மகா வைத்தியநாதையர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகா வைத்தியநாதையர் (எ) மகா வைத்தியநாத சிவன் (Maha Vaidyanatha Iyer, 26 மே 1844 – 27 சனவரி 1893) தஞ்சையைச் சேர்ந்த கருநாடக இசைக் கலைஞர். தாளப்பிரஸ்தானம் சாமாசாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணைப் பெருமாளையர், த்சௌகம் சீனுவையங்கார் போன்றோரைத் தொடர்ந்து கருநாடக இசையில் புகழுடன் விளங்கியவர்.[1][2][3]

பிறப்பு
வைத்தியநாத சிவன் தஞ்சைக்கும், கும்பகோணத்திற்கும் நடுவில் இருக்கும் அய்யம்பேட்டை நகரில் இருந்து தெற்கில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வையச்சேரி என்கிற கிராமத்தில் இசை, தமிழ், தெலுங்கு, சமஸ்கிருத வல்லமை கொண்ட துரைசாமி ஐயர் என்கிற பஞ்சநாத சர்மா, அருந்ததி ஆகியோருக்கு மூன்றாம் மகனாக 1844 மே 26 அன்று ஆயில்ய நட்சத்திரம் 3ஆம் பாதத்தில், கௌன்டன்ய கோத்திரத்தில், பிரஹசரணம் குலத்தில் பிறந்தார்.
இசைப் பயிற்சி
பஞ்சநாத ஐயர், தன் பிள்ளைகளான ராமசுவாமி மற்றும் வைத்தியநாதன் ஆகியோருக்குத் தானே அடிப்படை இசையைக் கற்றுக் கொடுத்தார். மேற்கொண்டு கற்றுத்தர தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்று பல மேதைகளிடம் போதனை ஏற்க செய்தார். தியாகராஜரின் நேரடி சீடரான மகா நோன்புச் சாவடி வெங்கடசுப்பையரிடம் கற்க வைத்தது சிறப்பான ஒன்று. வைத்தியநாதையர் ஏழாம் வயதிலேயே ராகம், பல்லவி பாடும் திறமை அடைந்தவர். ஒன்பது வயதிற்குள்ளேயே சங்கிரக சூடாமணி, சங்கீத ரத்னாகரம் முதலிய லட்சண நூல்களை ஆராய்ந்து தெளிந்தவர். மெலட்டூர், திருவையாறு பகுதியில் வாழ்ந்த பலப்பல வித்வான்களிடம் கற்று, அவர்களின் திறன்களை ஒருங்கே பெற்றவர்.
Remove ads
கல்விப் பயிற்சி
இசையுடன் தமிழ், சமக்கிருதம் கற்றார். தன் தந்தையிடம் பஞ்சாட்சர உபதேசம் பெற்றுக் கொண்டார். கோடக நல்லூர் சுந்தர சுவாமிகளிடம் அதர்வர்ணசரமம், சூதசம்ஹிதை, சதுர்வேத்தாத்பர்ய சங்கிரகம், சிவதத்வ விவேகம் பயின்றார். பழமாநகரி சுந்தர சாஸ்திரிகள், திருவையாறு பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகியவரிடம் சைவநூல்களைப் பாடம் கேட்டார்.
பாடிய இடங்கள்
புதுக்கோட்டை இராமச்சந்திர தொண்டைமான் தர்பார், இராமநாதபுர முத்துராமலிங்க சேதுபதி மன்னர் தர்பார், எட்டையபுரம் அரண்மனை, திருநெல்வேலி சிதம்பரபிள்ளை பஜனைமடம், ஆழ்வார்குறிச்சி தளவாய் குமாரசாமி அரண்மனை, கல்லிடைக்குறிச்சி தர்பார், திருவாவடுதுறை ஆதினச் சபை, மாயூரம் வேதநாயகர் சபை, திருவாங்கூர் சமஸ்தானம் ஆயில்யம், விசாகத்திருநாள் மகராஜா சபை, மைசூர் மகாராஜா சபை, தஞ்சாவூர் ஸகாராம் ஸாகேப் தர்பார், சிருங்கேரி மடம், திருவையாறு சபை, சென்னை ஆகிய இடங்களில் தன் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளைப் பெற்றார்.
Remove ads
விருதுகள்
கல்லிடைக்குறிச்சி சபையில், பெரிய வைத்தியநாதய்யர், சின்ன வைத்தியநாதய்யர், வீணை சின்னையா பாகவதர், சுப்பிரமணிய தேசிகர், பிச்சுமணி பாகவதர், ஸ்ரீவைகுண்டம் பாகவதர், தாண்டவராயத் தம்பிரான் என்று பல சங்கீத வித்வான்கள் முன்னிலையில் நடந்த சங்கீத வினிகையில், யாருக்கும் தெரியாத, சங்கீத ரத்னாகரம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டிருந்த சக்கரவாகம் என்னும் ராகத்தைப் பாடினார். வித்வான்களின் முன்னிலையில், சுப்பிரமணிய தேசிகர் வைத்தியநாதய்யருக்கு, மகா என்னும் பட்டத்தை வழங்கினார்.
Remove ads
சாதனை
தஞ்சாவூர் அரண்மனையில், சங்கீத வித்வான்களால் இயற்றி வைக்கப்பட்டுப் பாடப்பாடாமலிருந்த 72 மேளகர்த்தா மாலிகைக்குச் சிவாஜி மகாராஜாவின் மாப்பிள்ளையாகிய ஸகாராம் ஸாஹேப்பின் விருப்பத்தின்படி வர்ண மெட்டுகளை அமைத்து, அரண்மனை வித்துவான்களாகிய வீணை ஆதிமூர்த்தி ஐயர் முதலியவர்கள் இருந்த மகா சபையில் அரங்கேற்றினார்.
பாடப்பட்டமை
வைத்தியநாதய்யரை தாண்டவராயத் தம்பிரான், அவர் தம்பி இராமஸ்வாமி ஐயர், தியாகராஜ செட்டியார் ஆகியோர் பாராட்டிப் பாடல் இயற்றியுள்ளனர்.
சிவகதை
சங்கீதத்துடன் சிவகதைகளைச் செய்பவராக வைத்தியநாதய்யர் விளங்கினார். ஒவ்வொரு இடத்திலும் சங்கீதம் ஒரு நாள், சிவகதை ஒருநாள் என்று ஹரிகதை இலக்கணம்போன்று சிவகதை சொல்பவராகத் திகழ்ந்தார்.
மறைவு
நந்தன ஆண்டு தை மாதம் பதினோறாந்தேதி வெள்ளிக்கிழமை (27-1-1893) பகல் ஒன்றரை மணிக்கு மகா வைத்தியநாதையர், தமது நாற்பத்தொன்பதாம் வயதில் திருவையாற்றில் காலமானார்.
ஆதார நூல்
- சங்கீத மும்மணிகள் – டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் – மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை, ஆண்டு 1987
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads