நியூயார்க்கு நகரம்
அமெரிக்க நியூயார்க் மாநிலத்திலுள்ள மாநகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியூயார்க்கு நகரம் (ஆங்கிலம்: New York City; இலங்கை வழக்கு: நியூ யோர்க்) ஐக்கிய அமெரிக்காவில் மிகக்கூடுதலான மக்கள் தொகையுடைய நகரமாகும். இங்கு உலகெங்குமிருந்து குடிபெயர்ந்த மக்கள் வாழ்வதால் இந்த நகரத்தின் தாக்கம் வணிகம், நிதி, பண்பாடு, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் உலகளாவிய அளவில் கூடுதலாகும். இங்கு ஐக்கிய நாடுகளின் தலைமையகம் அமைந்திருப்பதால் பன்னாட்டு அரசியலில் சிறப்பு இடத்தை வகிக்கிறது. இதே பெயரிலுள்ள நியூயார்க் மாநிலத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக நியூயார்க்கு நகரம் என்று நகரம் என்ற சுட்டுச்சொல்லுடன் அடிக்கடி குறிக்கப்படுகிறது.
Remove ads
ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் அட்லாண்டிக் கரையோரம் பெரிய இயற்கை துறைமுகமாக அமைந்துள்ள இந்நகரம் பிரான்க்சு, புருக்ளின், மேன்காட்டன், குயின்சு, ஸ்டேட்டன் தீவு ஆகிய (மாவட்டங்களுக்கு இணையான) ஐந்து பரோக்களால் ஆனது. 2008ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 8.3 மில்லியனுக்கும் கூடுதலாகும்.[2] இதன் நிலப்பரப்பு 305 சதுர மைல்களாகும் (790 சதுர கி.மீ.).[3][4] நியூயார்க்கு நகரம் ஐக்கிய அமெரிக்காவிலேயே மக்களடர்த்தி மிக்க இடமாகும்.[5] 18.8 மில்லியனாக மதிப்பிடப்படும் பெருநகர நியூயார்க்குப் பகுதியின் மக்கள் தொகை நாட்டிலேயே மிகவும் அதிகமானதாகும்.[6] பெருநகர நியூயார்க்கின் நிலப்பரப்பு 6,720 சதுர மைல்களாகும் (17,400 சதுர கி.மீ.).
நியூயார்க்கு டச்சுகாரர்களால் 1624ல் வணிக துறைமுகமாக உருவாக்கப்பட்டது. 1664ல் ஆங்கிலேயர்களின் கைக்கு இக்குடியேற்றம் மாறும் வரை நியு ஆம்ஸ்டர்டாம் என்று அழைக்கப்பட்டு வந்தது.[7] 1785லிருந்து 1790வரை இந்நகரம் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகராக செயல்பட்டது.[8] 1790லிருந்து இதுவே அமெரிக்காவின் பெரிய நகராக இருந்து வருகிறது.[9]
இந்நகரில் உள்ள பல இடங்கள் உள்ளூர் மக்கள் மற்றும் அன்றி வெளியூர் மக்களாலும் நன்கு அறியப்பட்டதாகும். 19-20ம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பல மில்லியன் கணக்கான குடியேற்றவாதிகளை சுதந்திரதேவி சிலை வரவேற்றது. கீழ் மேன்காட்டன் பகுதியில் உள்ள வால் தெரு இரண்டாம் உலகப்போருக்கு பின் ஆதிக்கம் மிகுந்த உலக நிதி மையமாக திகழ்கிறது, இங்கு நியூயார்க் பங்குச் சந்தை அமைந்துள்ளது. உலகின் பல உயரமான கட்டடங்கள் இந்நகரில் உள்ளன. புகழ் பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டடம் இங்குள்ளது, உலக வணிக மைய இரட்டைக்கோபுர கட்டடங்கள் இங்கிருந்தன.
பல்வேறு பண்பாட்டு இயக்கங்களின் தோற்றவாயிலாக இந்நகரம் இருந்துள்ளது. இலக்கியம் மற்றும் கலை சார்ந்த ஷெர்ம் மறுமலர்ச்சி இயக்கம்; ஹிப் ஹாப்,[10] பங்க்[11] சல்சா, டிஸ்கோ போன்றவை இங்கு தோன்றியவை.
2005ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி ஏறக்குறைய 170 மொழிகள் இங்கு பேசப்படுகின்றன மற்றும் 36% மக்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியில் பிறந்தவர்கள்.[12][13] தூங்கா நகரம், கோத்தம், பெரிய ஆப்பிள், உலக தலைநகரம் போன்ற பல பட்டப்பெயர்கள் இதற்கு உண்டு.[14][15]
Remove ads
வரலாறு
1524ஆண்டு ஐரோப்பிய கண்டுபிடிப்புக்கு முன் இப்பகுதியில் 5,000 லெனபி அமெரிக்க பூர்வகுடிகள் வசித்து வந்தனர்.[16] பிரெஞ்சு அரசுக்கு கீழ் வேலை பார்த்த இத்தாலிய கடலோடி ஜியோவானி டா வெர்ரராசானோ இப்பகுதியை கண்டவர். 1614ல் டச்சு மக்களின் இரோம வணிக குடியேற்றம் முதல் ஐரோப்பி குடியேற்றமாகும். இவர்கள் மேன்காட்டனின் தென்முனையை நியூ ஆம்ஸ்டர்டாம் என அழைந்தனர். டச்சு குடியேற்றவாத அதிகாரி மின்யூயிட் மேன்காட்டன் தீவை லெனபிக்களிடம் இருந்து 1626ல் 60 கில்டருக்கு வாங்கினார். (2006ல் அதன் மதிப்பு 1000அமெரிக்க டாலராகும்).[17] அக்கூற்று தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்காட்டன் தீவு 24அமெரிக்க டாலர் மதிப்புடைய கண்ணாடி மணிகளுக்கு வாங்கப்பட்டதாக புதிய தகவல் தெரிவிக்கிறது.[18][19] 1664ல் இந்நகரை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் யார்க் மற்றும் அல்பேனி இளவரசர் நினைவாக இதற்கு நியு யார்க் என் பெயரிட்டனர்.[20] இரண்டாம் ஆங்கில-டச்சு போரின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்த படி ஆங்கிலேயர்களின் முழு கட்டுப்பாட்டில் மேன்காட்டன் தீவு வந்தது. டச்சுகாரர் வசம் அப்போது மதிப்பு மிக்க ரன் தீவு சென்றது. (இது இந்தோனேசியாவில் உள்ள தீவு) 1700ல் லென்னபிகளின் தொகை 200ஆக குறைந்துவிட்டது.[21]

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் நியூயார்க்கு நகரம் சிறப்புமிக்க வணிக துறைமுகமாக வளர்ந்தது. 1754ல் கொலம்பியா பல்கலைக்கழகம் பிரித்தானியாவின் மன்னர் இரண்டாம் ஜார்ஜ் துணையோடு கிங் கல்லூரி என்ற பெயரில் கீழ் மேன்காட்டனில் உருவாக்கப்பட்டது.[22] அஞ்சல் முத்திரை சட்டத்திற்கு எதிராக காங்கிரசு இங்கு 1765ல் கூடியது. விடுதலை மக்கள் என்ற பெயரிலான அமைப்பு இந்நகரில் உருவானது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இங்கு நிலைகொண்டிருந்த பிரித்தானிய படைகளுடன் பூசல் கொண்டது.

அமெரிக்க உள்நாட்டுப்போரின் போது இங்கு பல தொடர் சமர்கள் நிகழ்ந்தன. 1776ல் மேல் மேன்காட்டனிலுள்ள வாசிங்டன் கோட்டையில் நடந்த சமரையடுத்து இப்பகுதி வடஅமெரிக்காவின் பிரித்தானிய இராணுவத்தின் தளமாகவும் அரசியல் நடவடிக்கைகளின் தளமாகவும் மாறியது. 1783ல் இராணுவ ஆக்கரமிப்பு முடியும் வரை இது பிரித்தானிய ஆதரவு அகதிகளுக்கு உரிய சிறந்த இடமாக திகழ்ந்தது. ஆக்கரமிப்பின் போது ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் நகரின் கால்வாசி அழிந்தது. போருக்கு பின் கூடிய கான்பிடரேட் காங்கிரசு நியூயார்க்கு நகரத்தை நாட்டின் தலைநகராக அறிவித்தது. ஐக்கிய அமெரிக்காவின் அரசிலமைப்புமும் உறுதி செய்யப்பட்டது. 1789ல் நாட்டின் முதல் அதிபர் ஜார்ஜ் வாசிங்டனுக்கு பதவி ஏற்பு செய்விக்கப்பட்டது; 1789லியே ஐக்கிய அமெரிக்காவின் முதல் காங்கிரசு கூட்டம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை கூடின. ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் உரிமை சட்டமும் வரைவு செய்யப்பட்டது. இவை அனைத்தும் வால் தெருவிலுள்ள பெடரல் கூடத்தில் நிகழ்ந்தன.[23] 1790ல் நியூயார்க்கு நகரம் ஐக்கிய அமெரிக்காவின் பெரிய நகராக உருவெடுத்தது. அது வரை பிலடெல்பியா பெரிய நகராக இருந்தது.
19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட வளர்ச்சிகளாலும் குடியேற்றத்தாலும் இந்நகரம் மாற்றமடைந்தது.[24] 1811ல் ஆணையரின் திட்டம் என்ற வளர்ச்சி கருத்துருவின் படி மேன்காட்டனில் உள்ள அனைத்து தெருக்களும் இணைக்கப்பட்டது. 1819ல் வெட்டப்பட்ட எர்ரி கால்வாய் இந்நகரின் துறைமுகத்தையும் வட அமெரிக்காவின் உள்ளுள்ள விவசாய சந்தைகளுடன் இணைத்தது.[25] உள்ளூர் அரசியல் டம்மன்னி கூடத்தின் எல்லைக்குள வந்தது. நகர அரசியல் அயர்லாந்து குடியேற்றவாசிகளால் ஆதரிக்கப்பட்டது.[26] பொதுநல எண்ணம் கொண்ட சில தலைவர்கள் பொது பூங்கா அமைக்க வேண்டுமென அரசாங்கத்தை தொடர்ந்து கோரினார்கள். அதன் விளைவாக 1857ல் பொது பூங்கா அமைக்கப்பட்டது. குறிப்படித்தக்க அளவில் மேன்காட்டன் பகுதியில் அடிமைகள் அல்லாத கருப்பின மக்கள் வாழ்ந்தார்கள். புருக்ளின் பகுதியிலும் சிலர் வாழ்ந்தனர். 1827வரை நியூயார்க்கு நகரில் அடிமைகள் இருந்தார்கள், 1830வாக்கில் நியூயார்க்கு அடிமை வணிகத்தை எதிர்ப்பவர்களின் மையமாக திகழ்ந்தது. 1840ல் நியூயார்க்கு நகரின் கருப்பின மக்கள் தொகை 16000ஆக இருந்தது.[27] 1860ல் நியூயார்க்கில் 200,000க்கும் அதிகமான அயர்லாந்து மக்கள் வாழ்ந்தனர், இது நகரின் மக்கள் தொகையில் கால் பாகமாகும்.[28]
அமெரிக்க உள்நாட்டு போரின் (1861–1865) போது இராணுவத்திற்கு குடும்பத்திலிருந்து ஒருவர் கட்டாயமாக சேரவேண்டும் என்ற சட்டத்தினால் 1863ல் பெரும் கலவரம் நடந்தது. 1898ல் தனி அதிகாரமிக்க நகரமாக இருந்த புருக்ளின், நியூயார்க்கு கவுண்டி (பிரான்க்சின் சில பகுதிகள் இதில் இருந்தன), ரிச்மாண்ட் கவுண்டி மற்றும் குயின்சு கவுண்டியின் மேற்கு பகுதிகளை இணைத்து புதிய நவீன நியூயார்க்கு நகரம் உருவாக்கப்பட்டது.[29] 1904ல் தொடங்கப்பட்ட சப்வே நியூயார்க்கு நகரின் பல்வேறு பகுதிகளின் இணைப்பிற்கு துணையாக இருந்தது. 20ம் நூற்றாண்டின் முதல் பாதி முழுவதும் இந்நகரம் உலகின் தொழில், வணிகம் மற்றும் தகவல் பரிமாற்ற துறையின் மையமாக விளங்கியது. 1904ல் நீராவி கப்பல் ஜெனரல் சுலோகம் கிழக்கு ஆற்றில் தீ பிடித்து எரிந்ததில் 1021பேர் இறந்தனர். 1911ல் தி டிரையாங்கல் சர்ட்வெய்ஸ்ட் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 146 பேர் இறந்தனர். இவ்விபத்தின் காரணமாக ஆலை பாதுகாப்பு விதிகள் மேம்படுத்தப்பட்டன மேலும் பன்னாட்டு மகளிர் ஆடை தொழிலாளர்கள் சங்கத்தின் வளர்ச்சி துரிதமாகியது.[30]
1920ல் அமெரிக்காவின் தென் பகுதியில் இருந்து வட பகுதி நோக்கி நடந்த பெரும் குடிபெயர்தலில் பெரும்பாலான ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் இலக்காக நியூயார்க்கு நகரம் இருந்தது. மதுவிலக்கு நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் ஹார்லம் மறுமலர்ச்சி இயக்கம் வளர்ச்சியடைந்தது. அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பெரும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக நகரில் பல உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டன. 1920ன் ஆரம்ப காலத்தில் அதிக மக்கள் தொகையுடைய நகர்ப்புற பகுதிகொண்டதாக நியூயார்க்கு நகரம் மாறியது. அதுவரை இலண்டன் அத்தகுதியை கொண்டிருந்தது. 1930ஆண்டுவாக்கில் மனித வரலாற்றில் முதல் முறையாக 10மில்லியன் மக்களுக்கு மேல் வாழும் பகுதியாக நியூயார்க்கு சுற்று வட்டாரம் விளங்கியது.[31] பெரும் பொருளாதார பின்னடைவு காலத்தில் சீர்திருத்தவாதி லகார்டியா நகர தந்தையாக தேர்வு செய்யப்பட்டார் மற்றும் 80ஆண்டுகள் நகர அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த டம்மன்னி கூடத்தின் வீழ்ச்சி தொடங்கியது.[32]
இரண்டாம் உலகப்போர் முடிந்து திரும்பிய வீரர்களால் போருக்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி அதிகமாகியது, அவர்களால் கிழக்கு குயின்சு பகுதியில் பல வீட்டுகள் கட்டும் திட்டம் கைகூடியது. உலகப்போரினால் இந்நகருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. போர் முடிந்தவுடன் உலகின் முன்னனி நகராக வலம் வந்தது. வால் தெருவிலுள்ள நிதி நிறுவனங்கள் உலக பொருளாதாரத்தை ஆதிக்கம் செலுத்தியதும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் இங்கு கட்டப்பட்டதும் உலக அரசியலில் இந்நகரின் ஆதிக்கம் அதிகமாகியதும் காரணமாகும்.
1960களில் நியூயார்க் நகரம் பொருளாதார சிக்கல்களை சந்தித்தது, மேலும் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1970களில் குற்றங்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. 1980களில் நிதித்துறை நிறுவனங்கள் மேம்பாடு அடைந்தன அதன் காரணமாக நகரின் நிதி நிலைமை முன்னேற்றம் கண்டது. 1990களில் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது, ஆசியா மற்றும் லத்தின் அமெரிக்காவிலிருந்து புதிதாக அதிகளவிலான மக்கள் இந்நகரில் குடியேறினார்கள்.
செப்டம்பர் 11, 2001ல் இந்நகரில் அமைந்த இரட்டை கோபுரங்களான உலக வணிக மையத்தில் நடந்த தாக்குதலில் கிட்டதட்ட 3000 மக்கள் பலியாயினர்.[33] அந்த இடத்தில் புதிய உலக வணிக மையம் கட்டப்பட்டு வருகிறது. அது 2013ல் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.[34]
Remove ads
புவியியல்
நகரமைப்பு
மத்திய மன்ஹாட்டன், நியூயார்க் நகரம், இரவில், நியூ ஜெர்சி இருந்து பார்த்தால்.
குறைந்த மன்ஹாட்டன், நியூயார்க்கு நகரம், சூரியன் மறையும் நேரத்தில், ஜெர்சி நகரம் இருந்து பார்த்தால். 1 உலக வர்த்தக மையம் மேற்கத்திய அரைக்கோள மிக உயரமான உயரமான கட்டடங்கள் ஆகும்.
நியூயார்க்கு நகரம் ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் நியூ யார்க் மாநிலத்தின் தென்கிழக்கில் வாசிங்டன் டிசிக்கும் பாஸ்டனுக்கும் நடுவே அமைந்துள்ளது.[35] இந்நகரம் ஹட்சன் ஆற்றின் முகத்துவாரத்திலும் அட்லாண்டிக் கடலிலும் அமைந்திருப்பதாலும் இயற்கை துறைமுகம் கொண்டிருப்பதாலும் வணிக நகராக சிறப்புற்றது. நியூயார்க்கின் பெரும்பகுதியானது மேன்காட்டன், ஸ்டேட்டன் தீவு மற்றும் லாங் தீவு ஆகிய மூன்று தீவுகளில் அமைந்துள்ளது.

ஹட்சன் ஆறு ஹட்சன் பள்ளத்தாக்கு வழியாக பாய்ந்து நியூயார்க் குடாவில் கலக்கிறது. நியூயார்க்கு நகரத்துக்கும் டிராய் (நியூயார்க்குக்கும் இடைபட்ட ஆறானது கயவாய் ஆகும்.[36] ஹட்சன் ஆறானது இந்நகரையும் நியூ செர்சியையும் பிரிக்கும் எல்லையாக உள்ளது. கிழக்கு ஆறானது ஒரு நீரிணையாகும். இது லாங் தீவின் சவுண்ட் என்னுமிடத்தில் இருந்து பாய்கிறது, இது பிரான்க்சு மற்றும் மேன்காட்டன் பகுதிகளை லாங் தீவிலிருந்து பிரிக்கிறது. ஹர்ல்ம் ஆறு மற்றொரு நீரிணையாகும். இது ஹட்சன் ஆற்றுக்கும் கிழக்கு ஆற்றுக்கும் இடையில் ஓடுகிறது. இது மேன்காட்டனையையும் பிரான்க்சையும் பிரிக்கிறது.
நியூயார்க்கு நகரின் மொத்த பரப்பளவு 468.9 சதுர மைல்களாகும் (1,214 ச.கி.மீ.). 164.1 சதுர மைல்கள் (425 ச.கி.மீ.) நீர்ப்பரப்பையும் 304.8 சதுர மைல்கள் (789 ச.கி.மீ.) நிலப்பரப்பையும் கொண்டவை.[3]
Remove ads
காலநிலை
நியூயார்க்கு நகரம் ஈரப்பதமுடைய கீழ்வெப்பமண்டல காலநிலையை கொண்டதாகும். கோடைகாலம் வெப்பமாகவும் ஈரப்பதம் மிக்கதாகவும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 79 – 84 °F (26 – 29 °C) ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 63 – 69 °F (17 – 21 °C) ஆகவும் இருக்கும் எனினும் வெப்பமானது 90 °F (32 °C) க்கு அதிகமாக சராசரியாக 16 – 19 நாட்களுக்கும் 4–6 ஆண்டுகளுக்கு ஒரு முறை 100 °F (38 °C) அளவை தாண்டியும் பதிவாகும்.[37] குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும். மேலும் ஆர்டிக் பகுதியில் இருந்து வீசும் காற்று அட்லாண்டிக் கடலின் ஆதிக்கத்தை ஓரளவிற்கு குறைத்துவிடும். அமெரிக்காவின் உள் நாட்டு நகரங்களான சிகாகோ, பிட்ஸ்பர்க் போன்றவை நியூ யார்க்கின் நிலநேர்க்கோடுக்கு அருகில் அமைந்திருந்தாலும் அவற்றை விட நியூ யார்க் குளிர்காலத்தில் குளிர் குறைவாக இருக்க காரணம் அட்லாண்டிக் கடலாகும். சனவரி மாதமே நியூயார்க்கு நகரின் அதிக குளிருள்ள மாதமாகும் இதன் சராசரி வெப்பநிலை 32 °F (0 °C). எனினும் சிலவேளைகள் குளிர்கால வெப்பநிலை 10 to 20 °F (−12 to −6 °C) என்று குறைந்தும் சில வேளைகள் 50 or 60 °F (~10–15 °C) என்று அதிபமாகவும் காணப்படும்.[38] வசந்தகாலம் மற்றும் இலையுதிர் காலங்களில் வெப்பம் குளிர் மற்றும் இதமான சூடாக இருப்பினும் பொதுவாக குறைந்த ஈரப்பதமுடன் இதமான வெப்பநிலையுடன் காணப்படும்.[39]
நியூயார்க்கு நகரம் ஆண்டுக்கு சராசரியாக 49.7 அங்குலம் (1,260 மிமீ) மழையளவை பெறும். குளிர்கால சராசரி பனிப்பொழிவு 24.4 அங்குலம் (62 செமீ) இருக்கும், இது ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும்.
Remove ads
சுற்றுச்சூழல்
ஐக்கிய அமெரிக்காவில் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் நியூயார்க்கு நகரில் அதிகம். இதனால் 2006ல் சேமிக்கப்பட்ட எரிபொருள் 1.8 பில்லியன் காலன்.[42] நகரின் மக்கள்தொகை அடர்த்தி, குறைந்த வாகனங்களின் பயன்பாடு மற்றும் அதிகளவான பொது போக்குவரத்து புழக்கம் ஆகியவற்றால் திறம்பட எரிபொருளை பயன்படுத்தும் நகரங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.[43] நியூயார்க்கு நகரின் பைங்குடில் வளிமம் வெளியேற்றம் ஓர் ஆளுக்கு 7.1 மெட்ரிக் டன்னாகும், தேசிய சராசரி 24.5ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 2.7% இருந்த போதிலும், நாட்டின் பைங்குடில் வளிமம் வெளியேற்றத்தில் நகரின் பங்கு ஒரு விழுக்காடாகும்.[44] சராசரியாக இந்நகரிலுள்ள ஊர் மக்கள் பயன்படுத்தும் மின்சாரம் சான் பிரான்சிஸ்கோ மக்களின் பயன்பாட்டை விட பாதியாகவும் டாலஸ் மக்களின் பயன்பாட்டை விட கால்வாசியாகவும் உள்ளது.[45]
சமீப காலமாக சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளில் இந்நகரம் இறங்கியுள்ளது. நியூயார்க்கு நகரில் மக்கள்தொகை அடர்த்தி அதிகம் இருப்பதால் நகர மக்களுக்கு ஈழை நோய் மற்றும் மூச்சு குழல் தொடர்பான நோய்கள் அதிகளவில் வருகின்றன.[46] நகர அரசு எரிபொருள் ஆற்றல் திறன் மிக்க கருவிகளையே நகரின் அலுவலகங்களுக்கு வாங்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.[47] நியூயார்க்கு நகரில் நாட்டிலேயே அதிகளவான டீசல் கலப்பு வண்டிகளும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவளி வண்டிகளும் உள்ளன. நியூயார்க்கு நகரத்துக்கான குடிநீர் பாதுகாக்கப்பட்ட கேட்ஸ்கில் மலையிலிருந்து வருகிறது.[48] அங்கு இயற்கையாக சுத்திகரிக்கப்பட்டு வருவதால் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு செல்லாமலே தூய்மையாக உள்ளது.[49]
Remove ads
கட்டடக்கலை
நியூயார்க்கு நகரம் என்னும் போது நினைவுக்கு வருவது வானளாவிய கட்டடங்களாகும். ஆகஸ்ட் 2008கணக்கின் படி நியூயார்க்கு நகரில் 5,538 உயர்ந்த கட்டடங்களும்,[50] 200மீ (656அடி) க்கும் உயரமான 50 வானளாவிய கட்டடங்களும் இருந்தன. இது ஐக்கிய அமெரிக்காவில் அதிகமாகும். உலக அளவில் ஹாங் காங்கிற்கு அடுத்து இரண்டாவதாகும்.[51]
கட்டடக்கலையில் சிறப்புமிக்க பல்வேறு பாணி கட்டடங்கள் இங்குள்ளன. காத்திக் பாணியில் கட்டப்பட்ட வூல்வொர்த் கட்டடம் அதிலொன்றாகும். 1916ல் எடுக்கப்பட்ட கட்டடங்களுக்கான வட்டார அளவிளான முடிவு புதிய கட்டடங்களுக்கு பின்னடைவாக அமைந்தது.[52] புதிய விதிமுறைப்படி ஆர்ட் டேகோ வடிவமைப்பு முறையில் கட்டடப்பட்ட கிரைசலர் கட்டடம் (1930), கட்டப்பட்டது. பல வரலாற்று அறிஞர்களாலும் கட்டடக்கலை நிபுணர்களாலும் இதுவே நியூயார்க்கு நகரின் சிறந்த கட்டடமாக கருதப்படுகிறது. சீகிராம் கட்டடம் (1957) பன்னாட்டு பாணியில் கட்டடப்பட்ட கட்டடமாகும்.

நியூயார்க்கின் குடிமக்கள் வசிக்கும் பகுதியானது பலுப்பு நிற கற்களால் ஆன வரிசை வீடுகளாலும் டவுன்வீடுகளாலும் மற்றும் 1870 to 1930வளர்ச்சி காலங்களில் கட்டப்பட்ட தரம் குறைந்த வீடுகளும் ஆனது,[53] 1835ல் ஏற்பட்ட பெரும் தீவிபத்தினால் நகரின் கட்டுமானப்பொருளாக மரத்திற்கு பதில் கல்லும் செங்கல்லும் மாறின. நியூயார்க்கிற்கு தேவைப்பட்ட கட்டுமான கற்கள் பல்வேறு இடங்களில் இருந்து தருவிக்கப்பட்டன.[54][55]
Remove ads
பூங்கா
நியூயார்க்கு நகரம் 28,000 ஏக்கர் (110 சதுர கி.மீ.)க்கும் மேலான நகராட்சி பூங்கா நிலங்களையும் 14 மைல் (23 கி.மீ.) பொது கடற்கரையையும் கொண்டுள்ளது.[56] ஜமைக்கா குடா வனவிலங்கு காப்பகம் 9,000ஏக்கருக்கும் (36 சதுர கி.மீ.) மேலான சதுப்பு நிலங்களை உடையது.
மேன்காட்டனின் மைய பூங்காவுக்கு ஆண்டுக்கு 30 மில்லியன் மக்கள் வருகிறார்கள். இதுவே அமெரிக்காவில் அதிக மக்கள் வருகைதரும் பூங்காவாகும். பூங்காவின் பெரும் பகுதி இயற்கையாக அமைந்ததது போல் தோன்றினாலும் இது முழுவதுமாக மனிதர்களால் செப்பனிடப்பட்டது. இதில் பல ஏரிகளும், குளங்களும், நடைபாதைகளும், இரண்டு பனிச்சறுக்கு அரங்குகளும் உள்ளன. இதில் ஒன்று ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் நீச்சல் குளமாக மாற்றப்படும்
Remove ads
பரோக்கள்
நியூயார்க்கின் ஐந்து பரோக்கள் கண்ணோட்டம் | ||||
ஆட்பகுதி | மக்கள்தொகை | நிலப் பரப்பளவு | ||
பரோ | கவுன்ட்டி | 1 சூலை 2013 மதிப்பீடு | சதுர மைல்கள் | சதுர கிமீ |
மன்ஹாட்டன் | நியூ யார்க் | 1,626,159 | 23 | 59 |
பிரான்க்சு | பிரான்க்சு | 1,418,733 | 42 | 109 |
புருக்ளின் | கிங்சு | 2,592,149 | 71 | 183 |
குயின்சு | குயின்சு | 2,296,175 | 109 | 283 |
இசுட்டேட்டன் தீவு | ரிச்மாண்ட் | 472,621 | 58 | 151 |
8,405,837 | 303 | 786 | ||
19,651,127 | 47,214 | 122,284 | ||
மூலம்: ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம்[57][58][59] |
நியூயார்க்கு நகரம் ஐந்து பரோக்களால் ஆனது.[60] ஒவ்வொரு பரோவும் நியூயார்க்கு மாநிலத்துக்குட்பட்ட கவுண்டிகளாகவும் உள்ளன. ஒவ்வொரு பரோவும் தனி நகரங்களாக இருந்தால் நான்கு பரோக்களான புரூக்ளின், குயின்ஸ், மேன்காட்டன், மற்றும் பிரான்க்சு ஆகியவை அதிக மக்கள்தொகையுடைய பத்து நகரங்களில் ஒன்றாக இருக்கும்.

பிரான்க்சு
பிரான்க்சு (பிரான்க்சு கவுண்டி : மக்கள் தொகை 1,373,659 [61]) நியூயார்க்கு நகரின் வடக்கு பரோவாகும். நியூயார்க் யாங்கியின் அரங்கம் இங்குள்ளது. மேன்காட்டனின் சிறிய பகுதியான மார்பில் கில் தவிர அமெரிக்க நிலத்துடன் நிலம் வகையில் தொடர்புடைய நியூயார்க்கின் பகுதி பிரான்க்சு ஆகும். 265 ஏக்கர் (1.07 சதுர கி.மீ.) பரப்புடைய பிரான்க்சு மிருககாட்சி சாலையில் 6,000 விலங்குகள் உள்ளன. இதுவே நகர பகுதியில் அமைந்த பெரிய மிருககாட்சி சாலை ஆகும்.[62]
மேன்காட்டன்
மேன்காட்டன் (நியூயார்க்கு வட்டம் (கவுண்டி) : மக்கள் தொகை 1,620,867)[61] மக்கள் அடர்த்தி அதிகமுள்ள பரோவாகும். நகரின் பெரும்பாலான வானுயர கட்டடங்கள் இங்கேயே அமைந்துள்ளன. இது நகரின் நிதி மையமாக திகழ்கிறது. பல பெரிய நிறுவனங்களின் தலைமையகம், ஐக்கிய நாடுகளின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது. பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், பண்பாட்டு மையங்கள், பல அருங்காட்சியகங்கள, பிராட்வா அரங்கு, கிரின்விச் கிராமம் மற்றும் மேடிசன் கார்டன் சதுக்கம் ஆகியவை இங்கு அமைந்துள்ளது. மேன்காட்டனானது கீழ், நடு, மேல் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் மேன்காட்டன் ஆனது மைய பூங்காவினால் கிழக்கு பகுதி மேற்கு பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
புருக்ளின்
புருக்ளின் (கிங்ஸ் கவுண்டி : மக்கள் தொகை 2,528,050)[61] நகரின் அதிக மக்கள் தொகை உடைய பரோவாகும். மேலும் இது 1898வரை தனி நகரமாக இருந்தது. புருக்ளின் பண்பாடு, சமூகம் மற்றும் இன என பன்முகத்தன்மை உடையது. இதன் கட்டடக்கலை தனிச்சிறப்பு மிக்கதாகும்
குயின்சு
குயின்சு (குயின்சு கவுண்டி : மக்கள் தொகை 2,270,338)[61] மிகப்பெரிய பரோவாகும். மேலும் அமெரிக்காவிலுள்ள கவுண்டிகளில் இதுவே அதிகளவில் இன அடிப்படையில் பன்முகத்தன்மை உடையதாகும்.[63] இதன் வளர்ச்சியின் காரணமாக விரைவில் புரூக்ளினை விட அதிக மக்கள் தொகையுடையதாக மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சராசரி ஆண்டு வருமானமான $52,000 வெள்ளை அமெரிக்கர்களின் ஆண்டு வருமானத்தை விட அதிகமாகும்.[64] சிட்டி பீல்ட் என்பது அமெரிக்க அடிப்பந்தாட்ட அணியான நியூ யார்க் மெட்ஸின் வீடாகும். ஆண்டுதோறும் டென்னிசின் யூ.எஸ். ஓப்பன் போட்டி இங்கு நடத்தப்படுகிறது. நியூயார்க்கு பகுதிக்கான 3 வானூர்தி நிலையங்களில் லகார்டியா வானூர்தி நிலையம் மற்றும் ஜான் எப் கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகிய இரண்டு இங்கு அமைந்துள்ளன.
ஸ்டேட்டன் தீவு
ஸ்டேட்டன் தீவு (ரிச்மாண்ட் கவுண்டி : மக்கள் தொகை 481,613) [61] ஐந்து பரோக்களில் புறநகர் தன்மை வாய்ந்தது. ஸ்டேட்டன் தீவு புருக்ளின் உடன் வெரசானோ-நேரோ பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது மேன்காட்டன் உடன் ஸ்டேட்டன் தீவு படகு மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது இலவச படகு சேவையாகும். சுதந்திர தேவி சிலை, எல்லிஸ் தீவு, கீழ் மேன்காட்டன் போன்றவற்றை தெளிவாக பார்க்கலாம் என்பதால் ஸ்டேட்டன் தீவு படகு பயணம் நியூயார்க்கு நகரில் சுற்றுலா பயணிகளை அதிகளவில ஈர்க்கும் இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. மைய ஸ்டேட்டன் தீவில் இருக்கும் 25 சதுர கி.மீ. கிரின்பெல்ட் பகுதி 35 மைல் (56 கி.மீ.) நடைபாதை தடங்களை கொண்டுள்ளது.
Remove ads
சுற்றுலா

ஆண்டுக்கு 47 மில்லியன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் நியூயார்க்கு நகருக்கு வருகை தருகிறார்கள்.[65] எம்பயர் ஸ்டேட் கட்டடம், எல்லிஸ் தீவு, பிராட்வே அரங்கம், மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகம், மைய பூங்கா, வாசிங்டன் சதுக்க பூங்கா, ராக்கஃவெல்லர் மையம், டைம்ஸ் சதுக்கம், பிரான்க்சு மிருககாட்சி சாலை, நியூயார்க் தாவரவியல் தோட்டம், ஐந்தாவது மற்றும் மாடிசன் நிழற்சாலைகளில் உள்ள கடைகள் சுற்றுலா பயணிகளை இடங்களாகும். சுதந்திர தேவி சிலை மிகப்பெரும்பாலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒன்றாகும்.[66]
Remove ads
விளையாட்டு
நியூயார்க்கு பெருநகரத்திற்கு உட்பட்டு இரண்டு அடிபந்தாட்ட அணிகள் உள்ளன. நகரின் தற்போதய அடிபந்தாட்ட அணிகள் நியூ யார்க் யாங்கி மற்றும் நியூயார்க் மெட்ஸ் ஆகும். நியூயார்க்கு பெருநகரத்திற்கு உட்பட்டு இரண்டு அமெரிக்க காற்பந்தாட்ட அணிகள் உள்ளன, அவை நியூ யார்க் ஜெட்ஸ் மற்றும் நியூ யார்க் ஜெயன்ட்ஸ். இரண்டும் உள்ளூர் போட்டிகளை ஜெயன்ட் விளையாட்ரங்கத்தில் விளையாடுகின்றன. இவ்வரங்கம் அருகிலுள்ள நியூ செர்சியில் உள்ளது. நியூயார்க்கு நகர மாரத்தான் உலகில் அதிக மக்கள் கலந்து கொள்ளும் மாரத்தானாகும். 2006ல் 37866 பேர் ஓட்டத்தை நிறைவு செய்தனர்.[67]

நியூ யார்க் ரேஞ்சர்ஸ் நகரின் பனி வளைதடியாட்ட அணியாகும். பெருநகர எல்லைக்குள் மேலும் இரண்டு பனி வளைதடியாட்ட அணிகள் உள்ளன. நியூ செர்சி டெவில்ஸ் மற்றும் லாங் தீவை சார்ந்த நியூ யார்க் ஐலண்டர்ஸ் என்பவையே அவையாகும். ரெட் புல் நியூ யார்க் என்பது நகரின் கால்பந்தாட்ட அணியாகும்.
நியூ யார்க் நிக்ஸ் என்பது நகரின் ஆண்கள் கூடைப்பந்தாட்ட அணியாகும். நியூ யார்க் லிபர்ட்டி என்பது பெண்கள் கூடைப்பந்தாட்ட அணியாகும்.
மக்கள் தொகையியல்
அமெரிக்காவில் நியூ யார்க் அதிக மக்கள் தொகை உள்ள நகராகும். 2008ல் இதன் உத்தேச மக்கள்தொகை 8,363,710(1990ல் 7.3 மில்லியன் ஆகும்) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.[68] இது நியூ யார்க் மாநிலத்தின் மக்கள்தொகையில் 40.0% ஆகும். கடந்த பத்தாண்டுகளாக நகரின் மக்கள்தொகை உயர்ந்து வந்துள்ளது. 2030ல் இதன் மக்கள்தொகை 9.2 மில்லியனிலிருந்து 9.5 மில்லியன் ஆக இருக்கலாம் என கருதுகிறார்கள்.[69]
நியூ யார்க்கின் மக்கள்தொகையியலின் சிறப்பு அதன் மக்கள் தொகை அடர்த்தியும், பன்முகத்தன்மையும் ஆகும். இது 100,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள அமெரிக்க நகரங்களில் இதுவே மிகுந்த மக்கள் அடர்த்திமிக்கதாகும். நகரின் மக்கள் அடர்த்தி சதுர மைலுக்கு 26,403 (10,194 கி.மீ.2) ஆகும்.[70] மேன்காட்டனின் மக்கள் தொகை அடர்த்தி சதுர மைலுக்கு 66,940 (25,846/சதுர கி.மீ.) ஆகும். இது நாட்டிலுள்ள கவுண்டிகளிலேயே மிக அதிகமாகும்.[71][72]
வரலாறு முழுவதும் நியூ யார்க் நகரம் நாட்டிற்கு புதிதாக குடியேறுபவர்களின் நுழைவு வாயிலாக இருந்துள்ளது.[73] தற்போது நகரின் மக்கள் தொகையில் 36.7% வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஆவர். 3.9% மக்கள் புவேர்ட்டோ ரிக்கோ, அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள தீவுகள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு பிறந்தவர்கள் ஆவர்.[74] அமெரிக்க நகரங்களில் லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் மயாமியில் மட்டுமே நியூ யார்க்கை விட வெளிநாட்டில் பிறந்தவர்கள் அதிகம் உள்ளனர். அவைகளின் குடியேற்றவாசிகள் சில நாடுகளில் இருந்து அதிகஅளவில் உள்ளனர். ஆனால் நியூ யார்க்கில் அவ்வாறு இல்லை. பல நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு உள்ளனர். தனிப்பட்ட நாடு மற்றும் வட்டத்தை சார்ந்தவர்கள் அதிகமில்லை. இங்கு குடியேறியவர்களில் டொமினிக்கன் குடியரசு, சீனா, யமேக்கா, கயானா, மெக்சிகோ, எக்குவடோர், எயிட்டி, திரினிடாட் டொபாகோ, கொலம்பியா, உருசியா நாட்டு மக்கள் அதிகளவில் உள்ளனர்.[75] இந்நகரில் 170 மொழிகள் பேசப்படுகின்றன.
இஸ்ரேலுக்கு வெளியே நியூ யார்க் பெருநகரிலேயே யூத மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். டெல் அவீவ் நகரை விட இங்கு வசிக்கும் யூதர் எண்ணிக்கை மிக அதிகம். நியூ யார்க் மக்களில் 12% யூதர் மற்றும் யூத தொடர்பு உள்ளவர்கள்.[76] மிக அதிகளவில் இந்திய அமெரிக்கர் இங்கு வசிக்கிறார்கள். நாட்டில் உள்ளவர்களில் கால் பங்கு இங்கு வசிக்கிறார்கள்.[77] நாட்டின் எந்த நகரையும் விட இங்கு வசிக்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகம். ஆசியா கண்டத்துக்கு வெளியே நியூ யார்க் பெருநகரப்பகுதியிலேயே அதிகளவான சீனர்கள் வசிக்கிறார்கள். 2007 ஆண்டு கணக்கின்படி 619,427 சீனர்கள் வசிக்கிறார்கள்.
2005ல் எடுத்த கணக்கின் படி இங்கு வசிக்கும் ஐந்து பெரிய இனக்குழுக்கள் புவேர்ட்டோ ரிக்கர், இத்தாலியர், கரிபியர், டொமனிக்கர், சீனர்கள் ஆவர்.[78] புவேர்ட்டோ ரிக்கோவுக்கு வெளியே நியூயார்க்கு நகரிலேயே அதிக புவேர்ட்டோ ரிக்கர்கள் வசிக்கிறார்கள்.[79] இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அதிகளவில் இத்தாலியர்கள் இந்நகரில் குடியேறினர். ஆறாவது பெரிய இனக்குழுவான அயர்லாந்து மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.
2005–2007ல் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுக்கும் பிரிவு நடத்திய கணிப்பில் நியூ யார்க் நகரில் வெள்ளை அமெரிக்கர்கள் 44.1% இருந்தனர், இதில் 35.1% எசுப்பானிய வெள்ளையற்றவர்கள் ஆவர். கருப்பர்கள் அல்லது ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 25.2% உள்ளனர், அதில் 23.7% எசுப்பானிய கருப்பர்கள் அல்லாதவர்கள். அமெரிக்க இந்தியர்கள் 0.4% உள்ளார்கள், அதில் 0.2% எசுப்பானியர்யற்றவர். ஆசிய அமெரிக்கர்கள் நகர மக்கள் தொகையில் 11.6% உள்ளனர், அதில் 11.5% எசுப்பானியர்யற்றவர். பசிபிக் தீவுகளை சேர்ந்தவர்கள் நகர மக்கள் தொகையில் 0.1% க்கும் குறைவாகும். மற்ற இனத்தை சார்ந்த தனி நபர்கள் நகரின் மக்கள் தொகையில் 16.8% உள்ளார்கள். அதில் 1.0% எசுப்பானியர்யற்றவர். கலப்பு இனத்தவர்கள் நகர மக்கள் தொகையில் 1.9% ஆவர். அதில் 1.0% எசுப்பானியர்யற்றவர். நியூயார்க்கு நகர மக்கள் தொகையில் எசுப்பானியர்களும், தென் அமெரிக்காவை சேர்ந்தவர்களும் 27.4% உள்ளனர்.[80][81]
இங்கு தனிநபர் வருமானம் அதிக ஏற்றதாழ்வுகளுடன் உள்ளது. 2005ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி வசதியானவர்களின் வீட்டு சராசரி வருமானம் $188,697, வசதியற்றவர்களின் வீட்டு சராசரி வருமானம் $9,320.[82]
Remove ads
பொருளாதாரம்
நியூயார்க்கு நகரம் உலக தொழில் மற்றும் வணிக மையமாக திகழ்கிறது. இது இலண்டன் டோக்கியோ ஆகியவற்றுடன் உலக வணிக கட்டளை மையமாக திகழ்கிறது.[83] 2005 -இல் நியூயார்க்கு பெருநகர பகுதியின் வருமானம் தோராயமாக $1.13 டிரில்லியன் ஆகும்.[84][85] பார்ச்சூன் 500ன் 43 நிறுவனங்கள் உட்பட பல பெரிய நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்கமைந்துள்ளன.[86][87] அமெரிக்க நகரங்களிலேயே இங்கு தான் அதிக அளவிலான வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளன. பத்துக்கு ஒன்று என்ற அளவில் தனியார் துறை வேலை வாய்ப்புகள் வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.[88]

உலகின் பல விலை உயர்ந்த மனைகள் இங்குள்ளன. ஜூலை 2, 2007ல் 510 மில்லியன் டாலருக்கு 450 பார்க் அவென்யூ என்ற முகவரியில் உள்ள கட்டடம் விற்றது. இது சதுர அடிக்கு 1,589 டாலர் ஆகும். 2001ல் 353.7 மில்லியன் சதுர அடி (32,860,000 சதுர மீ) அலுவலக இடம் மேன்காட்டனில் இருந்தது.[89]
நடு மேன்காட்டன் பகுதியில் அதிகளவு வானளாவிய கட்டடங்கள் அமைந்துள்ளன. புகழ் பெற்ற எம்பயர் ஸ்டேட் பில்டிங் இங்கு தான் உள்ளது. கீழ் மேன்காட்டன் பகுதியில் வால் தெரு அமைந்துள்ளது. இங்கு தான் நியூயார்க்கு பங்கு சந்தை உள்ளது. வேலை வாய்ப்பு வருமானத்தில் 35விழுக்காடு நிதி சேவை நிறுவனங்களின் மூலம் கிடைக்கிறது.[90] ஹாலிவுட்டுக்கு அடுத்த படியான பெரிய தொலைக்காட்சி மற்றும் திரைத்துறை இங்குள்ளது.[91]
ஊடகம்
தொலைக்காட்சி, விளம்பரம், இசை, செய்திதாள்கள், புத்தக வெளியீட்டு நிறுவனங்களின் மையமாக நியூயார்க்கு விளங்குகிறது. நியுயார்க் வட அமெரிக்காவின் பெரிய ஊடக சந்தையாகும். டைம் வார்னர், நியூஸ் கார்ப்பரேசன், ஹெர்ச்ட் கார்ப்பரேசன், வியகாம் போன்ற பெரிய ஊடக நிறுவனங்களின் தலைமையகம் இங்குள்ளது. உலகின் சிறந்த எட்டு விளம்பர முகமையகங்களில் ஏழின் தலைமையகம் இங்குள்ளது.[92] நாட்டின் புகழ்பெற்ற பெரிய இசை வெளியீட்டு நிறுவனங்களில் மூன்று இங்கு அமைந்துள்ளன.
அமெரிக்காவில் தனிப்பட்டவர்கள் தயாரிக்கும் படங்களில் மூன்றில் ஒரு பங்கு நியூயார்க்கிலேயே தயாரிக்கப்படுகின்றன.[92] 200க்கும் மேற்பட்ட நாளிதழ்கள் மற்றம் 350 நுகர்வோர் இதழ்களின் அலுவலகங்கள் இங்குள்ளன. இங்குள்ள புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் 25,000 ஊழியர்களை வேலைக்கமர்த்தியுள்ளன.[92] நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்டீரிட் ஜர்னல் ஆகிய இரண்டு தேசிய செய்தி நாளிதழ்கள் இங்கிருந்து வெளியாகின்றன. பரபரப்பு நாளிதழ்கள் இங்கிருந்து வெளியாகின்றன குறிப்பாக நியூயார்க் போஸ்ட், நியூயார்க்கு டெய்லி நியூஸ் என்பன 1801ல் அலெக்சாண்டர் ஹேமில்டன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டன.
40மொழிகளில் 270க்கும் மேற்பட்ட நாளிதழ்களும் இதழ்களுப் இங்கிருந்து வெளியாகின்றன.[93] ஹர்ல்ம் பகுதியில் இருந்து வெளிவரும் நியூயார்க்கு ஆம்சிட்டர்டாம் நியூசு ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் செய்தியை சிறப்பாக தாங்கிவரும் இதழாகும்.
தொலைக்காட்சி துறை நியூயார்க்கு நகரிலேயே வளர்ந்தது அதன் காரணமாக குறிப்பிடத்தக்க அளவு வேலைவாய்ப்புகளை இந்நகரில் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் நான்கு பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களான ஏபிசி, சிபிஎஸ், ஃவாக்ஸ், என்பிசி ஆகியவற்றின் தலைமையகங்கள் நியூயார்க்கு நகரில் அமைந்துள்ளன.
எம்டிவி, ஃவாக்ஸ் நியுஸ், எச்பிஓ, காமடி சென்ரல் ஆகிய கம்பிவடம் மூலம் மட்டுமே நிகழ்ச்சிகளை தரும் அலைவரிசைகள் இந்நகரை மையமாக கொண்டு இயங்குகின்றன. 2005ல் 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நியூயார்க்கு நகரில் படமாக்கப்பட்டன.[94]
அரசாங்கம்
1898ல் ஒருமுகப்படுத்தப்பட்ட பிறகு நியூயார்க்கு நகரம் பெருநகர நகராட்சியாக நகரதந்தை-நகரவை உறுப்பினர் வடிவ அரசாக உருவெடுத்தது. நியூயார்க்கு நகர அரசு பொது கல்வி, சிறைச்சாலை, நூலகம், பொது மக்கள் பாதுகாப்பு, பொழுதுபோக்கு மையங்கள், குடிநீர் வழங்கல், நலத்துறை, கழிவுநீர் வெளியேற்றம் போன்றவற்றிற்கு பொறுப்பாகும். நகரதந்தை மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களின் பதவிகாலம் நான்கு ஆண்டுகளாகும். நியூயார்க்கு நகர்மன்றத்துக்கு 51 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நகரதந்தையும் நகர்மன்ற உறுப்பினர்களும் 3 முறை மட்டுமே தொடர்ச்சியாக பதவி வகிக்கமுடியும். ஒவ்வொரு முறையும் நான்காண்டுகள் கொண்டது. ஆனால் நான்காண்டுகள் கழித்து அவர்கள் மீண்டும் போட்டியிடலாம்.
தற்போதய நகரதந்தை மைக்கேல் புளூம்பெர்க் முன்பு சனநாயக கட்சியிலும் பின் குடியரசு கட்சியிலும் (2001–2008) இருந்தவர். தற்போது எந்த அரசியல் கட்சி சார்பும் இல்லாமல் உள்ளார். செப்டம்பர் 11, 2001 நியூயார்க்கு நகர தாக்குதலுக்கு பின் பதவிக்கு வந்த இவர் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கல்வி துறையை நகரின் கட்டுப்பாட்டுக்கு இவர் கொண்டுவந்தார். பொருளாதார முன்னேற்றம், சிறந்த நிதி ஆளுமை, தீவிர பொதுமக்கள் நல கொள்கை போன்றவை இவரின் சாதனைகளில் சிலவாகும்.[95] 2006ல் பாஸ்டன் நகரதந்தை தாமஸ் மேனினோவுடன் இணைந்து துப்பாக்கிகளுக்கு எதிரான நகரதந்தைகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கினார். இதன் நோக்கம் சட்டவிரோத துப்பாக்கிகளை நகருக்குள் பயன்படுத்துவதை தடுத்து பொது மக்களை காப்பதாகும்.[96] 2008ல் எடுக்கப்பட்ட கணக்கின்படி நகரில் பதிவுசெய்துள்ள வாக்காளர்களில் 67% சனநாயக கட்சியை சார்ந்தவர்கள் ஆவர்.[97] 1924க்கு பிறகு நடந்த மாநில அளவிலான தேர்தலிலும் குடியரசு தலைவர் தேர்தலிலும் குடியரசு கட்சி வேட்பாளர்கள் இந்நகரில் பெரும்பான்மை பெற்றதில்லை.

குற்றம்
1980மற்றும் 1990களின் ஆரம்பத்தில் அதிகளவு குற்றங்கள் நிகழ்ந்தன. அக்கால கட்டத்தில் போதை பொருட்கள் தொடர்பான குற்றங்கள் அதிகமாக நிகழ்ந்தன, பல நகர்ப்பகுதிகள் இதனால் பாதிக்கப்பட்டன. 2002ல் 100,000க்கும் அதிகமான மக்கள்தொகையுடைய 216அமெரிக்க நகரங்களின் குற்றங்களை கணக்கிட்ட போது அதில் நியூயார்க்கு நகரம் 197வது இடத்தில் இருந்தது. இது யூட்டா மாநிலத்தின் 106,000மக்கள்தொகையுடைய பிராவோ நகரின் குற்றங்களின் எண்ணிக்கை விழுக்காடுக்கு சமமாகும். 1993–2005 காலபகுதியில் நியூயார்க்கு நகரில் வன்முறைக் குற்றங்கள் 75% மேல் குறைந்தன, அக்காலப்பகுதியில் தேசிய அளவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.[98] 2005ல் கொலைக்குற்றங்களின் விழுக்காடு 1966க்கு பிறகு மிகக்குறைவாக இருந்தது.[99] 2007ல் நகரில் 500க்கும் குறைவான கொலைக்குற்றங்களே பதிவாகின, 1963லிருந்து குற்ற புள்ளிவிபரங்கள் வெளியிடப்படுவதிலிருந்து இதுவே குறைவாகும்.[100]
சமூகவியலாளர்களும் குற்றவியலாளர்களும் திடும்மென குற்றங்கள் குறைந்ததற்கான காரணத்திற்கான ஒத்த கருத்தை எட்டமுடியவில்லை. நியூயார்க்கு நகர காவல்துறை கடைபிடித்த காம்ஸ்டாட், உடைந்த சாளர தேற்றம் போன்ற சில உத்திகள் காரணமாகும் என சிலர் கருதுகிறார்கள் [101][102]
நியூயார்க்கு நகரம் கட்டமைப்புள்ள குற்றங்களுடன் தொடர்புபடுத்தி பேசப்படும். இது 1820ல் ஐந்து பாயிண்ட் பகுதியை சார்ந்த நாற்பது திருடர்கள், ரோச் காவலர் குற்ற கும்பல்களுடன் தொடங்குகிறது. 20ம் நூற்றாண்டில் மாபியா எனப்படும் குற்ற குழுக்கள் ஆதிக்கம் செலுத்தின. இவை ஐந்து குடும்பங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.[103] 20ம் நூற்றாண்டின் கடைசி காலகட்டத்தில் பிளாக் ஸ்பேட் போன்ற சில குற்ற கும்பல்களும் வளர்ச்சிகண்டன.[104] தற்போது லட்டினோ கிங், கிரிப்ஸ், பிளட், எம்எஸ்-13 போன்ற குற்ற கும்பல்கள் முதன்மையானவையாக உள்ளன [105]
கல்வி
அமெரிக்காவில் பெரியதான நியூயார்க்கு நகர பொது பள்ளி அமைப்பு நகரின் கல்வித்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் 1200 பொது பள்ளிகளில் 1.1 மில்லியன் மாணவர்கள் பயில்கிறார்கள்.[106] மேலும் தனியார் நிர்வாகத்தின் கீழ் மதசார்பில்லாத மற்றும் மதசார்புடைய 900 பள்ளிகள் உள்ளன.[107] இது கல்லூரி நகராக அறியப்படாத போதும் 594,000 பல்கலைக்கழக மாணவர்கள் இந்நகரில் உள்ளனர். இது அமெரிக்க நகரங்களில் அதிகமாகும்.[108] 2005ல் எடுக்கப்பட்ட கணக்கின் படி மேன்காட்டன் பகுதி நகரவாசிகளில் ஐந்தில் மூவர் கல்லூரி பட்டமும் நான்கில் ஒருவர் மேற்பட்டமும் பெற்றவர்கள்.[109] பர்னார்ட் கல்லூரி, கொலம்பியா பல்கலைக்கழகம், கூப்பர் யூனியன், ஃவார்தம் பல்கலைக்கழகம், நியூயார்க்கு பல்கலைக்கழகம், தி நியூ ஸ்கூல், யசிவா பல்கலைக்கழகம் போன்ற பல தனியார் பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன.

நகரில் நடக்கும் பெரும்பாலான அறிவியல் ஆய்வுகள் மருத்துவம் மற்றும் உயிரியல் துறை சார்ந்தவை. அமெரிக்காவில் ஆண்டுக்கு அதிகளவிளான முதுகலை பட்டம் பெறுபவர்கள் இங்கு உள்ளனர். 40,000 உரிமம் பெற்ற மருத்துவர்களும் 127 நோபல் பரிசு பெற்றவர்களும் நகரின் பள்ளி மற்றும் ஆய்வகத்துடன் தொடர்புடையவர்கள்.[110]
நியூயார்க்கு பொது நூலகம் நாட்டிலேயே அதிக அளவிலான புத்தகங்களை கொண்ட பொது நூலகம் ஆகும். மேன்காட்டன், பிரான்க்சு, ஸ்டேட்டன் தீவு ஆகிய பரோக்கள் இதனால் பலன் பெறுகின்றன. குயின்சு பகுதி குயின்சு பரோ பொது நூலகம் மூலம், புருக்ளின் பரோ புருக்களின் பொது நூலகம் மூலமும் பலன் பெறுகின்றன.[111]
போக்குவரத்து
அமெரிக்காவின் மற்ற நகரங்களைப் போல் அல்லாமல் நியூயார்க்கில் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் அதிகம். 2005ல் 54.6% நியூயார்க்கு மக்கள் வேலைக்கு செல்ல பொது போக்குவரத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.[112] நாட்டில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களில் மூன்றில் ஒருவர் நியூயார்க்கு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கிறார்கள்.[113][114] நாட்டின் மற்ற பகுதியில் 90% மக்கள் தனிப்பட்ட வாகனங்கள் மூலமே பணியிடங்களுக்கு செல்கிறார்கள்.[115]

ஆம்டிராக் தொடர்வண்டி பென்சில்வேனியா நிலையத்தை பயன்படுத்தி நியூயார்க்கு நகருக்கு சேவை செய்கிறது. இதன் மூலம் வடகிழக்கு தடத்தில் உள்ள பாஸ்டன், பிலடெல்பியா, வாசிங்டன் டி.சி ஆகியவை நியூயார்க்கு நகருடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் நெடுந்தொலைவு வண்டிகள் மூலம் சிகாகோ, மயாமி, நியூ ஓர்லியன்ஸ், ரொறன்ரோ, மொண்ட்ரியால் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. போர்ட் அத்தாரிட்டி பேருந்து முனையம் நகரின் முதன்மையான மற்ற நகரங்களின் பேருந்துகள் வந்து செல்லும் இடமாகும். இங்கு ஓர் நாளைக்கு 7,000 பேருந்துகளும் 200,000 பயணிகளும் வந்து செல்கிறார்கள்.[116]

நியூயார்க்கு நகரின் சப்வே சேவையை பயன்படுத்தும் நிறுத்தங்களின் எண்ணிக்கை 468 ஆகும். நிறுத்தங்களை கணக்கில் கொண்டால் இதுவே உலகின் பெரிய துரித தொடர்வண்டி சேவையாகும். 2006ல் இதில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 1.5 பில்லியன் ஆகும்.[113] பயணிப்பவர்களின் எண்ணிக்கையின் படி இது உலகின் மூன்றாவது பெரியதாகும். பெரிய நகரங்களான லண்டன், பாரிஸ்,வாசிங்டன் டிசி, மாட்ரிட், டோக்கியோ போன்றவற்றின் துரித தொடர்வண்டி சேவையானது நள்ளிரவில் மூடப்பட்டிருக்கும் ஆனால் நியூயார்க்கின் சப்வே 24 மணி நேரமும் திறந்திருக்கும். நியூயார்க்கு நகரில் வட அமெரிக்காவிலேயே நீளமான தொங்கு பாலம் அமைந்துள்ளது.[117] உலகின் முதல் எந்திரத்தால் காற்றோட்ட வசதி செய்யப்பட்ட வாகனங்கள் செல்லும் குகை அமைக்கப்பட்டது.[118] 12,000 ம் அதிகமான வாடகை மகிழுந்துகள் உள்ளன.[119] ரூஸ்வெல்ட் தீவையும் மேன்காட்டனையும் இணைக்கும் வான் வழி திராம்வே உள்ளது. மேன்காட்டனை பல்வேறு இடங்களுடன் படகு சேவை இணைக்கிறது. ஸ்டேட்டன் தீவு படகு சேவை புகழ்பெற்றதாகும். 5.2 மைல் (8.4 கி.மீ.) பயணித்து மேன்காட்டனையும் ஸ்டேட்டன் தீவையும் இணைக்கும் இதில் ஆண்டுக்கு 19 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்கிறார்கள், பாத் (PATH – Port Authority Trans-Hudson) தொடர்வண்டி நியூயார்க்கு நகரம் சப்வேயை வடகிழக்கு நியூ செர்சியுடன் இணைக்கிறது.

ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம், நியூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம், லா கார்டியா வானூர்தி நிலையம் ஆகிய மூன்றும் நியூயார்க்கு நகருக்கு சேவைபுரியும் வானூர்தி நிலையங்களாகும். இதில் நுயூவர்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ள நியூ செர்சியில் அமைந்துள்ளது. 2005ல் 100 மில்லியன் பயணிகள் இந்த மூன்று வானூர்தி நிலையங்களையும் பயன்படுத்தினார்கள்.[120] 2004ல் அமெரிக்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்களில் கால்வாசி (நான்கில் ஒரு பங்கு) பயணிகள் ஜான் எப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் நவார்க் லிபர்டி பன்னாட்டு வானூர்தி நிலையம் மூலமாக சென்றார்கள்.[121]
காட்சிகள்
- மத்திய மன்ஹாட்டன்
- விடுதலைச் சிலை
- ஐக்கிய நாடுகள் அவை தலைமை அலுவலகம்
- டைம்ஸ் சதுக்கம்
- குறைந்த மன்ஹாட்டன்
- சைனாடவுன், நியூயார்க்கு நகரம்
- வாஷிங்டன் ஸ்கொயர் பார்க், நியூயார்க்கு பல்கலைக்கழகம்
- நியூயார்க்கு பொது நூலகம்
- சென்ட்ரல் பார்க்
- கலை அருங்காட்சியகம்
- புரூக்ளின் பாலம்
- இந்தியா சதுர, ஜெர்சி நகரம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads