மாதவிடாய் சுகாதார நாள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாதவிடாய் சுகாதார நாள் (Menstrual hygiene day MHD, MH Day) ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28 ஆம் நாளன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விழிப்புணர்வு நாள் ஆகும். மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்ப்பதும், உலக முழுவதுமான பெண்கள் மற்றும் பதின்மச் சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.

விரைவான உண்மைகள் மாதவிடாய் சுகாதார நாள், பிற பெயர்(கள்) ...

2014 இல் செருமனியைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்பான வாசு யுனைட்டெட் (WASH United) தொடங்கப்பட்டு, 270 க்கும் மேற்பட்ட உலகளாவிய ஒத்த அமைப்புகளின் ஆதரவைப் பெற்றது. உலகக் கைகழுவும் நாள் (அக்டோபர் 15), உலகக் கழிவறை நாள் (நவம்பர் 19) போன்றவற்றுடன் மாதவிடாய் சுகாதார நாளும் துப்புரவு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நாட்களுள் ஒன்றாக உள்ளது. பெரும்பாலான பெண்களின் மாதவிடாய் கால அளவு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5 நாட்கள் என்பதையும் மாதவிடாய் சுழற்சியின் தோராய அளவு 28 நாட்கள் என்பதையும் அடையாளப்படுத்தும் விதமாக ஆண்டின் 5 ஆவது மாதமான மே மாதத்தின் 28 ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[1]

Remove ads

மாதவிடாய் சுகாதார மேலாண்மை

முறையான மாதவிடாய் சுகாதார மேலாண்மை (menstrual hygiene management – MHM) என்பது கீழுள்ளவாறு வரையறுக்கப்படுகிறது:

  • மாதவிடாய்க் காலத்தின்போது மகளிரும் பதின்மச் சிறுமியரும் மாதவிடாய்க் குருதிச் சேகரிப்பதற்கு அல்லது உறிஞ்சுவதற்குச் சுத்தமான பொருட்களைப் பயன்படுத்தல்; அவர்களுக்குத் தேவையானபோது அவற்றை மாற்றுவதற்குத் தனியிட வசதி.
  • அந்நாட்களில் உடலைச் சுத்தப்படுத்தத் தேவைப்படும் தண்ணீர் மற்றும் கழுவுபொருள் (சோப்பு); குருதி சேகரிப்பு அல்லது உறிஞ்சலுக்குப் பயன்படுத்தப்பட்டவற்றை அப்புறப்படுத்தும் வசதி."[2]
Remove ads

பின்னணி

Thumb
வங்காளதேசத்தில் மாதவிடாய் சுகாதார நாள் கொண்டாட்டம்
Thumb
இந்தியாவிலுள்ள அம்ரா படாதிக்கில் மாதவிடாய் சுகாதார நாள் கொண்டாட்டம்
Thumb
தன்சானியாவிலுள்ள பள்ளிச்சிறுமிகளுக்கான கழிப்பிடம், இவை இருந்தாலும், விடாய்க்கால அணையாடை எறிவதற்கான வசதியில்லை.

மாதவிடாய் சுகாதாரம் குறித்த போதுமான அறிதல் இல்லாமையால் வளர்ந்துவரும் நாடுகளில் மகளிர் பலவிதமான சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. வெளிப்படையாய் மாதவிடாய் குறித்துப் பேசுவது தவிர்க்கப்படுவதால் மாதவிடாய்ப் பருவத்திலுள்ள மகளிருக்கும் பதின்மச் சிறுமையருக்கும் அவர்களது உடலமைப்பு, உடல் நலம், கல்வி, தன் மரியாதை, மனித உரிமை குறித்த விவரங்கள் தெரியவருவதில்லை.[3][4]இந்தியாவில் 2014-ம் ஆண்டில் நடைபெற்ற கருத்துக்கணிப்பின்படி, சுமார் 42% பெண்களுக்கு விடாய்க்கால அணையாடை பற்றியோ, தங்களுடைய உடலில் எந்த பகுதியிலிருந்து மாதவிடாய் தோண்றியதென்பதோ தெரியாமல் இருக்கிறது மற்றும் "அநேகமானோர் தங்களுடைய முதல் மாதவிடாயின் போது பயத்திலோ அல்லது கவலையிலோ ஆழ்ந்திருக்கின்றனர்."[5] உலகளவில், மூன்றில் ஒருவருக்கு நல்ல கழிப்பிட வசதி கிடையாது.[6] நீர்-துப்புரவு-சுகாதாரம்-கல்வி துறையிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மையிலுள்ள குறைகள் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.[7][8]

உடல்நலம், மனநலம் மற்றும் சமுதாயம் சார்ந்த கூறுகள்

மோசமான மாதாவிடாய் சுகதார மேலாண்மையால் பெண்களின் இனப்பெருக்கப் பாதை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும் எவ்வகையான கிருமித்தொற்று நேரலாம், அதன் வகைப்பாடு, அளவு, ஏற்படக்கூடிய வழிகள் ஆகியவை குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை.[8] இந்தியாவில் பெரும்பான்மையான சிறுமியர் இனப்பெருக்கப் பாதையின் கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. துவக்கத்திலேயே இந்நிலை சரிவர கவனிக்கப்படவில்லையெனில் பலவிதமான ஊனங்களுக்கு வழி ஏற்படுத்தி விடும்.[9]

மாதவிடாய் குறித்த தவறான கருத்துக்களால் இந்தியாவில் சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் சரியான உணவு எடுத்துக்கொள்வதும் குளிப்பதும் இல்லை.[10] மாதவிடாய் குறித்த தவறான கண்ணோட்டங்களால் சிறுமியரின் தற்படிமம் எதிர்முகப் பாதிப்படையலாம்.[11][12]

பள்ளிக்கூடங்களில் துப்புரவு வசதிகள்

Thumb
மாதவிடாய் மற்றும் பருவமடைதல் பற்றி புத்தகம் ("Growth and change") மூலம் அறிதல் (தன்சானியா)

மாதவிடாய்க்குப் பயன்படுத்தத் தேவையான சுகாதாரமான பொருட்கள் கிடையாமையாலும் தண்ணீர், துப்புரவு, சுகாதார வசதிகள் இல்லாமையாலும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் (sub-Saharan Africa) சிறுமியர் ஐந்து நாட்கள் வரை பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.[13][14] தண்ணீர், துப்புரவு, சுகாதார வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் பள்ளிகளில் சிறுமியரின் வருகைப்பதிவைக் கூட்டலாம். வங்காள தேசத்திலுள்ள ஒரு பள்ளியில் துப்புரவு வசதிகளை மேம்படுத்தியதால் அப்பள்ளியின் சிறுமியரின் சேர்க்கைப் 11% அதிகரித்தது.[15]

வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள பள்ளிகளில் மாதவிடாய்க் கழிவு அகற்றல் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை. உலகளவில் பள்ளிகளில் மாணவியருக்குத் தண்ணீர் மற்றும் துப்புரவு வசதி 47% மட்டுமே கிடைக்கிறது.[3] பள்ளிகளில் கழிவறைகள் இருந்தாலும்கூட, அங்கு மாதவிடாய் கழிவுகளைச் சேகரிக்கும் கூடைகள் வைக்கப்பட்டிருப்பதில்லை. இதனால் பயன்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட மாதவிடாய் அணையாடைகள் பள்ளி வளாகத்தில் பல்வேறு இடங்களிலும் கிடக்க வாய்ப்புள்ளது.[16] இது பள்ளியின் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்பதுடன் சிறுமியருக்கு மன உளைச்சலையும் தரும்.

ஐக்கிய அமெரிக்கவில் சுகாதாரமான மாதவிடாய்ப் பொருட்கள் வாங்க வசதியில்லாத சிறுமியர் ”ஆடைகளில் கறைபடக் கூடிய சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகப்” பள்ளிக்குச் செல்வதைத் தவிர்க்க நேரலாம்.[17]

மாதாவிடாய்ப் பொருட்கள் அணுக்கம்

குறைந்த வருவாயுள்ள நாடுகளில் விலை, கிடைக்கும்தன்மை, சமூக வரன்முறை போன்ற காரணிகளால் பெண்களுக்கு சுகாதாரமான மாதவிடாய்ப் பொருட்கள் கிடைக்கும் வாய்ப்பு மட்டுப்படுகிறது.[18]

வேலைபார்க்கும் இடங்களில் மாதவிடாய் அணையாடைகள் கிடைக்காமையாலும் போதிய கழிவறை வசதிகள் இல்லாதமையாலும் மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது பாதிக்கப்படுகிறது.[12] வங்காளதேசத்தில் தொழிற்சாலைகளில் வேலைபார்க்கும் பெண்கள், தங்களுக்கு நல்ல சுகாதாரமான அணையாடைகள் வாங்கப் பொருளாதார வசதி இல்லாமையால் அத்தொழிற்சாலையின் தரை விரிப்புகளின் கிழிசல்களை அணையாடைகளாகப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.[19]

ஐக்கிய அமெரிக்காவிலும் குறைந்த வருமானமுள்ள/வீடற்ற ஏழைப் பெண்களும் சிறுமியரும் மாதவிடாய் அணையாடை வாங்கும் வசதியற்று உள்ளனர்.[17][20] நியூயார்க்கின் உணவு வைப்பகங்கள் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதார பொருட்களுக்கு அதிகளவு தேவையுள்ளதாகத் தெரிவிக்கின்றன.[17] ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வீடற்ற பெண்கள் குளிப்பதற்கும் கழிவறைப் பயன்பாட்டிற்கும் சிரமப்பட வேண்டியுள்ளது.[20] வசதியற்ற பெண்களுக்கு உதவும் வகையில் மாதவிடாய்ப் பொருட்களுக்கு விற்பனை வரிவிலக்கு அளிக்கப்படவேண்டும்; பொதுப் பள்ளிகளில் மாணவியருக்கு இலவசமாகப் பஞ்சுத்தக்கைகள் வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கைகள் நியூயார்க்கில் முன்வைக்கப்பட்டுள்ளன.[17]ஐக்கிய இராச்சியம் போன்ற தொழில்வள நாடுகளிலும் பெண்கள் பஞ்சுத்தக்கைகள் மற்றும் அணையாடைகள் வாங்க வசதியில்லாமல் உள்ளனர்.[21]

தவறான கருத்துகள்

நல்ல உடல்நலமுள்ள ஒரு பெண்ணின் உடலில் நிகழும் ஒரு உயிரியல் செயல்பாடாக இருந்தபோதும், ஆழமாக வேரூன்றிப்போன தவறான கலாச்சாரக் கண்ணோட்டங்களால் மாதவிடாய் தொடர்பான எவையும் ஒருவிதத் தயக்கத்துடனேயே அணுகப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, இந்தியாவில் பாராம்பரியமான இந்துக்கள் வீடுகளில் மாதவிடாய்க் காலத்தில் சமையலறைக்குள்ளும் கோயில்களுக்குள்ளும் நுழைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.[5] மத்தியப் பிரதேச மாநிலத்தில் சாபுஆ மாவட்டப் பகுதிகளில் (Hindi: झाबुआ जिला) மாதவிடாய் ஒரு நோயாகப் பார்க்கப்படுகிறது. அதனால் மாதவிடாய் நாட்களில் பெண்கள் படுக்கையில் படுக்கவும், சமயலறையில் நுழையவும், குடும்பத்தின் பிற ஆண்களைத் தொடவும், காரமான உணவுகளை உண்பதும் அனுமதிக்கப்படுவதில்லை.[10]

Remove ads

குறிக்கோள்கள்

Thumb
உகாண்டாவில் மாதவிடாய் சுகாதார நாள் கொண்டாட்டம்

விழிப்புணர்வு ஏற்படுத்தல்

மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்து நிலவும் மௌனத்தைத் தகர்த்து, பெண்களுக்காகவும் சிறுமியருக்குக்காகவும் ஒற்றுமையான வலுவான குரல் எழுப்புவதற்காகத் தனிநபர்கள், அமைப்புகள், சமூக வணிகங்கள் (social business) மற்றும் ஊடகங்களை ஒன்றிணைக்கும் மேடையாகச் செயல்படுவதே மாதவிடாய் சுகாதார நாளின் நோக்கமாகும்.[13][22]

மாதவிடாய் சுகாதார நாளின் நோக்கங்கள்
[6][23]
  • மாதவிடாய் நாட்களில் பெண்களும் சிறுமியரும் சந்திக்கும் சவால்களையும் சிக்கல்களையும் குறித்து அலசுதல்
  • இதற்காக மேற்கொள்ளப்படும் வளர்முகமான புத்தாக்கத் தீர்வுகளை முன்னிலைப்படுத்தல்
  • பெண்கள் மற்றும் சிறுமியரின் உரிமைகளை அங்கீகரித்து ஆதரிக்கும் உலகளவிலான இயக்கம் வளர ஊக்குவித்தல்; இதே நோக்கத்தோடு செயற்படும் அமைப்புகளுக்கிடையே உள்ளிட அளவிலும் தேசிய அளவிலும் இணைப்பு ஏற்படுத்தல்
  • கொள்கை உரையாடல்களில் ஈடுபடுதல்; உலக, தேசிய, உள்ளிட அளவிலான கொள்கைகள், நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களாக மாதவிடாய் சுகாதார மேலாண்மை ஒருங்கிணைப்பை எடுத்துச் செல்லல்
  • சமூக ஊடகங்கள் உட்பட்ட பல ஊடகச் செயற்பாடுகளுக்கான வாய்ப்புகளைத் தோற்றுவிக்கிறது.

உடற்கூறு பற்றிய அறிதல், தன்னாட்சி மற்றும் பாலின சமத்துவத்துவத்தை வளர்த்தெடுக்கும் நாடுகடந்த இயக்கத்தை இந்நாள் உருவாக்குகிறது.[6]

செயற்பாடுகள்

2015

மே 28, 2015 இல் "மாதாவிடாய் குறித்த தயக்கத்துக்கு முடிவு கட்டுவோம்" என்ற கருத்தை வலியுறுத்தி அனைத்துலக அமைப்புகளும் தனிநபர்களும் ஒன்றிணைந்து இரண்டாவது மாதவிடாய் சுகாதார நாளை அனுசரித்தனர். 33 நாடுகளில் 127 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெண்கள் மற்றும் சிறுமியரின் சிக்கல்கள், அவை தொடர்பான கொள்கைகளை முன்னெடுத்தல், விளிம்புநிலையோரை அணுகல், மாதவிடாய் நாட்கள் வெட்கப்படுவதற்குரியவை என்றும் அழுக்கானவை என்றும் கூறப்படும் சமூக வரன்முறைகளை எதிர்த்தல் போன்ற விடயங்களில் ஆண்களும் சிறுவர்களும் பங்கேற்கும் வாய்ப்பாக அந்நிகழ்வுகள் அமைந்தன.[24]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads