மஞ்சோங் மாவட்டம்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மஞ்சோங் மாவட்டம் (Manjung District) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற பங்கோர் தீவு, அரச மலேசியக் கப்பற் படை தளம் (Royal Malaysian Navy) போன்றவை இங்குதான் இருக்கின்றன.[2]
அண்மைய காலங்களில் இந்த மாவட்டத்தில் மக்கள் பெருக்கம் மிகுதியாக ஏற்பட்டுள்ளது. அதனால், நிறைய குடியிருப்புப் பகுதிகளும் வீட்டுமனைப் பகுதிகளும் உருவாக்கம் கண்டு வருகின்றன. மலாயா சுதந்திரம் அடைவதற்கு முன்னர், இந்த மாவட்டம் டிண்டிங்ஸ் என்று அழைக்கப்பட்ட போது, பிரித்தானியர்களின் தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகளில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
பொது
மஞ்சோங் மாவட்டத்திற்கு முன்பு டிண்டிங்ஸ் எனும் அதிகாரப்பூர்வமான பெயர் இருந்தது. இந்த மாவட்டம் பேராக் மாநிலத்தின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மஞ்சோங் மாவட்டத்தின் தலைப் பட்டணமாகப் பண்டார் ஸ்ரீ மஞ்சோங் விளங்குகின்றது. தவிர வேறு நகரங்களும் உள்ளன.
லூமுட், சித்தியவான், ஆயர் தாவார், பந்தாய் ரெமிஸ், புருவாஸ் போன்ற நகரங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். சில முக்கியமான இடங்களும் உள்ளன. ஆச்சே தொழிற்பேட்டை,[3] டேசா மஞ்சோங் ராயா, மஞ்சோங் போயிண்ட், டாமாய் கடல் சார் உல்லாச நகர் மையம்,[4] லூமுட் துறைமுகம் போன்றவை குறிப்பிடத் தக்கவை.
ஸ்ரீ மஞ்சோங் நகரம் நன்கு திட்டமிட்டப் பட்டு உருவாக்கப் பட்ட ஒரு நவீன நகரமாகும். இது ஓர் அரசாங்க நிர்வாக மையமாகவும் திகழ்கிறது. இங்கு அரசு அலுவலகங்கள், நகராண்மைக் கழக அலுவலகங்கள், தேசியப் பதிவகம், பொதுப் பணித் துறை அலுவலகங்கள், குடிநுழைவுத் துறை அலுவலகங்கள் போன்றவை செயல்படுகின்றன.
Remove ads
மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்
பின்வரும் மஞ்சோங் மக்கள் தொகை புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது.[5]
மலேசிய நாடாளுமன்றம்
மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) மஞ்சோங் தொகுதிகளின் பட்டியல்.
பேராக் மாநிலச் சட்டமன்றம்
பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் மஞ்சோங் மாவட்டப் பிரதிநிதிகள். (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):
Remove ads
வரலாறு
மஞ்சோங் மாவட்டம் 1874ஆம் ஆண்டில் இருந்து 1973ஆம் ஆண்டு வரை, டிண்டிங்ஸ் என்று அழைக்கப் பட்டது. மலாயா சுதந்திரம் அடைவதற்கு முன்னர், பிரித்தானியர்களின் நீரிணை குடியேற்றப் பகுதிகளில் ஒரு பகுதியாகவும் இருந்தது. அப்போது பினாங்கு மாநில நிர்வாகத்தின் கீழ் இருந்தது. டிண்டிங்ஸ் நிலப் பகுதி பிரித்தானியர்களிடம் வழங்கப் படுவதற்கு முன்னர், பேராக் சுல்தான்களுக்குச் சொந்தமாக இருந்தது.
இந்த டிண்டிங்ஸ் நிலப்பகுதி, பிரித்தானியர்களிடம் வழங்கப் படுவதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதல் காரணம்: பேராக் சுல்தானகத்தில் ஏற்பட்ட பதவிப் போராட்டம். முன்பு காலத்தில், மலேசியாவில் அதிகமாக ஈயம் தோண்டி எடுக்கப் பட்ட இடங்களில் லாருட் மிக முக்கியமான இடமாக இருந்தது. லாருட் எனும் இடத்திற்கு மலேசிய வரலாற்றில் தனி இடம் உண்டு. 1850-இல் லாருட் மாவட்டம் டத்தோ லோங் ஜாபார் என்பவருக்கு அன்பளிப்பு செய்யப் பட்டது.
டத்தோ லோங் ஜாபார்
டத்தோ லோங் ஜாபார், தைப்பிங் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். 1848-ஆம் ஆண்டு லாருட்டில் ஈயம் கண்டுபிடிப்பதில் இவர் முக்கிய பங்காற்றினார். லாருட்டில் ஈயம் கண்டுபிடிக்கப் பட்டதைப் பற்றி ஒரு வரலாற்றுக் கதையும் உண்டு. டத்தோ லோங் ஜாபாரிடம் லாருட் எனும் பெயரில் ஒரு யானை இருந்தது. அவர் பயணம் செய்யும் போது அந்த யானையையும் உடன் அழைத்துச் செல்வார்.
ஒரு நாள் அந்த யானை காணாமல் போய்விட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் மூன்று நாட்கள் கழித்து அதுவே அவரைத் தேடி வந்தது. அதன் உடல் முழுமையும் சேறும் சகதியுமாக இருந்தது. அத்துடன் அதன் கால்களில் ஈயச் சுவடுகளும் காணப்பட்டன. ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும் அந்த இடத்தைத் தேடிச் சென்றார்கள். பின்னர் அந்த இடத்திற்கு யானையின் பெயரான லாருட் என்று வைக்கப் பட்டது.
பேராக் அரியணைக்குப் பலத்த போட்டிகள்
மலேசியாவில் அதிகமாக ஈயம் தோண்டி எடுக்கப் பட்ட இடங்களில் லாருட் மிக முக்கியமான இடமாக இருந்தது. 1850-இல் லாருட் மாவட்டம் டத்தோ லோங் ஜாபாருக்கு அன்பளிப்பு செய்யப் பட்டது.
அப்போது பேராக் சுல்தானாக இருந்த ராஜா மூடா நிகா அலியின் தலைமையில் பேராக் தெமாங்கோங், பாங்லிமா புக்கிட் காந்தாங், பாங்லிமா கிந்தா, சா பண்டார், ஸ்ரீ அடிக்கா ராஜா ஆகியோர் ஒன்று இணைந்து லாருட்டை அன்பளிப்பு செய்தனர். 1857-இல் பேராக் சுல்தான் இறந்ததும், பேராக் அரியணைக்குப் பலத்த போட்டிகள் ஏற்பட்டன.
இரு சீன இரகசிய கும்பல்கள்
உட்பூசல்கள் தலைவிரித்தாடின. அரச குடும்பத்தினர் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர். அப்போது தைப்பிங்கில் இருந்த இரு இரகசிய கும்பல்களில் ஆளுக்கு ஒரு தரப்பில் சேர்ந்து கொண்டனர். இரு தரப்பினரும் பழி வாங்கும் படலத்தில் இறங்கினர்.
1857இல் டத்தோ லோங் ஜாபார் இறந்ததும், அவருடைய மகன் நிகா இப்ராகீம் என்பவர் லாருட் மாவட்டத்தின் ஆளுநராகப் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும் மேலும் பல சீனர்களை லாருட்டிற்கு அழைத்து வந்தார். இந்தக் கட்டத்தில் இரு பெரும் சீனக் குழுக்கள் உருவாகின. ஒரு குழு ‘ஐந்து சங்கங்கள்’ என்று பெயர் வைத்துக் கொண்டது.
அதிகாரப் போர்
மற்றொன்று ‘நான்கு சங்கங்கள்’ என்று பெயர் வைத்துக் கொண்டது. ‘ஐந்து சங்கங்கள்’ குழு கிலியான் பாவுவில் உள்ள ஈயச் சுரங்கங்களில் வேலை செய்தது. ‘நான்கு சங்கங்கள்’ குழு கிலியான் பாருவில் உள்ள ஈயச் சுரங்கங்களில் வேலை செய்தது. ‘ஐந்து சங்கங்கள்’ குழு சீன இனத்தில் ஹாக்கா பிரிவைச் சேர்ந்தது. அதை ஹோ குவான் (五館) அல்லது (五群) என்று அழைத்தனர். ‘நான்கு சங்கங்கள்’ குழு கண்டனீஸ் பிரிவைச் சேர்ந்தது. இதை சி குவான் (四館) என்று அழைத்தனர்.
கண்டனீஸ் பிரிவைச் சேர்ந்த கோ குவான் குழு கீ கின் இரகசியச் சங்கம் (義興私會黨) என்றும் ஹாக்கா பிரிவைச் சேர்ந்த குழு ஆய் சான் இரகசியச் சங்கம் என்றும் அழைக்கப் பட்டது. இந்த இரு கும்பல்களும் இரகசியக் கும்பல்கள். இவை இரண்டுக்கும் இடையே அதிகாரப் போர் நடந்து வந்தது.
1874 பங்கோர் ஒப்பந்தம்
ஆக, டிண்டிங்ஸ் நிலப்பகுதி, பிரித்தானியர்களிடம் வழங்கப் படுவதற்கு இரண்டாவது காரணம்: இந்த கீ கின் இரகசியச் சங்கம் ; ஆய் சான் இரகசியச் சங்கம் எனும் இரகசியக் கும்பல்களின் அதிகாரப் போரை நிறுத்துவதாகும். அந்த வகையில் டிண்டிங்ஸ், பிரித்தானியர்களிடம் தாரை வார்க்கப் பட்டது. மலாயா சுதந்திரம் அடைந்த பின்னரும் 1973-ஆம் ஆண்டு வரை டிண்டிங்ஸ் எனும் பெயரில் மாற்றம் இல்லை.
1874-சனவரி மாதம் பங்கோர் தீவில் செய்து கொள்ளப்பட்ட பங்கோர் உடன்படிக்கை 1874-இன் படி, சுல்தான் அப்துல்லா பேராக் மாநிலத்தின் சுல்தானாகப் பதவி பிரமானம் செய்து வைக்கப் பட்டார். அவருக்குப் போட்டியாக இருந்த சுல்தான் அலி பதவியிறக்கம் செய்யப் பட்டார்.
Remove ads
நிலவியல்
மஞ்சோங் மாவட்டத்தின் பெரும்பகுதி, ஏறக்குறைய 833.75 சதுர கிலோ மீட்டர், விவசாயம் செய்வதற்குத் தகுந்த இடமாக உள்ளது. இருப்பினும், அதற்கு மாறாக, அண்மைய காலங்களில் தொழில்துறைகளில் மேம்பாடு கண்டு வருகிறது. அத்துடன் வனக் காப்பகங்கள் 168.81 சதுர கிலோ மீட்டர்; குடியிருப்பு பகுதிகள் 29.32 சதுர கிலோ மீட்டர்; சதுப்பு நிலங்கள் 68.57 சதுர கிலோ மீட்டர் உள்ளடக்கியவை.
2009 ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி, லூமுட் நகரத்தை அரச மலேசிய கடற்படை நகரமாக, பேராக் சுல்தான் பிரகடனம் செய்து வைத்தார்.
Remove ads
தமிழ்ப் பள்ளிகள்
மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகள். (2008ஆம் ஆண்டு புள்ளி விவரங்கள்)[6]
- ஆயர் தாவார் (செயிண்ட் திரேசா) தமிழ்ப்பள்ளி
- ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
- கம்போங் கொலம்பியா தமிழ்ப்பள்ளி
- துன் சம்பந்தன் (ஹார்கிராப்ட்) தமிழ்ப்பள்ளி
- கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
- சொகமானா தோட்டத் தமிழ்ப்பள்ளி
- அண்டி தோட்டத் தமிழ்ப்பள்ளி
- பெங்காலான் பாரு (குளோரி) பந்தாய் ரெமிஸ் தமிழ்ப்பள்ளி
- சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி
- மகா கணேச வித்தியாசாலை, சித்தியவான்
- புண்டுட் வாவாசான் தமிழ்ப்பள்ளி
- காயான் தமிழ்ப்பள்ளி
- புருவாஸ் தமிழ்ப்பள்ளி
- வால்புரோக் தமிழ்ப்பள்ளி
- பங்கோர் தீவு தமிழ்ப்பள்ளி
2000ஆம் ஆண்டிற்கு முன்னர் மூடப்பட்ட தமிழ்ப்பள்ளிகள்
- ஆயர் தாவார் வெல்லிங்டன் தமிழ்ப்பள்ளி
- செகாரி தமிழ்ப்பள்ளி
Remove ads
மேற்கோள்கள்
சான்றுகள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads