ரஜௌரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரஜௌரி, இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். இந்த நகரம் 33.38°N 74.3°E இடத்தில் அமைந்துள்ளது.[1] இங்கு வாழ்வோரில் முஸ்லிம்கள் 55 விழுக்காடு ஆவார். இந்துக்கள் 42 விழுக்காடும், சீக்கியர்கள் 2.4 விழுக்காடும் ஆவார்.[2]
ரஜௌரி நகர், ஸ்ரீநகரிலிருந்து 155 கிலோமீற்றர் தூரத்திலும், ஜம்மு நகரில் இருந்து 150 கிலோமீற்றர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நகரில் பாபா குலாம் ஷா பாட்ஷா பல்கலைக்கழகம் காணப்படுகின்றது. பிரபல சீக்கிய தளபதி பண்டா சிங் பகதூர் இந் நகரைச் சேர்ந்தவர் ஆவார்.

Remove ads
வரலாறு
1813 ஆம் ஆண்டில் சீக்கிய பேரரசின் மகாராஜா ரஞ்சித் சிங்கிற்காக சம்முவைச் சேர்ந்த குலாப் சிங் என்பவர் ராஜா அகார் உல்லா கான் என்பவரை தோற்கடித்து ரஜௌரியைக் கைப்பற்றினார்.[3] இதற்கு பின்னர் ரஜௌரி சீக்கிய பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. ரஜௌரியின் பகுதிகள் ராகீம் உல்லா கானுக்கும் (அகர் உல்லா கானின் அரை சகோதரர்), குலாப் சிங்குக்கும் வழங்கப்பட்டன.[4]
முதல் ஆங்கிலோ-சீக்கியப் போர் மற்றும் அமிர்தசரஸ் உடன்படிக்கை (1846) ஆகியவற்றைத் தொடர்ந்து ரவி நதிக்கும் சிந்து நதிக்கும் இடையிலான அனைத்து பிரதேசங்களும் குலாப் சிங்குக்கு அளிக்கப்பட்டன. மேலும் அவர் சம்மு-காஷ்மீரின் சுதந்திர மகாராஜாவாக அங்கீகரிக்கப்பட்டார். இதனால் ரஜௌரி, சம்மு-காஷ்மீர் சுதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது.[5] குலாப் சிங் ரஜௌரி என்ற பெயரை ராம்பூர் என்று மாற்றினார். அவர் 1856 ஆம் ஆண்டு வரை ரஜௌரியின் ஆளுநராக மியான் ஹாத்துவை நியமித்தார்[6]. ராஜோரி நகரத்திற்கு அருகிலேயே தன்னா நல்லாவுக்கு இடையில் ஒரு அற்புதமான கோவிலை மியான் ஹத்து கட்டினார். தனிதர் கிராமத்தில் ராஜோரி கோட்டையையும் கட்டினார். [சான்று தேவை]
மியான் ஹாத்துக்குப் பின்னர் ரஜௌரி ஒரு தாலுகாவாக மாற்றப்பட்டு பீம்பர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டில் இந்த தாலுகா பீம்பரில் இருந்து பிரிக்கப்பட்டு ரியாசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.[5]
முதல் இந்திய - பாக்கித்தான் போருக்கு பிறகு ராஜௌரி மற்றும் ரியாசி தாலுகாக்கள் பிரிக்கப்பட்டன. ராஜௌரி தாலுகா, பூஞ்ச் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு பூஞ்ச்-ராஜௌரி மாவட்டமாக உருவானது.[5] ரியாசி தாலுகா உதம்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
1968 ஆம் ஆண்டு சனவரி 1 இல் இரண்டு தாலுகாக்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன. இதன் விளைவாக மாவட்டத்திற்கு ரஜௌரி மாவட்டம் என்று பெயரிடப்பட்டது.[5]
2006 ஆம் ஆண்டு ரியாசி தாலுகா தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு ரியாசி மாவட்டம் உருவானது. தற்போதைய ரஜௌரி மாவட்டம் 1947 ஆண்டு ரஜௌரி தாலுகாவை உள்ளடக்கியது.
Remove ads
காலநிலை
ராஜௌரியின் காலநிலை சுற்றியுள்ள மற்ற சமவெளிகளை விட சற்று குளிரானது. குறுகிய இனிமையான கோடை காலத்தை கொண்டது. கோடை வெப்பநிலை பொதுவாக 41 பாகைக்கு மேற்படாது. குளிர்காலம் குளிர்ச்சியாகவும் காணப்படும். பனிப்பொழிவு மிகக் குறைவாக நிகழும். 2012 ஆம் ஆண்டு திசம்பர் போன்ற குளிர்ந்த மாதங்களில் ஏற்படக்கூடும். ஈரப்பதமான மாதங்களின் சராசரி மழைவீழ்ச்சி 769 மில்லிமீற்றர் (26.3 அங்குலம்) ஆகும். கோடையின் சராசரி வெப்பநிலை 29 °C ஆகவும், குளிர்காலத்தின் சராசரி வெப்பநிலை 16 °C ஆகவும் காணப்படும்.[7]
Remove ads
புள்ளிவிபரங்கள்
2011 ஆம் ஆண்டு சனத் தொகை கணக்கெடுப்பின்படி[8] ரஜௌரி நகரின் மக்கட்தொகை 37,552 ஆகவும், நகராட்சி எல்லைக்குள் மக்கட் தொகை 41,552 ஆகவும் இருந்தது. சனத் தொகையில் 57% வீதமானோர் ஆண்களும், 43% வீதமானோர் பெண்களும் ஆவார்கள். ராஜௌரி நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 77% ஆக காணப்பட்டது. இது தேசிய சராசரியான 75.5% ஐ விட அதிகமாகும். ஆண்களில் கல்வியறிவு 83% விகிதமும், பெண்களின் கல்வியறிவு 68% விகிதமும் ஆகும். மக்கட் தொகையில் 12% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள். மக்கள் பெரும்பாலும் குஜ்ஜார்களும் பஹாரிகளும் ஆவார்கள் .
சனத் தொகையில் 55%, வீதமானோர் முஸ்லிம்களும், 42% வீதமானோர் இந்துக்களும், 2.4% வீதமானோர் சீக்கியர்களுமாக காணப்பட்டனர்.[9]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads