மூவகை மாணாக்கர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மூவகை மாணாக்கர் என்று மாணவர்களை,
- தலை மாணாக்கர்,
- இடை மாணாக்கர்,
- கடை மாணாக்கர்
என மூன்று வகைகளாக நன்னூல் பிரித்துக்காட்டுகிறது.
தலை மாணாக்கர்
அன்னப்பறவையையும் பசுவையும் போன்றவர்கள் தலை மாணாக்கர்.
பாலையும் நீரையும் கலந்து வைத்தால் நீரைப்பிரித்து பாலைமட்டும் பருகும் இயல்புடையது அன்னம். அதுபோல ஆசிரியர் கூறுபவற்றுள் நல்லதை எடுத்துக்கொண்டு அல்லதைத் தள்ளி விடும் மாணவர்கள் தலை மாணவர்கள் எனப்படுவர்.
மேலும், தனக்கு உணவு கிடைக்கும்போது வயிறார மேய்ந்துவிட்டு பின்னர் ஓரிடத்தில் படுத்துச் சிறிதுசிறிதாக அசைபோடுவது பசுவின் இயல்பு ஆகும். அதுபோலப் பாடம் சொல்லப்படும்போது கிடைக்கும் எல்லாச் செய்திகளையும் செவியில் வாங்கிக் கொண்டு, பின்னர் அவற்றைச் சிறிது சிறிதாகச் சிந்தனைக்குக் கொண்டு வந்து நினைத்துப் பார்ப்பது தலைமாணவர்களின் இயல்பாகும்.
Remove ads
இடை மாணாக்கர்
நிலத்தையும் கிளியையும் போன்றவர்கள் இடை மாணாக்கர்.
உழவர் மேற்கொள்ளும் முயற்சியின் அளவுக்கு ஏற்பப் பலன் கொடுப்பது நிலத்தின் இயல்பாகும். அதுபோலத் தன்முயற்சி ஏதுமின்றி ஆசிரியர் கூறுவதை மட்டும் கேட்டுப் பயிலும் மாணாக்கர் இடை மாணாக்கர் எனப்படுவர்.
தன்னை வளர்ப்பவர் சொல்லித்தரும் சொற்களை மட்டும் சொல்லும் இயல்புடையது கிளி. அதைப்போன்று தானாக முயன்று புதியனவற்றைக் கற்றுக் கொள்ளாமல் இருப்பது இடைமாணவர்களின் இயல்பாகும்.
Remove ads
கடை மாணாக்கர்
பொத்தற்குடம், ஆடு, எருமை, பனைமட்டை போன்றவர்கள் கடை மாணாக்கர்.
பொத்தல் குடத்தில் (ஓட்டைக் குடம்) நீர் நிரப்பினால் அது ஓட்டை வழியே நீரை ஒழுகவிட்டு வெறுங்குடமாகிவிடும். அதுபோல ஆசிரியர் கற்பித்தவற்றைக் கேட்டவுடன் மறந்துவிடும் வகை மாணவர்கள் கடை மாணாக்கர் என்ப்படுவர்.
கிடைக்கும் உணவை ஓரிடத்தில் மேயாமல் பார்க்கும் இடங்களிலெல்லாம் நுனிப்புல் மேய்ந்து வயிறு நிரம்பாமல் அலையும் இயல்புடையது ஆடு. அவ்வாடு போலக் கடைமாணாக்கர் எனப்படுவோர் ஓர் ஆசியரிடம் ஒழுங்காகக் கற்காமல் பலரிடம் சென்று நுனிப்புல் போல மேலோட்டமாகப் பாடம் கற்று நிரம்பாத அறிவோடு அலையும் இயல்புடையவராயும் இருப்பர்.
குளத்து நீரைக் கலக்கிச் சேறும் சகதியுமாக்கிய பின்னர் அதைப் பருகும் இயல்புடையது எருமை. அதுபோல கடை மாணாக்கர் ஆசிரியரின் மனத்தை வருத்தி நோகடித்து கல்வி கற்பவர்களாகவும் இருப்பர்.
பனை மட்டையைத் தாங்கியிருக்கும் பன்னாடையில் கள்ளை வடிகட்டும்போது அது தேவையான மதுவை விடுத்து தேவையற்றதைப் பிடித்துக் கொள்வது போலக் கடை மாணாக்கர் தேவையானவற்றை விட்டுவிட்டுத் தேவையற்றதைப் பிடித்துக் கொள்ளூம் இயல்புடையவர்களாய் இருப்பர்.[1]
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads