மிருதங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிருதங்கம் அல்லது தண்ணுமை என்பது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஓர் இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது.[1]
பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும்.
மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.
Remove ads

'மிருத்+அங்கம்' என்று பகுபடும் வடமொழிச் சொல்லுக்கு 'மண்ணை அங்கமாகக் கொண்டது' என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் கடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெருத்தும், வாசிக்கும் இரு பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும். தோலால் மூடப்பட்ட இரு பக்கங்களையும், தோல்வார் இணைத்திருக்கும். வலப்பக்கத்தை வலந்தலை என்றும், இடப்பக்கத்தை இடந்தலை அல்லது தொப்பி என்றும் கூறுவர்.
வலந்தலையின் நடுவே கரணை இடப்பட்டிருக்கும். கிட்டான் என்ற ஒரு வகைக் கல்லைப் பொடியாக்கி, அதை அரிசிச் சோற்றுடன் கலப்பதன் மூலம் கிடைக்கும் கலவைக்கு சிட்டம் என்று பெயர். இந்தச் சிட்டம் அடுக்கடுக்காய் வட்டமாக வலந்தலையின் மத்தியில் இடப்படும். இதற்குக் கரணை அல்லது சோறு என்று பெயர். இந்தக் கரணையினாலேயே மிருதங்கம் ஸ்ருதி வாத்யம் ஆகிறது. அதாவது பாடகரின் ஸ்ருதியிலேயே மிருதங்கத்தின் ஸ்ருதியையும் கூட்டிக் கொள்ளும் வசதி உண்டு. தவில், கஞ்சிரா போன்ற வாத்தியங்களும் கேட்பதற்கு இனிமையாக இருப்பினும், அவற்றை பாடகர் அல்லது வீணை, குழல் முதலான வாத்தியத்தின் ஸ்ருதியோடு சேர்த்துக் கொள்ள முடியாது.
கடம் போன்ற வாத்யங்களுக்கும் ஸ்ருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ராஜ வாத்தியம் என்றும் அழைப்பதுண்டு.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் , மராட்டியர் ஆட்சியில் 'மிருதங்கம்' தமிழகத்துக்குள் நுழைந்தது என்பது இசை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.அது வரை பஜனை, ஹரிகதை, மராட்டிய நடனங்கள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்டு வந்து மிருதங்கம், தஞ்சை வந்தபின் தமிழ்நாட்டின் சங்கீதம், சதிர் முதலியவற்றிலும் இடம் பெற்றது. காலப்போக்கில், தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த லய வடிவங்களும் மிருதங்க வாசிப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின.
Remove ads
குச்சி மிருதங்கம்
வலது பக்கத்தில் இரு தோல்களுக்கு நடுவே மெல்லியக் குச்சிகளை சொருகுவர். இதன்மூலம் வித்தியாசமான ஒலியினைக் கொண்டுவர இயலும்.[2].
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads