மு. கார்த்திகேசன்

இலங்கைத் தமிழ் இடதுசாரி அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார் From Wikipedia, the free encyclopedia

மு. கார்த்திகேசன்
Remove ads

கம்யூனிஸ்டு கார்த்திகேசன் என அழைக்கப்பட்ட மு. கார்த்திகேசன் (25 யூன் 1919 – 10 செப்டம்பர் 1977) இலங்கைத் தமிழ் இடதுசாரி அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.[1]

விரைவான உண்மைகள் மு. கார்த்திகேசன், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

கார்த்திகேசன் 1919 யூன் 25 அன்று மலாயாவில் தைப்பிங் என்னும் இடத்தில் முருகபிள்ளை, தங்கரத்தினம் ஆகியோருக்கு மூத்த ஆண் குழந்தையாகப் பிறந்தார்.[1] தந்தை முருகபிள்ளை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மலாயா சென்று அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியவர்.[1] தனது ஐந்தாவது அகவையில் தாயுடன் இலங்கை வந்த கார்த்திகேசன் வட்டுக்கோட்டை திருஞானசம்பந்த வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி கற்று, மீண்டும் தைப்பிங் சென்று அங்குள்ள ஒர் ஆங்கிலக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார்.[1] அங்கு அவர் இலண்டன் மூத்த கேம்பிரிட்ச் தேர்வில் திறமையான சித்தி பெற்றார். பின்னர் இலங்கை திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1937 முதல் 1941 வரை உயர் கல்வி கற்றார்.[1]

Remove ads

பல்கலைக்கழகத்தில்

1935 ஆம் ஆண்டில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக லங்கா சமசமாஜக் கட்சி தொடங்கப்பட்டது. இலண்டனில் கல்வி கற்றுத் திரும்பிய எஸ். ஏ. விக்கிரமசிங்க, அ. வைத்திலிங்கம், பீட்டர் கெனமன் போன்றோர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கம்யூனிசப் பரப்புரையில் ஈடுபட்டனர்.[2][1] இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் கம்யூனிஸ்டுகளுக்கும் திரொத்சுக்கியவாதிகளுக்கும் இடையே தோன்றிய கருத்து வேறுபாட்டால், இலங்கையில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சிலர் சமசமாசக் கட்சியில் இருந்து விலகிக் கம்யூனிஸ்டுக் கட்சியைத் தொடங்கினர்.[2] இந்த அரசியலில் கார்த்திகேசனும் இணைந்தார். பல்கலைக்கழகக் காலத்தில் ஆங்கிலப் பிரசுரங்களை வெளியிட்டார்.[1] "மாணவர் செய்தி" (Student News) என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். திரொக்சியத்திற்கு எதிராகவும், சோவியத் கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் அவர் பல பிரசுரங்களை வெளியிட்டார். ஆங்கிலத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.[1]

Remove ads

திருமணமும் கட்சிப் பணியும்

கார்த்திகேசன் 1942 ஆம் ஆண்டில் அவரது உறவினர்களில் ஒருவரான சங்கரத்தை என்ற ஊரைச் சேர்ந்த வாலாம்பிகை என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தார்.[1] திருமணம் முடிந்ததுமே இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராகச் சேர்ந்தார். கொழும்பில் பொரளை கொட்டா வீதியில் ஏனைய கம்யூனிசத் தலைவர்களுடன் சேர்ந்து வசித்து வந்தார். கட்சியின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்காற்றினார். கட்சியின் "போர்வார்டு" என்ற கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில வாரப் பத்திரிகையின் நிறுவன ஆசிரியராகப் பணியாற்றினார்.[1]

தமிழ்ப் பகுதிகளில் கட்சியை வளர்க்கவென கட்சியால் பணிக்கப்பட்டு 1946-இல் யாழ்ப்பாணம் வந்தார். யாழ்ப்பாணம் விக்டோரியா வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடி புகுந்தார். அதுவே கட்சி அலுவலகமாகவும் விளங்கியது. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ப. ஜீவானந்தம் 1947 இல் இந்தியாவில் தலைமறைவாகி யாழ்ப்பாணத்தில் சில நாட்கள் கார்த்திகேசன் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரது நினைவாக தனது மூத்த மகனுக்கு ஜீவானந்தம் எனப் பெயரிட்டார், அக்குழந்தை இறந்துவிடவே, பின்னர் பிறந்த பெண் குழந்தைக்கு ஜீவஜோதி எனப் பெயரிட்டார்.[1]

தோழர்கள் சு. வே. சீனிவாசகம், வீ. ஏ. கந்தசாமி, ஆர். பூபாலசிங்கம், எம். சி. சுப்பிரமணியம், இராமசாமி ஐயர் ஆகியோர் இவருடன் இணைந்து கட்சிப் பணியாற்றினர். யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஆசிரியப் பணி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நீண்ட காலம் ஆசிரியராகவும், பின்னர் அதிபராகவும் பணியாற்றினார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் அதிபராகப் பணியாற்றினார். இப்பணிகளின் போது, கல்லூரிகளின் வெளியீடுகளில் பல கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

தேர்தல்களில் பங்களிப்பு

1947 இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்டுக் கட்சியின் வேட்பாளராக பொன்னம்பலம் கந்தையா பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரையில் கார்த்திகேசன் ஈடுபட்டார்.[1] 1947 முதல் இறக்கும் வரை சிறந்த மேடைப் பேச்சாளராகத் திகழந்தார். பொன். கந்தையா 1956 தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். கார்த்திகேசன் 1956 தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 3,289 (14.7%) வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார்.[1] இதைத் தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள் பலர் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட்டு பெரும்பாலானோர் வெற்றி பெற்றனர். கார்த்திகேசனும் யாழ்ப்பாண மாநகர சபையின் வண்ணார்பண்ணைத் தொகுதியில் போட்டியிட்டுத் தெரிவானார்.[1] கார்த்திகேசன் மீண்டும் 1960 மார்ச் தேர்தலில் நல்லூர் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

Remove ads

கட்சியில் பிளவு

1963 இறுதியில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவடைந்தபோது, கார்த்திகேசன் நா. சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்புக் கம்யூனிஸ்டுக் கட்சியுடன் இணைந்தார். 1966 இல் தீண்டாமை ஒழிப்பு போராட்ட நடவடிக்கைகளில் பெரும் பங்காற்றினார். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டங்களை நடத்தினார்.[1]

மறைவு

மு. கார்த்திகேசன் 1977 செப்டம்பர் 10-ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் மாரடைப்பால் காலமானார். இவரது மகள் ராணி சின்னத்தம்பி, மருமகன் வீ. சின்னத்தம்பி (பாரதிநேசன்) ஆகியோர் சீன வானொலி நிலையத்திலும், பீக்கிங்கில் உள்ள அயல்மொழிப் பதிப்பகத்திலும் பணியாற்றியவர்கள் ஆவர்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads