கிரீசு சண்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கிரீசு சண்டை (Battle of Greece) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நாசி ஜெர்மனி கிரேக்க நாட்டின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிய நிகழ்வினைக் குறிக்கிறது. பால்கன் போர்த்தொடரின் ஒரு பகுதியான இது மாரிட்டா நடவடிக்கை (Operation Marita) என்றும் அழைக்கப்படுகிறது.
1940ல் அச்சு நாடுகள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த இத்தாலி, கிரீசு மீது படையெடுத்து அதனைக் கைப்பற்ற முயன்றது. ஆனால் கிரேக்கப் படைகளின் எதிர்த்தாக்குதல்களால் போர் தேக்க நிலையை அடைந்து இத்தாலியின் படையெடுப்பு தோல்வியடையும் நிலை உருவானது. இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி, இட்லரிடம் தனக்கு உதவுமாறு வேண்டினார். அதற்கிசைந்த இட்லர், கிரீசைக் கைப்பற்ற ஜெர்மானியப் படைகளுக்கு உத்தரவிட்டார். ஏப்ரல் 6, 1941 அன்று பல்கேரியா மற்றும் யூகோஸ்லாவியா நாட்டுப் பகுதிகளிலிருந்து ஜெர்மானியப் படைகள் கிரீசைத் தாக்கின. கிரீசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்த பிரிட்டன் தனது படைகளையும் பொதுநலவாயப் படைகளையும் கிரேக்கப் படைகளின் உதவிக்கு அனுப்பியது. ஆனால் ஜெர்மானியப் படைபலத்தைச் சமாளிக்க முடியாமல் நேச நாட்டுப் படைகள் பின்வாங்கின. மூன்று வார சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் பெருவெற்றி பெற்றன. கிரீசிலிருந்த பிரித்தானியப் படைகள் பின்வாங்கி கடல்வழியாகத் தப்பின. கிரேக்கத் தலைநகர் ஏதென்சின் வீழ்ச்சியுடன் ஏப்ரல் 30ம் தேதி கிரீசு சண்டை முடிவுக்கு வந்தது. கிரேக்க அரசும் மன்னர் இரண்டாம் ஜார்ஜும் கிரீட் தீவுக்குத் தப்பினர். மே 1941ல் ஜெர்மானியப் படைகள் கிரீட்டைத் தாக்கிக் கைப்பற்றின.
அடுத்த நான்காண்டுகளுக்கு கிரீசு, நாசி ஜெர்மனி, இத்தாலி மற்றும் பல்கேரியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. கிரீசு மீதான ஜெர்மானியப் படையெடுப்பு குறித்து படைத்துறை வரலாற்றாளர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. கிரீசு மீது படையெடுத்ததால் தான் சோவியத் ஒன்றியம் மீதான ஜெர்மானியத் தாக்குதல் தாமதமடைந்தது எனவும் இத்தாமதமே ஜெர்மனி இரண்டாம் உலகப் போரில் தோற்கக் காரணம் என்றும் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். மற்றொரு தரப்பினர் கிரீசுக்கு பிரித்தானியப் படைகளை அனுப்பியது ஒரு தேவையற்ற முயற்சியென்றும், மேல்நிலை உத்தியளவில் ஒரு பெரும் தவறு என்றும் கருதுகின்றனர்.
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads