முத்திரைக் காசு

From Wikipedia, the free encyclopedia

முத்திரைக் காசு
Remove ads

முத்திரைக் காசு (Punch marked coin) என்பது, வேதகாலத்துக்குப் பின்னர், கிமு 6 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 3 ஆம் நூற்றாண்டு முடிய உள்ள காலப்பகுதியில்.[1] இந்தியாவின் கங்கைச் சமவெளிப் பகுதியில் முத்திரை பொறித்து வெளியிடப்பட்ட காசைக் குறிப்பதாக கருத்து நிலவி வந்தது. பிற்பாடு பாண்டியர்கள் வெளியிட்ட காசுகளின் பழமை பொ.மு. 500 வரை சென்றதால் இவை தமிழகத்தில் சம காலத்தில் புழக்கத்தில் இருந்தமை அறியப்பட்டது.[2] இவையே இந்தியாவில் வெளியிடப்பட்ட முதற் காசுகள் எனக் கருதப்படுகின்றன. இக்காசுகளை தமிழக மூவேந்தர்களின் அரசுகள்,[3] "சனபதங்கள்", "மகாசனபதங்கள்" அரசுகள் வெளியிட்டன[4]. இக் காசுகள் அக்காலத்தில் புராணா, கர்சாப்பாணா, பாணா போன்ற பெயர்களால் குறிப்பிடப்பட்டன. இக் காசுகள் பலவற்றில் சின்னங்கள் முத்திரை இடப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக, சௌராசுட்டிரக் காசுகளில் திமிலுடன் கூடிய காளைச் சின்னமும், தெற்குப் பாஞ்சாலக் காசுகளில் சுவசுத்திக்காவும் பொறிக்கப்பட்டிருந்தன. மகதக் காசுகளில் பல்வேறு சின்னங்கள் காணப்படுகின்றன. இக் காசுகள் வெள்ளியில் செய்யப்பட்டவையாகவும், ஒரே நிறை கொண்டவையாகவும் இருந்தன. எனினும், இவை ஒழுங்கற்ற வடிவங்களைக் கொண்டிருந்தன.

Thumb
யானை, சூரியன் என்னும் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முத்திரைக் காசொன்றின் இரு பக்கங்கள்

வட இந்தியாவில் இக் காசுகள் கிறித்தவ ஆண்டுத் தொடக்கத்துக்கு முன்பே வழக்கற்றுப் போய்விட்டன எனினும், தென்னிந்தியப் பகுதிகளில் மேலும் மூன்று நூற்றாண்டுகள் வழக்கில் இருந்தன.[5]

Remove ads

உருவாக்கிய முறை

இக் காசுகளைச் செய்த விதம் குறித்த குறிப்புகள் மனு, பாணினி, கௌடில்யர் என்போர் எழுதிய நூல்களிலும், புத்த சாதகக் கதைகளிலும் வருகின்றன. உலோகத்தை மட்கலத்தில் இட்டு உருக்கியபின் அதனுடன் காரப்பொருள் சேர்த்துச் சுத்தம் செய்தனர். பின்னர் அவ்வுலோகத்தைக் குளிரவிட்டுச் சம்மட்டியால் அடித்துத் தகடுகளாக ஆக்கினர். இத்தகடுகள் குறித்த நிறைகளைக் கொண்டிருக்குமாறு துண்டுகளாக வெட்டப்பட்ட பின்னர், அவற்றின் மீது முத்திரைப் பொறிகளைப் பயன்படுத்தி முத்திரை இட்டனர். சில அரசுகள் உருக்கிய உலோகத்தை அச்சில் வார்த்து வட்டவடிவமாகச் செய்து முத்திரை இட்டதையும் அறிய முடிகிறது.

Remove ads

பொறிப்புகள்

இக்காசுகளில் எழுத்துக்களோ அல்லது அவை வெளியிடப்பட்ட ஆண்டுகளோ பொறிக்கப்படவில்லை. சின்னங்கள் மட்டுமே காணப்பட்டன. இச் சின்னங்களில் விலங்குகள், பறவைகள், மரங்கள், மனிதர், பிற உயிரினங்கள், சூரியன் போன்றவைகளும்; சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களும் அடங்கியிருந்தன. இவ்வாறு பொறிக்கப்பட்டிருக்கும் சின்னங்களைக் கொண்டே காசுகள் எக்காலத்துக்கு உரியவை என்றும் யாரால் வெளியிடப்பட்டவை என்றும் ஓரளவுக்கு அறிந்துகொள்ள முடிகிறது. இக் காசுகளின் முன்பக்கத்தில் ஐந்து அல்லது ஆறு சின்னங்கள் காணப்படுகின்றன. சில காசுகளில் பின்பக்கத்தில் சின்னங்கள் எதுவும் இல்லை. எனினும், வேறு சில காசுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சின்னங்களும் காணப்படுவது உண்டு. இச் சின்னங்கள், அவை முதலில் உருவாக்கப்பட்ட காலத்தில் அன்றிப் பின்னர் அவற்றை வைத்திருந்தவர்களால் பொறிக்கப்பட்டவை என்ற கருத்தும் நிலவுகிறது.[4]

Remove ads

குறிப்புகள்

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads