மெய்யறம் (நூல்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வ.உ.சி என்றழைக்கப்படும் வ. உ. சிதம்பரம்பிள்ளை (ஆங்கிலம்: V._O._Chidambaram_Pillai) ( (பி)- செப்டம்பர் 5 1872 - (இ) நவம்பர் 18 1936)[1] ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.
வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். திறமையான எழுத்தாளர், ஆற்றல் மிக்க பேச்சாளர், தன்னலமில்லா தொழிற்சங்கத் தலைவர், துணிவுடைய சுதந்திரப் போராட்ட வீரர். வ.உ.சி. யின் தியாக வாழ்க்கை ஒர் உன்னத வரலாறானது.
வ.உ.சி. கண்ணணூர் சிறையில் இருக்கும் பொழுது எழுதிய நூலே "மெய்யறம்" ஆகும். அவர் விடுதலை பெற்ற பின்னர் அந்த நூல் வெளியிடப்பட்டது. வ.உ.சி. அந்த நூலைத் தஞ்சாவூரைச் சேர்ந்த இராவ் பகதூர் திரு. சீனிவாச பிள்ளை என்பவருக்கு சமர்ப்பித்துள்ளார். இவர் தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதியவர் ஆவார். வ.உ.சி. காலத்திலேயே இந்நூல் மூன்று பதிப்புகள் கண்டுள்ளது. முதல் பதிப்பு சென்னையில் ப்ரோக்ரஸிவ் அச்சகத்தில் 1914- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இரண்டாவது பதிப்பு சென்னையில் கலாரத்னாகரா அச்சகத்தில் 1917- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. மூன்றாவது பதிப்பு அம்பாசமுத்திரத்தில் சண்முகவிலாஸ் அச்சகத்தில் 1930- ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.
தமிழக அரசு வ.உ.சி. யின் நூல்களின் உரிமையை விலை கொடுத்து வாங்கியுள்ளது. அதனால் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வ.உ.சி.யின் நூல்களைப் பதிப்பித்துக் கொள்ளலாம். "மெய்யறம்" என்ற சொல்லில் இரு பகுதிகள் உள்ளன. முதல் பகுதி "மெய்". இரண்டாம் பகுதி "அறம்". "மெய்" என்றால் உண்மை என்று பொருள். "அறம்" என்பது தர்ம நெறி ஆகும். வ.உ.சி. இந்நூலில் உண்மையான அறத்தைப் பற்றி இளம் வயதினரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கி உள்ளார். இந்நூல் மிக எளிய, சிறிய வரிகளின் தொகுப்பு ஆகும். இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது ஆகும். இந்நூல் தெளிந்த சிந்தனை, வாழ்க்கையைப் பற்றிய அறிவு, ஞானம் இவற்றை அளிக்கக் கூடியது ஆகும். இந்நூலில் இருந்து ஒழுக்கம், கலாச்சாரம், வாழும் முறை இவை குறித்து நாம் அறியலாம். இளஞர்கள் நல்வாழ்க்கை வாழ நன்னடத்தையைக் கற்பிக்கிறது. இது அறிவுரைகளைக் கட்டளைகளாகக் கூறுகிறது. மெய்யறம் என்னும் இந்நூலில் 5பகுதிகளும் 125 அதிகாரங்களும் உள்ளன. ஒரு அதிகாரத்தில் பத்து வரிகள் உள்ளன. மொத்தம் 1250 வரிகள் உள்ளன. ஒவ்வொரு வரியும் ஒரு அறிவுரை கூறுகிறது.
Remove ads
- மாணவரியல்
- இல்வாழ்வியல்
- அரசியல்
- மெய்யியல்
- அந்தணரியல்
முதல் பகுதியான "மாணவரியல்" மாணவர்களுக்கானது. அது 30 அதிகாரங்கள் கொண்டது. இந்தப் பகுதியில் வ.உ.சி. இளமைப் பருவமே கல்வி கற்பதற்கு ஏற்ற பருவம் என்று குறிப்பிடுகிறார். இப்பருவத்தில் கற்க வேண்டியவற்றைக் கற்க வேண்டும், அறியக் கூடாதவற்றைத் தவிர்த்து விடவேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் கடமை, அடக்கம், கல்வி, உடல் நலம் இவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விளக்குகிறார். அவர் நமது உடல், ஆன்மா, மனம் இவை குறித்தும் கூறியுள்ளார். நமது மனமே நமது செயல்களுக்குக் காரணமாகும். நமது உடலை, அதாவது ஐம்புலன்களைக் கட்டுப்படுத்துவது நமது மனமே ஆகும். ஆன்மா நமது மனத்தை வழி நடத்துகிறது. நமது விதியைத் தீர்மானிப்பது கடவுளல்ல, நாம்தான். ஏனெனில் நமது செயல்களின் பயனே நமது விதியாகும் என்று உறுதிபடக் கூறுகிறார். நமது நன்மைக்கும் தீமைக்கும் நமது செயல்களே காரணம். அதனால் நல்விதியை விரும்பினால் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். மாணவர்கள் இறைச்சி, மது, திருட்டு, புறம் கூறுதல், பொய், இரத்தல், பொறாமை,போதை பொருட்கள், பயனில் சொல் போன்றவற்றை விலக்கும்படி வ.உ.சி. கூறுகிறார். மேலும் நட்பு, நன்றி மறவாமை, நடுநிலைமை, அடக்கம், ஒழுக்கம், முயற்சி, ஊக்கம் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கிறார்.
இரண்டாவது பகுதி "இல்வாழ்வியல்" ஆகும். இதில் 30 அதிகாரங்கள் உள்ளன. இதில் வ.உ.சி. இல்லறம் குறித்து விளக்குகிறார். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது குறித்து விளக்குகிறார். பின்னர் வாழ்க்கையை நல்ல முறையில் நடத்திச் செல்வதற்கும் அறிவுரைகள் கூறுகிறார். மறதி, காலம் தாழ்த்துதல், மடி, பேதைமை, வெண்மை போன்றவற்றை நீக்க வேண்டும் என்றும் அதிக துயில், அச்சம், அதிக ஆசை, செருக்கு போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றும் வ.உ.சி. கூறுகிறார். பெற்றோர், குழந்தைகள், விருந்தினர், முன்னோர் ஆகியோரைப் பேணிப் பாதுகாப்பது நமது கடமை என்று அறிவுறுத்துகிறார்.சமுதாய வாழ்க்கை, அன்பு, பொறுமை, ஈகை ஆகியவை எவ்வளவு முக்கியம் என்று கூறுகிறார்.
Remove ads
மூன்றாவது பகுதி "அரசியல்" ஆகும். இதில் 50 அதிகாரங்கள் உள்ளன. இதில் ஒரு மன்னர் எப்படி அரசாள வேண்டும் என்று விளக்குகிறார். நல்ல அரசாங்கத்தின் முக்கியத்துவம், அதற்கு இருக்க வேண்டிய இயல்புகள் பற்றிக் கூறுகிறார். ஓர் அரசன் பரிவுடன் இருக்கவேண்டும், எதையும் ஆலோசித்துச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். ஒற்றர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் முக்கியத்துவம், ஒரு நாட்டின் சிறப்புகள் எவை, நாட்டிற்குப் பாதுகாப்பு எப்படி அளிக்க வேண்டும், தொழில்களின் சிறப்பு, படை எவ்வளவு அவசியம், ஓர் அரசன் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் எவை என்று இந்தப் பகுதியில் தெளிவாகக் கூறுகிறார்.
Remove ads
10 அதிகாரங்கள் கொண்ட நான்காவது பகுதி "அந்தணரியல்" ஆகும். இது துறவறம் பற்றிக் கூறும் பகுதி ஆகும். இதில் துறவிகளின் இயல்பு, அவர்களுக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம், அவர்களுக்கு இருக்கக் கூடாத குணங்கள்(வெஃகாமை, வெகுளாமை, இன்னா செய்யாமை போன்றவை), அவர்கள் செய்ய வேண்டியவை(தவம், துறவு) ஆகியவற்றை விளக்குகிறார்.
கடைசிப் பகுதி "மெய்யியல்" ஆகும். இதில் 5 அதிகாரங்கள் உள்ளன. இது மிகவும் நுட்பமானது. ஏனெனில் இது கடவுளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் அத்தியாயம் ஆகும். இதில் உண்மை நிலை(கடவுளை)யை அடைவதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கிறார். கடவுள் தான் உண்மை, மற்றவை எல்லாம் உண்மை அல்ல என்பதால் வ.உ.சி. கடவுளை "மெய்" என்றே அழைக்கிறார். கடவுள் என்பது என்ன, கடவுளைப் புரிந்து கொள்வது எப்படி, உணர்வது எப்படி, அந்த நிலைமையை அடைவது எப்படி என்று படிப்படியாக விளக்குகிறார். இந்தப் பகுதி ஆழ்ந்து படிக்க வேண்டிய பகுதி ஆகும்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads