அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா
தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள விலங்கியல் பூங்கா From Wikipedia, the free encyclopedia
Remove ads
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா (Arignar Anna Zoological Park) என்பது வண்டலூர் உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டின் வண்டலூரில் அமைந்துள்ள ஒரு விலங்கியல் பூங்கா ஆகும். இந்தப் பூங்கா தமிழ்நாட்டின் சென்னையின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சென்னை மத்தியத் தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 31 கிலோமீட்டர் (19 மைல்), சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த விலங்குக்காட்சிச் சாலை 1855 இல் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்காவாகும். இப்பூங்கா, மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[4] சுமார் 92.45-ஹெக்டேர் (228.4-ஏக்கர்) பரப்பளவில் மீட்பு மற்றும் மறுவாழ்வு பகுதி உட்பட 602 ஹெக்டேர் (1,490 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ள இந்தப் பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவாகும். விலங்குக்காட்சிசாலையில் 1,265 ஏக்கர் (512 ஹெக்டேர்) பரப்பளவில் 2,553 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி, பூங்காவில் சுமார் 1,500 காட்டு இனங்கள் உள்ளன. இதில் 46 அழிந்து வரும் உயிரினங்கள் உட்பட, இதன் 160 சிற்றினங்கள் பாதுகாப்புப் பகுதிகளில் உள்ளன.[5] 2010ஆம் ஆண்டு நிலவரப்படி, பூங்காவில் சுமார் 47 வகையான பாலூட்டிகள், 63 வகையான பறவைகள், 31 வகையான ஊர்வன, 5 வகையான நீர்நில வாழ்வன, 28 வகையான மீன்கள் மற்றும் 10 வகையான பூச்சிகள் இருந்தன.[6] இந்தப் பூங்கா, மாநிலத்தின் விலங்கினங்களின் களஞ்சியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், முதுமலை தேசியப் பூங்காவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது வனவிலங்கு சரணாலயம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.[7]
Remove ads
வரலாறு

1854ஆம் ஆண்டில், சென்னை நகரின் முதல் உயிரியல் பூங்கா பாந்தியன் (அருங்காட்சியகம்) வளாகத்தில் ஒரு சிறுத்தை மற்றும் புலியுடன் தொடங்கியது.[8] இது தொலைதூர இடங்களில் உள்ள மக்களை ஈர்த்தது. அப்போதைய சென்னை அரசு மத்திய அருங்காட்சியகத்தின் இயக்குனரான எட்வர்ட் கிரீன் பால்போர், வாரிசு இல்லாமல் இருந்த கர்நாடக நவாப் குலாம் முகம்மது கவுசு கானை வற்புறுத்தி நவாப்பின் முழு விலங்கு சேகரிப்பையும் அருங்காட்சியகத்திற்கு வழங்குமாறு வற்புறுத்தி பெற்றார்.[9] இதன் காரணமாக பெருந்திரளான மக்கள் இந்த அருங்காட்சியகத்தைக் காணவந்தனர்.
1855இல் மெட்ராஸ் உயிரியல் பூங்காவின் மையமாக இது மாறியது. பால்போர் அருங்காட்சியக வளாகத்தில் விலங்குக் காட்சிசாலையைத் தொடங்கினாலும், ஒரு ஆண்டு கழித்தே பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உட்பட 300இற்கும் மேற்பட்ட விலங்குகள் காட்சிப்படுத்தப்பட்டன.[9] இது பின்னர் சென்னை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டது.
1861 இல் பூங்கா நகரில் உள்ள சென்னை மத்திய தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மக்கள் பூங்காவிற்கு மாற்றப்பட்டது. நகராட்சி விலங்கியல் பூங்கா 116 ஏக்கர் (47 ஹெக்டேர்) பூங்காவின் ஒரு முனையை ஆக்கிரமித்து பொதுமக்கள் பார்வைக்கு இலவசமாக திறக்கப்பட்டது.[10][11]
1975ஆம் ஆண்டில் விலங்குக்காட்சிசாலையை இப்பகுதியில் விரிவுபடுத்த இடவசதி இல்லா காரணத்தினால் முடியவில்லை. மேலும் நகரத்தின் போக்குவரத்து நெரிசல் காரணமாக இட நெருக்கடிகள் மற்றும் அதிகரித்த ஒலி மாசுபாடு காரணமாக விலங்குக்காட்சி சாலையினை நகரத்திற்கு வெளியே மாற்ற வேண்டியிருந்தது. எனவே விலங்குக்காட்சிசாலையில் உள்ள விலங்குகளை நல்ல இடவசதியுடன் பராமரிக்க ஏற்றவகையில் 1976இல் திட்டமிடப்பட்டது. 1976ஆம் ஆண்டில், தமிழ்நாடு வனத்துறை தற்போதைய உயிரியல் பூங்காவை உருவாக்க நகரின் புறநகரில் உள்ள வண்டலூர் ரிசர்வ் வனப்பகுதியில் 1265ஏக்கர் நிலத்தினை ஒதுக்கியது. இது இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மிகப்பெரிய விலங்கியல் பூங்காவாகும்.[12][13][14] உலகில் உள்ள மிகப்பெரிய உயிரியக் காட்சிச்சாலைகளுள் இதுவும் ஒன்று.[15]
1979ஆம் ஆண்டு 750 இலட்சம் செலவில் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் புதிய வளாகத்தில் உள்ள விலங்குக்காட்சிசாலையானது பெரும்பாலான பணிகள் நிறைவடைந்தபோது, 24 சூலை 1985 அன்று அப்போதைய தமிழக முதல்வர் எம். ஜி. ஆரால் அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. ஆரம்பத்தில், இப்பகுதி ஒரு புதர்க்காடு தவிர வேறொன்றுமில்லை, மரங்கள் எதுவும் இல்லை. விலங்குக்காட்சிசாலையின் அதிகாரிகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல்வேறு மரங்களின் விதைகளை அண்டை பகுதிகளிலிருந்து சேகரித்து விலங்குக்காட்சிசாலைப் பகுதியை காடுகளாக மாற்றினர்.[11] 2001ஆம் ஆண்டில், பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட வன விலங்குகளுக்கான மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை உருவாக்க பூங்காவிற்கு அடுத்துள்ள 92.45 எக்டேர்கள் (228.4 ஏக்கர்கள்) நிலம் கையகப்படுத்தப்பட்டது இதனால் பூங்காவின் பரப்பானது 602 எக்டேர்கள் (1,490 ஏக்கர்கள்) ஆக உயர்ந்தது.
1955ஆம் ஆண்டில், விலங்குக்காட்சிசாலையின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, முதல் அகில இந்திய உயிரியல் பூங்கா கண்காணிப்பாளர்கள் மாநாட்டை நடத்தியது.[16] தற்பொழுது இந்த விலங்குக்காட்சிசாலை தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவாக அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்று அழைக்கப்படுகிறது.

Remove ads
விலங்கியல் அருங்காட்சியகம்
பூச்சிகள், தாவரங்கள், தாதுக்கள் மற்றும் பிற பொருட்கள் பற்றிய தகவல்களை வழங்கும் வன அருங்காட்சியகம் நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads