விண்கலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விண்வெளிப் பயணத்திற்குப் பயன்படும் ஒரு கலன், வாகனம் அல்லது எந்திரம் விண்கலம் (Spacecraft) எனப்படும். விண்கலங்கள் பல்வேறு முக்கிய பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தொலைத் தொடர்பு, புவி அவதானிப்பு, வானிலை ஆய்வு, தெரிமுறை செலுத்து நெறி, கோள்கள் ஆய்வு மற்றும் மனிதர்களையும் சரக்குகளையும் விண்வெளிக்கு அனுப்பவும் இவை பயன்படுகின்றன.


சுற்றுப்பாதை விண்கலங்கள் மீள்பயன்பாட்டுக்குகந்ததாகவும் இருக்கலாம்; பூமிக்குத் திரும்பிவரும் முறையைப் பொறுத்து விண்கலங்கள் இறக்கையற்ற விண்பெட்டகம் மற்றும் இறக்கையுடைய விண்ணூர்தி என வகைப்படுத்தப்படுகிறது.
தற்காலத்தில் ஒருசில நாடுகளே விண்பறப்புச் செயல்திறனைப் பெற்றுள்ளன: ருசியா (ருசிய மத்திய விண்வெளி முகமை), அமெரிக்கா (நாசா, அமெரிக்க வான்படை, ஸ்பேஸ்-எக்சு (இது ஒரு தனியார் நிறுவனம்)), ஐரோப்பிய ஒன்றியம் (ஐரோப்பிய விண்வெளி முகமை), சீன மக்கள் குடியரசு (சீன தேசிய விண்வெளி நிர்வாகம்), யப்பான் (யப்பானிய விண்வெளி ஆய்வு முகமை) மற்றும் இந்தியா (இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு). 2012 நிலவரப்படி அமெரிக்கா, ருசியா மற்றும் சீனா விண்பறப்புச் செயல்திறனை செய்துகாட்டியுள்ளன.
விண்கலம் மற்றும் விண்வெளிப் பறப்பு ஆகியவை அறிவியல் புனைவுகளில் பெரிதும் மையக்கருத்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
Remove ads

மனிதரால் ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இசுப்புட்னிக் 1 (Sputnik 1) ஆகும். அக்டோபர் 4, 1957 - அன்று சோவியத் யூனியனால் தாழ்நிலை புவிசுற்றுப்பாதைக்கு செலுத்தப்பட்டது. இசுப்புட்னிக் ஏவல் ஒரு தனித்த நிகழ்வாக இருப்பினும் மனித வரலாற்றில் அது ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும். விண்வெளி யுகம் (Space Age) என்று அறியப்படுகின்ற அதி தீவிரமான வளர்ச்சி கண்ட காலத்துக்கு இது முதல்படியாக அமைந்தது [1][2]. இக்காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்ப, இராணுவ மேம்பாடு மற்றும் ஆய்வுகள் பெரும் முக்கியத்துவம் பெற்றன. விண்வெளி தொழில்நுட்பத்தின் முதல் படியாக அமைந்ததோடல்லாமல், அதன் சுற்றப்பாதை மாறுபாடுகளை வைத்து வளிமண்டலத்தின் மேல் படலங்களின் அடர்த்தி அளவிடப்பட்டது. மேலும், அயனமண்டலத்தில் ரேடியோ அலைகளின் பரவல் பற்றிய தரவுகளையும் பூமிக்கு அனுப்பி வைத்தது. இந்த செயற்கைக்கோள் 29,000 கி.மீ./மணி வேகத்தில் பயணித்தது. புவியை 96.2 நிமிடங்களுக்கு ஒருமுறை சுற்றிவந்தது. 20.005 மற்றும் 40.002 MHz அலைவரிசைகளில் ரேடியோ சமிக்ஞைகளை வெளியிட்டது.
இசுப்புட்னிக் 1 செயற்கைக்கோள் புவியை சுற்றிவந்த முதல் விண்கலமாக இருப்பினும், அதற்கு முன்னரே மனிதர் செலுத்திய பல கலங்கள் 100 கி.மீ. உயரத்தை எட்டியிருக்கின்றன. பன்னாட்டு வானூர்தியியல் கூட்டமைப்பு விதிமுறைகளின்படி, 100 கி.மீ. உயரத்தை எட்டிய கலம் விண்வெளியில் பயணித்தது என்று கொள்ளப்படும். இந்த 100 கி.மீ. எல்லை, கார்மன் கோடு (Karman Line) என்று அழைக்கப்படுகிறது. அவற்றுள் முக்கியமாக 1940-களில் வி-2 ஏவுகணைகளின் சோதனை ஏவுதல்களில் பல 100 கி.மீ. எல்லையை தாண்டியிருக்கின்றன.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads