உளப் பிறழ்ச்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உளப்பிறழ்ச்சி அல்லது உளநோய் அல்லது பிறழ்வு உளவியல் என்பது இயலாமையையும் துயரத்தையும் விளைவிக்கின்ற மனம் சார்ந்த வெளிப்பாடு அல்லது நடத்தை ஆகும். இவை தொடர்ச்சியானவையாகவோ, விட்டுவிட்டு மீளமீள வருபவையாகவோ இருக்கலாம். உளநோய் என்ற வகைப்பாட்டின் கீழ் நூற்றுக்கணக்கான பிறழ்வுகள் இனங்காணப்பட்டிருக்கின்றன.[1][2] உளப்பிறழ்வுகளுக்கு உளமருத்துவர் ஒருவரை அணுகுவதன் மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளமுடியும்.

உளப்பிறழ்வு ஏன் உண்டாகின்றது என்பதைத் திட்டவட்டமாக வரையறை செய்யமுடியாது. புறக்கணிப்பும், ஒதுக்கிவைக்கப்படுதலும் கூட பல உளநோய்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. இவை பொதுவாக நபர் ஒருவரின் நடத்தை, உணர்வு வெளிப்பாடு, சிந்தனை, அறிவு விருத்தி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இனங்காணப்படுகின்றன.[1] மூளையின் குறித்த பாகங்களில் ஏற்படும் பாதிப்பின் மூலம் உளநோய் ஏற்படலாம் எனினும், நோயாளியின் பண்பாட்டுப்பின்னணி, சமய நம்பிக்கை, என்பனவும் சிகிச்சையின் போது கருத்தில் கொள்ளப்படவேண்டும்.[3] பொதுவாக உளப்பிறழ்வானது, நரம்புப்பிறழ்வுகள், கற்றல் இயலாமைகள், மனவளர்ச்சிக் குறை என்பவற்றிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவே கணிக்கப்படுகின்றது.
Remove ads
வரைவிலக்கணம்
குறித்த ஒரு மனநிலையானது, உளப்பிறழ்வாக இனங்காணப்படவேண்டும் என்றால், அந்த மனநிலையால் குறித்த நபருக்கோ ஏனையவர்களுக்கோ ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டிருக்கவேண்டும்.[4] உளப்பிறழ்வுகளுக்கான மருத்துவ மற்றும் புள்ளிவிவர ஆய்விதழான DSM IVஆனது,உளப்பிறழ்வை பின்வருமாறு வரையறுக்கின்றது. "மனவழுத்தம், (உடல் அங்கங்களின் ஒருவித) இயலாமை, இறப்பதற்கான கூடிய சாத்தியப்பாடு, சுயமான இயக்கம் முடியாமற்போதல் என்பவற்றுடன் இணைந்த ஒருவித மனநிலை ஆகும்." எனினும் அன்பானவர்களை இழப்பதால் ஏற்படும் துயரம், குறித்த நபரில் எவ்வித செயலிழப்பையும் ஏற்படுத்தாத அரசியல், சமய, சமூக விலக்கான நடத்தைகள் என்பவற்றை உளப்பிறழ்வாகக் கொள்வதில்லை.[5][6] எவ்வாறெனினும், மருத்துவ நோக்கங்களின் அடிப்படையில் பார்த்தால், இந்த வரைவிலக்கணம் முழுமையான ஒன்றல்ல என்பதை DSM IV ஒத்துக்கொள்கின்றது. தொற்றுநோயியல், நோய்த்தீவிரவியல் முதலான பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டே உளநோய்ச் சிகிச்சைகள் செய்யப்படவேண்டும் என்பதை அது மறுக்கவில்லை.[7]
அமெரிக்க உளமருத்துவ ஒன்றியமானது, 2013இல், DSM - V இதழில், உளப்பிறழ்வை திருத்தமாக மீள்வரையறை செய்திருக்கின்றது. "உளநலத்தை உறுதிசெய்கின்ற உளவியல், உயிரியல் செயற்பாடுகளில் ஏற்படும் செயலிழப்பை வெளிக்காட்டுவதும், அறிவுத்திறன், உணர்வுக்கட்டுப்பாடு, நடத்தை ரீதியாக ஒரு தனிநபரில் மருத்துவரீதியில் இனங்காணக்கூடியதுமான அறிகுறிகளின் தொகுப்பு உளப்பிறழ்வு ஆகின்றது.”[8]
Remove ads
வரலாறு

தொல்பழங்காலத்திலேயே உளப்பிறழ்வு பற்றிய அறிவை பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த சமூகங்கள் பெற்றிருந்தன. மத்தியகாலத்தில், உளப்பிறழ்வுக்கானவர்கள், சூனியக்காரர்கள் என்றும் பேய்பிடித்தவர்கள் என்றும் கருதப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டார்கள். சிறைகளிலும் பைத்தியவிடுதிகளிலும் இவர்கள் அடைத்துவைக்கப்பட்டனர். பித்து என்பது, மனத்தோடு அல்லது ஆன்மாவோடு தொடர்பில்லாத உடல் சார்ந்த செயற்பாடு என்று கருதப்பட்டது. உளப்பிறழ்வாளர்கள் தாம் அடைத்துவைக்கப்பட்டிருந்த விடுதிகளில் மிருகங்களை விடக் கொடூரமாக நடத்தப்பட்டார்கள். எனினும் கைத்தொழில் யுகத்துக்குப் பிறகு உளப்பிறழ்வு பற்றிய தெளிவு ஓரளவு அறிவியல் ரீதியில் முன்வைக்கப்படலாயிற்று. இவர்களுக்கான மருத்துவ உதவியில் தொடர்ந்தும் குறைபாடுகள் பல காணப்பட்டபோதும், "உளமருத்துவம்" (psychiatry) என்ற சொல்லாடல், முதன்முதலாக 1808இல் முன்மொழியப்பட்டு பாவனைக்கு வந்தது. மக்கள் மனதில் ஏற்பட்ட மாற்றத்தால், இவர்கள் அடைத்துவைக்கப்பட்ட புகலிடங்கள் வைத்தியசாலைகள் என்றும், கைதிகள், "நோயாளிகள்" என்றும் அழைக்கப்படத் தொடங்கினர். பட்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பல்வேறு விதமான உளப்பிறழ்வு சிகிச்சை முறைகளும், சமூகசேவை அமைப்புகளும், உளப்பிறழ்வாளர்களை மையமாக வைத்து, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தோன்றலாயின.[9][10]
Remove ads
வகைப்படுத்தல்
சாதாரண செயற்பாடுகளில் கூட பதற்றம் அல்லது பயம் ஏற்படும் பிறழ்வு, பதகளிப்புக் கோளாறு என வகைப்படுத்தப்படுகிறது.[11] அச்சக் கோளாறுகள் என்று பொதுவாக வகைப்படுத்தப்படுவனவற்றில், பலரது சமூகத்துக்குமுன் வருவதற்கு வெட்கப்படல் (social anxiety disorder), திகில் அடைதல், வெளியைக் கண்டு மருளல் (agoraphobia), அதிர்ச்சியால் ஏற்படும் அழுத்தப்பிறழ்வு, மன அலைக்கழிவுப்பிறழ்வு (obsessive-compulsive disorder) என்பன முக்கியமான சில ஆகும்.

உணர்வு சார்ந்த முக்கியமான பிறழ்வுகளில், எடுத்ததற்கெல்லாம் மனம் தளரல், ஓரளவு கடுமைகுறைந்த ஆனால், பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மனத்தளர்ச்சி, என்பன பெருஞ்சோகப் பிறழ்வாகக் கருதப்பட்டு சிகிச்சையளிக்கப்பட முடியும். பித்து அழுத்தம் என்று அறியப்படும் இருமுனையப் பிறழ்வு என்பது அதிகபட்சமான சிந்தனைகளால் ஏற்படுகின்ற ஒருவகைப் பித்து ஆகும்.[12] மிகையாகக் கற்பனை பண்ணிக்கொள்வதால் ஏற்படும் மருட்சி, சிந்தனைப்பிறழ்வு, இல்லாததை இருப்பதுபோல் கற்பனை செய்யும் உருவெளித்தோற்றம் என்பன, தான் சார்ந்த சமயம், பண்பாடு என்பவற்றின் அதிகபட்ச பாதிப்பால் ஏற்படுகின்ற மனப்பிறழ்வுகளாகும்.
உண்ணல் பிறழ்வானது, உணவு, எடை தொடர்பாக ஏற்படும் மனப்பாதிப்புகளால் ஏற்படுகின்றது.[11] உண்டிவெறுப்பு, உண்டிவிழைவு (bulimia nervosa), மிகைப்பயிற்சி மெலிவு (exercise bulimia) என்பன உணவு சார்ந்த உண்ணல் பிறழ்வுகளில் அடங்கும். அதுபோலவே தூக்கமின்மையானது, சாதாரண நித்திரைக் கோலத்தில் ஏற்படும் குழப்பங்கள், அதீத களைப்பு என்பவற்றால் ஏற்படும் தூக்கப்பிறழ்வுகளில் அடங்கும். கலவி நாட்டமின்மை, பாலினக்குழப்பம் (gender dysphoria), நோப்புணர்ச்சி (dyspareunia), விழையாப்புணரச்சம் (egodystonic sexual orientation), குறித்த பொருட்கள், சந்தர்ப்பங்கள், நபர்கள் என்பவற்றைக் காணும்போது கலவித்தூண்டலுக்கு உள்ளாகும் பிறநாட்டம் (Paraphilia) என்பன கலவிப்பிறழ்வுகளில் முக்கியமானவை. தமக்கோ பிறருக்கோ தீங்கு விளைவிக்கக்கூடிய குறித்த விடயங்களைச் செய்வதில் தங்களை மீறிய நாட்டம் கொண்டிருப்பதும் உளப்பிறழ்வுகளே. குறிப்பாக களவுப்பித்து (kleptomania), கனல்பித்து (pyromania - தீமூட்டுதல்) என்பனவற்றை தங்களைக் கட்டுப்படுத்தமுடியாமல் செய்வோர் தனைமீறுபிறழ்வுக்கு (impulse control disorder) உள்ளானோர் ஆவர். சில குறித்த பழக்கங்களுக்கு அடிமையாதலும் உளப்பிறவுக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. சூதாட்டம், மதுவருந்தல், போதைப்பொருள் பாவனை என்பன இவ்வகைப்பாட்டுக்குள் வரும்.
தனிமனிதனின் சிந்தனைகள், நடத்தைகள் என்பவற்றின் அடிப்படைத் தொகுப்பான ஆளுமையானது, உளவியல் காரணங்களால் செயலிழக்கும் போது, ஆளுமைச் சிதைவுகள் ஏற்படுகின்றன.[13] தம் சுய அடையாளத்தை வெறுப்போர் அல்லது அதுகண்டு குழம்புவோர், அல்லது தம் சூழலால் பாதிக்கப்படுவோர் பல்லாளுமைப் பிறழ்வால் பாதிக்கப்படக்கூடும். (புரிதலுக்காக: தமிழில் வெளியான சந்திரமுகி, அந்நியன் ஆகிய திரைப்படங்கள் இப்பிறழ்வைத் தம் கதைமையமாகக் கொண்டவை.) மறதியும் சிந்தனை சார்ந்த மிக முக்கியமான உளப்பிறழ்வு ஆகும். தற்கொலையானது, பதின்மவயதினரிலும், இளைஞரிலும் குறிப்பிடத்தக்க அளவு மரணத்தை ஏற்படுத்தும் மிக முக்கியமான மனப்பிறழ்வாக இனங்காணப்பட்டிருக்கிறது.[14][15] ஒவ்வொரு ஆண்டும் உலகளாவியரீதியில் சுமார் 10 முதல் 20 மில்லியன் வரையான தற்கொலை முயற்சிகள் இடம்பெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[16]
Remove ads
புள்ளிவிவரங்கள்

0-6
7-9
10-15
16-24
25-31
32-39
40-53
54-70
71-99
100-356
உளப்பிறழ்வானது சூழல், பண்பாட்டுப்பின்புலம் முதலான பல்வேறு காரணிகளில் தங்கியிருப்பதால், உளப்பிறழ்வு தொடர்பான கணக்கெடுப்புகள் இடத்துக்கிடம் வேறுபடுகின்றன.[17] வழக்கமான உளப்பிறழ்வுகளான மன அழுத்தம், சுமார் 400 மில்லியன் பேரையும், மறதிநோய் சுமார் 35 மில்லியன் பேரையும், பித்துநிலை, சுமார் 21 மில்லியன் பேரையும் உலகளாவிய ரீதியில் பாதித்துள்ளதாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.[1] உலகெங்கும் வாழும் மக்களில் மூன்றில் ஒருவர், வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் உளப்பிறழ்வுக்கு ஆளாகும் வாய்ப்புக்கு உள்ளாவதாக அறியப்படுகின்றார்.[18] அமெரிக்காவில் 46% ஆனவர்கள் உளநோய்க்கு ஆளாகும் நிகழ்தகவைக் கொண்டிருக்கிறார்கள்.[19] பதகளிப்பு, உணர்வு என்பன இரண்டுமே முக்கியமாக உளப்பிறழ்வுக்குக் காரணமாகின்றன.[20] ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று பெண்களும் குழந்தைகளுமே பிறழ்வு நோய்க்கு உள்ளாகக்கூடிய வாய்ப்பை அதிகம் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது.[21]
Remove ads
காரணிகள்
ஒதுக்குதல், புறக்கணிப்பு என்பவற்றின் காரணமாக சிலர் உளவியல் ரீதியில் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகின்றனர். பாடசாலை அல்லது வேலைத்தலத்தில் ஏற்படும் அழுத்தமும் குறிப்பிட்டோரை தாம் தகவின்மை கொண்டவர்கள் என்று ஊகிக்கவைக்கின்றது. இதனால் அவர்கள் உளவியல் ரீதியில் இயலாமை கொண்டவர்களாக மாறக்கூடும். அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள், உறவினர்கள், தொடர்பாடல், வேலைவாய்ப்பு மற்றும் வேலை தொடர்பான அழுத்தம் என்பன தகவின்மையை உண்டாக்கலாம். எனினும் குறித்த பயிற்சிகள், உளவள ஆலோசகரின் உதவியைப் பெறல் போன்ற காரணங்களால் இந்த இயலாமையைப் போக்கிக் கொள்ளமுடியும்.[22]
எவ்வாறெனினும் சமூகத்தின் ஊடாட்டமானது, உளநலத்தைப் பாதிக்கும் மிகப்பிரதானமான காரணியாகவே கருதப்படுகின்றது.,[23] துஷ்பிரயோகம், புறக்கணித்தல், இழிவுபடுத்தல், ஏமாற்றல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, எதிர்மறை அனுபவங்கள் என்பன சமூகம் சார்ந்த உளப்பிறழ்வுகளை ஏற்படுத்துகின்றது.
போதைப்பொருள்
உளப்பிறழ்வாளர்களில் குறிப்பிட்ட அளவானோர், மது, கஞ்சா, காஃவீன், மற்றும் கோக்கைன் போன்றவற்றிற்கு அடிமையானவர்கள் ஆவர்.[24][25][26] இவை அவர்களில் பதகளிப்பையும் ஏற்படுத்தி விடுகின்றது.[27]
மரபியல்
பாரம்பரியக் காரணங்கள்,[28] மனவழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளில் பிரதானமானவை. பெற்றோரால் சரியாகக் கவனிக்கப்படாத குழந்தைகளில் மனவழுத்தம் அதிகரிக்கக்கூடும்.[29] போதைப்பழக்கமும் இதில் குறிப்பிட்டளவு செல்வாக்குச் செலுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது.[24] பதகளிப்புப் பிறழ்வில், சிறுவர் மீதான வன்முறைகளும், தாயன்பு கிட்டாமையும் முக்கியமான காரணிகளாகின்றன.[30]
மனவழுத்தம், அர்த்தமில்லாத பயம், பதகளிப்பு, பித்துநிலை என்பவற்றை உரிய சிகிச்சைகள் வழங்குவதன் மூலம் அவை உளப்பிறழ்வாக மாறுவதற்கான வாய்ப்புக்களை அளித்து, அவற்றைக் குணப்படுத்தமுடியும். இத்தகைய காரணிகளுக்கு அறிவுசார் நடத்தை மருத்துவம் (ஆங்கிலத்தில் cognitive behavioral therapy, சுருக்கமாக CBT) மூலம் பெருமளவு சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றன. கல்விசார் நிறுவனங்களாலும், அரச மற்று அரசசார்பற்ற நிறுவனங்களாலும், உளப்பிறழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறூ வேலைத்திட்டங்கள், பயிற்சிப்பட்டறைகள் இடம்பெற்று வருகின்றன.
சமூகப் புறக்கணிப்பு

உளப்பிறழ்வுச் சிகிச்சைகள் எதிர்கொள்கின்ற மிக முக்கியமான சிக்கல் சமூகப்புறக்கணிப்பு சார்ந்ததாகும். சிலர் தமக்கு உளவள ஆலோசனை அவசியம் என அறிந்தாலும், உளச்சிகிச்சை என்பது சமூகத்தில் இழிவான ஒன்றாகப் பார்க்கப்படுவதால், அதில் ஈடுபடுவதற்குத் தயங்குகின்றனர். இது அவர்களது உடல்- உளநலத்தில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, வேலைதேடுவோருக்கு மாற்றுத்திறனை விட, மோசமான எதிர்மறைக் காரணியாக உளப்பிறழ்வு காணப்படுவதை சுட்டிக்காட்டி இருக்கின்றது.[31] சீனாவில் உளப்பிறழ்வு கொண்டவர்கள் சட்டபூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளமுடியாது.[32] உளப்பிறழ்வு மீதான சமூகப்புறக்கணிப்பை இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் பல முனெடுக்கப்பட்டுவந்தாலும், அவற்றின் விளைவுகளும் சிலவேளைகளில் எதிர்மறையாக மாறிவிடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.[33]
இல்லங்களுக்கு வருகை தருவதன் மூலம், கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் இளம்பிள்ளைகளைக் கொண்ட பெற்றோருக்கு உரிய ஆலோசனைகளை அளித்து, அவர்களது மனவளவிருத்திக்கு வெற்றிகரமாக உதவமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.[34] சில இடங்களில் கட்டாயக் கருத்தடை மூலம், உளநோய்க்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் கொண்ட குழந்தைகளை பிரசவத்துக்கு முன்பேயே அழிக்கின்றார்கள். இது மானுடத்துக்கு எதிரானது என்று பெரும்பாலான இடங்களில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு வருகின்றது.[35]
Remove ads
சிகிச்சை
உளப்பிறழ்வை வெளிக்காட்டும் குணங்குறிகள் பல்வேறு காரணிகளால் கட்டுப்படுத்தப்படுபவை என்பதால் அவற்றை மிகச்சரியாக இனங்கண்டுகொள்வது கடினம். எனினும், இவை குணமாக்கக்கூடியவை என்பதே பொதுவான கருத்தாக இருக்கின்றது. மிகப்பயங்கரமான உளப்பிறழ்வாகக் கருதப்படும் உளப்பித்து நிலையால் பாதிக்கப்பட்டோரில் அரைவாசிக்கும் மேலானோர் பூரணகுணம் அடைந்தமையும், சிலருக்கு மருத்துவக் கவனிப்பே தேவைப்படவில்லை என்பதையும் உலகளாவிய உளவியல் ஆய்வுகள் பல வெளிக்காட்டியுள்ளன.[36]
Remove ads
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads