முடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முடி, மயிர் அல்லது சிகை (Hair) என்பது அடித்தோலில் (dermis) காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளரும் இழை வடிவமுடைய புரத இழைகளாலான உயிரியப் பொருளாகும். முடி வளர்வது பாலூட்டிகளின் ஒரு குறிப்பிடத்தக்கப் பண்பாக உள்ளது. மயிரற்ற தோல் (glabrous skin) பகுதிகளைத் தவிர்த்து, மனிதர்களின் தோல்பகுதி முழுவதும் தடித்த இறுதியான மற்றும் நயமான இளமயிர்களை உருவாக்கும் மயிர்க்கால்கள் பரவியுள்ளன. முடி வளர்த்தல், அதன் வகைகள், பராமரிப்புக் குறித்த பரவலான ஆர்வம் இருந்தாலும் மயிரானது, முதன்மையாக கெரட்டின் (நகமியம்) என்ற புரதத்தாலான முக்கியமான உயிரியப் பொருளாகும். பொதுவாக, பல மனித சமூகங்களில் பெண்கள் தலைமுடியை நீளமாகவும், ஆண்கள் குட்டையாகவும் வளர்க்கின்றார்கள்.

பல்வேறுவகையான முடிகளைக் (முடி நீக்குதல், முடி ஒப்பனைகள்) குறித்த மனப்பாங்கு பல்வேறு காலகட்டங்களில், கலாச்சாரங்களில் பரவலாக வேறுபட்டுக் காணப்பட்டாலும் முடியானது தனிமனிதனின் நம்பிக்கைகள் அல்லது சமூக (வயது, பாலினம், மத நம்பிக்கை) நிலையைச் சுட்டுவதாக அமைந்துள்ளது[1].
Remove ads
மீள்பார்வை

முடி என்பது இரண்டு தனிப்பட்ட வடிவங்களைக் குறிப்பிடுகின்றது:
- முதலாவதாக, தோலுக்கடியிலுள்ள மயிர்க்கால்களையும், தோலிலிருந்து நீக்கப்பட்ட மயிர்க்குமிழ்களையும் குறிக்கின்றது. இவ்வுறுப்பு அடித்தோலில் அமைந்துள்ளது. இது, முடி விழுந்தவுடனோ அல்லது நீக்கப்பட்டவுடனோ மீண்டும் வளரும் குருத்தணுக்களைப் (stem cells) பராமரிக்கிறது. இவை காயமேற்பட்டப்பின் தோல் மீண்டும் வளரவும் உபயோகப்படுகிறது[2].
- இரண்டாவதாக, தோலின் மேற்புறமுள்ள கடினமான இழைவடிவ மயிர்த்தண்டுகளைக் குறிக்கின்றது. மயிர்த்தண்டின் குறுக்குவெட்டுப் பகுதிகளைத் தோராயமாக மூன்றாகப் பிரிக்கலாம்.
மயிரிழைகளின் வடிவம் பல அடுக்குகளாலானது:
Remove ads
விவரிப்பு
ஒவ்வொரு மயிரிழையும் அகணி, புறணி, புறத்தோல் பகுதிகளைக் கொண்டதாகும்[4]. உள்ளார்ந்தப் பகுதியான ஒழுங்கற்ற, திறந்த பகுதிகளை உள்ளடக்கிய அகணி எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை[5][6]. உயர் வடிவமும், ஒருங்கமைவுமுள்ள புறணி (அல்லது முடியின் மைய அடுக்கானது) வலுவிற்கும், நீர் உறிஞ்சுவதற்கும் மூலமாக உள்ளது. புறணியில் மெலனின் என்னும் நிறமிப் பொருள் உள்ளது. இதன் எண்ணிக்கை, பரவல், மெலனின் குருணைகளின் வகைகளின் அடிப்படையில் முடி இழைகளின் வண்ணம் வேறுபடுகிறது. மயிர்க்குமிழ்களின் வடிவம் புறணியின் வடிவத்தை வரையறுக்கிறது. நீளமான அல்லது சுருண்ட முடியைப் பொருத்து மயிரிழைகளின் வடிவம் மாறுபடுகிறது. நீளமான முடியை உடையவர்களின் மயிரிழைகள் வட்டவடிவமாக உள்ளது. நீள் வட்டம் அல்லது பிற வடிவங்களில் மயிரிழைகளைக் கொண்டவர்களின் முடிக்கற்றைகள் அலைஅலையாகவோ, சுருண்டதாகவோக் காணப்படுகிறது. புறத்தோல் வெளிப்புறத்தை மூடிக்கொண்டுள்ளது. புறத்தோலின் சிக்கலான வடிவமைப்பு கொழுமிய ஒற்றை மூலக்கூறுகளாலானதால் முடி வீங்கும்போது நழுவும் தன்மையை ஏற்படுத்துகிறது. மேலும், இதனால் முடிக்கு நீரை விலக்கும் தன்மை உருவாகிறது[4]. மனித முடியின் குறுக்களவு 0.017-0.18 மில்லிமீட்டர் (0.00067 - 0.00709 அங்குலம்) அளவில் வேறுபட்டு காணப்படுகிறது[7]. இரண்டு மில்லியன் நுண்குழலியச் சுரப்பிகளும், வியர்வைச் சுரப்பிகளும் நீர்மத் திரவங்களை சுரப்பதனால் ஆவியாதல் முறையில் உடல் குளிர்ச்சியாகிறது. மயிரிழைத் தொடங்கும் பகுதியில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் கொழுப்புப் பொருள்கள் முடிக்கு உயவூட்டுகின்றன[8].
மயிர்க்கால்களிலிருந்து முடி வளரத் தொடங்குகிறது. முடியின் ஒரே உயிர்ப்பானப் பகுதி நுண்குமிழ்களில் காணப்படுகிறது. கண்ணுக்குத் தெரியும் முடி மயிர்த்தண்டாகும். மயிர்த்தண்டுகள் எவ்விதமான உயிர்வேதியியத் தொழிற்பாடுகளும் இல்லாத இறந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன. முடியின் அடிப்பகுதியிலுள்ள மயிர்க்கால்களில் (நுண்குமிழ்கள்) மயிர்த்தண்டுகளை உருவாக்கும் செல்கள் உள்ளன[9]. மயிர்க்கால்களில், முடிக்கு உயவூட்டும் எண்ணெயைத் தயாரித்து வெளியிடும் எண்ணெய்ச் சுரப்பிகள் (sebaceous glands), முடியைச் செங்குத்தாக நிற்கச் செய்யும் சிலிர்த்தசைகள் (arrector pili) ஆகியனவும் உள்ளன. மனிதர்களில் சிலிர்த்தசைகளினால் உடலிலுள்ள முடிகள் மயிர்சிலிர்ப்பு (goose bumps) அடைகின்றன.
Remove ads
மயிர்க்கால்கள்
மயிர்க்கால்கள் மயிர்த்தண்டைக் காட்டிலும் மிருதுவான, வெண்மையான நுண்குமிழில் முடிவடைகின்றன. மயிர்க்கால்கள், மீந்தோல் நுண்குமிழ் கூம்பலாக மயிர்ப்பைகளில் உள்ளன. நாரிழை இணைப்புத் திசு, கண்ணாடி போன்ற சவ்வு, வெளிப்புற மயிர்க்கால் உறைகள், புறச்சவ்வுப் படலமும், சிறுமணியுருவப் படலமும் சேர்ந்த உட்புற மயிர்க்கால் உறைகள், அகணி, புறணி, புறத்தோல் பகுதிகள் ஆகியவை முடி படலங்களின் நுண்குமிழ்களில் உள்ளன[10].
இயற்கை வண்ணம்

முடியின் எல்லா வண்ணங்களும் இரண்டு வகையான முடி நிறமிப் பொருள்களைப் பொருத்தே அமைகிறது. இந்த இருவிதமான மெலனின் நிறமிகளும் மயிர்க்கால்களில் உருவாக்கப்பட்டு மயிரிழைகளில் காணப்படும் குருணைகளில் உள்ளன. பழுப்பு நிற, கருப்பு முடிகளில் யூமெலனின் என்னும் நிறமி முதன்மையாக உள்ளது. சிவப்பு முடிகளில் பியோமெலனின் என்னும் நிறமி முதன்மையாக உள்ளது. வெண்பொன்னிற மயிர் நிறமிப் பொருள்கள் இல்லாததால் உருவாகிறது.[11] சாம்பல் நிற மயிர் மெலனின் தயாரிப்பு குறைவதாலோ அல்லது முற்றிலும் நின்றுவிடுவதாலோ உண்டாகிறது.
Remove ads
மனித முடி வளர்தல்
சீதச்சவ்வுகள், உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், உதடுகள் போன்ற உரோமமில்லாத தோல் பகுதிகளைத் தவிர்த்து உடலின் வெளிப்பகுதியில் மற்ற எல்லா இடங்களிலும் முடி வளர்கிறது. முடி மூன்று ஒருங்கிணைந்த, தனிப்பட்ட, திட்டவட்டமான வளர்நிலைகளைக் கொண்டுள்ளது: மயிர் உருவாக்கம் (anagen), மயிர் சிதைதல் (catagen), சுருண்டு வளர்ச்சியற்ற மயிர் (telogen). இம்மூன்று நிலைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன - ஒரு மயிரிழை உருவாக்க நிலையிலும், இரண்டாவது மயிரிழை வளர்ச்சியற்ற நிலையிலும் இருக்கலாம். இம்மூன்று நிலைகளும் திட்டவட்டமான பண்புகளைக் கொண்டுள்ளதால் முடியின் நீளத்தை இவைத் தீர்மானிக்கின்றன. உடல் மயிர்கள் இளமயிர், ஆணகப்பிறப்புக்குரிய முடி எனத் தனிப்பட்ட கல (செல்) அமைப்புடன் பல வகைப்பட்டவையாக உள்ளன. இத்தகு பலவகைப்பட்ட அமைப்புக் கட்டுமானங்கள் முடிக்கு தனிப்பட்ட சிறப்பியல்புகளை அளித்து வெதுவெதுப்பு, பாதுகாப்பு போன்ற குறிப்பிட்ட செயற்பாடுகளைச் செய்ய உதவுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads