மார்க்கெட் கார்டன் நடவடிக்கை

From Wikipedia, the free encyclopedia

மார்க்கெட் கார்டன் நடவடிக்கை
Remove ads

மார்க்கெட் கார்டன் (ஆங்கிலம் : Operation Market Garden) 1944ல் இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. செப்டம்பர் 17-25 தேதிகளில் நெதர்லாந்து, மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இது நிகழ்ந்தது. நேச நாட்டுப் படைகள் நாசி ஜெர்மனியின் மீது படையெடுப்பதற்காக, அதன் ஆக்கிரமிப்பின் கீழிருந்த நெதர்லாந்து நாட்டில் சில முக்கிய பாலங்களைக் கைப்பற்ற விரும்பின. அதற்காகப் பல்லாயிரக்கணக்கான வான்குடை வீரர்களைக் கொண்டு அப்பாலங்களின் மீது தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலுக்கு அவை இட்ட குறிப்பெயர் தான் “மார்க்கெட் கார்டன் நடவடிக்கை”. இதுவே உலக வரலாற்றில் மிகப்பெரிய வான்குடை படைத்தாக்குதலெனக் கருதப்படுகிறது. இப்போரின் நிலவரம் ஆரம்பத்தில் நேச நாட்டுப்படைகளுக்குச் சாதகமாக இருந்தாலும் இறுதியில் அவைகளால் தங்கள் இறுதி இலக்கினை அடையமுடியவில்லை. ஜெர்மனிக்கு இயற்கை அரணாக விளங்கிய ரைன் ஆற்றை பெரும் படையுடன் கடப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. இதனால் 1944ம் ஆண்டிற்குள் நாசி ஜெர்மனியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நேசநாட்டுத் திட்டம் நிறைவேறவில்லை.

விரைவான உண்மைகள் மார்க்கெட் கார்டன் நடவடிக்கை, நாள் ...
Remove ads

நோக்கம்

1944ல் இரண்டாம் உலகப்போர் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்திருந்தது. கிழக்கு, மேற்கு என இரு போர்முனைகளிலும் நாசி ஜெர்மனியின் படைகள் முறியடிக்கப்பட்டு பின்வாங்கிக் கொண்டிருந்தன. ஜூன் 1944ல் நேசநாடுகள் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு நாட்டின் மீது தாக்குதலைத் தொடங்கின. ஓவர்லார்ட் நடவடிக்கை மூலம் பிரான்சின் நார்மாண்டிக் கடற்கரையில் லட்சக்கணக்கான நேசநாட்டுப் படைகள் தரையிறங்கின. ஜூன்-செப்டமபர் 1944, காலகட்டத்தில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்து பிரான்சு பெரும்பாலும் மீட்கப்பட்டுவிட்டது. ஜெர்மானியப் படைகள் அருகிலுள்ள பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பின்வாங்கி விட்டன. அடுத்ததாக ஜெர்மனியைத் தாக்க உத்திகள் ஆராயப்பட்டன. ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையிலான எல்லைப்பகுதியை ஜெர்மானியப் படையினர் மிகவும் பலப்படுத்தியிருந்தனர். சிக்ஃப்ரைட் கோடு என்றழைக்கப்பட்ட இந்த பாதுகாப்பு அரணை நேரடியாகத் தாக்கினால் பெரும் சேதம் ஏற்படும் என்பதை நேச நாட்டுத் தளபதிகள் உணர்ந்திருந்தனர். ஆனால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஐரோப்பிய போர்முனைக்கான நேசநாட்டுப் படைகளின் முதன்மைத் தளபதியாக இருந்த ஜெனரல் ஐசனாவர் ஒரு பரந்த களத்தில் ஜெர்மானியப் படைகளைத் தாக்க விரும்பினார். ஆனால் இங்கிலாந்து படைகளின் முதன்மைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் மாண்ட்கோமரி இதை ஒத்துக்கொள்ளவில்லை. நேசநாட்டு ராணுவத் தளவாட போக்குவரத்து நிலைமை சிக்கலாக இருந்ததால், ஐசனாவின் போர் உத்தி பலிக்காதென்றும், பெரும் பலத்துடன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தாக்கி ஜெர்மனியின் அரண்களை ஊடுருவ வேண்டுமென்றும் அவர் வற்புறுத்தினார். இறுதியில் அவரது கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு மார்க்கெட் கார்டன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Thumb
மார்கெட் கார்டன் திட்டம்

இந்த நடவடிக்கையின் நோக்கம், மேற்குத் திசையில் சுற்றி சிக்ஃபிரைட் கோட்டைத் தவிர்த்து நெதர்லாந்து நாட்டின் வழியாக ஜெர்மனியை நேரடியாகத் தாக்குவதே. இதற்கு ரைன் மற்றும் மியூஸ் ஆற்றின் மீதுள்ள பல முக்கிய பாலங்களைக் கைப்பற்ற வேண்டும். பாலங்களைக் கைப்பற்றி விட்டால், பின்னர் அவற்றைப் பயன்படுத்தி ஜெர்மனியின் மையத் தொழில்பகுதியான ரூர் பிரதேசத்தைத் தாக்க படைகளை நகர்த்தலாம் என்பது திட்டம். மார்க்கெட் கார்டன் நடவடிக்கையில் இரு பெரும் உட்பிரிவுகள் இருந்தன. ”மார்க்கெட் நடவடிக்கை”யின் நோக்கம் வான்குடை வீரர்களைக் கொண்டு ஜெர்மனி படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பாலங்களைக் கைப்பற்றுவது. “கார்டன் நடவடிக்கை”யின் நோக்கம் கவசப் படைகளைக் கொண்டு ஜெர்மானியப் பாதுகாப்பு கோட்டை உடைத்து வான்குடை வீரர்கள் கைப்பற்றியிள்ள பாலங்களைச் சென்றடைவது. மேலோட்டமாகப் பார்க்கையில் எளிதான திட்டமாக இது தோன்றினாலும் சிக்கல்களும் அபாயங்களும் நிறைந்தாக இருந்தது. மார்க்கெட் கார்டனில் திட்டமிட்டபடி எல்லாம் நடக்க பல தனிப்பட்ட விஷயங்கள் சாதகமாக அமைய வேண்டியிருந்தன. வான்குடை வீரர்கள் தரையிறங்க மிதமான தட்பவெட்ப நிலை, ஜெர்மனியின் தளபதிகளுக்கு இந்த உத்தி ஆச்சரியத்தை ஏற்படுத்த வேண்டியமை, ஜெர்மனி தளபதிகளால் பாலங்களைப் பாதுகாக்க கூடுதல் படைகளை நகர்த்த இயலாமை போன்ற அனைத்து கூறுகளும் கூடிவந்தால்தான் மார்க்கெட் கார்டனின் இலக்குகளை எட்ட முடிந்திருக்கும். இப்படி அனைத்தும் நல்லபடியாக நடப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவு. ஆனால் நேசநாட்டு தளபதிகள் எல்லாம் ஒத்து வரும் என்று (தவறாக) நம்பி நடவடிக்கையைத் தொடங்கினர்.

Remove ads

நிகழ்வுகள்

Thumb
கிரேவ் பாலத்தைக் கைப்பற்ற தரையிறங்கும் அமெரிக்க 82வது வான்குடை டிவிஷன்

செப்டம்பர் 17, 1944ல் மார்கெட் கார்டன் நடவடிக்கைத் தொடங்கியது. முதலாம் நேச வான்குடை ஆர்மி படை வீரர்கள் நெதர்லாந்தில் தரையிறங்கத் தொடங்கினர். இந்த ஆர்மியில் மொத்தம் மூன்று வான்குடை டிவிஷன்களும், ஒரு பிரிகேடும் இருந்தன. அமெரிக்காவின் 82வது மற்றும் 101வது வான்குடை டிவிஷன்களுக்கு நேசநாடுகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அருகிலிருந்த பாலங்களைக் கைப்பற்றும் பணி ஒப்படைக்கப்பட்டது. கிராவ், நைமெகன், ஐந்தோவன் ஆகிய இடங்களிலிருந்த பாலங்களைக் கைப்பற்றுவது இவர்களின் இலக்கு. ஜெர்மனியின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மிகவும் உட்பகுதியிலிருந்த ஆர்னெம் பாலத்தைக் கைப்பற்றும் பணி பிரித்தானிய முதலாம் வான்குடை டிவிஷனுக்கும் போலந்திய சுதந்திர முதலாம் வான்குடை பிரிகேடுக்கும் ஒப்படைக்கப்பட்டன. வான்குடை வீரர்கள் கைப்பற்றிய பாலங்களை விரைவில் அடைந்து ஜெர்மானியப் படையின் எதிர்த்தாக்குதல்களிலிருந்து அவற்றைக் காக்கும் பொறுப்பு பிரித்தானிய முப்பதாவது கோரிடம் கொடுக்கப்பட்டது. தொடக்கத்தில் எல்லாம் திட்டமிட்டபடி நடந்தன. அமெரிக்க டிவிஷன்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எளிதில் கைப்பற்றி விட்டன. முப்பதாவது கோரும் எளிதில் முன்னேறத் தொடங்கியது.

Thumb
கைப்பற்றப்பட்ட நைமெகன் பாலத்தைக் கடக்கும் முப்பதாவது கோர் டாங்குகள்

நேசநாட்டுப் படைகளின் இந்த திடீர் தாக்குதல் ஜெர்மனியின் மேற்குப் பிரதேச (ஆர்மி குரூப் பி) முதன்மைத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் மோடலை பெரும் ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. நேசநாட்டு விமானப் படைகளின் தொடர் தாக்குதல் மோடலை எதிர்த்தாக்குதலுக்கு உடனே ஏற்பாடு செய்ய விடாமல் தடுத்தன. ரயில் நிலையங்களும், தண்டவாளங்களும் நேசநாட்டு விமானங்களால் பெருமளவில் தகர்க்ககப்பட்டிருந்ததால், அவரால் உடனடியாக எதிர்த்தாக்குதலுக்குப் படைகளை நகர்த்த முடியவில்லை. ஆனால் ஏற்கனவே ஓய்வு எடுப்பதற்காக ஆர்னம் பகுதியில் ஒரு பெரும் ஜெர்மனி படைப்பிரிவு தங்கியிருந்ததை நேசநாட்டு தளபதிகள் உணரவில்லை. ஜெனரல் வில்லெம் பிட்ரிக் தலைமையிலான இரண்டாம் எஸ். எஸ் கோர் சில நாட்களுக்கு முன் கிழக்குப் போர்முனையிலிருந்து திரும்பி ஆர்னெம் பகுதியில் ஓய்வெடுக்கவும், எந்திரங்களைப் பழுதுபார்க்கவும் தங்கியிருந்தது. இதனை உணராத நேசநாட்டுத் தளபதிகள் பிரித்தானிய முதலாம் வான்குடை டிவிஷனை ஆர்னெம் பாலத்தைக் கைப்பற்ற உத்தரவிட்டிருந்தனர். மார்க்கெட் கார்டன் தொடங்கிய ஓரிரு நாட்களுள் ஜெர்மானியப் படைத்தலைமை சுதாரித்து எதிர்தாக்குதலைத் தொடங்கியது. யாரும் எதிர்பாராத விதத்தில் இரண்டாம் எஸ். எஸ். கோர் அப்பகுதியிலிருந்தது ஜெர்மானியப் படையின் எதிர்த்தாக்குதலுக்கு மிகச்சாதகமாகிப் போனது. அனைத்து பாலங்களும் நேசநாட்டு வான்படைகளின் கட்டுப்பாட்டில் வந்து விட்டாலும் அவை ஜெர்மனிப் படையிரனால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தன. ஜெர்மானியப் படைகள் பாலங்களை மீண்டும் கைப்பற்றி அவற்றைப் தகர்ப்பதுக்குமுன் அவற்றை அடைய முப்பதாவது கோர் விரைந்து கொண்டிருந்தது. வெகு சீக்கிரத்தில் அமெரிக்க வான்குடை டிவிஷன்கள் கைப்பற்றியிருந்த நைமெகன், ஐந்தோவன் பாலங்களை அடைந்து அவற்றை எதிர்த்தாக்குதல்களிலிருந்து பத்திரப்படுத்தியது. ஆனால் ஆர்னெம் பாலத்திலிருந்த பிரித்தானிய முதலாம் வான்குடை டிவிஷனின் வீரர்கள் ஜெர்மனிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். ஆர்னெம் பாலம் மீண்டும் ஜெர்மனி வசமானதால் மார்க்கெட் கார்டனின் நோக்கம் முறியடிக்கப்பட்டது.

Remove ads

விளைவுகள்

Thumb
ஆர்னெமில் கொல்லப்பட்ட ஒரு அடையாளம் தெரியாத பிரித்தானிய வான்குடை வீரரின் கல்லறை

மார்க்கெட் கார்டனின் தோல்வியால் 1944ம் ஆண்டிற்குள் ஜெர்மனியைத் தோற்கடிக்க வேண்டுமென்ற நேசநாட்டுத் திட்டம் நிறைவேறாமல்போனது. ஃபீல்டு மார்ஷல் மாண்ட்கோமரியின் குறுகிய முனைத் தாக்குதல் திட்டமும் இதனால கைவிடப்பட்டது. ஐசனோவரின் பரந்த முனைத்தாக்குதல் உத்தியே பின்னர் பயன்படுத்தப்பட்டது. நெதர்லாந்து வழியாக ஜெர்மனியைத் தாக்க முடியாமல் போனதால் பெல்ஜியத்தின் வழியாகவும் பிரான்சு வழியாகவும் தாக்க நேசநாட்டுப் படைகள் தீர்மானித்தன. போர் நீடித்து 1945ல் தான் ஜெர்மனி சரணடைந்தது. மார்க்கெட் கார்டன் வான்குடைப் படைகளின் பலவீனங்களை உலகிற்கு வெளிப்படுத்தின. தரைப்படையினரின் துணையின்றி அவற்றால் களத்தில் வெகுநாட்கள் தனியே தாக்குப்பிடிக்க முடியாதென்பது ராணுவ உத்தியாளர்களுக்குப் புலனானது.

இழப்புகள்

மேலதிகத் தகவல்கள் படைப்பிரிவு, இழப்புகள் ...

அடிக்குறிப்புகள்

மேலும் வாசிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads