மயிலப்பன் சேர்வைகாரர்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மயிலப்பன் சேர்வைகாரர் (இறப்பு: 1802, ஆகஸ்ட் 6) பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்த ஒரு தமிழ் தளபதி.

வரலாறு

இராமநாதபுரத்தின் மன்னர் முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியை (1762 - 1809) 1795, பெப்ரவரி 8 இல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி பதவி நீக்கம் செய்தது. மன்னரைக் கைது செய்து திருச்சிக் கோட்டையில் அடைத்துவிட்டு சேதுபதியின் நாட்டை கும்பெனியார் ஏற்றனர்.

கும்பெனியார் குடிமக்களிடம் கெடுபிடி வசூல் செய்தும் சுரண்டியும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர். அவர்களுக்கு மயிலப்பன் சேர்வைக்காரர் தலைமை தாங்கினார். இவர் சேதுபதி சீமையின் தென்பகுதியான ஆப்பனூர் நாட்டைச் சேர்ந்த சித்திரங்குடி என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சேதுபதி மன்னரது சேவையில் சிறப்பாக விளங்கியதால் மன்னர் இவருக்கு ஒரு படைப் பிரிவின் தலைவராக்கினார். இதனால் "சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைகாரர்" என்றழைத்தனர்.

1795 முதல் 1802 வரை பல இடங்களில் ஆங்கிலேயர்க்கு எதிராகக் கிளர்ச்சிகளில் சேர்வைகாரர் ஈடுபட்டார். 1799, ஏப்ரல் 24 ஆம் நாள் முதுகளத்தூரில் உள்ள கும்பெனியாரின் கச்சேரியைத் (court) தாக்கியது, அபிராமத்தில் உள்ள கச்சேரியைத் தாக்கியும் கைத்தறிக் கிட்டங்கியைத் தாக்கி துணிகளை சூறையிட்டது, கமுதியில் உள்ள கச்சேரியைத் தகர்த்து பெரிய நெற்களஞ்சியங்களைக் கொள்ளையிட்டது போன்ற தாக்குதல்கள் அவரது தலைமையில் நடந்தன. தொடர்ந்து 42 நாட்கள் இத்தகையப் போராட்டங்களால் முதுகளத்தூர், கமுதிச் சீமைகள் கும்பெனி நிர்வாகத்திலிருந்து தனித்து நின்றன. இப்போராட்டத்தில் தீவிர பங்கு கொண்ட சிங்கன் செட்டி, ஷேக் இப்ராகிம் சாகிபு போன்ற சேர்வைகாரரின் தோழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ஆங்கிலப் படைகளை வழி நடத்தியவர்கள் கலக்டர் லூஷிங்க்டன் மற்றும் கர்னல் மார்டின்ஸ் ஆவர்.

போராட்டத்தை அடக்கிய கும்பெனியார் மயிலப்பன் சேர்வைகாரரைத் தவிர மற்றப் போராளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கினர். வேறு வழியின்றி சேர்வைகாரர் மாறுவேடத்தில் சோழ நாடு சென்றார். எட்டு மாதங்கள் கழித்து சேது நாட்டிற்குத் திரும்பினார். அதன் பின் சிவகங்கை சீமையின் மருதிருவரின் வேண்டுகோளின்படி மருதிருவர் அணியில் சேர்ந்து பாடுபட்டதுடன் பாஞ்சாலம் குறிச்சிப் பாளையக்காரர், காடல்குடி, நாகலாபுரம், குளத்தூர் ஆகிய பாளையக்காரர்களது ஆங்கிலேயர் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு ஆதரவாக சேர்வைகாரர் செயல் பட்டார்/

மயிலப்பன் சேர்வைகாரின் நடவடிக்கைகளையும், அவர் மருதிருவர் அணியில் தீவிரமாக ஈடுபட்டதையும் நன்கு அறிந்திருந்த கலக்டர் லூஷிங்க்டன் சேர்வைகாரரை தம்மிடம் ஒப்படைக்கும்படி மருதிருவர்க்குத் தாக்கீது அனுப்பினார். மருதிருவர் கலக்டரின் உத்தரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

Remove ads

தூக்கிலிடப்படல்

ஆங்கிலக் கும்பெனியர்க்கு எதிரான மருதிருவரின் இறுதிப் போராட்ட நாள் 1801, அக்டோபர் 2. இதில் தோல்வியுற்றதன் காரணமாக 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் மருதிருவர் தூக்கிலடப்பட்டனர். மருதிருவரின் இம்முடிவிற்குப் பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் தன்னந்தனியே முதுகளத்தூர், கமுதி பகுதிகளில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். கம்பெனியாரின் வெகுமதிக்காக காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மூன்று மாத கால கடுமையான சிறை வாழ்க்கைக்குப் பின்னர் மயிலப்பன் சேர்வைகாரர் 1802, ஆகஸ்ட் 6 ஆம் நாளன்று அபிராமத்தில் கம்பெனியாரால் தூக்கிலிப்பட்டார்.

Remove ads

உசாத்துணை

  • டாக்டர் எஸ்.எம். கமால் எழுதியுள்ள நூல்கள்:
    • மறவர் சீமை மாவீரன் மயிலப்பன்
    • விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்
    • சேதுபதி மன்னர் வரலாறு
  • Military consultations vol 256 & 299
  • Revenue Sundries vol 26
  • Madurai District Recrds
  • The History of Madurai by Dr.K.Rajayyan
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads