நெதர்லாந்து
வட ஐரோப்பிய நாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெதர்லாந்து (The Netherlands, /ˈnɛðərləndz/ (ⓘ); டச்சு: Nederland) நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஒரு நாடு. இது வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இதன் தீவுகள் சில கரிபியன் பகுதியில் உள்ளன. வடக்கிலும் மேற்கிலும் வடகடலும் தெற்கில் பெல்ஜியமும் கிழக்கில் ஜெர்மனியும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது பெல்சியம், செருமனி, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் கடல்சார் எல்லைகளையும்[6] கொண்டுள்ளது. ஒற்றையாட்சி அடிப்படையில் அமைந்த இது ஒரு நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்ட ஒரு நாடாகும். ஆம்ஸ்டர்டாம் இதன் தலைநகரம். அரசாங்கத்தின் இருப்பிடம் ஹேக் நகரம்.[7] நெதர்லாந்து முழுமையும் சில வேளைகளில் ஒல்லாந்து என அழைக்கப்படுவது உண்டு. ஆனால், வடக்கு ஒல்லாந்தும், தெற்கு ஒல்லாந்தும், நெதர்லாந்தின் 12 மாகாணங்களில் இரண்டு மட்டுமே. இந்த நாட்டில் உள்ள ராட்டர்டேம் துறைமுகமானது ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகம் ஆகும்.
புவியியல் அடிப்படையில் இது ஒரு தாழ்நிலப் பகுதி. இதன் 25% நிலப் பகுதி கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்துள்ளதுடன், 21% மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர்.[8] அத்துடன் இதன் 50% நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டருக்கு உட்பட்ட உயரத்தில் அமைந்துள்ளது.[9] இந்தத் தன்மையே இதன் பெயருக்கும் காரணமாகியது. டச்சு மொழியிலும் வேறு பல ஐரோப்பிய மொழிகளிலும் இதன் பெயர் "தாழ்ந்த நாடு" என்னும் பொருள் கொண்டது. கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்த நிலப்பகுதிகளில் பெரும்பாலானவை மக்களில் நடவடிக்கைகளினால் ஏற்பட்டவை. குறிப்பாக, பல நூற்றாண்டுகளாக இப் பகுதியில் கட்டுப்பாடற்ற முறையில் இடம்பெற்ற முற்றா நிலக்கரி (peat) அகழ்வினால் இப்பகுதிகள் பல மீட்டர்கள் தாழ்ந்து போயின.
இது ஒரு மக்கள் நெருக்கம் மிகுந்த நாடு. இந்நாடு இங்கு அமைந்துள்ள காற்றாலைகளுக்குப் புகழ்பெற்றது.
Remove ads
வரலாறு
அப்சுபர்க்கு நெதர்லாந்து 1519–1581






புனித உரோமப் பேரரசரும், எசுப்பானியாவின் அரசருமான ஐந்தாம் சார்லசின் கீழ் நெதர்லாந்துப் பகுதிகள் பதினேழு மாகாணங்களில் ஒன்றாக இருந்தது. இவற்றுள் இன்றைய பெல்சியத்தின் பெரும் பகுதியும்; லக்சம்பர்க்கும், பிரான்சு, செருமனி ஆகியவற்றின் சில பகுதிகளும் அடங்கியிருந்தன.
இம் மாகாணங்களுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையிலான எண்பது ஆண்டுப் போர் 1568ல் தொடங்கியது. 1579 ஆம் ஆண்டில் பதினேழு மாகாணங்களில் வடக்கு அரைப்பகுதி மாகாணங்கள் ஒப்பந்தம் ஒன்றின்கீழ் உத்ரெகு ஒன்றியம் (Union of Utrecht) எனப்படும் ஒன்றியத்தை உருவாக்கின. இந்த ஒப்பந்தப்படி ஒவ்வொரு மாகாணமும் எசுப்பானியப் படைகளுக்கு எதிராக ஒன்றுக்கு ஒன்று உதவுவதற்கு இணங்கின.[10] இந்த உத்ரெகு ஒன்றியமே தற்கால நெதர்லாந்துக்கு அடிப்படையாகக் கருதப்படுகிறது. 1581 ஆம் ஆண்டு வடக்கு மாகாணங்கள், எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப் அரசரைத தமது அரசர் அல்ல என அறிவித்து விடுதலை அறிவிப்புச் செய்தன.[11]
எசுப்பானியாவுக்கு எதிரான டச்சு மக்களின் போராட்டத்துக்கு உதவுவதாக உறுதியளித்த இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத், 1585 ஆம் ஆண்டு இங்கிலாந்துப் படைகளை அனுப்புவதாக ஒத்துக்கொண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார். இதன்படி, இங்கிலாந்து 1585 ஆம் ஆண்டு டிசம்பரில் லேசெசுட்டரின் முதலாம் ஏர்ல் ராபர்ட் டட்லி தலைமையில் 7.500 வீரர்களைக் கொண்ட படை நெதர்லாந்துக்கு அனுப்பியது. எனினும் இப்படையால் டச்சுப் போராட்டத்துக்கு அதிக நன்மை எதுவும் கிடைக்கவில்லை.[12]
எசுப்பானிய அரசர் இரண்டாம் பிலிப்பு மாகாணங்கள் பிரிந்து செல்வதை இலகுவில் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதனால் போர் 1648 ஆம் ஆண்டுவரை நீடித்தது. இறுதியில் நான்காம் பிலிப்பு எசுப்பானியாவின் மன்னராக இருந்தபோது ஏழு வடமேற்கு மாகாணங்களின் விடுதலையை எசுப்பானியா ஏற்றுக்கொண்டது.
டச்சுக் குடியரசு 1581–1795
விடுதலைக்குப் பின்னர், ஒல்லாந்து, சீலந்து, குரோனிங்கென், பிரீசுலாந்து, உத்ரெகு, ஓவரீசெல், கெல்டர்லாந்து என்னும் மாகாணங்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கின. இக் கூட்டமைப்பு ஏழு ஒன்றிய நெதர்லாந்துகளின் குடியரசு என அழைக்கப்பட்டது. இம்மாகாணங்கள் ஒவ்வொன்றும் தன்னாட்சி உடையவையாயும், மாகாண அரசுகள் எனப்பட்ட தனித்தனியாக அரசுகளைக் கொண்டவையாகவும் இருந்தன. கூட்டாட்சி அரசு ஏக் (The Hague) நகரில் அமைந்திருந்தது. இவ்வரசில் ஏழு மாகாணங்களினதும் பிரதிநிதிகள் இருந்தனர். இவை தவிர 80 ஆண்டுப் போரின்போது பெற்றுக்கொண்ட பல பொதுப் பகுதிகளும் குடியரசின் பகுதிகளாக இருந்தன. இவை கூட்டாட்சி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தன. இவற்றுக்குத் தனியான அரசுகளோ, கூட்டாட்சி அரசில் பிரதிநிதிகளோ இல்லை.
17 ஆம் நூற்றாண்டில் இக் குடியரசு, முக்கியமான கடல் வல்லரசாகவும், பொருளாதார வல்லரசாகவும் வளர்ச்சி பெற்றது. "டச்சுப் பொற்காலம்" காலத்தில், உலகத்தின் பல பகுதிகளிலும் வணிக மையங்களும், குடியேற்றங்களும் அமைக்கப்பட்டன. 1614 ஆம் ஆண்டில், மான்கட்டனின் தென் முனையில் நியூ அம்சுட்டர்டாம் அமைக்கப்பட்டதோடு, வட அமெரிக்காவில் டச்சுக் குடியேற்றம் தொடங்கியது. 1652 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கேப் குடியேற்றத்தை உருவாக்கினர். 1650 ஆம் ஆண்டளவில் டச்சுக்காரர் 16,000 வணிகக் கப்பல்களை உடைமையாகக் கொண்டிருந்தனர்.[13] 17 ஆம் நூற்றாண்டில் டச்சு மக்கள் தொகை 1.5 மில்லியன்களில் இருந்து 2.0 மில்லியன்களாகக் கூடியது.[14]
பல பொருளியல் வரலாற்றாளர்கள் நெதர்லாந்தே உலகின் முதலாவது முழுமையான முதளாளித்துவ நாடு எனக் கருதுகின்றனர். தொடக்ககால ஐரோப்பாவில், நெதர்லாந்திலேயே அதிக செல்வம் பொருந்திய வணிக நகரமும் (அம்சுட்டர்டாம்), முழுமையான முதல் பங்குச் சந்தையும் இருந்தன. 18 ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்துக் குடியரசு இறங்கு முக நிலையை எய்தியது. இங்கிலாந்து பொருளாதாரப் போட்டி நாடாக உருவானதும், டச்சுச் சமூகத்தில் இரு பிரிவினர் இடையேயான எதிர்ப்பு உணர்ச்சி வளர்ச்சி பெற்றதும் இதற்கான முக்கிய காரணங்களாகும்.
பிரெஞ்சு ஆதிக்கம் 1795–1814
1795 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி ஆரெஞ்சின் ஐந்தாம் வில்லியம் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடியபின், நெதர்லாந்தை ஒற்றையாட்சி முறையின் கீழ் கொண்டுவந்து பத்தாவியக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1795 ஆம் ஆண்டில் இருந்து 1806 ஆம் ஆண்டு வரை பத்தாவியக் குடியரசு, பிரெஞ்சுக் குடியரசின் அமைப்பைத் தழுவியதாக இருந்தது.
1806 ஆம் ஆண்டு ஒல்லாந்து இராச்சியம் நெப்போலியன் பொனப்பார்ட்டினால் உருவாக்கப்பட்டு, ஒரு பொம்மை அரசாக அவன் தம்பியான லூயிசு பொனப்பாட்டினால் 1814 ஆம் ஆண்டுவரை ஆளப்பட்டது. நெதர்லாந்தின் முக்கியமான மாகாணமான ஒல்லாந்தின் பெயர் முழு நாட்டையும் குறிக்கப் பயன்பட்டது. ஒல்லாந்து இராச்சியம், லிம்பர்க், சீலந்தின் சில பகுதிகள் என்பவை நீங்கலாக இன்றைய நெதர்லாந்து நாட்டின் பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. லிம்பர்க்கும், முற்சொன்ன சீலந்தின் பகுதிகளும் அக்காலத்தில் பிரான்சின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. 1807 ஆம் ஆண்டில், பிரசியப் பகுதிகளான கிழக்கு பிரிசியாவும், யேவரும் ஒல்லாந்து இராச்சியத்துடன் சேர்க்கப்பட்டன. ஆனாலும், 1809 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஆக்கிரமிப்புத் தோல்வியில் முடிந்த பின்னர், ரைன் ஆற்றுக்குத் தெற்கில் அமைந்திருந்த ஒல்லாந்தின் பகுதிகள் எல்லாம் பிரான்சின் கைக்கு மாறின.
ஒல்லாந்து அரசனாகப் பதவியில் அமர்த்தப்பட்ட லூயிசு பொனப்பார்ட், நெப்போலியனின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக நடந்துகொள்ளவில்லை. அவன், தனது தமையனான நெப்போலியனின் நலன்களைக் கவனிப்பதை விட டச்சு மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தான். கண்டத்து நடைமுறைகளுக்கு மாறாக இங்கிலாந்துடனான வணிகத்தையும் அனுமதித்திருந்தான். டச்சு மொழியையும் கற்க முயற்சி செய்தான். இதனால், 1810 ஆம் ஆண்டு யூலை 1 ஆம் தேதி லூயிசு பதவி துறக்க வேண்டியதாயிற்று. தொடர்ந்து அவனது ஐந்து வயது மகன் நெப்போலியன் லூயிசு பொனப்பார்ட் இரண்டாவது லூயிசு என்னும் பெயருடன் அரசனாக அறிவிக்கப்பட்டான். ஆனால், நெப்போலியன் பொனப்பார்ட் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ளாததால், நெப்போலியன் லூயிசு 10 நாட்கள் மட்டுமே அரசனாக இருக்க முடிந்தது. நெப்போலியன் ஒரு படையை அனுப்பி ஒல்லாந்தைக் கைப்பற்றியதுடன், ஒல்லாந்து இராச்சியத்தைக் கலைத்துவிட்டு அந்நாட்டை பிரான்சுப் பேரரசின் ஒரு பகுதி ஆக்கிக்கொண்டான்.
1813 ஆம் ஆண்டுவரை நெதர்லாந்து பிரான்சின் பகுதியாக இருந்தது. அந்த ஆண்டில் நெப்போலியன் லீப்சிக் போரில் தோல்வியடைந்தபோது, அவன் நெதர்லாந்தில் இருந்து பிரெஞ்சுப் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.
நெதர்லாந்து இராச்சியம் 1815–1940
முன்னர் நெதர்லாந்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆரெஞ்சின் இளவரசர் ஐந்தாம் வில்லியத்தின் மகன் நெதர்லாந்தின் முதலாம் வில்லியம், 1813ல் நெதர்லாந்துக்குத் திரும்பி அந்நாட்டின் முடிக்குரிய இளவரசர் ஆனார். 1815 மார்ச் 16ல் அவர் நெதர்லாந்தின் அரசரானார். 1815 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வியன்னா மாநாட்டில், பிரான்சின் எல்லையில் ஒரு வலுவான இராச்சியத்தை உருவாக்கும் நோக்கில், நெதர்லாந்துடன் பெல்சியத்தையும் இணைத்து நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் உருவாக்கப்பட்டது. பல்வேறு செருமன் பகுதிகளுக்குப் பதிலீடாக லக்சம்பர்க்கும் வில்லியத்துக்குத் தனிப்பட்ட சொத்தாக வழங்கப்பட்டது.
கிளர்ச்சி மூலம் பெல்சியம் 1830 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. நெதர்லாந்தின் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தபோது லக்சம்பர்க்கின் உரிமை வாரிசுரிமைச் சட்டங்களின் அடிப்படையில் கைமாறியதால் 1890ல் நெதர்லாந்தும் லக்சம்பர்க்கும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன.
19 ஆம் நூற்றாண்டில், அயல் நாடுகளுடன் ஒப்பிடும்போது நெதர்லாந்தின் கைத்தொழில்மயமாக்கம் மந்தமாகவே இடம்பெற்றது. ஆற்றலுக்குப் பெரும்பாலும் காற்றாலைகளில் தங்கியிருந்ததுடன், பெருமளவில் நீர்வழிகளைக் கொண்டிருந்த உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதில் இருந்த சிக்கல்களே இதற்குக் காரணம்.
முதலாம் உலகப் போரில் நெதர்லாந்து நடுநிலை வகித்த போதிலும் இது தொடர்பில் நெதர்லாந்து தவிர்க்க முடியாதபடி தொடர்புபட்டிருந்தது. செருமனி முதலில் நெதர்லாந்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு இருந்தது எனினும், அது நடுநிலையில் இருப்பதன் அவசியத்தை முன்னிட்டு இத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.
Remove ads
புவியியல்
ஐரோப்பாவில் நெதர்லாந்துப் பகுதிகள் 50° மற்றும் 54° வடக்கு அட்சரேகைகளுக்கும், 3° மற்றும் 8° கிழக்கு தீர்க்கரேகைகளுக்கும் இடையே அமைந்துள்ளது.
இந்த நாடு, கிளை ஆறுகளுடன் கூடிய ரைன் ஆறு, வால் ஆறு, மெயூசு ஆறு என்னும் பெரிய ஆறுகளால் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறுகள் இவ்விரு பிரிவுகளுக்கும் இடையே ஒரு இயற்கைத் தடுப்பாகச் செயற்பட்டதால், மரபு வழியான ஒரு பண்பாட்டுப் பிரிவு ஏற்பட்டு விட்டது. அவ்வாறுகளுக்கு வடக்கிலும், தெற்கிலும் பேசப்படும் மொழியில் காணும் ஒலிப்பியல் வேறுபாடுகள் இதற்குச் சான்றாக அமைகின்றன.
நெதர்லாந்தின் தென்மேற்குப் பகுதி ஒரு ஆற்று வடிநிலம் ஆகும்.
தரைத்தோற்றம்
நெதர்லாந்தானது கடல்மட்டத்தை விடத் தாழ்மட்டத்தில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றாகும். அதிகளவான சமவெளிகளைக் கொண்டுள்ளது.
காலநிலை
இந் நாட்டில் கண்டக் காலநிலை காணப்படுகின்றது.
Remove ads
மக்கள்,மொழி,மதம்
இந் நாட்டில் ஒல்லாந்து இனத்தவர்களே அதிகளவாக வாழ்கின்றனர். இரண்டாம் உலகபோரின் பின்னர் அதிகளவான ஆசிய, ஆபிரிக்க நாட்டினர் குடியேறியுள்ளனர். உலகின் அதிகளவான மக்கள் அடர்த்தி கொண்ட நாடு நெதர்லாந்து ஆகும் . ஒல்லாந்த மொழியே இந்நாட்டின் அரச கரும மொழியாகும். உரோமன் கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து, இஸ்லாம் மதங்களைப் பின்பற்றுபவர்களும் எந்தவொரு மதத்தினையும் பின்பற்றாதவர்களும் பெருமளவில் வாழ்கின்றனர்.
பொருளாதாரம்
ஐரோப்பிய பொருளாதாரத்தில் நெதர்லாந்து முக்கிய இடம் வகிக்கிறது. முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றும் ஒரு நாடாகும். கப்பல் கட்டுதல், மீன்பிடி ,வர்த்தகம் போன்ற துறைகளின் மூலம் பொருளீட்டுகிறது. காலனித்துவ காலத்தில் கைப்பற்றிய நாடுகளிலிருந்து வளங்களைச் சுரண்டிய நாடுகளிலொன்றாகும். நாணயம் யூரோ.
அரசியல்

மன்னராட்சி இடம் பெறும் நாடாகும். எனினும் நாடாளுமன்ற ஆட்சி முறையே நடைபெறுகின்றது. மன்னர் நாட்டின் தலைவராக இருந்த போதினும் அதிகாரங்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரிடம் இருக்கும்.
நிர்வாகப் பிரிவுகள்

நெதர்லாந்து, மாகாணங்கள் என அழைக்கப்படும் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் அரசியின் ஆணையாளர்கள் (Commissaris van de Koningin) எனப்படுபவர்களால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. லிம்பர்க் மாகாணத்தில் மட்டும் இவர்கள் ஆளுனர்கள் (Gouverneur) என அழைக்கப்படுகின்றனர். எல்லா மாகாணங்களும் முனிசிப்பாலிட்டி எனப்படும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. 13 மார்ச் 2010 நிலவரப்படி நாட்டில் உள்ள மொத்த முனிசிப்பாலிட்டிகளின் தொகை 430 ஆகும்.
நாடு நீர் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நீர் மேலாண்மைக்குப் பொறுப்பாக உள்ள நீர்ச் சபைககள் (water board) இம் மாவட்டங்களை நிர்வகிக்கின்றன. 2005 ஆம் ஆண்டு சனவரி முதலாம் தேதி 27 இவ்வாறான நீர் மாவட்டங்கள் இருந்தன. நாடு உருவாவதற்கு முன்பே நீர்ச் சபைகள் இருந்துள்ளன. 1196ல் இவை முதன் முதலில் உருவாகின. டச்சு நீர்ச் சபை, இன்றும் செயற்படுகின்ற உலகின் சனநாயக நிறுவனங்களுள் மிகவும் பழையது எனக் கருதப்படுகின்றது.
Remove ads
விளையாட்டு
நெதர்லாந்தில் ஆடப்படும் அனைத்து விளையாட்டுகளினும் புகழ்பெற்று விளங்குவது கால்பந்து ஆகும். ஹாக்கி மற்றும் கைப்பந்து அடுத்த இடத்தைப் பெறுகின்றன. நெதர்லாந்தின் தேசிய கால்பந்து அணியின் மைதானம் ஆம்ஸார்டாம் அரினா. கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் மூன்று முறை[1974,1978,2010] இறுதி போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளில் ஓரு முறை[1988] வென்றுள்ளது
நெதர்லாந்தில் ஆண்கள் அணி, ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளில் மூன்று முறையும், ஓலிம்பிக் தங்கத்தை இரண்டு முறையும் வென்றுள்ளது. ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளில் நெதர்லாந்தில் பெண்கள் அணி ஆறு முறை வென்றுள்ளது.
ஏனைய தகவல்கள்
நெதர்லாந்து ஒல்லாந்து (Holland) என்ற துணைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றாகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads