மோசிகீரனார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மோசிகீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரைச் சேர்ந்தவராகவோ அல்லது தொண்டை நாட்டில் உள்ள மோசூர் என்னுமிடத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவரது பெயரைக் (மோசி + கீரன்) கொண்டு இவர் கீரன் குடியைச் சேர்ந்தவராயிருத்தல் கூடும் என்ற கருத்தும் உள்ளது. சேர மன்னனான தகடூர் எறிந்த இரும்பொறையையும், கொண்கானங் கிழானையும் இவர் பாடியுள்ளார். இவர் பாடியதாக அகநாநூற்றிலும், நற்றிணையிலும் ஒவ்வொரு பாடலும், குறுந்தொகையில் இரண்டு பாடல்களும், புறநானூற்றில் நான்கு பாடல்களும் உள்ளன.
Remove ads
புறம் 50[1] சேரன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசியது
இந்தப் பொறையனின் முரசுக்கு நீராட்டு விழா. விழாவுக்குப் பின் அது மயில் பீலியும், பொன்னால் செய்யப்பட்ட உழிஞைப் பூவும் சூட்டப்பெற்று மீளும். முரசு நீராட்டு விழாவுக்குச் சென்றுவிட்டதால் முரசு வைத்திருந்த கட்டில் வெறுமனே இருந்தது. எண்ணெய் ஊற்றும்போது அதில் எழும்பும் நுரை போல அந்தக் கட்டிலின்மேல் மெத்தை போடப்பட்டிருந்தது. மோசிகீரனார் இந்தப் பொறையனைக் காண வந்தார். நடந்துவந்த களைப்பு. அந்த முரசுக்கட்டிலின் மேல் படுத்து உறங்கிவிட்டார். விழா முடிந்து முரசு திரும்பி வந்தது. கட்டிலின் மேல் அரசன் புலவரைக் கண்டான். தனக்கு மகளிர் வீசும் கவரியை எடுத்துப் புலவருக்கு வீசிக்கொண்டிருந்தான். புலவர் எழுந்து பார்த்தபோது துடித்துப்போனார்.
தவறு செய்த என்னைத் உன் வாளால் இரு துண்டாக்கிப் போடாமல் இவ்வாறு செய்கிறாயே! இந்த உலகில் புகழ் உடையவருக்குத்தான் மறுமையில் உயர்நிலை உலகம் கிட்டும் என்று முன்னோர் கூறியதைப் பின்பற்றுகிறாயோ! என்று கூறி வியந்து பாடுகிறார்.
Remove ads
புறம் 154 கொண்கானங்கிழானிடம் பரிசில் வேண்டியது
கடல் தாண்டிச் சென்றவர் அங்குத் தெரிந்தவர் இருந்தால் மட்டுமே குடிக்க நீர் கேட்டுத் தன் தாகத்தைத் தணித்துக்கொள்வர். நான் வாழுமிடத்தில் அரசர் இருந்தாலும் அவரிடம் நான் சென்று எதுவும் கேட்கமாட்டேன். நீ எனக்குத் தெரிந்தவன் ஆகையால் உன்னிடம் வந்து பரிசு கேட்கிறேன். நீ கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உன் கொடிப்படையின் துணி போல அருவி பொங்கி வழியும் உன் கொண்கான மலையைப் பாடுவேன். அது எனக்கு எளிது என்கிறார் புலவர்.
Remove ads
புறம் 155 கொண்கானங் கிழானிடம் பாணனை ஆற்றுப்படுத்தியது
பாணன் ஒருவன் தன் சீறியாழைக் கக்கத்தில் தழுவிக்கொண்டு என்னை உணர்ந்து என் துன்பத்தைப் போக்குபவர் யார் என்று இந்தப் புலவரைக் கேட்டான்.
நெருஞ்சிப் பூ எப்போதும் சூரியனை எதிர்நோக்கிக்கொண்டே இருக்கும். (தாமரைப் பூவைப் போல) அதுபோலக் கொண்கானங் கிழான் புலவரின் வறுமையைப் போக்கி அவர்களின் கொள்கலனை நிரப்புவதற்காக எதிர்பார்த்துகொண்டே இருக்கிறான் என்கிறார் புலவர்.
புறம் 156 கொண்கானங் கிழான் இயல்பு
பிற அரசர்களின் குன்றம் ஒரே ஒரு பெருமையை மட்டுந்தான் கொண்டிருக்கும். கொண்கானங் கிழானின் குன்றம் இரண்டு பெருமைகளைக் கொண்டது. ஒன்று அங்குச் சென்ற இரவலர் தன் வறுமை நீங்கி அங்கேயே தங்கிவிடுவர். மற்றொன்று பிற அரசர்களின் திறைப்பொருள் அங்கு வந்து குவிந்துகொண்டே இருக்கும்.
புறம் 186 பொருண்மொழிக்காஞ்சி
உண்மையை விளம்புவது பொருண்மொழி.
பாடல்
நெல்லும் உயிர் அன்றே, நீரும் உயிர் அன்றே,
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்,
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே.
செய்தி
ஒருவரது உடலுக்கு உயிரைத் தருவது நெல்லும் நீருமாக இருக்கலாம். ஆனால் உலகில் மலரும் மக்களுக்கு மன்னன்தான் உயிர். வேலை வைத்துக்கொண்டு போரில் ஈடுபடும் மன்னன் தான்தான் மக்களுக்கு உயிர் என்பதை உணர்ந்துகொள்வது அவனது கடமையாகும்.
Remove ads
அகம் 392 குறிஞ்சி
பழந்தமிழ்
- என்னும் தண்டும் ஆயின் = தண்டிப்பதுபோல் என்னையும் கெஞ்சுவானாயின்
- உய்க்கம் = விரும்பி வந்த பெண்ணைத் தன் பண்பிற்கு அப்பாற்பட்ட நிலையில் புணர்ந்து அவளைக் கெடுத்த ஆணின் மனவருத்தம்.
- வீழ்பிடி = களிறுகளைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் பெண்யானை. இதன் பிடியில் வீழ்ந்து அதனைக் கெடுத்த களிறு பாகனிடம் சிக்கிக்கொண்டு பாகன் தந்த குளகுத் தழையை உண்ணாமல் தவிப்பது ஒருவகை 'உயக்கம்'.
- ஒல் இனி வாழி தோழி = தோழி வாழி இனிப் பொறுத்துக்கொள்.
நன்னன்
பகைவர் தாக்கியபோது, படையினர் தாக்குப்பிடிக்க முடியாமல் கலங்கியபோது, மன்னன் தான் கோட்டைக்குள் இருப்பதை விரும்பாமல் தானே போர்களத்துக்கு வந்து பகைவரைத் தடுத்து நிறுத்தினான். இதனால் இவனை மக்கள் 'கான்அமர் நன்னன்' என்று போற்றினர்.
நன்னனைப் போலத் தலைவன் உனக்குப் புணையாக இருப்பான். அவனை நம்பி உன்னை அவனுக்குத் தா என்று தலைவியைத் தோழி ஆற்றுப்படுத்துகிறாள்.
Remove ads
குறுந்தொகை 59 பாலை - அதலைக் குன்றத்து அரசன்
அதலைக் கோமான் என்பவன் அதலைக் குன்றத்து அரசன்.
அதலைக் குன்றத்து ஆழமான சுனையில் பூத்த குவளை போன்ற முகத்தில் குளவிப் பூவின் மணம் கமழும் உன் நெற்றி 'தவ்' என்னும்படி உன்னை அவர் மறக்கமாட்டார் - என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
குறந்தொகை பாலை - ஆய் அரசனின் பொதியில்
ஆய் அரசன் ஆட்சிக்கு உட்பட்டது பொதியமலை.
பொதியமலையில் பூத்த வேங்கைப் பூ மணமும், காந்தள் பூ மணமும் தலைவி மேனியில் கமழ்கிறதாம். அவள் அங்குள்ள சுனையில் பூத்த ஆம்பல் மலரைக் காட்டிலும் குளுமையானவளாம்.
அவளைத் தழுவியவன் சற்றே கையை எடுத்துவிட்டு மீண்டும் தழுவியபோது அவள் மேனி வியர்த்துக் கிடந்ததாம். வியர்வைக்குக் காரணம் 'ஏன் கையை எடுத்தாய்' என்று அவள் ஊடியதுதானாம்.
நற்றிணை 342 நெய்தல்
தன் சென்னியை(தலையை)த் தலைவியின் காலில் வைப்பேன். அவள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்கிறான் தலைவன்.
அவள் ஏற்காவிட்டால், குதிரை என்று எண்ணிக்கொண்டு மடல் குதிரை மேல் வருவேன் என்றும் கூறுகிறான்.
இவ்வாறு தலைவன் சொல்வதைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads