தஞ்சாவூர்

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

தஞ்சாவூர்map
Remove ads

தஞ்சாவூர் (Thanjavur அல்லது Tanjore) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தமிழ் பாரம்பரிய மிக்க தொன்மையான நகரமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும். இது தஞ்சை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் நகராட்சி 10 ஏப்ரல் 2014 அன்று தமிழ்நாட்டின் 12-வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் தஞ்சாவூர் தஞ்சை, நாடு ...

250 ஆண்டுகள் இடைக்கால சோழ பேரரசின் தலைநகரான விளங்கியது. புகழ் பெற்ற தமிழ் சோழ மன்னர்களான விசயாலய சோழன் முதல் முதலாம் இராசராச சோழன் வரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த நகரமாகும். சோழ பேரரசின் பின் தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் மராத்திய அரசுகளின் தலைநகரமாக தஞ்சாவூர் விளங்கியது. தஞ்சை என்பது குளிர்ந்த அழகிய வயல்கள் மற்றும் அழகிய பனை மரங்கள் நிறைந்த பகுதி என பொருள். தஞ்சை மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம் என்பதால் நெல் பயிர் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தஞ்சையில் தான் அதிக அளவில் நெல் பயிர் விளைகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாகவும், உலக புகழ் பெற்றதாகவும் தஞ்சைப் பெரிய கோவில் விளங்குகிறது.

Remove ads

பெயர்க் காரணம்

தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள்.[சான்று தேவை]

தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையர் பெயரையே, இந்நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைபெற்றது என்றும் கூறப்படுகிறது.[2]

மற்றொரு கூற்றின்படி புராணக்கதை மூலம் பெயர் வந்ததாக கருதப்படுகிறது. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவச் சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிட்டுணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி, மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீசுவரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது.

Remove ads

வரலாறு

Thumb
1955-இல் தஞ்சாவூர் நகரத்தின் வரைபடம்
தஞ்சாவூர் வரலாறு
தஞ்சாவூரை ஆட்சி செய்தவர்களின் வரலாறு, தோராயமாக கால அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரை பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். பொ.ஊ. 250 – பொ.ஊ. 600 வரை தஞ்சாவூரை களப்பிரர்கள் ஆட்சி செய்தனர். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. இவர்கள் காலத்தில் சைன சமயம், பௌத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பின்னர் பொ.ஊ. 600 முதல் பொ.ஊ. 849 வரை முத்தரையர்கள் என்ற குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர்.

பின்னர் இடைக்கால சோழ மன்னரான, விசயாலய சோழன் பொ.ஊ. 848 முதல் பொ.ஊ. 878 வரை ஆட்சி செய்தார். முத்தரைய மன்னரான இளங்கோ முத்தரையரிடமிருந்து, தஞ்சாவூரை கைப்பற்றிய விசயாலய சோழன் நிசும்பசுதானி கோவிலைக் கட்டினார். இவரது மகன் ஆதித்த சோழன் (பொ.ஊ. 871-901) நகரத்தின் மீதமுள்ள பகுதியை பலப்படுத்தினார். பிற்காலச் சோழர்களின் தலைநகராகத் தஞ்சாவூர் திகழ்ந்தது. இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் (பொ.ஊ. 985-1014) தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் எய்தியது. 1025இல் கங்கைகொண்ட சோழபுரம் தோன்றும் வரை தஞ்சாவூர் சோழ பேரரசின் மிக முக்கியமான நகரமாக இருந்தது.[3][4] பதினொன்றாம் நூற்றாண்டின், சோழ மன்னனான முதலாம் இராசராச சோழன் (985-1014) தஞ்சாவூரில், பெருவுடையார் கோவிலைக் கட்டினார். இந்த கோயில் தமிழ் கட்டிடக்கலைக்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.[5][6][7] இராசராச சோழனின் மகனரான இராசேந்திர சோழன் சுமார் பொ.ஊ. 1025இல் தனது தலைநகரைத் தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார்.

பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதுரைப் பாண்டிய மன்னர்களின் எழுச்சியால் தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் விசயநகர அரசின் ஆட்சிக்குட்பட்டது. பொ.ஊ. 1532-இல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கிற்று. திருச்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் பொ.ஊ. 1673-இல் தஞ்சாவூர் மீது படையெடுத்தார். இப்போரில் விசயராகவன் தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். தஞ்சை அரசு மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது.[8]

Thumb
1869-இல் தஞ்சாவூர் நகரம்

பொ.ஊ. 1676இல் மராட்டிய சிவாசியின் சகோதரர் வெங்காசி தஞ்சையில் தஞ்சாவூர் மராத்தியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோசி (1798–1832) ஆங்கில கவர்னர் செனரல் வெல்வெசுலி பிரபுவுடன் பொ.ஊ. 1799-இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிர மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன. இரண்டாம் சிவாசி (1832–1855) மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாமையினால், ஆங்கிலேயர்கள் வசம் பொ.ஊ. 1856-இல் தஞ்சைக் கோட்டையும் வந்தது. தஞ்சாவூர் 1866-ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து வந்த தஞ்சை 2014-ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[9][10]

Remove ads

மக்கள்தொகை

மேலதிகத் தகவல்கள் மதவாரியான கணக்கீடு ...
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 222,943 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 109,199 ஆண்கள், 113,744 பெண்கள் ஆவார்கள். தஞ்சாவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 91.27% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.80%, பெண்களின் கல்வியறிவு 87.92% ஆகும். தஞ்சாவூர் மக்கள் தொகையில் 18,584 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[11][12]

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, தஞ்சாவூரில் இந்துக்கள் 82.87%, முஸ்லிம்கள் 8.34%, கிறிஸ்தவர்கள் 8.58%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.06%, 0.11% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர்.

பொருளாதாரம்

Thumb
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் வயல்

இங்குள்ளவர்கள் பாரம்பரியமாக விவசாயத்தை தொழிலாக செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் ஆனது "தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்" என்று அழைக்கப்படுகிறது.[13][14] இங்கு நெல் பயிர் மற்றும் உளுந்து, வாழை, தேங்காய், இஞ்சி, கேழ்வரகு, துவரை, பாசிப் பயறு, கரும்பு மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களும் பயிரிடப்படுகிறது. தஞ்சாவூரில் விவசாயத்திற்கு மூன்று பருவங்கள் உள்ளன - குறுவை (சூன் முதல் செப்டம்பர் வரை), சம்பா (ஆகத்து முதல் சனவரி வரை) மற்றும் தலாடி (செப்டம்பர், அக்டோபர் முதல் பிப்ரவரி, மார்ச் வரை) ஆகியவை ஆகும்.[15] இங்கு பாயும் காவிரி ஆறு நீர் பாசனத்திற்காகவும், மக்களின் அன்றாடத்தேவைகளுக்காகவும் முதன்மையாக விளங்குகிறது.[16]

தமிழ்நாட்டில் பட்டு நெசவு செய்யும் முக்கியமான நகரம் தஞ்சாவூர் ஆகும்.[17] 1991 ஆம் ஆண்டில் நகரத்தில் 200 பட்டு நெசவு அலகுகள் இருந்தன, அவற்றில் 80,000 பேர் பணிபுரிந்தனர். தஞ்சாவூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் தயாரிக்கப்படும் புடவைகள் தஞ்சாவூர் மற்றும் அண்டை நகரங்களில் விற்கப்படுகின்றன. ஆனால் உற்பத்தி செலவுகள் மற்றும் பெரிய அளவிலான உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் போட்டி ஆகியவையால், உற்பத்தியில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கையானது குறைந்துள்ளது.

இந்நகரில் வீணை, தம்புரா, வயலின், மிருதங்கம், தவில், மற்றும் கஞ்சிரா போன்ற இசைக்கருவிகள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.

Remove ads

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்

மேலதிகத் தகவல்கள் மாநகராட்சி அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ...

தஞ்சாவூர் மாநகராட்சியானது தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த எஸ். எஸ். பழனிமாணிக்கம் வென்றார்.

2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த டி. கே. ஜி. நீலமேகம் வென்றார்.

Remove ads

போக்குவரத்து

பேருந்து போக்குவரத்து

Thumb
தஞ்சாவூர் நகரில் புதுக்கோட்டை சாலை
Thumb
தஞ்சாவூர் நகரில் பேருந்து ஒன்று

இங்கிருந்து நாகப்பட்டினம், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருப்பூர், வேலூர், ஆரணி, பெரம்பலூர், அரியலூர், மைசூர், சேலம், கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, கும்பகோணம், மயிலாடுதுறை, மானாமதுரை, திருநெல்வேலி, பெங்களூரு, எர்ணாகுளம், நாகர்கோயில், திருப்பதி, திருவனந்தபுரம் மற்றும் ஊட்டி ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இங்கு புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் உள்ளன. புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளும் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க 1997 ஆம் ஆண்டில் மன்னர் சரபோசி கல்லூரி அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

தொடருந்து போக்குவரத்து

தஞ்சாவூரில் இரயில் நிலையம் ஒன்று உள்ளது. இது திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையத்தையும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் உடன் தஞ்சாவூர் வழியாக இணைக்கும் முக்கிய இரயில் பாதையாகும். இது தென் இந்திய ரயில்வே கம்பெனியில் 1879 இல் நிறுவப்பட்ட பாதையாகும். இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களுடன் தஞ்சாவூர் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை, மைசூர், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கரூர், மதுரை, திருநெல்வேலி, இராமேசுவரம், திருச்செந்தூர், கடலூர், தருமபுரி, விழுப்புரம் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய நகரங்களுக்கு தினமும் மற்றும் பாண்டிச்சேரி, நாகர்கோயில், கன்னியாகுமரி, திருப்பதி, நெல்லூர், இட்டார்சி, விசாகப்பட்டினம், ஊப்பிளி, வாசுகோட காமா, கோவா, வாரணாசி, விசயவாடா, சந்திரபூர், நாக்பூர், மற்றும் புவனேசுவர் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் இரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த இரயில் நிலையத்திலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் நாகூர் போன்ற நகரங்களுக்கு அடிக்கடி பயணிகள் இரயில்கள் இயக்கப்படுகிறது.[18][19][20]

வானூர்தி போக்குவரத்து

1990களில் தஞ்சாவூர் சென்னையுடன் வாயுதூத் சேவைகளால் இணைக்கப்பட்டிருந்தது; போதுமான ஆதரவில்லாமையால் இச்சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது விமானப்படை நிலையம் செயல்பட்டு வருகிறது. வான்படை நிலையம் 2012க்குள் ஒரு முக்கிய விமான தளமாக மாறியது. இது போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்களை கையாள்வதற்காக அமைக்கப்பட்டது. இருப்பினும், விமான தளத்தை நிறுவுவதும், செயல்படுத்துவதும் மார்ச் 2013 வரை தாமதமானது.[21] தென்னிந்தியாவில் முதல் முறையாக முற்றிலும் போர் விமானங்களைக்கொண்ட புதிய விமானப்படைத் தளம் தமிழகத்தில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ளது.[22][23] அருகிலுள்ள விமான நிலையம் 55 கி.மீ தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் ஆகும்.

Remove ads

சிறப்புகள்

Thumb
தலையாட்டி பொம்மை
  • தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
  • சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது.
  • உலக புகழ் பெற்ற பாரம்பரிய சின்னமான பெரிய கோவில் உள்ளது.
  • உலகப் புகழ் பெற்ற தஞ்சை சரசுவதிமகால் நூலகத்தை தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
  • உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உள்ளது.
  • புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் ஓவியங்களும், கலைத்தட்டுக்களும் உலகப் புகழ் பெற்றவை.
  • புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உலக புகழ் பெற்றது.
  • புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் வீணை உலக புகழ் பெற்றது.
  • அதிகளவில் கோயில்கள் உள்ள மாவட்டமாக உள்ளது.

கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், மற்றும் கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மையமாகும்.[சான்று தேவை]

மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப்படுகின்றன. தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீடு பெற்றதாகும்.[24]

Remove ads

சுற்றுலாத் தலங்கள்

  • உலக பாரம்பரிய சின்னமான தஞ்சைப் பெரிய கோயில்
  • தஞ்சை சரசுவதிமகால் நூலகம்(ஆசியாவின் பழமையான நூலகம்)
  • கல்லணை (உலகின் பழமையான அணை)
  • தர்பார் மண்டபம்
  • தஞ்சை அரண்மனை
  • தமிழ்ப் பல்கலைக்கழகம்
  • ஆறு படை வீடுகளில் ஒன்றான நான்காம் படை வீடு சுவாமிமலை முருகன் கோயில்
  • தஞ்சாவூர் அருகே திட்டை என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலின் கற்பகத்தின் மேல் ஒரு கல் உள்ளது. அந்த கல்லீலிருந்து 24 நிமிடத்திர்கு ஒரு துளி என சிவலிங்கத்தின் மேல் தண்ணீர் விழும், இந்த கல் உலகில் அரிய வகையான எங்கும் கிடைக்காத கல்லாகும்.
  • தென்னக பண்பாடு மையம்
  • திருநாகேஸ்வரம் கோவில்.
  • பூண்டி மாதா கோவில் (தமிழகத்தின் முக்கியமான கிறிஸ்தவ கோயில்)
  • சிவகங்கை பூங்கா.
  • உலக பாரம்பரிய சின்னமான தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில் (சிற்பிகளின் கனவு).
  • தஞ்சபுரீஸ்வரர் கோவில்.
  • 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாமணி நீலமோக பெருமாள் கோவில்.
  • பட்டுகோட்டை நாடியம்மன் கோவில் பிரபலமான கோவிலாகும்.
  • பருத்தியப்பர் கோயில் உள்ளது.
  • திருமங்கலகுடி சூரியனார் கோயில் இந்தியாவிலே இந்த கோவிலில் மட்டுமே சூரிய பகவான் சிவனின் எதிரில் இருப்பார்.
  • மல்லிப்பட்டிணம் மனோரா கோட்டை உள்ளது.ஆங்கிலேயர்கள் நெப்போலியனை வீழ்த்தியததன் நினைவாக கட்டியதாகும்.
  • மல்லிப்பட்டிணம் மீன் பிடி துறைமுகம்.
  • கும்பகோணம் மகாமகம் குளம்.
  • அதிராம்பட்டிணம் கடல் அலை ஆத்தி காடு.
  • கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில்.
  • திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில்(பிரம்மகத்தி தோஷம் நிவர்த்தி).
  • திருவையாறு ஐயாரப்பர் கோயில்.
  • தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்.
  • திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில்.
  • நவகிரக கோயில் - குரியனார் கோயில் சிவசூரியர் கோயில் (சூரிய பகவான் தலம்)
  • நவகிரக கோயில் - திங்களூர் கைலாசநாதர் கோயில்(சந்திர பகவான் தலம்)
  • நவகிரக கோயில் - திருகஞ்சனூர் அக்னிஸ்வரர் கோயில்(சுக்கிர பகவான் தலம்)
  • நவகிரக கோயில் - திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில்(இராகு பகவான் தலம்)
  • திருச்சோறை சாரபரமேஸ்வரர் கோயில் (கடன் நிவர்த்தி தலம்)
  • திருச்சோறை சாரநாதபெருமாள் கோயில் (108 திவ்ய தேசம்).
  • திருகருகாவூர் முல்லைவனநாதர் கோயில் (குழந்தை வரம்)
  • புன்னைநல்லுர் முத்து மாரியம்மன் கோயில்(தோல் நோய் நிவர்த்தி).
  • கும்பகோணம் சாரங்கபாணி கோயில்(108 திவ்ய தேசம்).
  • கும்பகோணம் சக்கரபாணி கோயில்.
  • கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில்.
  • கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்.
  • திருவலஞ்சுழி வெள்ளை பிள்ளையார் கோயில்.
  • முள்ளி வாய்க்கால்.
  • திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில்(தென் திருப்பதி 108 திவ்ய தேசம்).
  • திருப்பனந்தாள் அருணஜடஸ்வரர் கோயில்.
  • அனைக்கரை கீழணை.
  • திருகண்டியூர் பிரம்மசிரகண்டிசுவரர் கோயில்(பிரம்மன் கோயில்).
  • திருகண்டியூர் சாப விமோசன பெருமாள் கோயில்(108 திவ்ய தேசம்).
  • திருச்சோறை சாரநாதபெருமாள் கோயில்.
  • கோவிலடி அப்பகுடத்தான் அப்பல ரெங்கநாதர் கோயில்(பஞ்சரங்க தலம் 108 திவ்ய தேசம்)
  • பட்டீஸ்வரம் தேனுபுரிஸ்வரர் கோயில் (துர்க்கை அம்மன் சன்னதி).
  • திருநரையூர் நாச்சியார் கோயில் கல்கருடன் சேவை(108 திவ்ய தேசம்).
  • அய்யவாடி பிரத்தியங்கிரி தேவி கோயில்(பில்லி சுனியம் நிங்குதல்).
  • கதிராமங்கலம் வனதுர்கை கோயில்(இராகு கால பூஜை).
Remove ads

கல்லூரிகள்

விழாக்கள்

  • இராஜராஜ சோழன் சதய விழா
  • புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆடி பூச்செரிதல் ஆவணி பெருந்திருவிழா புரட்டாசி தெப்பத்திருவிழா
  • திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா
  • ஏகௌரியம்மன் கோயில் ஆடி தீமிதி திருவிழா
  • பருதியப்பர் கோவில் பங்குனி உத்திரம்
  • பெருவுடையார் கோவில் சித்திரை தேர் திருவிழா
  • கோடியம்மன் கோவில் காளியாட்ட திருவிழா
  • வைகாசியில் வெள்ளை விநாயகர் கோவில் மற்றும் 15 மேற்பட்ட கோவில்களின் முத்துப்பல்லாக்கு விழா
  • தஞ்சை ராஜவீதிகளில் 24 கருடசேவை
Remove ads

ஆடிப்பெருக்கு விழா

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்

Remove ads

அருகில் உள்ள கோவில்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads