மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம்
தமிழ்நாட்டின் மன்னார்குடியில் உள்ள இந்து கோவில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மல்லிநாதசுவாமி ஜினாலயம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மல்லிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சமணர் கோயிலாகும்.[1] சோழ நாட்டில் கரந்தட்டாங்குடி, கும்பகோணம், தீபங்குடி ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.[2][3]

கோயில் அமைப்பு
இராஜகோபுரம், கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம், கொடி மரம், சமையலறை, பாதுகாப்பு அறை ஆகிய அங்கங்களை இக்கோயில் கொண்டுள்ளது. இராஜகோபுரம் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. முகமண்டபத்தில் உள்ள ஓர் அறையில் ரிசபதேவர் தீர்த்தங்கரர் உள்ளார். அவரது இரு புறமும் யட்சர்கள் உள்ளனர். மகாமண்டபம் மராத்தியர் கலைப்பாணியில் அமைந்துள்ளது. இங்கு பத்மாவதி, தர்மதேவி, பிரம்மதேவி, ஜ்வாலாமாலினி தேவி, சேத்திரபாலர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தில் சுவேதாம்பர தீர்த்தங்கரர் மற்றும் மகாவீரர் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. இராஜகோபுரத்தின் முன்பாக, கோயிலின் வடபுறத்தில், இடிந்த நிலையிலான மடம் உள்ளது. தேர் மண்டபம், வாகன மண்டபம் ஆகியவையும் உள்ளன.[4]
Remove ads
மூலவர்
கோயிலின் மூலவராக மல்லிநாதர் உள்ளார். 56 செமீ உயரமுள்ள மூலவர் சிற்பம் 1986ஆம் ஆண்டு வடிக்கப்பட்டுள்ளது. பழைய மூலவர் சிற்பம் மூக்குப்பகுதி உடைந்த நிலையில் அர்த்தமண்டபத்தில் காணப்படுகிறது. உற்சவர் மகாமண்டபத்தில் காணப்படுகிறார். உற்சவர் பீடத்தில் அடியில் கிரந்த எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.[4]
வழிபாடு
நித்திய பூசை அனைத்து சன்னதிகளுக்கும் நெய்வேத்தியம், தீப ஆராதனை, அபிஷேகம் போன்றவை மேள வாத்தியம், மணி ஓசையுடன் நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமைகளில் சுக்ரவார பூசை, அர்ச்சனை, தீப ஆராதனை ஜ்வாலாமாலினி தேவிக்கு நடைபெறுகிறது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் தேவிக்கு சர்க்கரைப்பொங்கல் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. ஆடி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் நந்தீஸ்வர த்வீப ஆலயங்களுக்கு எட்டு நாட்கள் பூசை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் வைகாசி சப்தமி வளர்பிறையில் கொடி ஏற்றத்துடன் விழா நடைபெறுகிறது. ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, தை ஆகிய மாதங்களில் விழாக்கள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் தீபாவளியன்று மகாவீரர் பரிநிர்வாண விழாவாகவும், கார்த்திகை தீபம் அன்று ஆலயம் முழுவதும் தீபங்கள் ஏற்றி கற்பூர சொக்கப்பனை ஏற்றும் விழாவாகவும் நடைபெறுகிறது. மார்கழி மாதம் முழுவதும் காலை பஜனை, இரவு முக்குடை தீபம் என அனைத்துச் சன்னதிகளிலும் ஆயிரத்திற்கும் மேலாக சிறிய தீபங்கள் ஏற்றி மகிழ்வர்.[5]
புத்தர் சிலை
இக்கோயிலின் பிரகாரத்தில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் ஒரு புத்தர் சிலையைக் களப்பணியின்போது காணமுடிந்தது. புன்னகை தவழும் முகம், புன்னகை சிந்தும் உதடுகள், சற்றே மூடிய நிலையிலான கண்கள், நீண்டு வளர்ந்த காதுகள் போன்ற கூறுகளுடன் மேலாடையுடன் இச்சிலை உள்ளது. உள்ளூரில் சிலர் இச்சிலையைச் சமண தீர்த்தங்கரர் சிலை என்று கூறிவருகின்றனர்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads