 90 சென்டி மீட்டர் வரை உயரமுடையதாக இருக்கும். பொம்மையின் உறுப்புகளுக்கு ஏற்பவும், பாத்திரங்களின் தன்மைக்கேற்பவும் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டுவார்கள். ஆரம்பகாலங்களில் எல்லாப் பொம்மைகளுக்கும் மஞ்சள் வண்ணம் மட்டுமே தீட்டப்பட்டது. தற்போது கற்பனைக்கும் பொம்மைகளின் வசீகரத்துக்கும் ஏற்ப பல வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. மரபுரீதியான கதாபாத்திரங்களுக்கு அதற்கேற்றதான மரபுரீதியான உடைகளும், சமூகக் கதைகளில் பாத்திரமாக்கப்படும் பொம்மைகளுக்கு நவீன உடைகளும் அணிவிக்கப்படும்.

Remove ads

பொம்மையை இயக்கும் முறை

பொம்மையை இயக்குவதில் சில வகைகள் உண்டு. பொம்மையின் உறுப்புகளில் கயிறுகளைப் பிணைத்து, ஒரு குச்சியில் கட்டி, அந்தக் குச்சியை அசைத்து இயக்குவது ஒரு வகை. பொம்மையின் உறுப்புகளில் கயிறுக்குப் பதில் கம்பிகளைப் பிணைத்து, அவற்றை ஒரு வளையத்தில் இணைத்து பொம்மையை இயக்கும் கலைஞர் தனது தலையில் அதை மாட்டிக்கொண்டு இயக்குவது இன்னொரு வகை. பொம்மையை இயக்குபவர் திரைக்குப் பின்னே இருப்பார். அவர் பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரிய மாட்டார். மேலும் கீழும் ஆட்டுதல், பக்கவாட்டில் ஆட்டுதல் என இருவகைகளில் பொம்மைகள் இயக்கப்படும். உயிர் அற்ற பொம்மைகள் உயிர் பெற்றுத் திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களை லயிக்கச் செய்வதே இந்தக் கலையில் எதார்த்தமான தன்மையாக உள்ளது.

இக்ககலையில் இரண்டு பாணிகள் பின்பற்றப் படுகின்றன. 1. கும்பகோணம் கலை பாணி. 2. சேலம் கலைபாணி. கும்பகோணம் கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் கர்நாடக இசையை ஒட்டிப் பாடல்களைப் பாடுவார்கள். சங்கரதாசு சுவாமிகளின் நாடகப் போக்கை கையாளும் இவர்கள் பொம்மைகளில் கம்பிகளை பிணைத்துக் கொள்கிறார்கள். சேலம் கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் ஆர்மோனியத்தைத் தவிர்த்து முகவீணையைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் கயிறுகளில் பொம்மைகளைப் பிணைத்துக் கொள்கிறார்கள்.

பொம்மலாட்டம் பற்றி வெங்கட் சாமிநாதன் கூற்றுக்கள்

[3]

Remove ads

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

இவற்றையும் காணவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads