மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய இந்திய சமூக உருமாற்ற பிரிவு (மித்ரா) (மலாய்: Unit Transformasi Masyarakat India Malaysia (MITRA); ஆங்கிலம்: Malaysian Indian Community Transformation Unit) (MITRA) என்பது மலேசிய இந்திய சமூகத்தின் சமூக - பொருளாதார மேம்பாட்டிற்காக, மலேசிய அரசாங்கத்தால் 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்புப் பிரிவு (Socio Economic Development of Indian community in Malaysia) ஆகும்.[2]
இந்தத் துறை மலேசியப் பிரதமர் துறையின் கீழ் செயல்படுகிறது. முன்பு மலேசிய ஒற்றுமை அமைச்சின் கீழ் இயங்கியது.
மலேசிய இந்தியச் சமூகத்தில், குறிப்பாக பி40 (Bottom 40%) எனும் பின்தங்கிய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஒரு சிறப்பு அரசாங்கப் பிரிவாக மித்ரா எனும் மலேசிய இந்திய சமூகத்தின் உருமாற்ற பிரிவு 2019-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த அமைப்பு, இந்திய சமூகப் பிரிவின் சமூக-பொருளாதார மேம்பாட்டு அமைப்பு (செடிக்) (Socio-Economic Development of the Indian Community Unit (SEDIC) என்று அழைக்கப் பட்டது.[3]
Remove ads
செயற்குழு
மித்ரா செயற்குழுவுக்கான நியமனங்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் 2023 ஏப்ரல் 18-ஆம் தேதி அறிவித்தார். குழுவின் சிறப்புத் தலைவராக (Special Committee of the Malaysian Indian Community Transformation Unit) (MITRA) சுங்கை பூலோ மக்களவை தொகுதி உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் பொறுப்பு ஏற்றுள்ளார்.
மஇகாவின் முன்னாள் மத்திய செயற்குழு உறுப்பினர் செனட்டர் டத்தோ சி. சிவராஜ்; கிள்ளான் மக்களவை தொகுதி உறுப்பினர் கணபதிராவ் விருமன்; சிகாமட் மக்களவை தொகுதி உறுப்பினர் யுனேசுவரன் ராமராஜ்; மற்றும் மித்ரா தலைமை இயக்குநர் ரவிந்திரன் நாயர் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.[4]
Remove ads
வரலாறு
2008-ஆம் ஆண்டில் அமைச்சரவைக் குழுவின் மூலம் மலேசிய அரசாங்கம் சில கொள்கைகளை அறிமுகப்படுத்தியது. அரசாங்கத் திட்டங்களில் (Cabinet Committee on Indian Participation in Government Program and Projects) இந்தியர்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும் எனும் திட்டத்தையும் அரசாங்கம் முன்வைத்தது.
அந்தக் கட்டத்தில் தான், மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு எனும் மித்ராவின் தோற்றம் தொடங்கியது.[2]
மலேசிய இந்தியர்கள் நலம் சார்ந்த அமைப்புகள்
மித்ரா தோன்றுவதற்கு முன்னால் இருந்த மலேசிய இந்தியர்கள் நலம் சார்ந்த அமைப்புகள்:
- மலேசிய இந்தியர்களின் சமூக மேம்பாட்டிற்கான சிறப்பு அமலாக்க பணிக்குழு (2014)
- (Special Implementation Task Force) (SITF)
- மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்திற்கான செயல் திட்டம்
- (Action Plan for the Future of Tamil Schools) (PTST)
- இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு சிறப்புச் செயலகம்
- (Special Secretariat for Empowerment of Indian Entrepreneurs) (SEED)
- இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டம்
- (Socioeconomic Development of Indian Community) (SEDIC)
மலேசிய இந்தியச் செயல்திட்டம்
2017-ஆம் ஆண்டில், மலேசிய இந்திய செயல்திட்டத்தை (Malaysian Indian Blueprint) (MIB) மலேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் மலேசிய இந்தியச் சமூகத்தை பாதிக்கும் சவால்கள் ஆவணப் படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியில் செடிக் (SEDIC) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
2018-ஆம் ஆண்டில், மலேசிய ஒற்றுமை அமைச்சின் (Ministry of National Unity) தலைமையில்; செடிக் அமைப்பு மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (MITRA) என மறுபெயரிடப்பட்டது. செப்டம்பர் 2022-இல், மித்ரா மலேசியப் பிரதமர் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
மித்ராவின் முக்கியப் பணிகள்
மலேசிய இந்தியச் சமூகத்தைப் பாதிக்கும் தற்போதைய பிரச்சனைகள் மற்றும் சவால்களைக் கண்டறிதல்; சமூக-பொருளாதார மேம்பாட்டு முயற்சியை செயல்படுத்துதல்; மற்றும் பொதுவாக இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக அரசு மற்றும் தனியார் துறைக்கு இடையிலான ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பது மித்ராவின் முக்கியப் பணிகள் ஆகும்.
மித்ரா புதியத் திட்டங்கள்
மலேசிய இந்தியப் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகள் உட்பட சமூகத்தில் உள்ள பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தீர்வு காண்பதற்கும் மித்ரா மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மலேசிய இந்திய குடும்பங்களுக்காக மித்ரா அமைப்பு, அண்மையில் மூன்று உதவித் திட்டங்களை அறிவித்துள்ளது.[5]
தமிழ் பாலர் பள்ளிகள்
- கல்வி அமைச்சில் பதிவு செய்துள்ள தமிழ் பாலர் பள்ளிகளில் பயிலும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 4,500 மாணவர்களுக்கு 12 மாதங்களுக்கு தலா 200 ரிங்கிட் உதவித் தொகை வழங்குவது; 150 ரிங்கிட் பாலர் பள்ளி கல்வி கட்டணமாகவும் 50 ரிங்கிட் உணவு உதவித் தொகையகாகவும் வழங்கப்படும்;[6]
- மித்ராவின் சமூக திட்டமாக; ஏழ்மை நிலையிலுள்ள இந்தியக் குடும்பங்களைச் சேர்ந்த கடுமையான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு ’டயாலிசிஸ்’ இரத்த சுத்திகரிப்பு மேற்கொண்டுவரும் 900 பேருக்கு உதவித் தொகையாக ஒரு தடவைக்கு 200 ரிங்கிட் உதவித் தொகை வீதம் மாதத்திற்கு நான்கு முறை வழங்கப்படும்;[6]
வறுமை எதிர்ப்பு முயற்சிகள்
தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் கீழ் வறுமை எதிர்ப்பு முயற்சிகள்; மற்றும் இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டிற்காக மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவின் (மித்ரா) கீழ் ரிங்கிட் 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய சமூக தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரிங்கிட் 25 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
2022 செப்டம்பர் மாதம் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஏழைக் குழுவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கான RM2 மில்லியன் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்தார்; மேலும் மித்ராவை பிரதமர் துறையின் கீழ் கொண்டு வருவதற்கும்; மித்ரா அறக் கட்டளையை நிறுவுவதற்கும் ம.இ.கா தலைவர் விக்னேஸ்வரனின் ஆலோசனையையும் ஏற்றுக்கொண்டார்.
இந்தியர்கள் அதிகம் வாழும் 72 தொகுதிகள்
நாட்டில் இந்தியர்கள் அதிகம் உள்ள 72 தொகுதிகளில் செயல்படும் மக்கள் சேவை மையங்களுக்கு 72 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்நிதி வழி மனித மேம்பாடு உட்பட மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.[7][8]
விமானப் போக்குவரத்து துறையில் பயிற்சி
மேலும் 100 இந்திய இளைஞர்களுக்கு விமானப் போக்குவரத்து துறையில் (Civil Aviation Authority of Malaysia) பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 21 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி திட்டத்தில் 9 மாதங்களுக்கு கல்வி போதனையும் 12 மாதங்களுக்குப் பயிற்சியும் வழங்கப்பட்டு சான்றிதழ் கொடுக்கப்படும். அத்துடன் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.[8]
மேலும், 527 தமிழ்ப்பள்ளிகளுக்கு 6,000 மடிக்கணினிகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படும்.[8]
இந்தத் திட்டத்தின் கீழ் மலேசிய இந்திய மக்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக 2 கோடி ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads