லக்சம்பர்க் படையெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லக்சம்பர்க் படையெடுப்பு (Invasion of Luxemburg ) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு படையெடுப்பு. மே 10, 1940ல் நாசி ஜெர்மனி லக்சம்பர்க் நகரைத் தாக்கிக் கைப்பற்றியது.
செப்டம்பர் 1, 1939ல் ஜெர்மானியப் படைகள் போலந்தைத் தாக்கியதால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. போலந்தைக் கைப்பற்றிய பிறகு ஜெர்மனி அடுத்து மேற்குத் திசையில் தாக்கத் தயாரானது. இத்தாக்குதலை எதிர்பார்த்து நேச நாடுகள் பிரான்சு-ஜெர்மானிய எல்லையில் தயார் நிலையில் இருந்தது. பிரான்சின் மீதான ஜெர்மானியத் தாக்குதல் மே 10, 1940ல் தொடங்கியது. பிரான்சின் மீது நேரடியாகவும் பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் வழியாகவும் இருமுனைகளில் ஜெர்மானியப் படைகள் தாக்கின. லக்சம்பர்கின் பெரிய டச்சி என்ற அதிகாரப்பூர்வ பெயருடைய லக்சம்பர்க் நாடு மிகச் சிறியது. லக்சம்பர்க் நகரமும் அதனை சுற்றியிருந்த சில பகுதிகள் மட்டுமே இதில் உள்ளன. 1867 முதல் லக்சம்பர்க் எந்த ஐரோப்பிய போர்களிலும் ஈடுபடாமல் நடுநிலை வகித்து வந்தது. இரண்டாம் உலகப்போர் மூளும் என்று எதிரிபார்க்கப் பட்டதால், இரு தரப்பினரையும் கோபப்படுத்தாமல் இருக்க கவனத்துடன் செயல்பட்டது. ஆனால் ஜெர்மனி லக்சம்பர்கின் நடுநிலையை பொருட்படுத்தாமல் அதனைத் தாக்கக்கூடுமென்ற அச்சத்தால் ஜெர்மானிய எல்லையில் சாலைகளின் குறுக்கே இரும்புக் கதவுகளுடனான கான்கிரீட் தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் ஜெர்மானியப் படைபலத்துடன் ஒப்பிடுகையில் லக்சம்பர்கின் பாதுகாவல் படைகள் சொற்பமானவையே. ஜெர்மனி லக்சம்பர்கை தாக்கினால் அவற்றால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை அனைவரும் உணர்ந்திருந்த்னர்.
மே 10ம் தேதி அதிகாலையில் ஜெர்மானியப்படைகள் லக்சம்பர்க் எல்லையைக் கடந்தன. லக்சம்பர்கில் குடியிருந்த ஜெர்மானியர்கள் பலர் அவர்களுக்கு உதவி செய்தனர். ஜெர்மானியப் படைகளுக்குப் பெரிதாக ஒன்றும் எதிர்ப்பு ஏற்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாலங்கள் தகர்க்கப்பட்டிருந்தன, சில சாலைகளில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆனால் லக்சம்பர்கின் தன்னார்வலர் ராணுவம் பாசறைகளை விட்டு வெளியேறாமல் இருந்து விட்டது. லக்சம்பர்க் காவல் துறையினர் மட்டும் சிறிது நேரம் ஜெர்மானியப் படைகளை எதிர்த்து சண்டையிட்டனர். அவர்களை எளிதில் முறியடித்து முன்னேறிய ஜெர்மானியர்கள் ஒரே நாளில் லக்சம்பர்கின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்தனர். பிரான்சின் சில படைப்பிரிவுகள் லக்சம்பர்க் எல்லையைக் கடந்து ஜெர்மானியப் படைகளை நோட்டம் பார்க்க வந்தன. ஆனால் சிறிது நேரதுக்குப் பின் அவையும் பிரான்சிற்குத் திரும்பி சென்றுவிட்டன. மே 10 இரவுக்குள் லக்சம்பர்க் ஜெர்மானியர் வசமானது. லக்சம்பர்கின் அரசாங்கமும், நாட்டுத் தலைவியான பெரிய டச்சஸ் சார்லட் பெருமாட்டியும் அவரது குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேறினர். முதலில் பிரான்சிற்கும் பின்னர் கனடாவுக்கும் இடம் பெயர்ந்து லக்சம்பர்கின் நாடு கடந்த அரசாங்கத்தை நிறுவி நாசி ஜெர்மனியை எதிர்த்தனர். மே 10, 1940 முதல் செப்டம்பர் 1944 வரை லக்சம்பர்க் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்தது.
Remove ads
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads