சீனா
கிழக்காசிய நாடு From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீனா (China)[i] கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அதிகாரபூர்வமாக சீன மக்கள் குடியரசு (People's Republic of China)[j] என்று அழைக்கப்படுகிறது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் இந்தியாவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இதுவாகும். உலக மக்கள் தொகையில் இது 17.4% ஆகும். ஐந்து நேர வலயங்களுக்குச் சமமாக சீனா விரிவடைந்துள்ளது. 14 நாடுகளுடன் நில எல்லைகளைக் கொண்டுள்ளது.[k] கிட்டத்தட்ட 96 இலட்சம் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவுடன் மொத்த நிலப்பரப்பளவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடு இதுவாகும்.[l] இந்நாடானது 33 மாகாண நிலைப் பிரிவுகள், 22 மாகாணங்கள்,[m] ஐந்து சுயாட்சிப் பகுதிகள், நான்கு மாநகராட்சிகள் மற்றும் இரண்டு பகுதியளவு சுயாட்சியுடைய சிறப்பு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பெய்சிங் இந்நாட்டின் தலைநகரம் ஆகும். சாங்காய் நகர்ப்புறப் பரப்பளவின் அடிப்படையில் மிக அதிக மக்கள் தொகையுடைய நகரமாகவும், நாட்டின் மிகப் பெரிய நிதி மையமாகவும் உள்ளது.
நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றாக சீனா கருதப்படுகிறது. இந்நாட்டிற்கு முதல் மனிதக் குடியிருப்பாளர்கள் பழைய கற்காலத்தின் போது வருகை புரிந்தனர். பொ. ஊ. மு. 2-ஆவது ஆயிரமாண்டின் பிந்தைய பகுதி வாக்கில் மஞ்சள் ஆற்று வடிநிலத்தில் தொடக்க கால அரசமரபு நாடுகள் உருவாயின. பொ. ஊ. மு. 8 முதல் 3-ஆம் நூற்றாண்டுகளானவை சவு அரசமரபின் அதிகாரம் சிதைவதைக் கண்டன. இதனுடன் நிர்வாகம் மற்றும் இராணுவத் தொழில்நுட்பங்கள், இலக்கியம், தத்துவம் மற்றும் வரலாற்றியல் ஆகியவற்றின் தோற்றமும் நடைபெற்றது. பொ. ஊ. மு. 221-இல் ஒரு பேரரசருக்குக் கீழ் சீனா இணைக்கப்பட்டது. சின், ஆன், தாங், யுவான், மிங், மற்றும் சிங் உள்ளிட்ட ஏகாதிபத்திய அரசமரபுகளின் 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை இது தொடங்கி வைத்தது. வெடிமருந்து மற்றும் காகிதத்தின் கண்டுபிடிப்பு, பட்டுப் பாதையின் நிறுவல், சீனப் பெருஞ் சுவர் கட்டமைக்கப்பட்டது ஆகியவற்றுடன் சீனப் பண்பாடு செழித்து வளர்ந்தது. இதன் அண்டை நாடுகள் மற்றும் அதைத் தாண்டி இருந்த நிலங்களின் மீதும் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. எனினும், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நியாயமற்ற ஒரு தொடர்ச்சியான ஒப்பந்தங்களால் பல்வேறு ஐரோப்பிய சக்திகளுக்கு சீனா நாட்டின் பகுதிகளை விட்டுக் கொடுக்கத் தொடங்கியது.
சிங் சீனாவானது வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த தசாப்தங்களுக்குப் பிறகு சீனப் புரட்சியானது சிங் அரசமரபு மற்றும் முடியாட்சியைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தது. அடுத்த ஆண்டில் சீனக் குடியரசு நிறுவப்பட்டது. தோற்ற நிலையில் இருந்த முதல் சீனக் குடியரசின் கீழ் நாடானது நிலையற்றதாக இருந்தது. போர்ப் பிரபுக்களின் சகாப்தத்தின் போது இறுதியாகச் சிதைவடைந்தது. போர்ப் பிரபு சகாப்தமானது நாட்டை மீண்டும் ஒன்றிணைக்கக் குவோமின்டாங்கால் நடத்தப்பட்ட வடக்குப் போர்களால் முடித்து வைக்கப்பட்டது. ஆகத்து 1927-இல் சீன உள்நாட்டுப் போர் தொடங்கியது. அப்போது குவோமின்டாங்கின் படைகள் எதிரி சீனப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர்களை ஒழித்துக் கட்டின. குவோமின்டாங்கால் தலைமை தாங்கப்பட்ட சீனாவின் தேசியவாத அரசுக்கு எதிராக அங்கொன்றும் இங்கொன்றுமான சண்டைகளில் சீனப் பொதுவுடைமைக் கட்சியானது ஈடுபடத் தொடங்கியது. 1937-இல் சப்பானியப் பேரரசு இந்நாட்டின் மீது நடத்திய படையெடுப்பைத் தொடர்ந்து சீனப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் குவோமின்டாங் சப்பானியர்களுடன் சண்டையிட இரண்டாவது ஒன்றிணைந்த முனையத்தை உருவாக்கின. இரண்டாம் சீன-சப்பானியப் போரானது இறுதியாக ஒரு சீன வெற்றியில் முடிவடைந்தது. எனினும், சீனப் பொதுவுடைமைக் கட்சியும், குவோமின்டாங்கும் அப்போர் முடிவடைந்த உடனேயே தங்களது உள்நாட்டுப் போரை மீண்டும் தொடர்ந்தன. 1949-இல் புத்தெழுச்சி பெற்ற பொதுவுடைமைவாதிகள் நாட்டின் பெரும்பாலான பகுதி முழுவதும் தங்களது கட்டுப்பாட்டை நிறுவினர். சீன மக்கள் குடியரசை அறிவித்தனர். தேசியவாத அரசாங்கத்தை தைவான் தீவுக்குப் பின் வாங்கும் நிலைக்குத் தள்ளினர். நாடானது பிரிக்கப்பட்டது. சீனாவின் ஒற்றை முறைமையுடைய அரசாங்கத்துக்கு இரு பிரிவினரும் உரிமை கோரினர். நிலச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பொதுவுடைமையை உணர வைக்கும் சீன மக்கள் குடியரசின் மேற்கொண்ட முயற்சியில் அவை தோல்வியடைந்தன. மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சலானது பெரும் சீனப்பஞ்சத்துக்கு பெரும் அளவுக்குப் பொறுப்பாக இருந்தது. இப்பஞ்சத்தில் தசம இலட்சக்கணக்கான சீன மக்கள் இறந்ததுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து வந்த சீனப் பண்பாட்டுப் புரட்சியானது மாவோவிய மக்கள் ஈர்ப்பியலை அம்சமாகக் கொண்டிருந்த சமூக அமளி மற்றும் இடர்ப்படுத்துதலின் ஒரு காலமாகும். சீன-சோவியத் பிரிவைத் தொடர்ந்து 1972-இல் சாங்காய் அறிவிப்பானது ஐக்கிய அமெரிக்காவுடனான உறவு முறைகளை மீண்டும் சுமூகமாக ஆக்கியது. 1978-இல் தொடங்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டை ஒரு பொதுவுடைமைவாதத் திட்டமிட்ட பொருளாதாரத்தில் இருந்து அதிகரித்து வந்த முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தை நோக்கி அழைத்துச் சென்றது. குறிப்பிடத்தக்க அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டியது. 1989-இல் தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பிறகு அதிகரித்த சனநாயகம் மற்றும் தாராளமயமாக்கத்துக்கான இயக்கமானது நின்று போனது.
சீனப் பொதுவுடைமைக் கட்சியால் தலைமை தாங்கப்படும் ஓர் ஒரு முக, ஒற்றைக் கட்சி சோசலிசக் குடியரசு சீனாவாகும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் இந்நாடும் ஒன்றாகும். 1971-இல் சீனாவுக்கான ஐநா பிரதிநிதித்துவமானது சீனக் குடியரசில் இருந்து சீன மக்கள் குடியரசுக்கு மாற்றப்பட்டது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, பட்டுப் பாதை நிதியம், புதிய வளர்ச்சி வங்கி, மற்றும் பிராந்திய ஒட்டுமொத்தப் பொருளாதாரக் கூட்டுறவு போன்ற பல பலதரப்பு மற்றும் பிராந்திய அமைப்புகளில் இந்நாடு நிறுவன உறுப்பினராக உள்ளது. பிரிக்ஸ், ஜி-20, ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, மற்றும் கிழக்கு ஆசிய கூட்டமைப்பு ஆகியவற்றில் இந்நாடு ஓர் உறுப்பினராகும். உலகின் பொருளாதாரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ள சீனாவின் பொருளாதாரமானது கொள்வனவு ஆற்றல் சமநிலையின் படி உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாகவும், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் படி இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாகவும், இரண்டாவது செல்வச் செழிப்பு மிக்க நாடாகவும் உள்ளது. சனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சமய சுதந்திரம் ஆகிய அளவீடுகளில் குறைவான தர நிலையையே இந்நாடு கொண்டுள்ளது. மிக வேகமாக வளரும் முதன்மையான பொருளாதாரங்களில் ஒன்றாக இந்நாடு உள்ளது. உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக உள்ளது. மேலும், இரண்டாவது மிகப் பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. சீனா ஓர் அணு ஆயுத சக்தியுடைய நாடாகும். இராணுவ வீரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய இராணுவத்தை இது கொண்டுள்ளது. இரண்டாவது மிகப் பெரிய பாதுகாப்புச் செலவீனத்தையும் இது கொண்டுள்ளது. இது ஓர் உலக வல்லமை ஆகும். ஒரு வளர்ந்து வரும் வல்லரசாக இது குறிப்பிடப்படுகிறது. சீனா அதன் சமையல் பாணி மற்றும் பண்பாட்டுக்காக அறியப்படுகிறது. இந்நாடு 59 யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்களைக் கொண்டுள்ளது. எந்த ஒரு நாடும் கொண்டுள்ள இரண்டாவது மிகப் பெரிய எண்ணிக்கை இதுவாகும்.
Remove ads
பெயர்க் காரணம்

"சீனா" என்ற சொல்லானது ஆங்கிலத்தில் 16-ஆம் நூற்றாண்டில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இக்காலத்தின் போது சீனர்களால் கூட தங்களைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படவில்லை. இச்சொல்லின் தொடக்கமானது போர்த்துக்கேயம், மலாய் மற்றும் பாரசீகத்திலிருந்து இந்திய வரலாற்றில் பயன்படுத்தப்பட்ட சமசுகிருதச் சொல்லான சீனாவுக்குத் தடயமிடப்படுகிறது.[15] போத்துக்கீச நாடுகாண் பயணி துவார்த்தே பர்போசாவின்[n][15] 1516-ஆம் ஆண்டு குறிப்புகளின் 1555-ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஏடனின் மொழி பெயர்ப்பில்[o] "சீனா" தோன்றுகிறது. பர்போசாவின் பயன்பாடானது பாரசீக சின் (چین) என்ற சொல்லிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளது. அச்சொல் பதிலுக்கு சமசுகிருத சீனாவிலிருந்து (चीन) தருவிக்கப்பட்டிருந்தது.[20] சீனா என்ற சொல் முதன் முதலில் தொடக்ககால இந்துப் புனித நூல்களான மகாபாரதம் (பொ. ஊ. மு. 5-ஆம் நூற்றாண்டு) மற்றும் மனுதரும சாத்திரம் (பொ. ஊ. மு. 2-ஆம் நூற்றாண்டு) உள்ளிட்ட நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.[21] சீனா என்ற சொல்லானது சின் அரசமரபின் (221–206 பொ. ஊ. மு.) பெயரிலிருந்து இறுதியாகத் தருவிக்கப்பட்டது என்று 1655-இல் மார்டினோ மார்டினி பரிந்துரைத்தார்.[22][21] இந்திய நூல்களில் இதன் பயன்பாடானது இந்த அரசமரபுக்கு முன்னரே இருந்து வந்துள்ள போதிலும் இந்த விளக்கமானது பல்வேறு ஆதாரங்களில் இன்னும் கொடுக்கப்படுகிறது.[23] சமசுகிருதச் சொல்லின் தொடக்கம் என்பது விவாதத்திற்குரிய ஒன்றாக உள்ளது.[15] எலாங் மற்றும் சிங் அல்லது சு அரசுகளின் பெயர்கள் உள்ளிட்டவை பிற பரிந்துரைகளாக உள்ளன.[21][24]
நவீன நாட்டின் அதிகாரப்பூர்வப் பெயர் "சீன மக்கள் குடியரசு" (எளிய சீனம்: 中华人民共和国; மரபுவழிச் சீனம்: 中華人民共和國; பின்யின்: சோங்குவா ரென்மின் கோங்கேகுவோ) ஆகும். குறுகிய வடிவம் "சீனா" (எளிய சீனம்: 中国; மரபுவழிச் சீனம்: 中國; பின்யின்: சோங்குவோ) ஆகும். சோங் ('நடு') மற்றும் குவோ ('நாடு') ஆகியவற்றிலிருந்து சோங்குவோ (நடு நாடு) உருவாகிறது. இச்சொல்லானது மேற்கு சவு அரசமரபின் கீழ் உருவானது. இதன் அரச குல தனியுரிமை நிலத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது.[p][q] சிங் அரசமரபுக்குக் கீழான நாட்டுக்கான ஓர் அருஞ்சொற் பொருளாக அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இது பயன்படுத்தப்பட்டது.[26] சோங்குவோ என்ற பெயரானது "நடு இராச்சியம்" (ஆங்கிலம்: Middle Kingdom) என்றும் கூட ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுகிறது.[27] தைவான் அல்லது சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளிலிருந்து வேறுபடுத்தி அறியும் போது சீனாவானது சில நேரங்களில் "முதன்மை நிலச் சீனா" அல்லது "முதன்மை நிலம்" என்று குறிப்பிடப்படுகிறது.[28][29][30][31]
Remove ads
வரலாறு
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

தொல்லியல் ஆதாரங்களானவை தொடக்க கால மனித இனத்தவர்கள் சீனாவை 22.50 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்கிரமித்திருந்தனர் என்பதை நிரூபிக்கின்றன.[32] நெருப்பைப் பயன்படுத்திய ஓர் ஓமோ இரெக்டசுவான பீக்கிங் மனிதனின் புதை படிவங்களானவை[33] நிகழ்காலத்திற்கு முன் 6.80 மற்றும் 7.80 இலட்சம் ஆண்டுகளுக்கு இடையில் காலமிடப்படுகின்றன.[34] ஓமோ சேப்பியன்சின் புதை படிவப் பல்லானது (1.25 இலட்சம்- 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் காலமிடப்பட்ட) புயான் குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[35] பொ. ஊ. மு. சுமார் 6,600 -இல் சியாகு,[36] பொ. ஊ. மு. சுமார் 6,000 வாக்கில் தமைதி,[37] பொ. ஊ. மு. 5,800 முதல் 5,400க்கு இடையிலான கால கட்டத்தில் ததிவான் மற்றும் பொ. ஊ. மு. 5,000 ஆண்டுக்குக் காலமிடப்பட்ட பன்போ ஆகிய இடங்களில் சீன ஆதி-எழுத்து முறையானது இருந்தது. சில அறிஞர்கள் சியாகு குறியீடுகள் (பொ. ஊ. மு. 7-ஆம் ஆயிரமாண்டு) தொடக்க கால சீன எழுத்து முறையை உள்ளடக்கியதாகப் பரிந்துரைக்கின்றனர்.[36]
தொடக்க கால அரசமரபு ஆட்சி

பாரம்பரிய சீன வரலாற்றின் படி சியா அரசமரபானது பொ. ஊ. மு. 3-ஆம் ஆயிரமாண்டின் பிந்தைய பகுதியின் போது நிறுவப்பட்டது. சீனாவின் மொத்த அரசியல் வரலாற்றுக்கும் ஆதரவளிக்கப் புரிந்து கொள்ளப்படும் அரசமரபு சுழற்சியின் தொடக்கத்தை இது குறித்தது. நவீன சகாப்தத்தில் சியாவின் வரலாற்றியலானது அதிகரித்து வந்த கூர்ந்து நோக்கலின் கீழ் வந்துள்ளது. சியாவின் தொடக்க காலத்தில் அறியப்பட்ட சான்றானது இவர்களின் வீழ்ச்சிக்குக் கொடுக்கப்பட்ட காலத்துக்கு 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டு இருப்பதும் இதற்கு ஒரு பங்குக் காரணமாகும். 1958-இல் தொடக்க கால வெண்கலக் காலத்தின் போது அமைந்திருந்த எர்லிதோவு பண்பாட்டைச் சேர்ந்த களங்களைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தனர். அவை தற்போது வரலாற்று ரீதியிலான சியாவின் எஞ்சிய பகுதிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், இந்தக் கருத்துரு பொதுவாக நிராகரிக்கப்படுகிறது.[38][39][40] பாரம்பரியமாக சியாவுக்குப் பிறகு வந்த சாங் அரசமரபு சம கால எழுதப்பட்ட பதிவுகள் மற்றும் விவாதத்திற்கு உட்படுத்தப்படாத தொல்லியல் ஆதாரங்கள் ஆகிய இரண்டையும் கொண்டுள்ள தொடக்க கால அரசமரபாக உள்ளது.[41] பொ. ஊ. மு. 11-ஆம் நூற்றாண்டு வரை மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கின் பெரும் பகுதியை சாங் ஆட்சி செய்தனர். இதன் தொடக்க கால ஆதாரமானது அண். 1300 பொ. ஊ. மு. காலமிடப்படுகிறது.[42] அண். 1250 பொ. ஊ. மு. சேர்ந்ததாகக் காலமிடப்படும் ஆரக்கிள் எலும்பு எழுத்து முறையானது பொதுவாக இதை விட இன்னும் பழமையானதாகக் கருதப்படுகிறது.[43][44] சீன எழுத்துக்களின் மிகப் பழைய எழுதப்பட்ட வடிவத்தை இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.[45] நவீன சீன எழுத்துமுறையின் நேரடி மூதாதையர் இந்த எழுத்து முறையாகும்.[46]
சாங் அரசமரபினரை சவு அரசமரபினர் பதவியிலிருந்து தூக்கி எறிந்தனர். சவு பொ. ஊ. மு. 11-ஆம் மற்றும் 5-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஆட்சி செய்தனர். பெங்சியாங் பிரபுக்களால் "தெய்வலோகத்தின் மைந்தனின்" (மன்னன்) மையப்படுத்தப்பட்ட அதிகாரமானது மெதுவாக அழிக்கப்பட்ட போதும் ஆட்சி தொடர்ந்தது. சில வேள் பகுதிகள் இறுதியாகப் பலவீனமடைந்த சவுவில் இருந்து வளர்ச்சியடைந்தன. 300 ஆண்டு கால இளவேனில் மற்றும் இலையுதிர் காலப் பகுதியின் போது ஒருவருடன் ஒருவர் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தனர். பொ. ஊ. மு. 5ஆம்-3-ஆம் நூற்றாண்டுகளில் போரிடும் நாடுகள் காலத்தின் போது ஏழு முதன்மையான சக்தி வாய்ந்த அரசுகள் எஞ்சியிருந்தன.[47]
ஏகாதிபத்திய சீனா
சின் மற்றும் ஆன்

பிற ஆறு அரசுகளை வென்று, சீனாவை ஒன்றிணைத்து, சர்வாதிகாரத்தின் ஆதிக்கம் மிகுந்த ஆட்சியை சின் அரசானது நிறுவியதற்குப் பிறகு பொ. ஊ. மு. 221-இல் போரிடும் நாடுகளின் காலமானது முடிவுக்கு வந்தது. சின் அரசமரபின் பேரரசராக சின் சி ஹுவாங் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார். ஓர் ஒன்றிணைந்த சீனாவின் முதல் பேரரசராக உருவானார். இவர் சின்னின் சட்டவியல் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். சீன எழுத்துக்கள், அளவீடுகள், சாலைகளின் அகலங்கள் மற்றும் பணத்தைத் தரப்படுத்தியதை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். குவாங்ஷியிலிருந்த யூவே பழங்குடியினங்கள், குவாங்டொங் மற்றும் வடக்கு வியட்நாமைக் கூட இவரது அரசமரபானது வென்றது.[48] சின் அரசமரபானது வெறும் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்திருந்தது. முதலாம் பேரரசரின் இறப்பிற்குப் பிறகு சீக்கிரமே வீழ்ச்சியடைந்தது.[49][50]
ஏகாதிபத்திய நூலகமானது எரிக்கப்பட்ட பரவலான கிளர்ச்சிகளைத் தொடர்ந்து{{efn|Owing to Qin Shi Huang's earlier policy involving the "Burning of books and burying of scholars", the destruction of the confiscated copies at Xianyang was an event similar to the [[அலெக்சாந்திரியா நூலகம்|destructions of the அலெக்சாந்திரியா நூலகம் in the west. Even those texts that did survive had to be painstakingly reconstructed from memory, luck, or forgery.[51] The Old Texts of the ஐந்து செவ்வியல் இலக்கியங்கள் were said to have been found hidden in a wall at the Kong residence in Qufu. Mei Ze's "rediscovered" edition of the Book of Documents was Yan Ruoqu|only shown to be a forgery in the Qing dynasty.}} ஆன் அரசமரபானது சீனாவை பொ. ஊ. மு. 206 மற்றும் பொ. ஊ. மு. 220க்கு இடையில் ஆட்சி செய்யத் தோன்றியது. இதன் மக்கள் தொகை மத்தியில் ஒரு பண்பாட்டு அடையாளத்தை உருவாக்கியது. சீனர்கள் இன்றும் ஆன் சீனர் என்றே அழைக்கப்படுகின்றனர். ஆன் சீனர் என்ற இந்தப் பெயரானது இன்றும் நினைவுபடுத்தப்படுகிறது.[49][50] ஆன் அரசமரபினர் பேரரசின் நிலப்பரப்பைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவாக்கினர். நடு ஆசியா, மங்கோலியா, கொரியா, மற்றும் யுன்னான், மற்றும் நன்யுயேவிடமிருந்து குவாங்டோங் மற்றும் வடக்கு வியட்நாமை மீட்டெடுத்தது ஆகியவற்றுக்குக் காரணமான இராணுவப் படையெடுப்புகளை நடத்தினர். நடு ஆசியா மற்றும் சோக்தியானாவில் ஆன் சீனர்களின் ஈடுபாடானது பட்டுப் பாதையின் நில வழியை நிறுவுவதற்கு உதவியது. இந்தியாவுக்கு இமயமலை வழியாக இருந்த முந்தைய பாதையை இடமாற்றம் செய்தது. ஆன் சீனாவானது படிப்படியாக பண்டைக் கால உலகத்தின் மிகப் பெரிய பொருளாதாரமானது.[52] ஆன் சீனர்களின் தொடக்க கால அதிகாரப் பரவலாக்கம் மற்றும் கன்பூசியத்துக்கு ஆதரவாக சின் தத்துவமான சட்டநெறித்துவத்தை அதிகாரப்பூர்வமாகக் கைவிட்டது ஆகியவை நடைபெற்ற போதும் சின் அரசமரபினரின் சட்டநெறித்துவ அமைப்புகள் மற்றும் கொள்கைகளானவை ஆன் அரசாங்கம் மற்றும் அதற்குப் பின் வந்தவர்களாலும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.[53]
மூன்று இராச்சியங்கள், சின், வடக்கு மற்றும் தெற்கு அரசமரபுகள்
ஆன் அரசமரபினரின் முடிவுக்குப் பிறகு மூன்று இராச்சியங்கள் என்று அறியப்படும் சச்சரவுகளின் ஒரு காலமானது தொடர்ந்தது. இதன் முடிவில் வெயி சீக்கிரமே சின் அரசமரபால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். ஒரு வளர்ச்சி சார் குறைபாடுடைய பேரரசர் அரியணைக்கு வந்த போது சின் அரசமரபானது உள்நாட்டுப் போரில் மூழ்கியது. பிறகு ஐந்து காட்டுமிராண்டிகள் கிளர்ச்சி செய்து வடக்கு சீனாவை 16 அரசுகளாக ஆட்சி செய்தனர். சியான்பே இவர்களை வடக்கு வெயி என்ற பெயரில் ஒன்றிணைத்தனர். வடக்கு வெயியின் பேரரசர் சியாவோவென் தனக்கு முன் பதவியிலிருந்தவர்களின் இன ஒதுக்கல் கொள்கைகளை நேர்மாறாக மாற்றினார். தனது குடிமக்கள் மீது ஒரு கடுமையான சீன மயமாக்கலை நடைமுறைப்படுத்தினார். தெற்கே லியு சாங்குக்கு ஆதரவாக சின் அரசமரபினர் பதவி விலகுவதை தளபதி லியு யூ உறுதி செய்தார். இத்தகைய அரசுகளின் வேறுபட்ட பின் வந்த ஆட்சியாளர்களானவர்கள் வடக்கு மற்றும் தெற்கு அரசமரபுகள் என்று அறியப்பட்டனர். இந்த இரு பகுதிகளும் இறுதியாக 581-இல் சுயியால் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.[சான்று தேவை]
சுயி, தாங் மற்றும் சாங்
சீனா முழுவதும் ஆன் அரசமரபினரை மீண்டும் அதிகாரத்திற்கு சுயி கொண்டு வந்தனர். அதன் வேளாண்மை, பொருளாதாரம் மற்றும் ஏகாதிபத்திய தேர்வு அமைப்பைச் சீர்திருத்தினர். பெரும் கால்வாயைக் கட்டமைத்தனர் மற்றும் பௌத்த மதத்திற்குப் புரவலராக விளங்கினர். பொதுப் பணிகளுக்காக வேலையாட்களை இவர்கள் கட்டாயப்படுத்தி சேர்த்தது மற்றும் வடக்கு கொரியாவில் ஒரு தோல்வியடைந்த போர் ஆகியவை பரவலான அமைதியின்மையைத் தூண்டிய போது இவர்கள் சீக்கிரமே வீழ்ச்சியடைந்தனர்.[54][55] தொடர்ந்து வந்து தாங் மற்றும் சாங் அரசமரபுகளின் கீழ் சீனப் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பண்பாடானது ஒரு பொற்காலத்துக்குள் நுழைந்தது.[56] மேற்குப் பகுதிகள் மற்றும் பட்டுப் பாதையின் கட்டுப்பாட்டை தாங் அரசமரபானது தக்க வைத்துக் கொண்டது.[57] பட்டுப் பாதையானது மெசொப்பொத்தேமியா மற்றும் ஆப்பிரிக்காவின் கொம்பு[58] ஆகிய தொலைவிலிருந்த பகுதிகளுக்கும் வணிகர்களைக் கொண்டு வந்தது. தலை நகரமான சங்கான் பல நாடுகளில் இருந்து வந்த மக்களைக் கொண்ட ஒரு நகர்ப்புற மையமாக உருவாகியது. எனினும், இது 8-ஆம் நூற்றாண்டில் அன் லுஷான் கிளர்ச்சியால் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு பலவீனம் அடைந்தது.[59] 907-இல் உள்ளூர் இராணுவ ஆளுநர்கள் நிர்வகிக்க முடியாதவர்களக மாறிய போது தாங் அரசமரபானது முழுவதுமாக சிதைவடைந்தது. 960-இல் சாங் அரசமரபானது பிரிவினைவாத சூழ்நிலையை முடித்து வைத்தது. சாங் மற்றும் லியாவோ அரசமரபுகளுக்கு இடையில் ஒரு சமமான அதிகாரத்துக்கு வழி வகுத்தது. உலக வரலாற்றில் காகிதப் பணத்தை விநியோகித்த முதல் அரசாங்கமும், ஒரு நிரந்தரக் கடற்படையை நிறுவிய முதல் சீன அரசியல் அமைப்பும் சாங் அரசமரபு ஆகும். கடல் வாணிபத்துடன், வளர்ச்சியடைந்த கப்பல் கட்டுமானத் தொழில் துறையால் இந்தக் கடற்படையானது ஆதரவு பெற்றது.[60]
பொ. ஊ. 10-ஆம் மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் சீனாவின் மக்கள் தொகையானது இரு மடங்காகி சுமார் 10 கோடியானது. இதற்கு முதன்மையான காரணம் நடு மற்றும் தெற்கு சீனாவில் நெல் அறுவடையின் விரிவாக்கமும், ஏராளமான உணவு மிகையாக உற்பத்தியானதும் ஆகும். தாங் அரசமரபின் காலத்தின் போது பௌத்த மதத்தின் வளர்ச்சிக்குப் பதிலாக சாங் அரசமரபானது கன்பூசியத்தின் ஒரு புத்தெழுச்சியையும் கூடக் கண்டது.[61] ஒரு செழித்து வளர்ந்த தத்துவம் மற்றும் கலைகளையும் கண்டது. இயற்கை நிலக் காட்சிகள் மற்றும் பீங்கான் ஆகியவை நுட்பங்களின் புதிய நிலைகளுக்குக் கொண்டு வரப்பட்டன.[62] எனினும், சாங் இராணுவத்தின் பலவீனமானது சின் அரசமரபால் கவனித்து வரப்பட்டது. 1127-இல் சின்-சாங் போர்களின் போது சாங்கின் பேரரசர்களான குயிசோங், சின்சோங் மற்றும் தலைநகரான பியான்சிங் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சாங் அரசமரபின் எஞ்சியவர்கள் தெற்கு சீனாவிற்குப் பின்வாங்கினர்.[63]
யுவான்

1205-இல் செங்கிஸ் கானின் மேற்கு சியாவுக்கு எதிரான படையெடுப்புகளுடன் சீனா மீதான மங்கோலியப் படையெடுப்பானது தொடங்கியது.[64] செங்கிஸ் கான் சின் நிலப்பரப்புகள் மீதும் கூடப் படையெடுத்தார்.[65] 1271-இல் செங்கிஸ் கானின் பேரனான மங்கோலியத் தலைவர் குப்லாய் கான் யுவான் அரசமரபை நிறுவினார். 1279-இல் சாங் அரசமரபினரின் கடைசி எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றினார். மங்கோலியப் படையெடுப்புக்கு முன்னர் சாங் சீனாவின் மக்கள் தொகையானது 12 கோடியாக இருந்தது; 1300-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் நேரத்தின் வாக்கில் இது 6 கோடியாகக் குறைந்தது.[66] 1368-இல் சு யுவான்சாங் என்ற பெயருடைய ஒரு விவசாயி யுவான் அரசமரபினரைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தார். கோங்வு பேரரசர் என்ற பெயருடன் மிங் அரசமரபை நிறுவினார். மிங் அரசமரபின் கீழ் சீனா மற்றுமொரு பொற்காலத்தைக் கண்டது. உலகின் வலிமையான கடற்படைகளில் ஒன்றையும், ஒரு செழித்து வந்த கலை மற்றும் பண்பாட்டுக்கு மத்தியில் வளமான மற்றும் செழிப்பான பொருளாதாரத்தையும் உருவாக்கியது. இந்தக் காலகட்டத்தின் போது தான் கடற்படைத் தளபதி செங் கேயால் தலைமை தாங்கப்பட்ட மிங் பொக்கிஷப் பயணங்களானவை இந்தியப் பெருங்கடல் முழுவதும் நடைபெற்றன. கிழக்கு ஆப்பிரிக்காவையும் கூட இவை அடைந்தன.[67]
மிங்
தொடக்க கால மிங் அரசமரபின் போது சீனாவின் தலைநகரமானது நாஞ்சிங்கில் இருந்து பெய்சிங்குக்கு இடமாற்றப்பட்டது. முதலாளித்துவத்தின் தொடக்கத்துடன் வாங் யன்மிங் போன்ற தத்துவவாதிகள் புதிய கன்பூசிய மதத்தை தனிமனிதத்துவம் மற்றும் நான்கு பணிகளுக்கான சமத்துவம் ஆகிய கருத்துருக்களுடன் விரிவாக்கினர்.[68] வரி கொடா இயக்கங்களில் அறிஞர்-அதிகாரி சமூக நிலையானது தொழில் துறை மற்றும் வணிகத்திற்கு ஓர் ஆதரவு விசையாக உருவானது. இவற்றுடன் பஞ்சங்கள் மற்றும் கொரியா மீதான சப்பானியப் படையெடுப்புக்கு (1592-1598) எதிரான தற்காப்பு மற்றும் பிந்தைய சின் ஊடுருவல்கள் ஆகியவை கருவூலத்தைப் பலவீனமாக்கின.[69] 1644-இல் லியு சிச்செங்கால் தலைமை தாங்கப்பட்ட விவசாயக் கிளர்ச்சியாளர்களின் படையினரின் ஒரு கூட்டணியானது பெய்சிங்கைக் கைப்பற்றியது. நகரம் வீழ்ச்சியடைந்த போது சோங்சென் பேரரசர் தற்கொலை செய்து கொண்டார். மஞ்சுக்களின் சிங் அரசமரபானது மிங் அரசமரபின் தளபதியான வு சங்குயியுடன் பிறகு கூட்டணி வைத்து குறுகிய காலத்தில் மட்டுமே நீடித்திருந்த லீயின் சுன் அரசமரபைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தது. பெய்சிங்கின் கட்டுப்பாட்டை இறுதியாகப் பறித்தது. சிங் அரசமரபின் புதிய தலைநகரமாகப் பெய்சிங் உருவானது.[70]
சிங்

1644 முதல் 1912 வரை நீடித்திருந்த சிங் அரசமரபானது சீனாவின் கடைசி ஏகாதிபத்திய அரசமரபாகும். மிங் அரசமரபிடமிருந்து சிங் அரசமரபுக்கு அதிகாரம் கை மாறிய நிகழ்வானது (1618-1683) 2.50 கோடி மக்களின் உயிரைப் பறித்தது. சீனாவின் ஏகாதிபத்திய சக்தியை மீண்டும் நிலை நிறுத்தியது மற்றும் கலைகளின் மற்றுமொரு மலரும் காலத்தைத் தொடங்கி வைத்தது ஆகியவற்றைச் செய்தவர்களாக சிங் அரசமரபினர் கருதப்படுகின்றனர்.[71] தெற்கு மிங் அரசமரபின் முடிவுக்குப் பிறகு சுங்கர் கானரசு மீதான மேற்கொண்ட வெற்றியானது மங்கோலியா, திபெத்து மற்றும் சிஞ்சியாங்கை சிங் பேரரசுடன் இணைத்தது.[72] இதே நேரத்தில், சீனாவின் மக்கள் தொகை வளர்ச்சியானது மீண்டும் தொடங்கி சீக்கிரமே அதிகரிக்கத் தொடங்கியது. நவீன காலத்துக்கு முந்தைய சீனாவின் மக்கள் தொகையானது இரு தூண்டுதல்களைக் கொண்டிருந்தது என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஒன்று சாங் அரசமரபின் காலம் (960-1127) மற்றும் மற்றொன்று சிங் அரசமரபின் காலமாகும் (சுமார் 1700-1830).[73] உயர் சிங் சகாப்தத்தின் வாக்கில் சீனாவானது சாத்தியமான வகையிலே உலகின் மிக வணிக மயமாக்கப்பட்ட நாடாக திகழ்ந்தது. 18-ஆம் நூற்றாண்டின் முடிவில் ஏகாதிபத்திய சீனாவானது ஓர் இரண்டாம் வணிகப் புரட்சியைக் கண்டது.[74] மற்றொரு புறம் வேளாண்மைக்கு மதிப்பளித்தல் மற்றும் வணிகத்தைக் கட்டுப்படுத்துதல் என்ற கொள்கையுடன் சிங் அரசமரபினருக்கு எதிரான மக்கள் உணர்ச்சிகளை ஒடுக்கும் ஒரு பங்குக் காரணத்தால் மையப்படுத்தப்பட்ட சர்வாதிகாரமானது வலிமைப்படுத்தப்பட்டது. தொடக்க சிங் காலத்தின் போது இருந்த ஐசின் கொள்கை போன்றவை மற்றும் இலக்கியவாதிகள் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதைப் போன்ற பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட சித்தாந்தக் கட்டுப்பாடு ஆகியவற்றால் இது நடைபெற்றது. சில சமூக மற்றும் தொழில்நுட்ப மந்த நிலைக்கு இது காரணமானது.[75][76]
சிங் அரசமரபின் வீழ்ச்சி

19-ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் பிரிட்டன் மற்றும் பிரான்சுடனான சீனாவின் அபினிப் போர்கள் சீனா இழப்பீடு வழங்க, ஒப்பந்தத் துறைமுகங்களைத் திறக்க, அயல் நாட்டு நபர்கள் சீன நிலப்பரப்பில் வாழ அனுமதி வழங்கக் காரணமானது. பிரித்தானியர்களுக்கு[77] 1842-இன் நாஞ்சிங் உடன்படிக்கையின் கீழ் ஆங்காங்கை விட்டுக் கொடுக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டது. "சமமற்ற ஒப்பந்தங்கள்" என இதில் முதல் ஒப்பந்தமானது குறிப்பிடப்படுகிறது. முதலாம் சீன சப்பானியப் போரானது (1894-1895) கொரியாவில் சிங் சீனாவின் செல்வாக்கு இழக்கப்பட்டது, மேலும் சீனா சப்பானியருக்குத் தைவானை விட்டுக் கொடுத்தது ஆகியவற்றில் முடிவடைந்தது.[78] சிங் அரசமரபானது உள்நாட்டு அமைதியின்மையிலும் கூட மூழ்கத் தொடங்கியது. இதில் கோடிக்கணக்கான மக்கள் இறந்தனர். குறிப்பாக வெள்ளைத் தாமரைக் கிளர்ச்சி, 1850-கள் மற்றும் 1860-களில் தெற்கு சீனாவை பாழ்படுத்திய தோல்வியடைந்த தைப்பிங் கிளர்ச்சி மற்றும் வடமேற்கில் துங்கன் கிளர்ச்சி (1862-1877) ஆகியவற்றில் மக்கள் இறந்தனர். 1860-களின் சுய-வலிமைப்படுத்தும் இயக்கத்தின் தொடக்க கால வெற்றிக்கு 1880-கள் மற்றும் 1890-களில் அடைந்த ஒரு தொடர்ச்சியான இராணுவத் தோல்விகளானவை இடையூறாக அமைந்தன.[79]
அயல்நாடுகளில் வாழ்ந்த பெரும் சீனர்களின் காலமானது 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. மக்கள் வெளியேறியதால் ஏற்பட்ட இழப்புகளுடன் 1876-79இன் வட சீனப் பஞ்சம் போன்ற சண்டைகள் மற்றும் அழிவுகளும் மக்கள் புலப் பெயர்வுக்குக் காரணமாயின. வட சீனப் பஞ்சத்தில் 90 இலட்சம் முதல் 1.30 வரையிலான மக்கள் இறந்தனர்.[80] ஒரு நவீன அரசியல் சட்ட முடியாட்சியை நிறுவ 1898-இல் ஒரு சீர்திருத்த முன் வரைவைக் குவாங்சு பேரரசர் கொண்டு வர முயற்சித்தார். ஆனால், பேரரசி டோவகர் சிக்சியால் இந்தத் திட்டங்கள் தடைப்படுத்தப்பட்டன. 1899-1901இல் நடத்தப்பட்ட அயல்நாட்டவருக்கு எதிரான, அதிர்ஷ்டமற்ற பாக்சர் கிளர்ச்சியானது சிங் அரசமரபை மேலும் பலவீனமாக்கியது. பிந்தைய சிங் சீர்திருத்தங்கள் என்று அறியப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு திட்டத்திற்கு சிக்சி ஆதரவளித்த போதும், 1911-1912இன் சின்காய் புரட்சியானது சிங் அரசமரபை முடிவுக்குக் கொண்டு வந்து சீனக் குடியரசை நிறுவியது.[81] சிங் அரசமரபின் கடைசிப் பேரரசரான புயி 1912-இல் பதவி விலகினார்.[82]
குடியரசின் நிறுவுதலும், இரண்டாம் உலகப் போரும்
1 சனவரி 1912 அன்று சீனக் குடியரசானது நிறுவப்பட்டது. குவோமின்டாங்கின் சுன் இ சியன் தற்காலிக அதிபராக அறிவிக்கப்பட்டார்.[83] மார்ச்சு 1912-இல் யுவான் ஷிக்காய்க்கு அதிபர் பதவி அளிக்கப்பட்டது. இவர் சிங் அரசமரபின் ஒரு முன்னாள் தளபதி ஆவார். 1915-இல் இவர் தன்னைத் தானே சீனாவின் பேரரசர் என்று அறிவித்துக் கொண்டார். இவரது சொந்த பெயியங் இராணுவத்திடமிருந்து வந்த வலிமையான கண்டனம் மற்றும் எதிர்ப்பின் காரணமாக இவர் பதவி விலகினார். 1916-இல் குடியரசை மீண்டும் நிறுவினார்.[84] 1916-இல் யுவான் ஷிக்காயின் இறப்பிற்குப் பிறகு சீனா அரசியல் ரீதியாகச் சிதைவடைந்தது. பெய்சிங்கை அடிப்படையாகக் கொண்ட அரசாங்கமானது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், உண்மையில் இது சக்தியற்றதாக இருந்தது. இதன் நிலப்பரப்பில் பெரும்பாலானவற்றை பிராந்தியப் போர்ப் பிரபுக்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.[85][86] இந்தக் காலத்தின் இடையில் சீனா முதலாம் உலகப் போரில் பங்கெடுத்தது. எனினும், மே நான்கு இயக்கம் எனும் ஓர் அதிக பாதிப்பை ஏற்படுத்திய வலிமையான கிளர்ச்சியைக் கண்டது.[87]

1920-களின் பிற்பகுதியில் வடக்குப் போர்கள் என்று மொத்தமாக அறியப்படும் ஆற்றல் வாய்ந்த இராணுவ மற்றும் அரசியல் நகர்வுகளின் ஒரு தொடர்ச்சியால் இதன் சொந்தக் கட்டுப்பாட்டின் கீழ் நாட்டை ஒன்றிணைக்க சங் கை செக்கின் கீழான குவோமின்டாங்கால் முடிந்தது.[88][89] குவோமின்டாங் நாட்டின் தலைநகரத்தை நாஞ்சிங்குக்கு மாற்றியது. "அரசியல் பாதுகாப்பைச்" செயல்படுத்தியது. சீனாவை ஒரு நவீன சனநாயக அரசாக மாற்றும் சன் யாட் சென்னின் "மக்களின் மூன்று கொள்கைகள்" என்று குறிப்பிடப்பட்டிருந்த அரசியல் வளர்ச்சியின் ஓர் இடை நிலை இந்த "அரசியல் பாதுகாப்பு" ஆகும்.[90][91] சீனப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் சாங்காயில் இருந்த பிற இடதுசாரிகளை சியாங் வன்முறையுடன் ஒடுக்கியதற்குப் பிறகு 1927-இல் இந்தக் கூட்டணியானது முறிந்த போதும், வடக்குப் படையெடுப்பின் போது குறுகிய காலத்திற்குக் குவோமின்டாங்குடன் சீனப் பொதுவுடைமைக் கட்சி கூட்டணியில் இருந்தது. இம்முறிவானது சீன உள்நாட்டுப் போரின் தொடக்கத்தைக் குறித்தது.[92] ஜியாங்சி மாகாணத்தின் ருயிசின் என்ற இடத்தில் நவம்பர் 1931-இல் சீனப் பொதுவுடைமைக் கட்சியானது நாட்டின் பகுதிகளை சீன சோவியத் குடியரசு (ஜியாங்சி சோவியத்) என்று அறிவித்தது. 1934-இல் குவோமின்டாங்கின் இராணுவங்களால் ஜியாங்சி சோவியத்தானது துடைத்தழிக்கப்பட்டது. சீனப் பொதுவுடைமைக் கட்சி நீண்ட அணிவகுப்பைத் தொடங்கி சென்சி மாகாணத்தின் யனானுக்கு இடத்தை மாற்றிக் கொள்ள இது காரணமானது. 1949-இல் சீன உள்நாட்டுப் போரின் முக்கியமான சண்டை முடிவதற்கு முன்னர் பொதுவுடைமைவாதிகளின் அடிப்படைத் தளமாக யனான் திகழ்ந்தது.
1931-இல் சப்பான் மஞ்சூரியா மீது படையெடுத்து ஆக்கிரமித்துக் கொண்டது. 1937-இல் சீனாவின் பிற பகுதகள் மீதும் சப்பான் படையெடுத்தது. இரண்டாம் சீன-சப்பானியப் போரை (1937–1945) இது விரைவுபடுத்தியது. இரண்டாம் உலகப் போரின் ஓர் அரங்கு இதுவாகும். நிலைத்திருக்க வாய்ப்பற்ற ஒரு கூட்டணியை அமைக்கும் நிலைக்கு குவோமின்டாங் மற்றும் சீனப் பொதுவுடைமை கட்சியை இப்போரானது தள்ளியது. குடிமக்களுக்கு எதிராக ஏராளமான போர்க் குற்றங்களை சப்பானியப் படைகள் செய்தன. 2 கோடி வரையிலான சீன மக்கள் இறந்தனர்.[93] சப்பானிய ஆக்கிரமிப்பின் போது நாஞ்சிங்கில் மட்டும் 40,000 முதல் 3,00,000 வரையிலான சீனர்கள் படு கொலை செய்யப்பட்டனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[94] ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்துடன் சேர்த்து சீனாவானது ஐக்கிய நாடுகளின் அறிவிப்பில் நேச நாடுகளின் "பெரும் நால்வரில்" ஒருவராக அங்கீகரிக்கப்பட்டது.[95][96] பிற மூன்று பெரும் சக்திகளுடன் சேர்த்து சீனா இரண்டாம் உலகப் போரின் நான்கு முதன்மையான நேச நாடுகளில் ஒன்றாக இருந்தது. போரில் முதன்மையான வெற்றியாளர்களில் ஒருவராகப் பின்னர் கருதப்பட்டது.[97] 1945-இல் சப்பான் சரணடைந்ததற்குப் பிறகு பெங்கு உள்ளிட்ட பகுதிகளுடன் தைவான் சீனக் கட்டுப்பாட்டுக்கு கை மாற்றப்பட்டது. எனினும், இந்த கை மாற்றத்தின் முறைமையானது சர்ச்சைக்குரியதாக உள்ளது.[98]
மக்கள் குடியரசு
இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நாடாக சீனா உருவானது. ஆனால், போரால் பாழ்பட்டும், நிதி வளம் குன்றியும் இருந்தது. குவோமின்டாங் மற்றும் பொதுவுடைமைவாதிகளுக்கு இடையிலான தொடர்ந்து வந்த நம்பிக்கையின்மையானது உள்நாட்டுப் போர் மீண்டும் தொடர்வதற்கு காரணமானது. 1947-இல் அரசியலமைப்புச் சட்டமானது நிறுவப்பட்டது. ஆனால், அப்போது இருந்த அமைதியின்மை காரணமாக சீனக் குடியரசின் அரசியலமைப்பின் பல பிரிவுகள் கண்டப் பகுதி சீனாவில் என்றுமே செயல்படுத்தப்படவில்லை.[98] இதற்குப் பிறகு, சீனப் பொதுவுடைமைக் கட்சியானது கண்டப் பகுதி சீனாவின் பெரும்பாலான பகுதிகளின் கட்டுப்பாட்டை பெற்றது. சீனக் குடியரசு அரசாங்கமானது கடல் தாண்டி தைவானுக்குப் பின் வாங்கியது.
1 அக்டோபர் 1949 அன்று சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவரான மா சே துங் பெய்சிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.[100] 1950-இல் சீனக் குடியரசிடம்[101] இருந்து சீன மக்கள் குடியரசானது ஐனானைக் கைப்பற்றியது. சுதந்திர நாடான திபெத்தை இணைத்துக் கொண்டது.[102] எனினும், 1950 முழுவதும் குவோமின்டாங் படைகளானவை தொடர்ந்து மேற்கு சீனாவில் ஒரு கிளர்ச்சியை நடத்தின.[103] நிலச் சீர்திருத்த இயக்கத்தின் வழியாக விவசாயிகள் மத்தியில் சீனப் பொதுவுடைமைக் கட்சியானது அதன் பிரபலத் தன்மையை நிலை நிறுத்திக் கொண்டது. 10 மற்றும் 20 இலட்சத்துக்கு இடையிலான நிலக் கிழார்கள் அரசால்-சகித்துக் கொள்ளப்பட்ட மரண தண்டனைகளுக்கு விவசாயிகள் மற்றும் முன்னர் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்தவர்களால் உட்படுத்தப்படுவதையும் இது உள்ளடக்கியிருந்தது.[104] சீன மக்கள் குடியரசானது சோவியத் ஒன்றியத்துடன் தொடக்கத்தில் நெருக்கமாகக் கூட்டணியில் இருந்த போதும் இரு பொதுவுடைமைவாத நாடுகளுக்கு இடையிலான உறவு முறைகளானவை படிப்படியாக மோசமாயின. ஒரு சுதந்திரமான தொழில்துறை அமைப்பு மற்றும் தன் சொந்த அணு ஆயுதங்களைச் சீனா உருவாக்குவதற்கு இது காரணமானது.[105]
1950-இல் 55 கோடியாக இருந்த சீன மக்கள் தொகையானது 1974-இல் 90 கோடியாக அதிகரித்தது.[106] எனினும், ஒரு சித்தாந்த ரீதியான பெரும் தொழில் புரட்சித் திட்டமான மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சலானது 1959 மற்றும் 1961-க்கு இடையில் 1.50 - 5.50 கோடி வரையிலான இறப்புகளுக்கு காரணமானது என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் பட்டினியால் இறந்தனர்.[107][108] 1964-இல் சீனா அதன் முதல் அணு குண்டு சோதனையை நடத்தியது.[109] 1966-இல் மாவோ மற்றும் அவரது கூட்டாளிகள் சீனப் பண்பாட்டுப் புரட்சியைத் தொடங்கினர். 1976-இல் மாவோவின் இறப்பு வரை நீடித்த ஒரு தசாப்த அரசியல் எதிர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் சமூக வளர்ச்சியை இது தூண்டியது. அக்டோபர் 1971-இல் ஐக்கிய நாடுகள் அவையில் சீன மக்கள் குடியரசானது (சீனா) சீனக் குடியரசை (தைவான்) இடமாற்றம் செய்தது. ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு நிரந்தர உறுப்பினராக தைவானின் இடத்தை எடுத்தது.[110]
சீர்திருத்தங்களும், சமகால வரலாறும்
மாவோவின் இறப்பிற்குப் பிறகு நால்வர் குழுவானது குவா குவோபெங்கால் கைது செய்யப்பட்டது. இக்குழுவானது பண்பாட்டுப் புரட்சிக்குப் பொறுப்பானவர்களாக ஆக்கப்பட்டது. பண்பாட்டுப் புரட்சியானது கண்டிக்கப்பட்டது. தசம இலட்சக் கணக்கானவர்கள் மறு வாழ்வு வாழ ஆதரவளிக்கப்பட்டனர். 1978-இல் டங் சியாவுபிங் அதிகாரத்துக்கு வந்தார். பெரும் அளவிலான அரசியல் மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கட்சியின் மிக மூத்த மற்றும் செல்வாக்கு மிக்க உறுப்பினர்களான "எட்டு மூத்தவர்களுடன்" சேர்ந்து தொடங்கினார். அரசாங்கம் அதன் கட்டுப்பாட்டைத் தளர்த்தியது. மக்களின் கூட்டுக் குழுக்கள் என்று அழைக்கப்பட்ட குழுக்களானவை படிப்படியாக கலைக்கப்பட்டன.[111] கூட்டுப் பண்ணை வேளாண்மையானது தனித் தனியாகப் பிரிக்கப்பட்டது. விவசாய நிலங்கள் தனியார் மயமாக்கப்பட்டன. அயல்நாட்டு வணிகமானது ஒரு முதன்மையான கவனக் குவியத்தைப் பெற்ற போது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. ஆற்றலற்ற அரசு நிறுவனங்கள் மீண்டும் கட்டமைக்கப்பட்டன. சில மூடப்பட்டன. திட்டமிட்ட பொருளாதாரத்தில் இருந்து சீனாவின் மாற்றத்தை இது குறித்தது.[112] சீனா அதன் தற்போதைய அரசியலமைப்பை 4 திசம்பர் 1982 அன்று பின்பற்றத் தொடங்கியது.[113]

1989-இல் தியனன்மென் சதுக்கத்தில் நடைபெற்றதைப் போன்ற போராட்டங்கள் நடைபெற்றன. பிறகு நாடு முழுவதும் பரவின.[114] போராட்டங்களுக்கான தனது அனுதாபங்கள் காரணமாக சாவோ சியாங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சியான் செமீனால் இடமாற்றம் செய்யப்பட்டார். சியான் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்தார். பல அரசு நிறுவனங்களை மூடினார். "இரும்பு அரிசிக் கிண்ணத்தைச்" (வாழ்நாள் பதவிக் காலத்தையும், வருமான உத்திரவாதத்தையும் உடைய பணிகள் இவ்வாறு அழைக்கப்பட்டன) சுருக்கினார்.[115][116][117] இந்நேரத்தில் சீனாவின் பொருளாதாரமானது ஏழு மடங்கானது.[115] பிரித்தானிய ஆங்காங் மற்றும் போத்துக்கீசிய மக்காவ் ஆகியவை சீனாவிடம் முறையே 1997 மற்றும் 1999-இல் ஒரு நாடு இரு கொள்கைகள் என்ற கொள்கையின் கீழ் சிறப்பு நிர்வாகப் பகுதிகளாக மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. 2001-இல் சீனா உலக வணிக அமைப்பில் சேர்ந்தது.[115]

2002-இல் 16-ஆவது சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய மாநாட்டில் சியான் செமீனுக்குப் பிறகு கூ சிங்தாவு கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவிக்கு வந்தார்.[115] கூவுக்குக் கீழ் சீனா பொருளாதார வளர்ச்சியில் அதன் உயர் வீதத்தைப் பேணியது. ஐக்கிய இராச்சியம், பிரான்சு, செருமனி மற்றும் சப்பான் ஆகிய நாடுகளை முந்தி உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமானது.[118] எனினும், இந்த வளர்ச்சியானது நாட்டின் வளங்கள் மற்றும் சுற்றுச் சூழல் மீது கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தியது.[119][120] பெரும் சமூக இட மாற்றத்துக்குக் காரணமானது.[121][122] 2012-இல் 18-ஆவது சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய மாநாட்டில் கூவுக்குப் பிறகு சீ சின்பிங் முதன்மையான தலைவராகப் பதவிக்கு வந்தார். அதிகாரத்துக்கு வந்ததற்குப் பிறகு சீக்கிரமே சீ ஒரு பெரும் அளவிலான ஊழலுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினார்.[123] 2022 வாக்கில் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது குற்ற விசாரணைகள் நடத்தப்பட்டன.[124] தனது பதவிக் காலத்தின் போது சீ பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களின் தொடக்கத்திலிருந்து அதுவரை காணப்படாத வகையில் தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்தினார்.[125]
Remove ads
புவியியல்

சீனாவின் நில அமைப்பானது பரந்ததாகவும், வேறுபட்டதாகவும் உள்ளது. வறண்ட வடக்கில் உள்ள கோபி மற்றும் தக்கிலமாக்கான் பாலைவனங்களில் இருந்து, ஈரமான தெற்கில் உள்ள அயன அயல் மண்டலக் காடுகள் வரையிலும் இது வேறுபட்டுள்ளது. சீனாவைப் பெரும்பாலான தெற்கு மற்றும் நடு ஆசியாவிலிருந்து இமயமலை, காரகோரம், பாமிர் மற்றும் தியான் சான் மலைத் தொடர்கள் பிரிக்கின்றன. உலகிலேயே மூன்றாவது மற்றும் ஆறாவது மிக நீளமான ஆறுகளான முறையே யாங்சி மற்றும் மஞ்சள் ஆறுகளானவை திபெத்தியப் பீடபூமியில் இருந்து செறிவான மக்கள் அடர்த்தியுடைய கிழக்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு ஓடுகின்றன. அமைதிப் பெருங்கடலின் பக்கவாட்டில் உள்ள சீனாவின் கடற்கரையானது 14,500 கிலோ மீட்டர்கள் நீளமுடையதாகும். போகாய், மஞ்சள், கிழக்கு சீன மற்றும் தென் சீனக் கடல்களால் இந்நாடு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கசக்கஸ்தான் எல்லை வழியாகச் சீனாவானது யுரேசியப் புல்வெளிக்குத் தொடர்பு கொண்டுள்ளது.
சீனாவின் நில அமைப்பானது நிலநேர்க் கோடுகளின் 18° மற்றும் 54° வடக்கு மற்றும் நிலநிரைக்கோடுகளின் 73° மற்றும் 135° கிழக்கு ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. சீனாவின் புவியியல் மையமானது 35°50′40.9″N 103°27′7.5″E-இல் உள்ள நாட்டு நினைவுச் சின்னத்தின் மையத்தால் குறிக்கப்படுகிறது. சீனாவின் நில அமைப்புகளானவை இதன் பரந்த நிலப்பரப்பு முழுவதும் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. கிழக்கில் மஞ்சள் கடல் மற்றும் தென் சீனக் கடலின் கடற்கரைகளுக்கு நெடுகில் விரிவாக மற்றும் செறிவாக மக்களையுடைய வண்டல் மண் சமவெளிகள் உள்ளன. அதே நேரத்தில், வடக்கு உள் மங்கோலியாவின் விளிம்புகளில் அகன்ற புல்வெளிகள் உள்ளன. தென் சீனாவானது குன்றுகள் மற்றும் குட்டையான மலைத் தொடர்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இந்நாட்டின் நடு-கிழக்குப் பகுதியானது மஞ்சள் ஆறு மற்றும் யாங்சி ஆறு ஆகிய சீனாவின் இரு முதன்மையான ஆறுகளின் வண்டல் சமவெளிகளைக் கொண்டுள்ளது. சீ, மேக்கொங், பிரம்மபுத்திரா மற்றும் அமுர் உள்ளிட்டவை பிற முக்கியமான ஆறுகள் ஆகும். இந்நாட்டின் மேற்கில் முதன்மையான மலைத் தொடர்கள் உள்ளன. இதில் மிகக் குறிப்பாக இமயமலைகளைக் குறிப்பிடலாம். வடக்கின் மிக வறண்ட நில அமைப்புகளுக்கு மத்தியில் உயர் பீடபூமிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தக்கிலமாக்கான் மற்றும் கோபிப் பாலைவனங்களைக் குறிப்பிடலாம். உலகின் மிக உயரமான புள்ளியான எவரெசுட்டு சிகரமானது (8,848 மீ) சீன-நேபாள எல்லையில் அமைந்துள்ளது.[126] இந்நாட்டின் தாழ்ந்த புள்ளியானது உலகின் மூன்றாவது மிகத் தாழ்ந்த இடமாகும். இது துர்பன் தாழ் நிலப் பகுதியில் அய்திங் ஏரியின் (-154 மீ) வறண்ட ஏரிப் படுகையில் அமைந்துள்ளது.[127]
காலநிலை

சீனாவின் காலநிலையானது முதன்மையாக வறண்ட பருவங்கள் மற்றும் ஈரமான பருவப் பெயர்ச்சிக் காற்றுகளைக் கொண்டதாக உள்ளது. குளிர் காலம் மற்றும் கோடை காலத்திற்கு இடையில் குறிப்பிடத்தக்க வெப்ப நிலை வேறுபாடுகளுக்கு இது காரணமாகிறது. குளிர் காலத்தில் உயர் நிலநேர்க் கோட்டுப் பகுதிகளில் இருந்து வரும் வடக்குக் காற்றுகளானவை குளிரானவையாகவும், வறண்டவையாகவும் உள்ளன. கோடை காலத்தில் தாழ்ந்த நிலநேர்க் கோடுகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் இருந்து வரும் தெற்குக் காற்றுகளானவை வெது வெதுப்பானவையாகவும், ஈரப்பதமுடையதாகவும் உள்ளன.[129]
சீனாவில் ஒரு முக்கியமான சூழ்நிலைப் பிரச்சினையாக இதன் பாலைவனங்கள் தொடர்ந்து விரிவடைவது உள்ளது.[130][131] குறிப்பாக கோபிப் பாலைவனமானது இவ்வாறு விரிவடைகிறது. 1970-களிலிருந்து தடுப்புக்காக நடப்பட்ட மரங்களின் கோடுகள் புழுதிப் புயல் அடிக்கடி ஏற்படுவதைக் குறைத்த போதும் நீண்ட வறட்சி மற்றும் மோசமான வேளாண்மைப் பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு இளவேனில் காலத்திலும் வடக்கு சீனாவைப் புழுதிப் புயல்கள் தாக்குவதற்குக் காரணமாகியுள்ளது. பிறகு கிழக்காசியாவின் பிற பகுதிகளுக்கும் இவை பரவுகின்றன. இதில் சப்பான் மற்றும் கொரியாவும் அடங்கும். நீரின் தரம், மண்ணரிப்பு மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவை பிற நாடுகளுடன் சீனாவின் உறவு முறைகளில் முக்கியமான பிரச்சினைகளாக உருவாகியுள்ளன. இமயமலையில் உருகும் பனியாறுகள் தசமக் கோடிக் கணக்கான மக்களின் தண்ணீர்ப் பற்றாக்குறைகளுக்கு காரணமாகும் சாத்தியமுள்ளது.[132] ஆய்வாளர்களின் கூற்றுப் படி சீனாவில் காலநிலை மாற்றத்தை 1.5 °C (2.7 °F) வெப்பநிலை என்ற வரம்புக்குள் கட்டுப்படுத்த 2045-ஆம் ஆண்டுக்குள் சீனாவில் நிலக்கரியிலிருந்து உருவாக்கப்படும் மின்சார உற்பத்தியானது கரிமம் பிடிக்கப்படுவதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் படிப்படியாக நிறுத்தப்பட வேண்டும்.[133] தற்போதைய கொள்கைகளுடன் சீனாவின் பைங்குடில் வாயு வெளியீடுகளானவை 2025-இல் அநேகமாக உச்சத்தை அடையும். 2030 வாக்கில் அவை 2022-ஆம் ஆண்டு நிலைகளுக்குத் திரும்பும். எனினும், இத்தகைய வழியானது வெப்ப நிலையில் 3 °C (5.4 °F) உயர்வுக்கு வழி வகுக்கும் என்ற நிலையே இன்னும் உள்ளது.[134]
சீனாவின் வேளாண்மைச் செயல்பாடுகள் குறித்த அதிகாரப்பூர்வ அரசாங்கப் புள்ளி விவரங்களானவை சார்ந்திருக்க இயலாதவையாகக் கருதப்படுகின்றன. அரசாங்கத்தின் மானியம் வழங்கும் நிலைகளில் உற்பத்தி மிகைப்படுத்திக் காட்டப்படுவது இதற்குக் காரணமாக உள்ளது.[135][136] பெரும்பாலான சீனாவானது வேளாண்மைக்கு மிக உகந்த ஒரு கால நிலையைக் கொண்டுள்ளது. அரிசி, கோதுமை, தக்காளிகள், கத்தரிக்காய், திராட்சை, தர்பூசணி, கீரை மற்றும் பல பிற பயிர்களின் உலகின் மிகப் பெரிய உற்பத்தியாளராக சீனா திகழ்கிறது.[137] 2021-இல் உலகின் நிலையான புல் நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் 12% சீனாவில் இருந்தது. மேலும், உலகளாவிய பயிர் நிலங்களில் 8%-உம் சீனாவில் இருந்தது.[138]
உயிரினப் பல்வகைமை

உலகின் 17 பெரும்பல்வகைமை நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.[139] உலகின் முக்கியமான உயிர்ப்புவியியல் பகுதிகளில் இரண்டில் இது அமைந்துள்ளது: பாலி ஆர்டிக் மற்றும் இந்திய-இமாலயம். ஓர் அளவீட்டின் படி சீனா 34,687க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் சிரைத் தாவரங்களைக் கொண்டுள்ளது. பிரேசில் மற்றும் கொலம்பியாவுக்கு அடுத்து உலகிலேயே மூன்றாவது மிக அதிக உயிரினப் பல்வகைமை கொண்ட நாடாக இது இதை ஆக்குகிறது.[140] பன்னாட்டு உயிரினப் பல்வகைமை ஒப்பந்தத்தில் இந்நாடும் ஒரு பங்குதாரர் ஆகும்.[141] 2010-இல் இதன் தேசிய உயிரினப் பல்வகைமை உத்தி மற்றும் செயல்பாட்டுத் திட்டமானது இந்த ஒப்பந்தத்தால் பெற்றுக் கொள்ளப்பட்டது.[142]
சீனா குறைந்தது 551 பாலூட்டி இனங்கள் (உலகின் மூன்றாவது மிக அதிக எண்ணிக்கை இதுவாகும்),[143] 1,221 பறவை இனங்கள் (எட்டாவது மிக அதிக எண்ணிக்கை இதுவாகும்),[144] 424 ஊர்வன இனங்கள் (ஏழாவது மிக அதிக எண்ணிக்கை இதுவாகும்)[145] மற்றும் 333 நீர் நில வாழ்வன இனங்கள் (ஏழாவது மிக அதிக எண்ணிக்கை இதுவாகும்)[146] ஆகியவற்றுக்குத் தாயகமாக உள்ளது. சீனாவின் காட்டுயிர்களானவை உலகின் மிக அதிக மக்கள் தொகையின் பகுதியாக உள்ள மனிதர்களின் ஒரு பிரிவினருடன் வாழ்விடத்தைப் பகிர்ந்து கொண்டும், அவர்களிடமிருந்து வரும் கடுமையான அழுத்தத்தைத் தாங்கிக் கொண்டும் உள்ளன. முதன்மையாக வாழ்விடம் அழிக்கப்படுதல், மாசுபாடு, உணவு, உரோமம் மற்றும் பாரம்பரியச் சீன மருத்துவத்துக்காக சட்டத்திற்குப் புறம்பாக வேட்டையாடப்படுதல் போன்ற மனிதச் செயல்பாடுகளால் குறைந்தது 840 விலங்கு இனங்களானவை அச்சுறும் நிலை, அழிவாய்ப்பு நிலை அல்லது உள்ளூர் அளவில் அற்று விடும் ஆபத்தில் உள்ளன.[147] அருகிய இனங்களானவை சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளன. 2005-ஆம் ஆண்டு நிலவரப் படி இந்நாடானது 2,349க்கும் மேற்பட்ட இயற்கைப் பாதுகாப்பு இடங்களைக் கொண்டுள்ளது. இவை ஒட்டு மொத்த பரப்பளவாக 14.995 கோடி எக்டேர்களைக் கொண்டுள்ளன. சீனாவின் மொத்த நிலப்பரப்பில் இது 15% ஆகும்.[148] கிழக்கு மற்றும் நடு சீனாவின் மைய வேளாண்மைப் பகுதிகளிலிருந்து பெரும்பாலான காட்டு விலங்குகளானவை அகற்றப்பட்டு விட்டன. ஆனால், அவை மலைப்பாங்கான தெற்கு மற்றும் மேற்கில் இதை விட நன்முறையில் உள்ளன.[149][150] 12 திசம்பர் 2006-இல் யாங்சி ஆற்று ஓங்கிலானது அற்று விட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டது.[151]
சீனா 32,000க்கும் மேற்பட்ட சிரை தாவர இனங்களைக் கொண்டுள்ளது.[152] வேறுபட்ட காட்டு வகைகளுக்கும் தாயகமாக உள்ளது. குளிரான கூம்புக் காடுகளானவை நாட்டின் வட பகுதியில் உள்ளன. 120-க்கும் மேற்பட்ட பறவையினங்களுடன் ஐரோவாசியக் காட்டு மான், ஆசியக் கறுப்புக் கரடி போன்ற விலங்கினங்கள் இக்காடுகளில் காணப்படுகின்றன.[153] ஈரப்பதமுள்ள கூம்புக் காடுகளின் அடிப் பகுதியானது அடர் மூங்கில் புதர்களைக் கொண்டிருக்கலாம். சூனிபர் எனும் ஒரு வகை தேவதாரு மர வகை மற்றும் யீவ் எனும் ஊசியிலை மர வகை ஆகியவற்றின் உயர் மலைச் சூழல் அடுக்கில் மூங்கிலை, ரோதோதெந்த்ரோன் எனும் பூவரசு வகை மரங்கள் இடமாற்றம் செய்கின்றன. நடு மற்றும் தெற்கு சீனாவில் முதன்மையாக உள்ள அயன அயல் மண்டலக் காடுகளானவை ஏராளமான அரிய அகணியங்கள் உள்ளிட்ட ஓர் உயர் அடர்த்தி தாவர இனங்களுக்கு வாழ்விடமாக உள்ளன. யுன்னான் மற்றும் ஆய்னானுக்குள் அடங்கி இருந்தாலும் வெப்ப மண்டல மற்றும் பருவப் பொழில்களானவை சீனாவில் காணப்படும் அனைத்து விலங்கு மற்றும் தாவர இனங்களில் கால் பகுதியைக் கொண்டுள்ளன.[153] சீனா 10,000க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட பூஞ்சை இனங்களைக் கொண்டுள்ளது.[154]
சுற்றுச்சூழல்

2000-களின் தொடக்கத்தில் இதன் தொழில்மயமாக்கலின் துரித வேகம் காரணமாக சீனா சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டது.[155][156] 1979-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களானவை மோசமாக செயல்படுத்தப்பட்டாலும், ஏற்கத்தக்க அளவுக்குக் கடுமையானவையாக உள்ளன. துரித பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக இவை அடிக்கடி அலட்சியப்படுத்தப்படுகின்றன.[157] இந்தியாவுக்கு அடுத்து காற்று மாசுபாட்டால் ஏற்படும் உலகின் இரண்டாவது மிக அதிக இறப்பு எண்ணிக்கையை சீனா கொண்டுள்ளது. தோராயமாக 10 இலட்சம் பேர் சீனாவில் இதன் காரணமாக இறக்கின்றனர்.[158][159] சீனா மிக அதிக கரியமில வாயுவை வெளியிடும் நாடாக தர நிலையைப் பெற்றிருந்தாலும்[160] ஒரு தனி நபருக்கு 8 டன்கள் கரியமில வாயுவை மட்டுமே இது வெளியிடுகிறது. ஐக்கிய அமெரிக்கா (16.1 டன்கள்), ஆத்திரேலியா (16.8 டன்கள்), மற்றும் தென் கொரியா (13.6 டன்கள்) போன்ற வளர்ந்த நாடுகளை விட இது குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைவானதாகும்.[161] சீனாவின் பைங்குடில் வாயு வெளியீடுகளானவை உலகிலேயே மிக அதிகமானதாகும்.[161] இந்நாடானது குறிப்பிடத்தக்க அளவுக்கு நீர் மாசுபாட்டு பிரச்சினைகளைக் கொண்டுள்ளது. 2023-இல் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் மனித நுகர்வுக்கு ஏற்றவையாக சீனாவின் தேசிய மேற்பரப்பு நீரில் வெறும் 89.4% மட்டுமே தர வரிசைப்படுத்தப்பட்டது.[162]
சீனா மாசுபாட்டைக் கடுமையாகக் குறைப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளது. 2010-களில் காற்று மாசுபாடானது ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு இதனால் குறைந்தது.[163] 2020-இல் 2030-ஆம் ஆண்டுக்கு முன் தன் உச்சபட்ச பைங்குடில் வாயு வெளியீடுகளின் அளவை அடையும் குறிக்கோளை சீன அரசாங்கமானது அறிவித்தது. பாரிசு ஒப்பந்தத்தின் படி 2060 வாக்கில் கார்பன் சமநிலையை அடைய இந்நாடு உறுதி கொண்டுள்ளது.[164] காலநிலைச் செயல்பாட்டுக் கண்காணிப்பு அமைப்பானது சீனாவின் இந்தச் செயல்பாடானது உலகளாவிய வெப்பநிலை உயர்வில் 0.2°C முதல் 0.3°C வரை குறைக்கும் என்று கணித்தது - "இந்த அமைப்பால் மதிப்பிடப்பட்ட ஒற்றை நாட்டின் மிகப் பெரிய குறைவு இதுவாகும்".[164]
புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் உலகின் முதன்மையான முதலீட்டாளராகவும், இந்த ஆற்றலை வணிகமயமாக்குவதில் முதன்மையான நாடாகவும் சீனா திகழ்கிறது. 2022-இல் ஐஅ$546 பில்லியன் (₹39,04,773.6 கோடி)யை இத்துறையில் சீனா முதலீடு செய்தது.[165] புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்களின் முக்கியமான உருவாக்குநர் இந்நாடாகும். உள்ளூர் அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களில் இது பெரும் முதலீட்டைச் செய்கிறது.[166][165] நிலக்கரி போன்ற புதுப்பிக்கத்தகாத ஆற்றல் ஆதாரங்களை நீண்ட காலமாக கடுமையாக சார்ந்திருந்த சீனா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களுக்கு மாறிய நிலையானது சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாகியுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கானது 2016-இல் 26.3%-இலிருந்து 2022-இல் 31.9%-ஆக அதிகரித்துள்ளது.[167] 2023-இல் சீனாவின் மின்சாரத்தில் 60.5%-ஆனது நிலக்கரியிலிருந்தும் (உலகின் மிகப் பெரிய நிலக்கரி மின்சக்தி உற்பத்தியாளர்), 13.2%-ஆனது நீர் மின்சாரத்திலிருந்தும் (உலகின் மிகப் பெரிய அளவு), 9.4%-ஆனது காற்றிலிருந்தும் (உலகின் மிகப் பெரிய அளவு), 6.2%-ஆனது சூரிய ஆற்றலிலிருந்தும் (உலகின் மிகப் பெரிய அளவு), 4.6%-ஆனது அணு ஆற்றலிலிருந்தும் (உலகின் இரண்டாவது மிகப் பெரிய அளவு), 3.3%-ஆனது இயற்கை எரி வாயுவில் இருந்தும் (உலகின் ஐந்தாவது மிகப் பெரிய அளவு), மற்றும். 2.2%-ஆனது உயிரி ஆற்றலிலிருந்தும் (உலகின் மிகப் பெரிய அளவு) பெறப்பட்டுள்ளது. மொத்தத்தில் சீனாவின் ஆற்றலில் 31%-ஆனது புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து பெறப்பட்டுள்ளது.[168] புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மீது இதன் முக்கியத்துவத்தை இது குறித்தாலும் இந்தியாவுக்கு அடுத்து உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தைகளில் சீனா தொடர்ந்து ஆழமாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. 2022-இல் உருசியாவின் கச்சா எண்ணெயை மிக அதிகப் படியாக இறக்குமதி செய்த நாடாக சீனா உள்ளது.[169][170]
சீன அரசாங்கத்தின் கூற்றுப் படி, சீனாவின் ஒட்டு மொத்த நிலப்பரப்பில் 1949-இல் காடுகளின் பரப்பளவானது 10%-இலிருந்து 2024-இல் 25%-ஆக அதிகரித்துள்ளது.[171]
அரசியல் புவியியல்
உருசியாவுக்கு அடுத்து நிலப் பரப்பளவின் படி உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடு சீனாவாகும். ஒட்டு மொத்த பரப்பளவின் படி உலகின் மூன்றாவது அல்லது நான்காவது மிகப் பெரிய நாடு சீனாவாகும்.[r] சீனாவின் ஒட்டு மொத்த பரப்பளவானது தோராயமாக 96,00,000 சதுர கிலோமீட்டர்கள் எனப் பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது.[172] பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் குறிப்பிட்டுள்ள படி 95,72,900 சதுர கிலோமீட்டர்களிலிருந்து,[13] ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை ஆண்டுப் புத்தகம்[5] மற்றும் த வேர்ல்டு ஃபக்ட்புக் ஆகியவற்றின் படி 95,96,961 சதுர கிலோமீட்டர்கள் வரை என குறிப்பான பரப்பளவு அளவீடுகளானவை வேறுபடுகின்றன.[8]

உலகில் மிக நீண்ட ஒன்றிணைந்த நில எல்லையை சீனா கொண்டுள்ளது. இதன் நீளம் 22,117 கிலோமீட்டர்கள் ஆகும். யலு ஆற்றின் (அம்னோக் ஆறு) வாயிலிருந்து தோன்கின் வளைகுடா வரை இதன் கடற்கரையானது தோராயமாக 14,500 கிலோ மீட்டர்கள் நீளத்தைக் கொண்டுள்ளது.[8] சீனா 14 நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. பெரும்பாலான கிழக்கு ஆசியாவுடன் இவ்வாறு கொண்டுள்ளது. தென் கிழக்காசியாவில் வியட்நாம், லாவோஸ், மற்றும் மியான்மர்; தெற்காசியாவில் இந்தியா, பூட்டான், நேபாளம், பாக்கித்தான்[s] மற்றும் ஆப்கானித்தான்; நடு ஆசியாவில் தஜிகிஸ்தான், கிர்கிசுத்தான் மற்றும் கசக்கஸ்தான்; உள் ஆசியா மற்றும் வடகிழக்கு ஆசியாவில் உருசியா, மங்கோலியா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுடன் இது எல்லைகளைக் கொண்டுள்ளது. தென் மேற்கு மற்றும் தெற்கே முறையே வங்காளதேசம் மற்றும் தாய்லாந்திலிருந்து இது சற்றே தொலைவில் அமைந்துள்ளது. யப்பான், பிலிப்பீன்சு, மலேசியா, மற்றும் இந்தோனேசியா போன்ற பல கடல் சார் எல்லையையுடைய அண்டை நாடுகளையும் இது கொண்டுள்ளது.[173]
14 அண்டை நாடுகளில் 12 நாடுகளுடன் தன் எல்லைப் பிரச்சினைகளை சீனா தீர்த்துக் கொண்டுள்ளது. இதில் பெரும்பாலானவற்றில் குறிப்பிடத்தகுந்த சமரசத்தைப் பின்பற்றி உள்ளது.[174][175][176] சீனா தற்போது இந்தியா[177] மற்றும் பூடானுடன்[178] எல்லைப் பிரச்சினையில் உள்ளது. மேலும், சென்காகு தீவுகள் மற்றும் முழுவதுமான தென் சீனக் கடல் தீவுகள் போன்ற கிழக்கு மற்றும் தென் சீனக் கடல்களில் உள்ள நிலப்பரப்புகள் குறித்து பல்வேறு நாடுகளுடன் கடல் சார் எல்லைப் பிரச்சினைகளை சீனா கொண்டுள்ளது.[179][180]
Remove ads
அரசாங்கமும், அரசியலும்
தேசிய மக்கள் பேராயம்
கூடும் மக்களின் பெரும் மண்டபம்
கூடும் மக்களின் பெரும் மண்டபம்
சீன அரசாங்கம் மற்றும் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமையகமான சோங்னான்கை
சீன மக்கள் குடியரசானது சீன பொதுவுடைமைக் கட்சியால் நிர்வகிக்கப்படும் ஒரு கட்சி அரசு ஆகும். சீனப் பொதுவுடைமைக் கட்சியானது சீனப் பண்புகளுடன் கூடிய பொதுவுடைமைவாதத்தால் அதிகாரப்பூர்வமாக வழி நடத்தப்படுகிறது. இதில் சீனச் சூழலுக்கு ஏற்றவாறு மார்க்சியமானது மாற்றப்பட்டுள்ளது.[181] "சீன மக்கள் குடியரசானது தொழிலாளர் வர்க்கத்தால் தலைமை தாங்கப்படும், மக்களின் சனநாயக சர்வாதிகாரத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு பொதுவுடைமைவாத அரசு" என்று சீன அரசியலமைப்பானது குறிப்பிடுகிறது. "தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒரு கூட்டணியை அடிப்படையாகக் கொண்டது" இதுவாகும். அரசாங்க அமைப்புகள் "சனநாயக மையப்படுத்துதல் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்" என்று அரசியலமைப்பு குறிப்பிடுகிறது.[182] "சீனப் பண்புகளுடன் கூடிய பொதுவுடைமைவாதத்தின் வரையறையான சிறப்பம்சமானது சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைத்துவமே ஆகும்" என்று குறிப்பிடுகிறது.[183]
சீன மக்கள் குடியரசு அதிகாரப்பூர்வமாக தன்னைத் தானே சனநாயகமாகக் குறிப்பிடுகிறது. "பொதுவுடைமைவாத கலந்தாயத்தக்க சனநாயகம்"[184] மற்றும் "ஒட்டு மொத்த செயல்முறை மக்களின் சனநாயகம்"[185] போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறது. எனினும், நாடானது பொதுவாக ஒரு சர்வாதிகார ஒற்றை கட்சி அரசு மற்றும் ஒரு சர்வாதிகாரம் எனக் குறிப்பிடப்படுகிறது.[186][187] பல துறைகளில் உலகளவில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளில் ஒன்றை இந்நாடு கொண்டுள்ளது. பத்திரிகை சுதந்திரம், கூடல் சுதந்திரம், சமூக அமைப்புகளை சுதந்திரமாக உருவாக்குதல், சமய சுதந்திரம் மற்றும் இணையத்திற்கான இலவச அனுமதி[188] ஆகியவற்றுக்கு எதிரானவை ஆகியவற்றை மிகக் குறிப்பாகக் கூறலாம். பொருளாதார உளவியல் பிரிவு அமைப்பின் சனநாயகச் சுட்டெண்ணில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படாத சர்வாதிகார அரசாக மிகக் குறைவான தர நிலையையே சீனா தொடர்ந்து பெற்று வந்துள்ளது. 2023 சுட்டெண்ணி 167 நாடுகளில் 148-ஆவது இடத்தை இது பெற்றது.[189] சீன அரசாங்கத்தில் உள்ள பல கலந்தாய்வு முறைகளைப் போதிய அளவுக்குக் குறிப்பிடாத வகையில் சீனா ஒரு "சர்வாதிகார" நாடு என்ற சொல்லாடலானது இருப்பதாகப் பிற ஆதாரங்கள் பரிந்துரைக்கின்றன.[190]
சீனப் பொதுவுடைமைக் கட்சி

சீனப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியலமைப்பின் படி இதன் மிக உயர்ந்த அவையான தேசிய பேராயமானது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நடைபெறுகிறது.[191] தேசியப் பேராயம் நடுவண் செயற்குழுவைத் தேர்ந்தெடுக்கிறது. பிறகு நடுவண் செயற்குழுவானது தலைமைக் குழு (பொலிட்பிரோ), தலைமைக் குழுவின் நிலைக் குழு மற்றும் பொதுச் செயலாளர் (கட்சித் தலைவர்) ஆகியோரைத் தேர்ந்தெடுக்கிறது. கட்சித் தலைவரே நாட்டின் உயர்ந்த தலைமைத்துவத்தில் உள்ளவர் ஆவார்.[191] பொதுச் செயலாளரே கட்சி மற்றும் அரசு மீது இறுதியான சக்தியையும், அதிகாரத்தையும் கொண்டுள்ளார். அதிகாரப்பூர்வமற்ற முதன்மையான தலைவராகவும் சேவையாற்றுகிறார்.[192] தற்போதைய பொதுச் செயலாளர் சீ சின்பிங் ஆவார். இவர் 2012 நவம்பர் 15 அன்று பதவிக்கு வந்தார்.[193] உள்ளூர் அளவில் ஒரு துணைப் பிரிவின் சீனப் பொதுவுடமைக் கட்சிக் குழுச் செயலாளர் உள்ளூர் அரசாங்கத் தர நிலையில் உள்ளவரை விட உயர்ந்தவராக உள்ளார். ஒரு மாகாணப் பிரிவின் சீனப் பொதுவுடமைக் கட்சி குழுச் செயலாளர் ஆளுநரை விட தரம் உயர்ந்தவராக உள்ளார். அதே நேரத்தில், ஒரு நகரத்தின் சீனப் பொதுவுடமைக் கட்சிக் குழுச் செயலாளர் நகரத் தந்தையை விட தரம் உயர்ந்தவராக உள்ளார்.[194]
அரசாங்கம்
சீ சின்பிங்
சீனப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அதிபர்
சீனப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அதிபர்
சீன அரசாங்கமானது சீனப் பொதுவுடைமைக் கட்சியின் ஒற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.[195] அரசாங்க அமைப்புகளில் நியமிப்புகளை சீனப் பொதுவுடைமைக் கட்சியே நியமிக்கிறது. மிக மூத்த அரசாங்க அதிகாரிகள் பொதுவாகச் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர்.[195]
ஒரு "தொய்வக முத்திரைக்" (இரப்பர் இசுடாம்ப்) குழு என்றும் கூட குறிப்பிடப்பட்டாலும்[196] கிட்டத்தட்ட 3,000 உறுப்பினர்களுடன் தேசிய மக்கள் பேராயமானது அரசியலமைப்பு ரீதியாக "அரசு சக்தியின் மிக உயர்ந்த உறுப்பாக" உள்ளது என்று குறிப்பிடப்படுகிறது.[182] தேசிய மக்கள் பேராயமானது ஆண்டு தோறும் கூட்டத்தை நடத்துகிறது. அதே நேரத்தில், தேசிய மக்கள் பேராயத்தின் நிலைக் குழுவானது ஒவ்வொரு இரு மாதங்களுக்கும் ஒரு முறை சந்திக்கிறது. தேசிய மக்கள் பேராயத்தின் பிரதிநிதிகளிலிருந்து சுமார் 150 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[196] தேர்தல்களானவை மறைமுகமாகவும், பன்முகத் தன்மை இல்லாததாகவும் உள்ளன. அனைத்து நிலைகளிலும் போட்டியிடும் மனுக்கள் சீனப் பொதுவுடைமைக் கட்சியால் கட்டுப்படுத்தப்படுகின்றன.[185] தேசிய மக்கள் பேராயத்தில் சீனப் பொதுவுடைமைக் கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது. சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் மற்ற எட்டு சிறு கட்சிகள் பெயரளவு பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளன.[197]
தேசிய மக்கள் பேராயத்தால் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிபர் பதவியானது மரியாதைக்குரிய அரசு பிரதிநிதித்துவமாக உள்ளது. ஆனால், அரசியலமைப்பு ரீதியாக அரசின் தலைவர் அதிபர் கிடையாது. தற்போது பதவியில் உள்ள அதிபர் சீ சின்பிங் ஆவார். சீனப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மைய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும் இவர் உள்ளார். இது இவரை சீனாவின் முதன்மையான தலைவராகவும், ஆயுதப் படைகளின் தளபதியாகவும் ஆக்குகிறது. பிரதமர் அரசின் தலைவராக உள்ளார். லீ கியாங் தற்போது பதவி வகிக்கும் பிரதமர் ஆவார். பிரதமர் அதிகாரப்பூர்வமாக அதிபரால் முன்மொழியப்பட்டு தேசிய மக்கள் பேராயத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிரதமரானவர் பொதுவாகத் தலைமைக் குழுவின் நிலைக் குழுவின் இரண்டாவது அல்லது மூன்றாவது தர நிலையில் உள்ள உறுப்பினராக உள்ளார். அரச மன்றம், சீனாவின் அமைச்சகங்கள், நான்கு துணைப் பிரதமர்கள், அரச ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், மற்றும் அமைச்சகங்கள் மற்றும் ஆணையங்களின் தலைவராகப் பிரதமர் உள்ளார்.[182] சீன மக்கள் அரசியல் கலந்தாய்வுக் கூட்டமானது ஓர் அரசியல் ஆலோசனைக் குழுவாக சீனாவின் "ஒன்றுபட்ட முனைய" அமைப்பில் விமர்சனத்திற்கு உரியதாக உள்ளது. சீனப் பொதுவுடைமைக் கட்சிக்கு ஆதரவளிப்பதற்காக கட்சி சாராதோரைச் சேர்ப்பதை இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மக்களின் பேராயங்களை ஒத்தவாறு சீன மக்கள் அரசியல் கலந்தாய்வுக் கூட்டங்களானவை பல்வேறு பிரிவுகளின் நிலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கூட்டத்தின் தேசியக் குழுவானது தலைமைக் குழுவின் நிலைக் குழுவின் நான்காவது நிலை உறுப்பினராக உள்ள வாங் கூனிங்கால் தலைமை தாங்கப்பட்டுள்ளது.[198]
சீன அரசாங்கமானது ஓர் அதிக அளவிலான அரசியல் மையப்படுத்துதலையும், ஆனால் முக்கியமான பொருளாதாரப் பரவலாக்கத்தையும் அம்சமாகக் கொண்டுள்ளது.[199](பக்.7) கொள்கைத் திட்டங்கள் அல்லது செயல்பாடுகளானவை உள்ளூர் அளவில் பொதுவாகச் சோதனை செய்யப்பட்டதற்குப் பிறகு மிகப் பரவலாகச் செயல்படுத்தப்படுகின்றன. சோதனை மற்றும் பின்னூட்டங்களை உடைய ஒரு கொள்கை இதன் காரணமாக உருவாகிறது.[200](பக்.14) பொதுவாக மைய அரசாங்கத் தலைமைத்துவமானது குறிப்பிட்ட கொள்கைகளை முன் வரைவு ஆக்குவதைத் தவிர்க்கிறது. மாறாக அதிகாரப்பூர்வமற்ற இணையங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உள்ளூர் கொள்கைச் சோதனைகள் அல்லது முன்னோடித் திட்டங்களின் வழியில் மாற்றங்களை முடிவெடுக்கும் அல்லது பரிந்துரைக்கும் கள ஆய்வுகளைப் பயன்படுத்துகிறது.[201](பக்.71) உள்ளூர் நிலைகளில் கொள்கைகளை மேம்படுத்திய பிறகு அலுவல்பூர்வக் கொள்கைகள், சட்டம், அல்லது கட்டுப்பாடுகளின் முன் வரைவுகளைத் தொடங்குவதே மைய அரசாங்கத் தலைமைத்துவத்தின் பொதுவான அணுகுமுறையாக உள்ளது.[201](பக்.71)
நிர்வாகப் பிரிவுகள்
சீன மக்கள் குடியரசானது அரசியலமைப்பு ரீதியாக ஓர் ஒருமுக அரசு ஆகும். இது 23 மாகாணங்கள்,{{efn|The People's Republic of China claims the islands of Taiwan and Penghu, which it does not control, as its disputed 23rd province, i.e. Taiwan Province, People's Republic of China|Taiwan Province; along with Kinmen and Matsu Islands as part of [[புஜியான் மாகாணம்|Fujian Province. These are controlled by the Taipei-based [[தைவான்|Republic of China (ROC). See § Administrative divisions for more details.|name=TaiwanClaim}} ஐந்து சுயாட்சிப் பகுதிகள் (இதில் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிடப்பட்ட சிறுபான்மையினங்களுடன் உள்ளது) மற்றும் நான்கு நேரடியாக-நிர்வகிக்கப்படும் மாநகராட்சிகள் (இவை ஒட்டு மொத்தமாக "கண்டப்பகுதி சீனா" என்று குறிப்பிடப்படுகின்றன), மேலும் ஆங்காங் மற்றும் மக்காவு ஆகிய சிறப்பு நிர்வாகப் பகுதிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.[202] சீன மக்கள் குடியரசானது தைவான் தீவை தன் தைவான் மாகாணமாகவும், கின்மென் மற்றும் மத்சு ஆகிய இடங்களை புஜியான் மாகாணத்தின் ஒரு பகுதியாகவும், தென் சீனக் கடலில் சீனக் குடியரசானது (தைவான்) கட்டுப்படுத்தும் தீவுகளை ஆய்னான் மாகாணம் மற்றும் குவாங்டொங் மாகாணங்களின் ஒரு பகுதியாகவும் கருதுகிறது. இந்த அனைத்துப் பகுதிகளும் சீனக் குடியரசால் நிர்வகிக்கப்பட்டாலும் இவ்வாறு கருதுகிறது.[203][31] புவியியல் ரீதியாக கண்டப் பகுதி சீனாவின் அனைத்து 31 மாகாணப் பிரிவுகளும் ஆறு பகுதிகளாகக் குழுவாக்கப்படலாம். அவை வடசீனா, கிழக்கு சீனா, தென்மேற்கு சீனா, தென்நடு சீனா, வடகிழக்கு சீனா, மற்றும் வடமேற்கு சீனா ஆகும்.[204]

அயல் நாட்டு உறவுகள்

சீன மக்கள் குடியரசானது ஐக்கிய நாடுகள் சபையின் 179 உறுப்பு நாடுகளுடன் தூதரக உறவு முறைகளைக் கொண்டுள்ளது. 174 நாடுகளில் தூதரகங்களைப் பேணி வருகிறது. 2024-ஆம் ஆண்டு நிலவரப் படி உலகின் எந்த ஒரு நாட்டுடன் ஒப்பிடும் போதும் மிகப் பெரிய தூதரக அமைப்புகளில் ஒன்றை சீனா கொண்டுள்ளது.[205] 1971-இல் ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவின் ஒற்றைப் பிரதிநிதியாகவும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒரு நாடாகவும் சீன மக்கள் குடியரசானது (சீனா) சீனக் குடியரசை (தைவான்) இடமாற்றம் செய்தது.[206] ஜி-20,[207] சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு,[208] பிரிக்ஸ்,[209] கிழக்கு ஆசிய கூட்டமைப்பு,[210] மற்றும் ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு[211] உள்ளிட்ட அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்புகளின் ஓர் உறுப்பினர் இதுவாகும். கூட்டுசேரா இயக்கத்தின் ஒரு முன்னாள் உறுப்பினர் மற்றும் தலைவராகவும் கூட சீனா இருந்துள்ளது. இன்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆலோசனை கூறும் ஒரு நாடாக தன்னைத் தானே சீனா கருதுகிறது.[212]
சீன மக்கள் குடியரசானது அலுவல் பூர்வமாக "ஒரு-சீனா" கொள்கையைப் பேணி வருகிறது. சீனா என்ற பெயரில் ஒரே ஒரு இறையாண்மையுடைய நாடு மட்டுமே உள்ளது என்ற பார்வையை இக்கொள்கை கொண்டுள்ளது. சீன மக்கள் குடியரசால் சீனா பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், அந்த சீனாவின் ஒரு பகுதி தைவான் என்பதையும் இக்கொள்கை குறிப்பிடுகிறது.[213] தைவானின் தனித்துவமான நிலையானது சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்கும் நாடுகள் ஒன்றிலிருந்து மற்றது வேறுபடும் தனித்துவமான "ஒரு-சீனக் கொள்கைகளைப்" பேணுவதற்கு வழி வகுத்துள்ளது. சில நாடுகள் வெளிப்படையாகத் தைவான் மீதான சீன மக்கள் குடியரசின் உரிமை கோரலை அங்கீகரிக்கின்றன. அதே நேரத்தில், ஐக்கிய அமெரிக்கா மற்றும் சப்பான் உள்ளிட்ட பிற நாடுகள் இந்த உரிமை கோரலை ஒப்புக் கொள்ள மட்டுமே செய்கின்றன.[213] தைவானுக்குத் தூதரக நேசத் தொடர்பு முயற்சிகளை அயல் நாடுகள் ஏற்படுத்த முயற்சிக்கும் பல்வேறு தருணங்களில் சீன அதிகாரிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.[214] குறிப்பாக, ஆயுதங்கள் விற்பனை விவகாரத்தில் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.[215] 1971-இல் ஐக்கிய நாடுகள் அவையில் சீன மக்கள் குடியரசானது சீனக் குடியரசை இடமாற்றம் செய்ததற்குப் பிறகு பெரும்பாலான நாடுகள் தங்களது அங்கீகாரத்தைச் சீன மக்கள் குடியரசுக்கு மாற்றிக் கொண்டன.[216]

பிரதமர் சோ என்லாயின் "அமைதியான இணக்க வாழ்வின் ஐந்து கொள்கைகளை" அடிப்படையாகக் கொண்டு தற்போது சீனாவின் பெரும்பாலான அயல் நாட்டுக் கொள்கைகள் உள்ளன என்று குறிப்பிடப்படுகிறது. "சீரில்லாத ஒருமைப்பாடு" என்ற கருத்துருவாலும் கூட இது செயல்படுத்தப்படுகிறது. சித்தாந்த ரீதியான வேறுபாடுகள் இருந்த போதும் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவு முறைகளை இக்கொள்கை ஊக்குவிக்கிறது.[217] சூடான்,[218] வட கொரியா மற்றும் ஈரான்[219] போன்ற மேற்குலக நாடுகளால் ஆபத்தானவை மற்றும் ஒடுக்கு முறை கொண்டவை என்று கருதப்படும் நாடுகளுக்கு ஆதரவளிக்கவோ அல்லது நெருங்கிய உறவு முறைகளைப் பேணவோ சீனா செயல்படுவதற்கு இக்கொள்கையானது காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மியான்மாருடன் சீனாவின் நெருங்கிய உறவு முறையானது மியான்மரின் ஆளும் அரசாங்கங்களுக்கான ஆதரவு, மேலும் அரகன் இராணுவம்[220] உள்ளிட்ட அந்நாட்டின் கிளர்ச்சி இனக் குழுக்களுக்கான ஆதரவையும்[221] கூட உள்ளடக்கியுள்ளது. உருசியாவுடன் நெருங்கிய அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ உறவு முறைகளை சீனா கொண்டுள்ளது.[222] ஐக்கிய நாடுகள் அவையில் இரு நாடுகளும் அடிக்கடி ஒரே பக்கம் ஆதரவாக வாக்களிக்கின்றன.[223][224][225] ஐக்கிய அமெரிக்காவுடனான சீனாவின் உறவு முறையானது ஆழமான வணிக உறவுகள், ஆனால் குறிப்பிடத்தக்க அரசியல் வேறுபாடுகளை உள்ளடக்கிய சிக்கலான உறவாக உள்ளது.[226]
2000-களின் தொடக்கத்திலிருந்து வணிகம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்காக சீனா ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவு முறைகளை வளர்க்கும் ஒரு கொள்கையைப் பின்பற்றி வந்துள்ளது.[227][228][229] ஐரோப்பிய ஒன்றியத்துடன் இது விரிவான மற்றும் அதிகப்படியாக வேற்றுமையையுடைய வணிகத் தொடர்புகளைப் பேணி வருகிறது. பொருட்களுக்கான ஒன்றியத்தின் மிகப் பெரிய வணிகக் கூட்டாளியாகவும் சீனா உருவாகியுள்ளது.[230] நடு ஆசியா[231] மற்றும் தெற்கு அமைதிப் பெருங்கடல் பகுதியில்[232] சீனா தன் செல்வாக்கை அதிகரித்து வருகிறது. தென்கிழக்காசிய நாடுகள்[233] மற்றும் முக்கியமான தென் அமெரிக்கப் பொருளாதாரங்களுடன்[234] இந்நாடானது வலிமையான வணிக உறவுகளைக் கொண்டுள்ளது. பிரேசில், சிலி, பெரு, உருகுவே, அர்கெந்தீனா மற்றும் பல பிற நாடுகளின் மிகப் பெரிய வணிகக் கூட்டாளியாக உள்ளது.[235]
2013-இல் சீனா பட்டை ஒன்று பாதை ஒன்று திட்டத்தைத் தொடங்கியது. ஆண்டுக்கு ஐஅ$50 பில்லியன் (₹3,57,580 கோடி) முதல் ஐஅ$100 பில்லியன் (₹7,15,160 கோடி) வரையிலான நிதியுடன் தொடங்கப்பட்ட ஒரு பெரிய உலகளாவிய உட்கட்டமைப்புத் திட்டம் இதுவாகும்.[236] நவீன வரலாற்றில் மிகப் பெரிய வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாக இதைக் குறிப்பிடலாம்.[237] கடைசி ஆறு ஆண்டுகளில் இது குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவடைந்துள்ளது. ஏப்பிரல் 2020-இன் படி 138 நாடுகள் மற்றும் 30 பன்னாட்டு அமைப்புகளை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது. தீவிரமான அயல்நாட்டுக் கொள்கைகளுடன் சேர்த்து இத்திட்டத்தின் கவனமானது ஆற்றலுடைய போக்குவரத்து வழிகளை உருவாக்குவதன் மீதும் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு தொடர்புகளையுடைய கடல்சார் பட்டுப் பாதையைக் குறிப்பிடலாம். எனினும், இத்திட்டத்தின் கீழான பல கடன்கள் பேணக் கூடியவையாக இல்லை. கடன் வாங்கிய நாடுகளிடம் இருந்து இடர் காப்புதவிக்காக ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வேண்டுகோள்களை சீனா பெற்றுள்ளது.[238][239]
இராணுவம்

மக்கள் விடுதலை இராணுவமானது உலகின் மிக சக்தி வாய்ந்த இராணுவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சமீபத்திய தசாப்தங்களில் இது துரிதமாக நவீனமயமாக்கப்பட்டுள்ளது.[240] சில நாடுகளின் தொழில்நுட்பத் திருட்டு குற்றச்சாட்டுகளும் இதன் மீது சுமத்தப்பட்டுள்ளன.[241][242][243] 2024-இல் இருந்து இது நான்கு பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. அவை தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் ஏவூர்திப் படை ஆகும். இது நான்கு சுதந்திரமான பிரிவுகளையும் கூடக் கொண்டுள்ளது. அவை விண்வெளிப் படை, இணையப் படை, தகவல் ஆதரவுப் படை மற்றும் இணைந்த பொருட்கள் ஆதரவுப் படை ஆகும். இதில் முதல் மூன்று படைகளானவை தற்போது கலைக்கப்பட்ட உத்தி ஆதரவுப் படையில் இருந்து பிரிக்கப்பட்டவையாகும்.[244] இந்நாட்டின் கிட்டத்தட்ட 22 இலட்சம் செயல்பாட்டிலுள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையானது உலகிலேயே மிக அதிகமானதாகும். மக்கள் விடுதலை இராணுவமானது உலகின் மூன்றாவது மிகப் பெரிய அணு ஆயுதங்களின் கையிருப்பைக் கொண்டுள்ளது.[245][246] எடையின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கடற்படையையும் கொண்டுள்ளது.[247] 2023-ஆம் ஆண்டிற்கான சீனாவின் அலுவல்பூர்வ இராணுவச் செலவீனமானது ஐஅ$224 பில்லியன் (₹16,01,958.4 கோடி) ஆகும். உலகிலேயே இது இரண்டாவது மிகப் பெரிய அளவாகும். இசுடாக்கோம் பன்னாட்டு அமைதி ஆய்வு அமைப்பு (சிப்ரி) இந்நாட்டின் உண்மையான செலவீனமானது அந்த ஆண்டு ஐஅ$296 பில்லியன் (₹21,16,873.6 கோடி)யாக இருந்தது என்று மதிப்பிடுகிறது. உலகின் ஒட்டு மொத்த இராணுவச் செலவீனத்தில் இது 12%-ஐயும், இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7%-ஆகவும் உள்ளது.[248] சிப்ரியின் கூற்றுப் படி 2012 முதல் 2021 வரையிலான இந்நாட்டின் இராணுவச் செலவீனமானது சராசரியாக ஆண்டுக்கு ஐஅ$215 பில்லியன் (₹15,37,594 கோடி) அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7%-ஆக இருந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் ஆண்டுக்கு ஐஅ$734 பில்லியன் (₹52,49,274.4 கோடி) அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6% என்பது மட்டுமே இதை விட உலகிலேயே அதிகமான அளவாகும்.[249] மக்கள் விடுதலை இராணுவமானது கட்சி மற்றும் அரசின் மைய இராணுவ ஆணையத்தால் தலைமை தாங்கப்படுகிறது. அலுவல் பூர்வமாக இரு தனித் தனி அமைப்புகளாக இருந்தாலும் இரு மைய இராணுவ ஆணையங்களும் அடையாளப்படுத்தக் கூடிய உறுப்பினர் பதவியை தலைமைப் பதவி மாறும் காலங்கள் தவிர்த்து பிற காலங்களில் கொண்டுள்ளன. பயன்பாட்டு ரீதயில் இவை இரண்டும் ஒரே அமைப்பாகச் செயல்படுகின்றன. மைய இராணுவக் குழுவின் தலைவரே மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைமைத் தளபதியும் ஆவார்.[250]
சமூக அரசியல் பிரச்சினைகளும், மனித உரிமைகளும்

சீன மக்கள் குடியரசில் மனித உரிமைகளின் நிலையானது அயல் நாட்டு அரசாங்கங்கள், அயல் நாட்டுப் பத்திரிகை முகமைகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படுதல், கட்டாயப்படுத்தி குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்தல், சித்திரவதை, அடிப்படை உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள், மற்றும் மரண தண்டனையை மட்டுமீறிய அளவுக்குப் பயன்படுத்துதல் போன்ற பரவலான குடிசார் உரிமை மீறல்களானவை சீனாவில் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.[188][251] பிரீடம் ஹவுஸ் அமைப்பானது அது தொடங்கப்பட்டதிலிருந்து அதன் பிரீடம் ஆப் த வேர்ல்ட் ஆய்வில் சீனாவை "சுதந்திரமற்ற" நாடு என்று தரப்படுத்தியுள்ளது.[188] அதே நேரத்தில், பன்னாட்டு மன்னிப்பு அவையானது குறிப்பிடத்தக்க அளவுக்கு மனித உரிமைச் சித்திரவதைகளை ஆவணப்படுத்தியுள்ளது.[251] கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், நியாமான நீதி விசாரணைக்கான உரிமை, சமயச் சுதந்திரம், பொது வாக்குரிமை, மற்றும் உடைமை உரிமை உள்ளிட்டவை குடிமக்களின் "அடிப்படை உரிமைகள்" என சீன அரசியல் அமைப்பானது குறிப்பிடுகிறது. எனினும், நடைமுறையில் அரசால் நடத்தப்படும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான விசாரணைகளில் இந்தக் கருத்துருக்கள் முக்கியத்துவமிக்க பாதுகாப்பைக் கொடுப்பது இல்லை.[252][253] ந. ந. ஈ. தி. உரிமை சார்ந்து சீனா வரம்புடைய பாதுகாப்புகளையே கொண்டுள்ளது.[254]
அரசாங்கக் கொள்கைகள் மற்றும் ஆட்சி செய்யும் சீனப் பொதுவுடைமைக் கட்சி குறித்த சில விமர்சனங்கள் சகித்துக் கொள்ளப் பட்டாலும், அரசியல் பேச்சு மற்றும் தகவல்கள் தணிக்கை செய்யப்படுவதில் உலகிலேயே மிகக் கடுமையான அமைப்பு ஒன்றை சீனா கொண்டுள்ளது. கூட்டுச் செயல்பாடுகளைத் தடுக்க இம்முறை வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.[255] உலகின் மிக அகல் விரிவான மற்றும் நுட்பமான தேர்ந்தெடுக்கப்பட்ட முறையுடைய இணையத் தணிக்கையையும் கூட சீனா கொண்டுள்ளது. ஏராளமான இணையதளங்கள் இங்கு தடை செய்யப்படுகின்றன.[256] "சமூக நிலையுறுதிக்கு" ஊறு விளைவிக்கக் கூடிய அச்சுறுத்தல் என கருதப்படுபவற்றை சீனா ஒடுக்குகிறது. அரசாங்கமானது பிரபலப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குகிறது.[257] மேற்கொண்டு சீனா புகைப்படக் கருவிகள், முகத்தை அடையாளப்படுத்தும் மென்பொருள், உணரிகள், மற்றும் தனி நபர் தொழில்நுட்பத்தின் கடுங்கண்காணிப்பு ஆகியவற்றின் ஒரு பெருமளவிலான வேவு இணையத்தை நாட்டில் வாழும் மக்களின் சமூகக் கட்டுப்பாட்டுக்கு ஒரு வழியாகப் பயன்படுத்துகிறது.[258]

திபெத் மற்றும் சிஞ்சியாங்கில் பெருமளவிலான ஒடுக்கு முறை மற்றும் மனித உரிமை முறைகேடுகளுக்காக சீனா மீது அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது.[260][261][262] இப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சிறுபான்மையினர் வாழ்கின்றனர். இவர்கள் வன்முறையான காவல் துறை தடுப்பு நடவடிக்கைகளுக்கும், சமயத் துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர்.[263][264] 2017-இல் இருந்து சிஞ்சியாங்கில் ஒரு கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை சீன அரசாங்கம் நடத்துகிறது. அதே நேரத்தில் சுமார் 10 இலட்சம் உய்குர் மக்கள் மற்றும், பிற இன மற்றும் சமயச் சிறுபான்மையினர் கைதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அடைக்கப்பட்டுள்ளவர்களின் அரசியல் சிந்தனை, அவர்களது அடையாளங்கள் மற்றும் அவர்களது சமய நம்பிக்கைகளை மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.[265] மேற்குலக நாடுகளின் அறிக்கைகளின் படி அரசியல் சிந்தனைத் திணிப்பு, சித்திரவதை, உடல் மற்றும் உளவியல் சித்திரவதை, கட்டாயப்படுத்தப்பட்ட கருவள நீக்கம், பாலியல் முறைகேடு மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட வேலை ஆகியவை இத்தகைய முகாம்களில் பொதுவானவையாக உள்ளன.[266] ஒரு 2020-ஆம் ஆண்டு அயல்நாட்டுக் கொள்கை அறிக்கையின் படி சீனா உய்குர்களை நடத்தும் விதமானது இனப் படுகொலைக்கான ஐ. நா.வின் வரையறையைப் பூர்த்தி செய்கிறது.[267] அதே நேரத்தில், ஒரு தனியான ஐ. நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் அறிக்கையானது அவை மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்கான வரையறையைப் பூர்த்தி செய்யும் நிலையில் உள்ளன என்று குறிப்பிடுகிறது.[268] சீன அதிகார அமைப்புகள் ஆங்காங்கிலும் கருத்து மாறுபாடு கொண்டோர் மீது தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளன. குறிப்பாக, 2020-இல் ஒரு தேசியப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்குப் பிறகு இவ்வாறு செயல்படுத்தியுள்ளன.[269]

2017 மற்றும் 2020-இல் பியூ ஆராய்ச்சி மையமானது சமயம் மீதான சீன அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளின் கடுமைத் தன்மையை உலகின் மிக அதிகமான கட்டுப்பாடுகளில் ஒன்று என்று தர நிலைப்படுத்தியுள்ளது. சீனாவில் சமயம் சார்ந்த சமூகப் பிரச்சினைகளின் கடுமைத் தன்மை குறைவு என்று தர நிலைப்படுத்தினாலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.[270][271] உலகளாவிய அடிமைத் தன சுட்டெண்ணானது 2016-இல் 38 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் (சீன மக்கள் தொகையில் 0.25%) "நவீன அடிமைத் தனத்தின் சூழ்நிலைகளில்" வாழ்கின்றனர் என்று மதிப்பிட்டுள்ளது. மனிதர்கள் கடத்தப்படுதல், கட்டாயப்படுத்தப்பட்ட வேலை, கட்டாயப்படுத்தப்பட்ட திருமணம், குழந்தைத் தொழிலாளர் மற்றும் அரசால் தண்டனைக்காக கொடுக்கப்படும் கட்டாயப்படுத்தப்பட்ட பணி ஆகியவை இதில் உள்ளடங்கியுள்ளன. அரசாங்கத்தால் திணிக்கப்படும் பணி வழியான மறு கல்வியானது (லாவோசியாவோ) 2013-இல் அலுவல் பூர்வமாக நீக்கப்பட்டது. ஆனால், இதன் செயல்பாடுகள் எந்த அளவுக்கு நிறுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.[272] இதை விடப் பெரியதான அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பணி வழியான சீர்திருத்த (லாவோகை) அமைப்பானது பணி சிறைச்சாலைத் தொழிற்சாலைகள், தடுப்புக் காவல் மையங்கள், மற்றும் மறு கல்வி முகாம்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. லாவோகை ஆய்வு அமைப்பானது சூன் 2008-இல் இது போன்ற கிட்டத்தட்ட 1,422 முகாம்கள் உள்ளதாகவும் மதிப்பிட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது குறைவான ஒரு மதிப்பீடாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.[273]
அரசாங்கம் குறித்த பொது மக்களின் பார்வைகள்
செல்வந்தர் மற்றும் ஏழைக்கு இடையிலான வளர்ந்து வரும் இடைவெளி மற்றும் அரசாங்க இலஞ்ச, ஊழல் உள்ளிட்டவை சீனாவில் அரசியல் பிரச்சினைகளாக உள்ளன.[274] இருந்த போதிலும் பன்னாட்டு சுற்றாய்வுகளானவை தங்களது அரசாங்கத்தின் மீது சீனப் பொது மக்கள் ஓர் உயர் நிலை திருப்தியைக் கொண்டுள்ளனர் என்று காட்டுகின்றன.[199](பக்.137) பெருமளவிலான சீன மக்களுக்குக் கிடைக்கப் பெறும் பொருளாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு, மேலும் அரசாங்கத்தின் கவனிக்கும் தன்மை மற்றும் பொறுப்புணர்ச்சி ஆகியவை இத்தகைய பார்வைகளுக்குப் பொதுவான காரணங்களாக உள்ளன.[199] (பக்.136) 2022-ஆம் ஆண்டின் உலக மதிப்புகள் சுற்றாய்வு சீனாவில் பதில் அளித்தவர்களில் 91% பேர் தங்களது அரசாங்கத்தின் மீது குறிப்பிடத்தக்க அளவுக்கு நம்பிக்கையை வைத்துள்ளனர் என்று குறிப்பிடுகிறது.[199](பக்.13) ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் ஒரு சுற்றாய்வானது 2003-இல் இருந்து அரசாங்க நடவடிக்கையில் திருப்தி கொண்ட குடிமக்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதைக் கண்டறிந்துள்ளது. சுற்றாய்வின் வரலாற்றில் இதற்கு முன்னர் இல்லாத வகையிலே சீன அரசாங்கமானது மிக ஆற்றல் வாய்ந்ததாகவும், திறமை வாய்ந்ததாகவும் உள்ளதாக மதிப்பீடும் அளித்து உள்ளனர்.[275]
Remove ads
பொருளாதாரம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் சீனா உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தையும்,[276] கொள்வனவு ஆற்றல் சமநிலையின் படி உலகிலேயே மிகப் பெரிய பொருளாதாரத்தையும் கொண்டுள்ளது.[277] 2022-ஆம் ஆண்டு நிலவரப் படி பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் பொருளாதாரத்தில் சுமார் 18%-ஐ சீனா கொண்டுள்ளது.[278] உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரங்களில் சீனாவும் ஒன்றாகும்.[279] 1978-இல் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதன் பொருளாதார வளர்ச்சியானது கிட்டத்தட்ட தொடர்ச்சியாக 6%-க்கும் அதிகமாக இருந்துள்ளது.[280] உலக வங்கியின் கூற்றுப் படி, 1978-இல் ஐஅ$150 பில்லியன் (₹10,72,740 கோடி)யாக இருந்த சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2022-இல் ஐஅ$17.96 டிரில்லியன் (₹1,284.4 டிரில்லியன்)ஆக வளர்ந்துள்ளது.[281] பெயரளவு தனி நபர் வருமானத்தில் உலகிலேயே 64-ஆவது இடத்தை சீனா பெறுகிறது. இது இந்நாட்டை "மேல்-நடுத்தர வருமானமுடைய" நாடாக ஆக்குகிறது.[282] உலகின் மிகப் பெரிய 500 நிறுவனங்களில் 135 நிறுவனங்கள் சீனாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ளன.[283] குறைந்தது 2024-ஆம் ஆண்டு நிலவரப் படி சீனா உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய "பங்குமுதல் சந்தை (ஆங்கிலம்: Equity Market) மற்றும் முன்பேர வணிகச் சந்தையையும் (ஆங்கிலம்: Futures Market)", மேலும் உலகிலேயே மூன்றாவது மிகப் பெரிய பத்திரச் சந்தையையும் (ஆங்கிலம்: Bond Market) கொண்டுள்ளது.[284](பக்.153)
கிழக்காசிய மற்றும் உலக வரலாற்றின் போக்கு முழுவதும் சீனா உலகின் முன்னணிப் பொருளாதார சக்திகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது. கடைசி 2,000 ஆண்டுகளின் பெரும்பாலான காலத்தில் உலகில் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றை இந்நாடு கொண்டிருந்துள்ளது.[285] இக்காலத்தின் போது செழிப்பு மற்றும் வீழ்ச்சியின் சுழற்சிகளை இது கண்டுள்ளது.[52][286] 1978-இல் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கியதிலிருந்து சீனா ஒரு அதிகப் படியான வேறுபட்ட கூறுகளையுடைய பொருளாதாரமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பன்னாட்டு வணிகத்தில் மிக விளைவாக அமையும் பங்களிப்பாளர்களில் ஒன்றாக இருந்துள்ளது. உற்பத்தி, சில்லறை வணிகம், சுரங்கம், எஃகு, ஜவுளிகள், உந்தூர்திகள், ஆற்றல் உற்பத்தி, பசுமை ஆற்றல், வங்கியியல், மின்னணுப் பொருட்கள், தொலைத் தொடர்புகள், நில உடைமைகள், இணைய வணிகம் மற்றும் சுற்றுலா உள்ளிட்டவை போட்டித் திறனுடைய முக்கியத் துறைகளாக உள்ளன. உலகின் பத்து மிகப் பெரிய பங்குச் சந்தைகளில்[287] சாங்காய், ஆங்காங் மற்றும் சென்சென் ஆகிய மூன்று சந்தைகளை சீனா கொண்டுள்ளது. அக்டோபர் 2020 நிலவரப் படி இம்மூன்றும் சேர்த்து சந்தை மதிப்பாக ஐஅ$15.9 டிரில்லியன் (₹1,137.1 டிரில்லியன்)க்கும் மேல் கொண்டுள்ளன.[288] உலகளாவிய நிதி மையங்களின் 2024-ஆம் ஆண்டு சுட்டெண்ணின் படி உலகின் முதல் பத்து மிகப் போட்டித் திறனுயுடைய நிதி மையங்களில் மூன்றை (சாங்காய், ஆங்காங், மற்றும் சென்சென்) சீனா கொண்டுள்ளது.[289]

நவீன கால சீனாவானது அரசு முதலாளித்துவம் அல்லது கட்சி-அரசு முதலாளித்துவத்தின் ஓர் எடுத்துக்காட்டாக பொதுவாகக் குறிப்பிடப்படுகிறது.[291][292] ஆற்றல் உற்பத்தி மற்றும் பெரும் தொழில் துறைகள் போன்ற உத்தி ரீதியிலான "தூண் துறைகளில்" (ஆங்கிலம்: Pillar sector) அரசு ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களும் பெருமளவுக்கு விரிவடைந்துள்ளன. 2008-இல் சுமார் 3 கோடி தனியார் நிறுவனங்கள் இந்நாட்டில் இருந்ததாக பதிவிடப்பட்டுள்ளது.[293][294][295] அதிகாரப் பூர்வ புள்ளி விவரங்களின் படி தனியார் நிறுவனங்களானவை சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60%-க்கும் மேல் பங்களிக்கின்றன.[296]
2010-ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவை முந்தியதற்குப் பிறகு உலகின் மிகப் பெரிய உற்பத்தி நாடாக சீனா திகழ்கிறது. முந்தைய 100 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமெரிக்காவே உலகின் மிகப் பெரிய உற்பத்தி நாடாக இருந்தது.[297][298] ஐக்கிய அமெரிக்க தேசிய அறிவியல் அமைப்பின் கூற்றுப் படி 2012-ஆம் ஆண்டில் இருந்து உயர் தொழில் நுட்ப உற்பத்தியில் இரண்டாவது மிகப் பெரிய நாடாகவும் கூட சீனா திகழ்கிறது.[299] ஐக்கிய அமெரிக்காவுக்குப் பிறகு இரண்டாவது மிகப் பெரிய சில்லறை வர்த்தக சந்தை சீனா ஆகும்.[300] மின்னணு வணிகத்தில் உலகில் சீனா முன்னிலை வகிக்கிறது. 2021-இல் உலகளாவிய சந்தை மதிப்பில் 37%-க்கும் மேல் இது கொண்டிருந்தது.[301] 2022-ஆம் ஆண்டு நிலவரப் படி மின்சார வாகனங்கள் வாங்குதல் மற்றும் உற்பத்தி, உலகின் அனைத்து மின் இணைப்பியையுடைய மின்சாரச் சீருந்துகளில் பாதியை உற்பத்தி செய்வதிலும், வாங்குவதிலும் சீனா உலகத் தலைவராக உள்ளது.[302] மின்சார வாகனங்களுக்கு மின்கலங்களை உற்பத்தி செய்தல், மேலும் மின்கலங்களுக்கான பல முக்கியமான மூலப் பொருட்களை உற்பத்தி செய்வதிலும் கூட சீனா முன்னணியில் உள்ளது.[303]
சுற்றுலா
2019-இல் 6.57 கோடி பன்னாட்டு சுற்றுலாப் பயணிகள் சீனாவிற்கு வருகை புரிந்தனர்..[304] 2018-இல் உலகில் நான்காவது மிக அதிக வருகை புரியப்பட்ட நாடு இதுவாகும்.[304] பெருமளவிலான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கூட இந்நாடு கொண்டுள்ளது. 2019-இல் இந்நாட்டுக்குள் சீன சுற்றுலாப் பயணிகள் 600 கோடிப் பயணங்களை மேற்கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[305] இத்தாலிக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக அதிக எண்ணிக்கையிலான உலகப் பாரம்பரியக் களங்களை (56) சீனா கொண்டுள்ளது. மிகப் பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்றாக (ஆசியா-பசிபிக் பகுதியில் முதலாமிடம்) இது திகழ்கிறது.
செல்வம்

2022-இல் உலகின் மொத்த செல்வத்தில் 18.6%-ஐ சீனா கொண்டிருந்தது. ஐக்கிய அமெரிக்காவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிகப் பெரிய அளவு இதுவாகும். [306]வரலாற்றில் எந்த பிற நாட்டைக் காட்டிலும் அதிக மக்களை மட்டு மீறிய ஏழ்மை நிலையில் இருந்து வெளிக் கொண்டு வந்த நாடாக சீனா திகழ்கிறது.[307][308] 1978 மற்றும் 2018க்கு இடையில் சீனா 80 கோடிப் பேரை மட்டு மீறிய ஏழ்மை நிலையில் இருந்து வெளிக் கொண்டு வந்துள்ளது.[199](பக்.23) 1990 முதல் 2018 வரையிலான கால கட்டத்தில் ஒரு நாளைக்கு ஐஅ$1.9 (₹135.9)-ஐ (2011 கொள்வனவு ஆற்றல் சமநிலை) விடக் குறைவான வருமானத்தில் வாழும் சீன மக்களில் தகவுப் பொருத்த வீதமானது 66.3%-இல் இருந்து 0.3%-ஆகக் குறைந்தது. ஒரு நாளைக்கு ஐஅ$3.2 (₹228.9)-ஐ விடக் குறைவான வருமானத்தில் வாழ்வோரின் பங்கை 90.0%-இல் இருந்து 2.9%-ஆகக் குறைத்துள்ளது. ஒரு நாளைக்கு ஐஅ$5.5 (₹393.3)-ஐ விடக் குறைவான வருமானத்தில் வாழ்வோரின் பங்கை 98.3%-இலிருந்து 17%-ஆகக் குறைத்துள்ளது.[309]
1978 முதல் 2018 வரை சராசரி வாழ்க்கைத் தரமானது 26 மடங்காக உயர்ந்தது.[310] கடந்த 40 ஆண்டுகளில் சீனாவில் சம்பளங்களானவை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளன. 1978 முதல் 2007 வரை உண்மையான (விலைவாசி உயர்வுக்கு சரி செய்யப்பட்ட) சம்பளங்களானவை ஏழு மடங்கு அதிகரித்துள்ளன.[311] தனிநபர் சராசரி வருமானங்களும் கூட குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளன. 1949-இல் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட போது சீனாவில் தனிநபர் சராசரி வருமானமானது உலகின் சராசரி வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்காக இருந்தது. தற்போது தனிநபர் சராசரி வருமானமானது உலகின் சராசரி அளவுக்குச் சமமாக உள்ளது.[310] சீனாவின் வளர்ச்சியானது பெருமளவுக்கு சமமற்றதாக உள்ளது. கிராமப்புறம் மற்றும் நாட்டின் உட்பகுதிகளுடன் ஒப்பிடும் போது இதன் முக்கியமான நகரங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளானவை மிக அதிக அளவுக்குச் செழிப்பானவையாக உள்ளன.[312] பொருளாதார சமமற்ற நிலையின் ஓர் உயர் நிலையை இந்நாடு கொண்டுள்ளது.[313] பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு இந்நிலை வேகமாக அதிகரித்து வந்தது.[314] 2010-களில் இது குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வந்தாலும் இந்நிலை நீடிக்கிறது.[315] உலக வங்கியின் கூற்றுப் படி 2021-இல் சீனாவின் ஜினி குறியீடானது 0.357 ஆகும்.[11]
மார்ச் 2024 நிலவரப் படி நூறு கோடிகள் மற்றும் தசம இலட்சங்கள் கணக்கில் சொத்து மதிப்புகளை உடைய ஒட்டு மொத்த பணக்காரர்களின் எண்ணிக்கையில் ஐக்கிய அமெரிக்காவுக்குப் பிறகு உலகிலேயே இரண்டாவது இடத்தை சீனா பெறுகிறது. சீனாவில் 473 பேர் நூறு கோடிகள் கணக்கிலும்,[316] 62 இலட்சம் பேர் தசம இலட்சங்கள் கணக்கிலும்[306] சொத்துக்களை உடையவர்களாக உள்ளனர். 2019-இல் கிரெடிட் சூஸ் நிறுவனத்தின் உலகளாவிய செல்வம் குறித்த அறிக்கையின் படி குறைந்தது ஐஅ$1,10,000 (₹78,66,760)-ஐ நிகர செல்வமாகக் கொண்டுள்ள மக்களின் எண்ணிக்கையில் ஐக்கிய அமெரிக்காவை சீனா முந்தியது.[317][318] சனவரி 2021 நிலவரப் படி நூறு கோடிகள் கணக்கில் சொத்துக்களை உடைய 85 பெண் பணக்காரர்களைச் சீனா கொண்டுள்ளது. உலகளாவிய மொத்தத்தில் மூன்றில் இரு பங்கு இதுவாகும்.[319] 2015-இலிருந்து உலகின் மிகப் பெரிய நடுத்தர வர்க்க மக்கள் தொகையைச் சீனா கொண்டுள்ளது.[320] 2024-இல் நடுத்தர வர்க்கத்தினர் 50 கோடிப் பேராக அதிகரித்தனர்.[321]
உலகப் பொருளாதாரத்தில் சீனா
2001-இலிருந்து உலக வணிக அமைப்பின் உறுப்பினராக சீனா திகழ்கிறது. உலகின் மிகப் பெரிய வணிக சக்தி சீனா தான்.[322] 2016 வாக்கில் 124 நாடுகளின் மிகப் பெரிய வணிகக் கூட்டாளியாக சீனா திகழ்ந்தது.[323] இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகளின் மொத்த அளவின் படி 2013-இல் உலகின் மிகப் பெரிய வணிகம் செய்யும் நாடாக சீனா உருவானது. மேலும், உலகின் மிகப் பெரிய பண்ட இறக்குமதியாளராக சீனா திகழ்கிறது. கடல் சார் "உலர்-மொத்த சந்தையில்" (ஆங்கிலம்: Dry-bulk market) சுமார் 45%ஐச் சீனா கொண்டுள்ளது.[324][325]
2024 மார்ச் 4 அன்றைய நிலவரப் படி சீனாவின் அன்னியச் செலாவணி கையிருப்பானது. ஐஅ$3.246 டிரில்லியன் (₹232.1 டிரில்லியன்)களை எட்டியது. உலகின் மிகப் பெரிய கையிருப்பாக இது இதை ஆக்குகிறது.[326] 2022-இல் உள்நாட்டுக்குள் வரும் அன்னிய நேரடி முதலீட்டில் உலகின் மிகப் பெரிய பெறுநர்களில் ஒன்றாக சீனா திகழ்ந்தது. ஐஅ$180 பில்லியன் (₹12,87,288 கோடி)யை ஈர்த்தது. எனினும், இதில் பெரும்பாலானவை ஆங்காங்கில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது.[327] 2021-இல் சீனாவுக்குள் அனுப்பப்பட்ட அன்னியச் செலவாணி பணமானது ஐஅ$53 பில்லியன் (₹3,79,034.8 கோடி)-ஆக இருந்தது. உலகில் பணங்களைப் பெறும் இரண்டாவது மிகப் பெரிய நாடாக இது இதை ஆக்கியது.[328] சீனா வெளிநாடுகளிலும் கூட முதலீடு செய்கிறது. 2023-இல் வெளி நோக்கிச் செல்லும் அன்னிய நேரடி முதலீட்டில் மொத்தமாக ஐஅ$147.9 பில்லியன் (₹10,57,721.6 கோடி)யை சீனா முதலீடு செய்தது.[329] சீன நிறுவனங்களால் முதன்மையான அயல்நாட்டு நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கையகப்படுத்தப்படுகின்றன.[330]
சீனாவின் பணமான ரென்மின்பியானது மதிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் வாதிடுகின்றனர். சீன அரசாங்கத்தின் தலையீடு காரணமாக இது நிகழ்ந்துள்ளது என்று குறிப்பிடப்படுகிறது. வணிகத்தில் ஒரு நியாயமற்ற அனுகூலத்தை இது சீனாவுக்குக் கொடுக்கிறது.[331] போலிப் பொருட்களை பெரும் எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதற்காகவும் கூட சீனா பரவலாக விமர்சிக்கப்படுகிறது.[332][333] சீனா "அறிவுசார் உடைமை உரிமைகளை" மதிக்காமல் வேவு நடவடிக்கைகளின் மூலம் அறிவுசார் உடைமைகளைத் திருடுவதாகவும் கூட சீனா மீது ஐக்கிய அமெரிக்க அரசாங்கமானது குற்றம் சாட்டுகிறது.[334] 2020-இல் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார நுட்பச் சுட்டெண்ணானது சீனாவின் ஏற்றுமதிகளின் நுட்பத்தை உலகிலேயே 17-ஆவது இடமென்று தரப்படுத்தியது. 2010-இல் 24 என்ற இடத்திலிருந்து இது ஓர் அதிகரிப்பாகும்.[335]
சீன அரசாங்கமானது தனது பணமான ரென்மின்பியைச் சர்வதேசமயமாக்க ஊக்குவிக்கிறது. ஐக்கிய அமெரிக்காவின் பணமான டாலரை சீனா சார்ந்துள்ளதிலிருந்து மாறுவதன் பொருட்டு இவ்வாறு ஊக்குவிக்கிறது. சர்வதேச நிதி அமைப்பில் காணப்படும் பலவீனங்களின் ஒரு விளைவாக இவ்வாறு செயல்படுகிறது.[336] ரென்மின்பியானது பன்னாட்டு நாணய நிதியத்தின் சிறப்பு வாங்கும் உரிமைகளின் ஒரு பகுதியாகவும், 2023-ஆம் ஆண்டு நிலவரப் படி உலகின் நான்காவது மிக அதிகமாக வணிகம் செய்யப்படும் பணமாகவும் உள்ளது.[337] எனினும், முதலீட்டுக் கட்டுப்பாடுகளின் ஒரு பங்குக் காரணமாக ரென்மின்பியானது ஒரு முழுவதுமாக மாற்றக்கூடிய பணம் என்ற நிலையை அடைவதில் சற்றே பின்னோக்கியே உள்ளது. பன்னாட்டு வணிகத்தின் ஒட்டு மொத்த எண்ணிக்கையில் யூரோ, ஐக்கிய அமெரிக்க டாலர் மற்றும் சப்பானிய யென் ஆகிய பணங்களுடன் ரென்மின்பியானது தொடர்ந்து பின் தங்கியே உள்ளது.[338]
அறிவியலும், தொழில்நுட்பமும்
வரலாற்று ரீதியாக
மிங் அரசமரபின்[339] காலம் வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஓர் உலகத் தலைவராக சீனா திகழ்ந்தது. காகிதம் தயாரித்தல், அச்சிடுதல், திசைகாட்டி மற்றும் வெடிமருந்து (நான்கு பெரிய கண்டுபிடிப்புகள்) போன்ற பண்டைக் கால மற்றும் நடுக் காலச் சீனக் கண்டுபிடிப்புகளும், தயாரிப்புகளும் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படத் தொடங்கின. எதிர்ம எண்களை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் சீனக் கணிதவியலாளர்கள் ஆவர்.[340][341] 17-ஆம் நூற்றாண்டு வாக்கில் மேற்குலகமானது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் சீனாவை முந்தியது.[342] இந்தத் தொடக்க நவீன காலப் பெரும் மாற்றத்துக்கான காரணங்களானவை அறிஞர்களால் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன.[343]
19-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியக் குடியேற்ற சக்திகள் மற்றும் ஏகாதிபத்திய சப்பானால் தொடர்ச்சியாக இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு சுய-வலிமைப்படுத்தும் இயக்கத்தின் ஒரு பகுதியாக சீன சீர்திருத்தவாதிகள் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். 1949-இல் பொதுவுடைமைவாதிகள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு சோவியத் ஒன்றியத்தின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மையத் திட்டமிடலின் ஒரு பகுதியாக அறிவியல் ஆராய்ச்சியானது திகழ்ந்தது.[344] 1976-இல் மாவோவின் இறப்பிற்குப் பிறகு நான்கு நவீன மயமாக்கல்களில் ஒன்றாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பமானது ஊக்குவிக்கப்பட்டது.[345] சோவியத் மாதிரியை அகத் தூண்டுதலாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்வி அமைப்பானது படிப்படியாக சீர்திருத்தப்பட்டது.[346]
நவீன சகாப்தம்
சீனப் பண்பாட்டுப் புரட்சியின் முடிவிலிருந்து அறிவியல் ஆராய்ச்சியில் முக்கிய முதலீடுகளை சீனா செய்துள்ளது.[347] ஆய்வுக்கும், விருத்திக்கும் செலவிடுதலில் ஐக்கிய அமெரிக்காவை சீனா வேகமாக நெருங்கி வருகிறது.[348][349] சீனா அதிகாரப் பூர்வமாக 2023-இல் ஆய்வு மற்றும் விருத்திக்கு தன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2.6%-ஐச் செலவிட்டது. இதன் மொத்த மதிப்பு சுமார் ஐஅ$458.5 பில்லியன் (₹32,79,008.6 கோடி) ஆகும்.[350] உலக அறிவுசார் உடைமைக் குறிப்பான்களின் படி 2018 மற்றும் 2019-இல் ஐக்கிய அமெரிக்கா பெற்றதை விட சீனா அதிக காப்புரிமை விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. காப்புரிமை ஆவணங்கள், பயன்பாட்டு மாதிரிகள், வணிக உரிமைக் குறிகள், தொழில்துறை வடிவமைப்புகள், மற்றும் படைப்புசார் பொருட்களின் ஏற்றுமதிகள் ஆகியவற்றில் 2021-ஆம் ஆண்டு சீனா உலக அளவில் முதலிடம் பெற்றுள்ளது.[351][352][353] 2024-இல் உலகளாவிய புத்தாக்கச் சுட்டெண்ணில் 11-ஆவது இடத்தை சீனா பெற்றது. 2013-இல் 35 என்ற இதன் தர நிலையிலிருந்து இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.[354][355][356] சீன "வேகமிகு கணினிகளானவை" (ஆங்கிலம்: Super Computers) உலகிலேயே மிக வேகமான கணினிகளில் ஒன்றாக தரநிலைப்படுத்தப்படுகின்றன.[357][t] மிக முன்னேற்றமடைந்த அரைக் கடத்திகள் (ஆங்கிலம்: Semiconductors) மற்றும் தாரை விமான எந்திரங்களை உருவாக்கும் இதன் முயற்சிகளுக்கு தாமதங்கள் மற்றும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.[358][359]
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் ஆகியவற்றுக்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுத்து கல்வி அமைப்பை சீனா மேம்படுத்தி வருகிறது.[360] இதன் கல்விசார் பதிப்பு அமைப்பானது 2016-இல் உலகிலேயே மிக அதிக அறிவியல் கட்டுரைகளைப் பதிப்பித்த அமைப்பாக மாறியது.[361][362][363] 2022-இல் இயற்கைச் சுட்டெண்ணில் ஐக்கிய அமெரிக்காவை சீனா முந்தியது. முன்னணி அறிவியல் இதழ்களில் பதிப்பிக்கப்படும் கட்டுரைகளின் பங்கை அளவீடாகக் கொண்ட சுட்டெண் இதுவாகும்.[364][365]
விண்வெளித் திட்டம்

சோவியத் ஒன்றியத்திடம் இருந்து சில தொழில் நுட்ப உதவிகளுடன் 1958-இல் சீன விண்வெளித் திட்டமானது தொடங்கப்பட்டது. எனினும், தாங் பாங் காங் 1 என்ற நாட்டின் முதல் செயற்கைக்கோளானது 1970-ஆம் ஆண்டு தான் ஏவப்பட்டது. தன்னந்தனியாக செயற்கைக் கோளை செலுத்திய ஐந்தாவது நாடாக இது சீனாவை ஆக்கியது.[366]
2003-இல் விண்வெளிக்கு மனிதர்களை தன்னந்தனியாக அனுப்பிய உலகின் மூன்றாவது நாடாக சீனா உருவானது. சென்சோ 5 விண்கலத்தில் யாங் லிவேயின் பயணத்துடன் இது நிகழ்த்தப்பட்டது. 2023 நிலவரப் படி 18 சீன நாட்டவர்கள் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதில் இரு பெண்களும் அடங்குவர். 2011-இல் சீனா தன் முதல் விண்வெளி நிலைய சோதனையான தியேன்குங்-1 விண்கலத்தை அனுப்பியது.[367] 2013-இல் ஒரு சீன எந்திர தரை ஊர்தியான யுது நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இது சான்யே 3 திட்டத்தின் ஒரு பகுதியாக அனுப்பப்பட்டது.[368]
2019-இல் சான்யே 4 எனப்படும் ஓர் ஊர்தியை நிலவின் பின்புறத்தில் தரையிறங்கச் செய்த முதல் நாடாக சீனா உருவானது.[369] 2020-இல் சான்யே 5 விண்கலமானது நிலவில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பக் கொண்டு வந்தது. தன்னந்தனியாக இவ்வாறு செய்த மூன்றாவது நாடாக இது சீனாவை ஆக்கியது. [370]2021-இல் செவ்வாய் கிரகத்தின் மீது ஒரு விண்கலத்தை இறக்கிய மூன்றாவது நாடாகவும், செவ்வாய் மீது ஒரு தரை ஊர்தியை (சுரோங்) இறக்கிய இரண்டாவது நாடாகவும் சீனா உருவானது.[371] சீனா அதன் சொந்த கூறு நிலை விண்வெளி நிலையமான தியாங்கோங்கை 3 நவம்பர் 2022 அன்று பூமியின் தாழ் வட்டப்பாதையில் நிலை நிறுத்தியது.[372][373][374] 29 நவம்பர் 2022 அன்று தியாங்கோங்கில் முதல் குழுவினரை இடம் மாற்றும் செயல்பாட்டை சீனா நடத்தியது.[375][376]
மே 2023-இல் 2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவில் இறக்கும் ஒரு திட்டத்தை சீனா அறிவித்தது.[377] அதற்காக லாங் மார்ச் 10 என்று அழைக்கப்படும் நிலவுக்குச் செல்லக்கூடிய மிகக் கனமான ஏவூர்தி, மனிதர்களைக் கொண்டு சொல்லக்கூடிய ஒரு புதிய விண்கலம் மற்றும் நிலவில் மனிதர்களை இறக்கக்கூடிய விண்கலம் ஆகியவற்றை சீனா உருவாக்கி வருகிறது.[378][379]
2024 மே 3 அன்று சீனா சான்யே 6 விண்கலத்தை அனுப்பியது. நிலவின் இருட்டான பகுதியில் அப்பல்லோ வடிநிலத்திலிருந்து நிலவின் முதல் மாதிரிகளை இது எடுத்தது.[380] இது நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு வந்த சீனாவின் இரண்டாவது பயணமாகும். முதல் பயணமானது நான்கு ஆண்டுகளுக்கு முன் நிலவின் வெளிச்சமான பகுதியில் இருந்து சான்யே 5 விண்கலத்தால் கொண்டு வரப்பட்டது.[381] ஜின்சான் என்றழைக்கப்பட்ட ஒரு சீன தரை ஊர்தியையும் கூட இது கொண்டு சென்றது. நிலவின் மேற்பரப்பில் அகச்சிவப்புக் கதிர் படங்களை எடுப்பதற்காக இது அனுப்பப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் சான்யே 6 இறங்கு விண்கலத்தின் படத்தை எடுத்து அனுப்பியது.[382] இறங்கு விண்கலம்-ஏறு விண்கலம்-தரை ஊர்தி ஆகிய கூட்டானது சுற்றும் விண்கலம் மற்றும் திரும்பிக் கொண்டு வரும் விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இந்த விண்கலமானது 2024 சூன் 1 அன்று ஒ. பொ. நே. 22:23-இல் இறங்கியது.[383][384] நிலவின் அடிப்பரப்பில் இருந்து நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு ஏறு விண்கலமானது 2024 சூன் 3 அன்று ஒ. பொ. நே. 23:38-இல் திரும்ப அனுப்பப்பட்டது. தரையிறங்கிய விண்கலத்தால் சேகரிக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு சென்றது. இந்தத் தரையிறங்கிய விண்கலமானது மற்றொரு எந்திரக் குறியிடச் சந்திப்பை நடத்தியது. பிறகு, நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்த விண்கலத்துடன் இணைந்தது. மாதிரிகளைக் கொண்டிருந்த கொள்கலனானது பூமிக்குத் திரும்பி வரும் விண்கலத்துக்குப் பிறகு மாற்றப்பட்டது. திரும்பி வரும் விண்கலமானது சூன் 2024-இல் உள் மங்கோலியாவில் தரையிறங்கியது. நிலவின் இருளான பகுதியில் இருந்து பூமி சாராத மாதிரிகளைத் திரும்பிக் கொண்டு வரும் திட்டத்தை வெற்றிகரமாக முடித்தது.
Remove ads
உட்கட்டமைப்பு
தசாப்தங்களுக்கு நீண்டு செயல்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு பெருக்க வள காலத்திற்குப் பிறகு சீனா ஏராளமான உலகின் முன்னணி உட்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.[385] மிகப் பெரிய உயர்-வேகத் தொடருந்து அமைப்பு,[386] மிகப் பெரிய எண்ணிக்கையில் மிக உயரமான வானுயர்க் கட்டடங்கள்,[387] மிகப் பெரிய மின்சார உற்பத்தி நிலையம் (மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை)[388] மற்றும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான செயற்கைக் கோள்களை உடைய ஓர் உலகளாவிய செயற்கைக் கோள் இடஞ்சுட்டல் அமைப்பு (பெயிடோ) ஆகியவற்றை இந்நாடு கொண்டுள்ளது.[389]
தொலைத் தொடர்புகள்

உலகின் மிகப் பெரிய தொலைபேசி சந்தை சீனா தான். எந்த ஒரு நாட்டையும் விட மிக அதிக எண்ணிக்கையிலான செயல்பாட்டிலுள்ள கைபேசிகளை தற்போது இந்நாடு கொண்டுள்ளது. ஏப்பிரல் 2023 நிலவரப்படி 170 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை இந்நாடு கொண்டுள்ளது. மிகப் பெரிய எண்ணிக்கையிலான இணைய மற்றும் அகலப்பட்டை இணையப் பயன்பாட்டாளர்களை இந்நாடு கொண்டுள்ளது. திசம்பர் 2023 நிலவரப்படி இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையானது இந்நாட்டில் 109 கோடிக்கும் அதிகமாக உள்ளது.[390] இது இதன் மக்கள் தொகையில் சுமார் 77.5%-க்கு சமமானதாகும்.[391] 2018 வாக்கில் சீனா 100 கோடிக்கும் மேற்பட்ட நான்காம் தலைமுறை (4ஜி) இணையப் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது. உலகின் மொத்த நான்காம் தலைமுறை இணையப் பயன்பாட்டாளர்களில் இது 40% ஆகும்.[392] 2018-இன் பிற்பகுதியில் சீனா 5ஜி தொழில்நுட்பத்தில் துரித முன்னேற்றங்களை நடத்தி வருகிறது. பெரும் அளவிலான மற்றும் வணிக ரீதியான 5ஜி சோதனைகளை சீனா தொடங்கியுள்ளது.[393] திசம்பர் 2023 நிலவரப்படி சீனா 81 கோடிக்கும் மேற்பட்ட 5ஜி பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது. 33.80 இலட்சம் அடிப்படை நிலையங்கள் இந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன.[394]
சீனா மொபைல், சீனா யுனிகாம், மற்றும் சீனா டெலிகாம் ஆகியவை சீனாவில் கைபேசி மற்றும் இணைய சேவை வழங்கும் மூன்று மிகப் பெரிய நிறுவனங்கள் ஆகும். சீனா டெலிகாம் நிறுவனம் மட்டுமே 14.50 கோடிக்கும் மேற்பட்ட அகலப்பட்டை இணையச் சந்தாதாரர்கள் மற்றும் 30 கோடிக்கும் மேற்பட்ட தொலைபேசிப் பயனர்களைக் கொண்டுள்ளது. சீனா யுனிகாம் நிறுவனமானது சுமார் 30 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. சீனா மொபைல் நிறுவனமானது இந்த மூன்றிலுமே மிகப் பெரியதாகும். 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி இது 92.5 கோடிப் பயனர்களை கொண்டுள்ளது.[395] அனைத்தையும் சேர்த்து இந்த மூன்று நிறுவனங்களும் சீனாவில் 34 இலட்சத்துக்கும் மேற்பட்ட 4ஜி அடிப்படை நிலையங்களைக் கொண்டுள்ளன.[396] பல சீன தொலைத்தொடர்பு நிறுவனங்கள், மிகக் குறிப்பாக ஹூவாய் மற்றும் இசட். டி. ஈ. ஆகியவை சீன இராணுவத்துக்காக வேவு பார்ப்பதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளன.[397]
சீனா தன் சொந்த செய்மதி இடஞ்சுட்டல் அமைப்பை உருவாக்கியுள்ளது. இது பெயிடோ என்று அழைக்கப்படுகிறது. 2012-இல் ஆசியா முழுவதும் வணிக ரீதியான இடஞ்சுட்டல் சேவைகளை இது அளிக்கத் தொடங்கியது.[398] 2018-இன் முடிவில் உலகளாவிய சேவைகளையும் அளிக்கத் தொடங்கியது.[399] ஜிபிஎஸ் மற்றும் குளொனொஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவது முழுமையான உலகளாவிய இடஞ்சுட்டல் செயற்கைக் கோள் அமைப்பாக இது உள்ளது.[400]
போக்குவரத்து


1990-களின் பிந்தைய பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளின் ஓர் இணையத்தை உருவாக்கியதன் மூலம் சீனாவின் தேசிய சாலை அமைப்பானது குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. 2022-இல் சீனாவின் நெடுஞ்சாலைகள் ஒட்டு மொத்த நீளமாக 1,77,000 கிலோமீட்டர்களை அடைந்தன. உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை அமைப்பாக இது இதை ஆக்கியது.[401] வாகனங்களுக்கான உலகின் மிகப் பெரிய சந்தையை சீனா கொண்டுள்ளது.[402][403] வாகன விற்பனை மற்றும் உற்பத்தி ஆகிய இரண்டிலுமே ஐக்கிய அமெரிக்காவை சீனா முந்தியது. 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய சீருந்துகள் ஏற்றுமதியாளர் சீனா தான்.[404][405] சீனாவின் சாலை அமைப்பின் துரித வளர்ச்சியின் ஒரு பக்க விளைவாக சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளன.[406] நகர்ப்புறப் பகுதிகளில் மிதிவண்டிகள் தொடர்ந்து ஒரு பொதுவான போக்குவரத்து வாகனமாக உள்ளன. பிற வகை வாகனங்களின் அதிகரித்து வரும் பயன்பாடு இருக்கும் போதிலும் இந்நிலை தொடர்கிறது. 2023 நிலவரப்படி சீனாவில் தோராயமாக 20 கோடி மிதிவண்டிகள் உள்ளன.[407]
சீனாவின் தொடருந்து அமைப்பானது சீன அரசு தொடருந்து குழு நிறுவனம் எனும் அரசு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. உலகின் மிக பரபரப்பான தொடருந்து அமைப்பில் இதுவும் ஒன்றாகும். 2006-இல் உலகின் இருப்புப் பாதைகளில் வெறும் 6%-ஐக் கொண்ட இந்நாடு உலகின் தொடருந்து போக்குவரத்து மதிப்பில் கால் பங்கை இயக்கியது.[408] 2023-ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்நாடானது 1,59,000 கிலோமீட்டர்கள் நீள இருப்புப் பாதைகளைக் கொண்டுள்ளது. உலகின் இரண்டாவது மிக நீளமான இருப்புப் பாதை அமைப்பு இதுவாகும்.[409] தொடருந்து அமைப்பானது பெருமளவிலான தேவையைப் பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறது. குறிப்பாக சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது இந்நிலை காணப்படுகிறது. உலகின் மிகப் பெரிய வருடாந்திர மனித இடம் பெயர்வு சீனப் புத்தாண்டின் போது தான் நடைபெறுகிறது.[410] சீனாவின் உயர்-வேகத் தொடருந்து அமைப்பின் கட்டமைப்பானது 2000-களின் தொடக்கத்தில் தொடங்கியது. 2023-இன் முடிவில் சீனாவில் உயர்-வேகத் தொடருந்து அமைப்பானது அதற்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட வழிகளில் மட்டும் 45,000 கிலோமீட்டர் நீளங்களை அடைந்தது. இது இதை உலகின் மிக நீளமான உயர்-வேகத் தொடருந்து அமைப்பாக ஆக்குகிறது.[411] பெய்சிங்-சாங்காய், பெய்சிங்-தியான்ஜின் மற்றும் செங்டு-சோங்கிங் இருப்புப் பாதைகள் மீதான சேவைகளானவை மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகம் வரையில் இயக்கப்படுகின்றன. இது இவற்றை உலகின் மிக வேகமான பொதுவான உயர்-வேகத் தொடருந்து சேவைகளாக ஆக்குகிறது. 2019-இல் ஆண்டில் பயணிகளின் 230 கோடிக்கும் மேற்பட்ட பயணங்களை இந்நாடு கொண்டிருந்தது. உலகின் மிக பரபரப்பான தொடருந்து அமைப்பு இது தான்.[412] இந்த அமைப்பானது பெய்சிங்-குவாங்சோ உயர்-வேக இருப்புப் பாதையை உள்ளடக்கியுள்ளது. உலகின் மிக நீளமான ஒற்றை உயர்-வேகத் தொடருந்து இருப்புப் பாதை அமைப்பு இது தான். உலகின் மூன்று மிக நீளமான இருப்புப் பாதை பாலங்களைக் கொண்டுள்ளதாக பெய்சிங்-சாங்காய் உயர்-வேகத் தொடருந்து அமைப்பு திகழ்கிறது.[413] சாங்காய் மக்லேவ் தொடருந்தானது மணிக்கு 431 கிலோமீட்டர் வேகத்தை அடைகிறது. உலகின் மிக வேகமான வணிகத் தொடருந்து சேவை இது தான்.[414] 2000-இலிருந்து சீன நகரங்களில் துரிதப் போக்குவரத்து அமைப்புகளின் வளர்ச்சியானது வேகப்படுத்தப்பட்டுள்ளது.[415] திசம்பர் 2023 நிலவரப்படி, 55 சீன நகரங்கள் நகர்ப்புறப் பெருந்திரள் பொதுப் பயன்பாட்டுப் போக்குவரத்து அமைப்புகளைச் செயல்பாட்டில் கொண்டுள்ளன.[416] 2020-இன் நிலவரப்படி உலகின் ஐந்து மிக நீளமான மெட்ரோ அமைப்புகளை சீனா கொண்டுள்ளது. சாங்காய், பெய்சிங், குவாங்சோ, செங்குடு மற்றும் சென்சென் ஆகிய நகரங்களில் உள்ள இந்த அமைப்புகள் மிகப் பெரியவையாக உள்ளன.
சீனாவின் குடிசார் விமானப் போக்குவரத்துத் துறையானது பெரும்பாலும் அரசு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. முதன்மையான சீன விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் பெரும் பங்கை சீன அரசாங்கமானது தொடர்ந்து கொண்டுள்ளது. 2018-இல் சந்தையில் 71%-ஐ ஒட்டு மொத்தமாகக் கொண்டிருந்த சீனாவின் முதல் மூன்று விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அனைத்துமே அரசால் உடைமையாகக் கொள்ளப்பட்டவையாக இருந்தன. கடைசி தசாப்தங்களில் விமானப் பயணமானது துரிதமாக விரிவடைந்துள்ளது. 1990-இல் 1.66 கோடியிலிருந்து, 2017-இல் 55.12 கோடியாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.[417] 2024-இல் சீனா தோராயமாக 259 விமான நிலையங்களைக் கொண்டிருந்தது.[418]
சீனா 2,000-க்கும் மேற்பட்ட ஆற்று மற்றும் கடல் துறைமுகங்களைக் கொண்டுள்ளது. இதில் சுமார் 130 துறைமுகங்கள் அயல்நாட்டுக் கப்பல் போக்குவரத்துக்கு உகந்தவையாக உள்ளன.[419] உலகின் 50 பரபரப்பான சரக்குத் துறைமுகங்களில் 15 சீனாவில் அமைந்துள்ளன. சீனாவின் மிக பரபரப்பான துறைமுகம் சாங்காய் ஆகும். உலகின் மிக பரபரப்பான துறைமுகமும் கூட இது தான்.[420] இந்நாட்டின் உள்நாட்டு நீர் வழிகளானவை உலகின் ஆறாவது மிக நீண்டவையாக உள்ளன. இவற்றின் ஒட்டு மொத்த நீளம் 27,700 கிலோமீட்டர்கள் ஆகும்.[421]
குடிநீர் வழங்கலும், கழிவு நீக்க அமைப்பும்
சீனாவில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீக்க அமைப்பு உட்கட்டமைப்பானது துரித நகரமயமாக்கல், மேலும் குடிநீர் பற்றாக்குறை, மாசு கலத்தல் மற்றும் மாசுபடுதல் போன்ற சவால்களை எதிர் கொண்டுள்ளது.[422] குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீக்க அமைப்புக்கான இணைந்த மேற்பார்வைத் திட்டத்தின் கூற்றுப்படி சீனாவில் கிராமப்புற மக்களில் சுமார் 36% பேர் 2015-ஆம் ஆண்டு நிலவரப்படி இன்னும் மேம்படுத்தப்பட்ட கழிவு நீக்க அமைப்புக்கான வழிகளைக் கொண்டிராமல் உள்ளனர்.[423][needs update] தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தெற்கு-வடக்கு நீர் இடம் மாற்றத் திட்டமானது நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு முயன்றுள்ளது.[424]
Remove ads
மக்கள் தொகை

2020-ஆம் ஆண்டு சீன மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது தோராயமாக 141,17,78,724 பேரைக் கணக்கெடுத்துள்ளது. இதில் சுமார் 17.95% பேர் 14 வயது அல்லது அதற்குக் கீழ் உள்ளவர்களாகவும், 63.35% பேர் 15 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும், மற்றும் 18.7% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் உள்ளனர்.[425] 2010 மற்றும் 2020-க்கு இடையில் சராசரி மக்கள் தொகை வளர்ச்சி வீதமானது 0.53%-ஆக இருந்தது.[425]
மக்கள் தொகை வளர்ச்சி குறித்து கொண்டுள்ள கவலைகள் காரணமாக 1970-களின் மத்தியில் ஒரு தம்பதிக்கு இரு குழந்தைகள் என்ற வரம்பை சீனா செயல்படுத்தியது. 1979-இல் இதைவிட மேலும் கடுமையான வரம்பாக ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற அறிவுறுத்தலைத் தொடங்கியது. எனினும், 1980-களின் நடுவில் தொடங்கி கடுமையான வரம்புகளின் தன்மை காரணமாக சீனா சில முதன்மையான விலக்குகளை அனுமதிக்கத் தொடங்கியது. குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் அனுமதித்தது. 1980-களின் நடுப்பகுதி முதல் 2015 வரை "1.5"-குழந்தைக் கொள்கையை கொண்டு வருவதில் இது முடிவடைந்தது. இனச் சிறுபான்மையினரும் கூட ஒரு குழந்தை வரம்புகளிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர்.[426] இக்கொள்கையின் அடுத்த முதன்மையான தளர்வானது திசம்பர் 2013-இல் கொண்டு வரப்பட்டது. ஒரு பெற்றோரில் ஒருவர் ஒற்றைக் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் குடும்பங்கள் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதிக்கத் தொடங்கியது.[427] 2016-இல் இரு-குழந்தைக் கொள்கைக்கு ஆதரவாக ஒரு-குழந்தைக் கொள்கையானது இடமாற்றப்பட்டது.[428] 2021 மே 31 அன்று மூன்று-குழந்தைக் கொள்கையானது அறிவிக்கப்பட்டது. இதற்கு முதன்மையான காரணம் மக்களின் சராசரி வயது அதிகரித்ததாகும்.[428] சூலை 2021-இல் அனைத்துக் குடும்ப அளவு வரம்புகளும், அவற்றை மீறினால் போடப்பட்ட அபராதங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன.[429] 2023-இல் சீனாவின் கருவள வீதமானது 1.09-ஆக இருந்தது. உலகின் மிகக் குறைவான வீதங்களில் ஒன்றாக இது உள்ளது.[430] 2023-இல் சீனாவின் தேசியப் புள்ளியியல் அமைப்பானது 2021-இலிருந்து 2022 வரை மொத்த மக்கள் தொகையானது 8.50 இலட்சம் பேரை இழந்துள்ளது என்று மதிப்பிட்டது. 1961-ஆம் ஆண்டிலிருந்து முதல் மக்கள் தொகை வீழ்ச்சி இதுவாகும்.[431]
அறிஞர்களின் ஒரு குழுவின் கூற்றுப்படி ஒரு-குழந்தை வரம்புகளானவை மக்கள் தொகை வளர்ச்சி[432] அல்லது ஒட்டு மொத்த மக்கள் தொகையின் அளவில்[433] சிறிதளவு தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளன. எனினும், இந்த அறிஞர்களின் கருத்துக்களானவை எதிர் கருத்துக்களையும் கொண்டுள்ளன.[434] பாரம்பரியமாக ஆண் குழந்தைகள் விரும்பப்படுவதுடன் சேர்த்து இக்கொள்கையானது பிறப்பின் போது பாலின விகிதத்தின் சமமற்ற நிலைக்குப் பங்களித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[435][436] 2000-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது ஒட்டு மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 51.2%-ஆக இருந்தனர் என்று குறிப்பிடுகிறது.[437] எனினும், 1953-ஆம் ஆண்டில் இருந்ததை விட தற்போது சீனாவின் பாலின விகிதமானது அதிக சமநிலையுடன் உள்ளது. 1953-இல் மக்கள் தொகையில் ஆண்கள் 51.8%-ஆக இருந்தனர்.[438]
ஆண் குழந்தைகளுக்கான பண்பாட்டு ரீதியிலான விருப்பமானது ஒரு-குழந்தைக் கொள்கையுடன் சேர்ந்து சீனாவில் அதிகப்படியான ஆதரவற்ற பெண் குழந்தைகள் உருவாவதற்குக் காரணமாகியுள்ளது. 1990-களில் இருந்து தோராயமாக 2007 வரை அமெரிக்க மற்றும் பிற அயல் நாட்டுப் பெற்றோர்களால் (முதன்மையாகப் பெண்) குழந்தைகள் தத்தெடுக்கப்படுவதானது நிகழ்ந்துள்ளது.[439] எனினும், சீன அரசாங்கத்தின் அதிகரித்து வந்த கட்டுப்பாடுகளானவை 2007 மற்றும் மீண்டும் 2015-இல் அயல் நாட்டவர் தத்தெடுப்பதைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு மெதுவாக்கி உள்ளது.[440]
நகரமயமாக்கம்

சீனா சமீபத்திய தசாப்தங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு நகரமயமாகியுள்ளது. நகர்ப்புறங்களில் வாழும் சீன மக்கள் தொகையின் சதவீதமானது 1980-இல் 20%-இலிருந்து 2023-இல் 66%-க்கும் அதிகமாக ஆகியுள்ளது.[441][442][443] 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட 160-க்கும் மேற்பட்ட நகரங்களை சீனா கொண்டுள்ளது.[444] சோங்கிங், சாங்காய், பெய்சிங், செங்டூ, குவாங்சௌ, சென்சென், தியான்ஜின், சிய்யான், சுசோ, செங்சவு, ஊகான், காங்சூ, லின்யி, சிஜியாசுவாங், டொங்குவான், குயிங்தவோ மற்றும் சாங்ஷா ஆகிய 17 பெரும் நகரங்களும் இதில் அடங்கும்.[445][446] 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்நகரங்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான மக்களைக் கொண்டுள்ளன.[447] சோங்கிங், சாங்காய், பெய்சிங் மற்றும் செங்குடு ஆகிய நகரங்களின் ஒட்டு மொத்த நிலையான மக்கள் தொகையானது 2 கோடிக்கும் அதிகமாக உள்ளது.[448] சீனாவின் மிக அதிக மக்கள் தொகை உடைய நகர்ப்புறப் பகுதி சாங்காய் ஆகும்.[449][450] அதே நேரத்தில், நகர வரம்புக்குள் மட்டும் மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாக சோங்கிங் திகழ்கிறது. சோங்கிங் மட்டுமே சீனாவில் 3 கோடிக்கும் மேற்பட்ட நிலையான மக்கள் தொகையைக் கொண்ட ஒரே நகரமாகும்.[451] கீழுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவை 2000-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்டவை ஆகும். இவை நகரங்களின் நிர்வாக வரம்புக்குள் வாழும் நகர்ப்புற மக்களின் மதிப்பீடுகள் மட்டுமே ஆகும். அனைத்து மாநகராட்சி மக்கள் தொகைக்கும் ஒரு வேறுபட்ட தரநிலையானது உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பெருமளவிலான "மிதக்கும் மக்கள் தொகைகளானவை" நகர்ப்புறப் பகுதிகளில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புகள் மேற்கொள்வதைக் கடினமாக்கி உள்ளன.[452] கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கை நீண்ட காலக் குடியிருப்பு வாசிகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது.
இனக்குழுக்கள்

சீனா சட்டபூர்வமாக 56 தனித்துவமிக்க இனக்குழுக்களை அங்கீகரித்திருக்கிறது. இவை நவீன சீன தேசியவாதமான சோங்குவா மின்சுவில் அடங்கியவையாகும். இத்தகைய தேசியங்களில் மிகப் பெரியவையாக ஆன் சீனர் உள்ளனர். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 91%-க்கும் மேற்பட்டவர்களை இவர்கள் உள்ளடக்கியுள்ளனர்.[425] உலகின் மிகப் பெரிய ஒற்றை இனக் குழுவான[454] ஆன் சீனர்கள் திபெத், சிஞ்சியாங்,[455] லின்சியா,[456] மற்றும் மாகாண நிலை சுயாட்சிப் பகுதியான சிசுவாங்பன்னா ஆகிய இடங்களைத் தவிர்த்து ஒவ்வொரு இடத்திலும் பிற இனக்குழுக்களை விட எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர்.[457] 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இனச் சிறுபான்மையினர் சீனாவின் மக்கள் தொகையில் 10%-க்கும் குறைவானவர்களாக உள்ளனர்.[425] 2010-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஒப்பிடும் போது ஆன் சீனர்களின் மக்கள் தொகையானது 6,03,78,693 பேர் அல்லது 4.93% அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், 55 தேசியச் சிறுபான்மையினரின் ஒன்றிணைந்த மக்கள் தொகையானது 1,16,75,179 பேர் அல்லது 10.26% அதிகரித்துள்ளது.[425] 2020-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி கண்டப் பகுதி சீனாவில் ஒட்டு மொத்தமாக 8,45,697 அயல் நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் வாழ்வதாகப் பதிவிடப்பட்டுள்ளது.[458]
மொழிகள்
சீனாவில் 292 வரையிலான தற்கால மொழிகள் உள்ளன.[459] மிகப் பொதுவாகப் பேசப்படும் மொழிகளானவை சீன-திபெத்திய மொழிகளின் சினிசியப் பிரிவைச் சேர்ந்தயாகும். இது மாண்டரின் (சீனாவின் மக்கள் தொகையில் 80%-ஆல் இது பேசப்படுகிறது)[460][461] மற்றும் சீன மொழியின் பிற வடிவங்களான சின், உ, மின், ஆக்கா, யுவே, சியாங், கன், குயி, பிங் மற்றும் வகைப்படுத்தப்படாத துகுவா (சாவோசோவ் துகுவா மற்றும் சியாங்னான் துகுவா) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.[462] திபெத்தியம், கியாங், நக்சி மற்றும் யி உள்ளிட்ட திபெத்திய-பர்மியப் பிரிவைச் சேர்ந்த மொழிகளானவை திபெத்திய மற்றும் யுன்னான்-குய்சோ உயர் நிலம் முழுவதும் பேசப்படுகின்றன. தாய்-கதை குடும்பத்தைச் சேர்ந்த சுவாங்கு, தாய், தோங் மற்றும் சுயி, குமோங்-மியேன் குடும்பத்தைச் சேர்ந்த மியாவோ மற்றும் யாவோ, மற்றும் ஆத்திரோ ஆசியக் குடும்பத்தைச் சேர்ந்த வா உள்ளிட்டவை தென்மேற்கு சீனாவின் பிற இன சிறுபான்மை மொழிகளாகும். வடகிழக்கு மற்றும் வடமேற்கு சீனா முழுவதும் உள்ளூர் இனக் குழுக்கள் மஞ்சூ மற்றும் மங்கோலியம் உள்ளிட்ட அல்த்தாய் மொழிகள் மற்றும் உய்குர், கசக், கிர்கிசு, சலர் மற்றும் மேற்கு யுகுர் உள்ளிட்ட பல துருக்கிய மொழிகளைப் பேசுகின்றனர்.[463] வட கொரியாவின் எல்லைக்குப் பக்கவாட்டில் பூர்வீக மக்களால் கொரிய மொழியானது பேசப்படுகிறது. மேற்கு சிஞ்சியாங்கில் உள்ள தஜிக் இனத்தவரின் மொழியான சரிகோலியானது ஓர் இந்திய-ஐரோப்பிய மொழியாகும். கண்டப் பகுதி சீனாவில் உள்ள ஒரு சிறிய மக்கள் தொகை உள்ளிட்டோருடன் சேர்த்து தைவானியப் பூர்வகுடி மக்கள் ஆஸ்திரோனீசிய மொழிகளைப் பேசுகின்றனர்.[464]
தரப்படுத்தப்பட்ட சீனம் சீனாவின் தேசிய மொழியாகும். மாண்டரின் மொழியின் பெய்சிங் பேச்சு வழக்கு மொழியை அடிப்படையாக் கொண்ட ஒரு வகை இதுவாகும்.[2] நடைமுறை ரீதியிலான அதிகாரப்பூர்வ நிலையை இது கொண்டுள்ளது. வெவ்வேறு மொழியியல் பின்புலங்களைக் கொண்ட மக்களுக்கு இடையில் இது ஓர் இணைப்பு மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.[465] சீனாவின் சுயாட்சிப் பகுதிகளில் பிற மொழிகளும் கூட ஓர் இணைப்பு மொழியாகப் பயன்படுத்தப்படலாம். சிஞ்சியாங்கில் உய்குரை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். அரசாங்கச் சேவைகளானவை சிஞ்சியாங்கில் உய்குர் மொழியில் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளன.[466]
சமயம்

[467][468][469][470]
சீன நாட்டுப் புறச் சமயம் (கன்பூசியம், தாவோயியம், மற்றும் சீனப் பௌத்தத்தின் குழுக்கள் உள்ளிட்டவை)
எளிமையான பௌத்தம்
இசுலாம்
இனச் சிறுபான்மையினரின் பூர்வீக சமயங்கள்
மங்கோலிய ஷாமன் மதம்
துங்குசு மற்றும் மஞ்சூ ஷாமன் மதத்தால் தாக்கம் பெற்ற வடகிழக்கு சீன நாட்டுப் புறச் சமயம்; பரவலான சன்ரென்தாவோ
அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லாத சமய அமைப்புகள் அரசாங்க இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகினாலும் சமயச் சுதந்திரத்திற்கு சீன அரசியலமைப்பால் உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது.[182] இந்நாட்டின் அரசாங்கமானது அதிகாரப்பூர்வமாக இறை மறுப்புக் கொள்கையுடையதாகும். சமய விவகாரங்களானவை ஒன்றிணைந்த முன்னணி பணித் துறையின் கீழ் உள்ள தேசிய சமய விவகார நிர்வாகத்தால் மேற்பார்வையிடப்படுகின்றன.[471]
1,000 ஆண்டுகளாகச் சீன நாகரிகமானது பல்வேறு சமய இயக்கங்களால் தாக்கம் பெற்றுள்ளது. கன்பூசியம், தாவோயியம் மற்றும் பௌத்தம் ஆகிய மூன்று போதனைகளானவை வரலாற்று ரீதியாக சீனாவின் பண்பாட்டை வடிவமைத்தும்,[472][473] தொடக்க கால சாங் அரசமரபு மற்றும் சவு அரசமரபு காலத்திற்கு அழைத்துச் செல்லும் பாரம்பரிய சமயத்தின் ஓர் இறையியல் மற்றும் ஆன்மீக அமைப்பை செழிப்பாகவும் ஆக்கி வந்துள்ளன. இந்த மூன்று போதனைகள் மற்றும் பிற பாரம்பரியங்களால் விளிம்புச் சட்டமிட்டு உருவாக்கப்பட்ட சீன நாட்டுப்புறச் சமயமானது[474] சென் (தெய்வம், கடவுள் அல்லது ஆன்மா) என்பதற்குத் தங்களது தொடர்பைக் கொண்டுள்ளது. சென் என்பவர்கள் சுற்றியிருக்கும் இயற்கை அல்லது மனிதக் குழுக்களின் மூதாதையர்களின் கொள்கைகள் ஆகியவற்றின் தெய்வங்கள், குடிசார் கருத்துக்கள், பண்பாட்டுக் கதாநாயகர்கள் ஆகியவர்களாக இருக்கலாம்.[475] இவர்களில் பெரும்பாலானவர்கள் சீனத் தொன்மயியல் மற்றும் வரலாற்றில் சிறப்பியல்பாக உள்ளனர். நாட்டுப்புறச் சமயத்தின் மிகப் பிரபலமான வழிபாட்டு முறைகளாக மஞ்சள் பேரரசர், சொர்க்கத்தின் கடவுளின் முன் மாதிரி மற்றும் சீன மக்களின் இரு தெய்வீகத் தந்தை வழிப் பாரம்பரியங்களில் ஒருவர்,[476][477] மசூவினுடையது (கடல்களின் பெண் கடவுள்),[476] சங்கிராமர் (போர் மற்றும் வணிகக் கடவுள்), கைசென் (செழிப்பு மற்றும் செல்வத்தின் கடவுள்), பன்கு மற்றும் பல பிறரைக் குறிப்பிடலாம். 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் நாட்டுப்புற வழிபாட்டு முறைகளின் மறு வாழ்வுக்கு உதவும் பணியில் சீன அரசாங்கமானது ஈடுபட்டிருந்தது. போதனை மதங்களில் இருந்து பிரித்தறிவதற்காக அதிகாரப்பூர்வமாக இவற்றை "நாட்டுப்புற நம்பிக்கைகள்" என்று அங்கீகரித்தது.[478] பொதுவாக "உயர் தரப் படுத்தப்பட்ட" குடிசார் சமயத்தின் வடிவங்களாக இவற்றை மீண்டும் கட்டமைத்தது.[479] மேலும், சீன அரசாங்கமானது பௌத்தத்தைத் தேசிய அளவில் மற்றும் பன்னாட்டு அளவில் ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொண்டது.[480] உலகின் மிக உயரமான சமயச் சிலைகளில் பலவற்றுக்கு சீனா தாயகமாக உள்ளது. இச்சிலைகள் சீன நாட்டுப்புறச் சமயத்தின் தெய்வங்கள் அல்லது பௌத்தத்தின் விழிப்படைந்த நபர்களின் சிலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இவை அனைத்திலும் மிக உயரமானது ஹெனானில் உள்ள இளவேனில் கோயிலின் புத்தர் சிலை ஆகும்.

சமயத்தின் சிக்கலான மற்றும் வேறுபட்ட வரையறைகள், மற்றும் சீன சமயப் பாரம்பரியங்களின் கலவையான இயல்பு ஆகியவற்றின் காரணமாக சீனாவில் சமய ஈடுபாடு சார்ந்த புள்ளி விவரங்களைப் பெறுவது என்பது கடினமாக உள்ளது. மூன்று போதனைகள் மற்றும் உள்ளூர் நாட்டுப்புறச் சமயப் பழக்க வழக்கங்களுக்கு இடையில் ஒரு தெளிவான எல்லை சீனாவில் இல்லை என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.[472] சீனச் சமயங்கள் அல்லது அவற்றின் பிரிவுகளில் சில கடவுள் சாராதவையாகவும், மனிதம் சார்ந்தவையாகவும் கூட வரையறுக்கப்படலாம். தெய்வீகப் படைப்பானது முழுவதுமாக மனித இயல்புக்கு அப்பாற்பட்டது என்று அவை கூறவில்லை. படைப்பது உலகின் இயற்கூராகவும், குறிப்பாக மனித இயல்பாகவும் உள்ளது என்று இப்பழக்க வழக்கங்கள் குறிப்பிடுகின்றன.[481] 2010-கள் மற்றும் 2020-களின் தொடக்கம் முழுவதும் நடத்தப்பட்ட மக்கள் தொகை ஆய்வுகளை உள்ளடக்கியிருந்த 2023-இல் பதிப்பிக்கப்பட்ட ஆய்வுகளின் படி 70% சீன மக்கள் சீன நாட்டுப்புறச் சமயத்தில் நம்பிக்கை உடையவராகவோ அல்லது இச்சமயத்தைப் பின்பற்றியோ வந்தனர். இவர்களை ஒதுக்கப்படாமல் அணுகும் போது 33.4% பேர் பௌத்தர்களாகவும், 19.6% பேர் தாவோயியத்தவர்களாகவும், மற்றும் 17.7% பேர் நாட்டுப்புறச் சமயத்தின் பிற வகைகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர்.[4] எஞ்சிய மக்கள் தொகையில் 25.2% பேர் முழுமையான நம்பிக்கையற்றவர்கள் அல்லது இறை மறுப்பாளர்களாகவும், 2.5% பேர் கிறித்தவ சமயத்தவர்களாகவும், மற்றும் 1.6% பேர் இசுலாமியர்களாகவும் இருந்தனர்.[4] சீன நாட்டுப்புறச் சமயமானது சொங் அரசமரபின் காலத்தில் இருந்து உருவாகிய பாவ மன்னிப்பு வழங்கும் போதனையுடைய அமைப்பு ரீதியிலான இயக்கங்களின் ஒரு வகையையும் கூட உள்ளடக்கி இருந்தது.[482] தங்கள் சொந்த பூர்வகுடி சமயங்களைப் பேணி வரும் இனச் சிறுபான்மையினரும் கூட சீனாவில் உள்ளனர். அதே நேரத்தில், குறிப்பிட்ட இனக் குழுக்களின் முக்கியமான சமய சிறப்பியல்புகளானவை திபெத்தியர், மங்கோலியர் மற்றும் யுகுர்கள் மத்தியிலான திபெத்தியப் பௌத்தம்,[483] ஊய், உய்குர், கசக்,[484] மற்றும் கிர்கிசு மக்களுக்கு மத்தியிலான இசுலாம் மற்றும் நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதியிலுள்ள பிற இனக் குழுக்களையும் உள்ளடக்கியுள்ளது.
கல்வி

சீனாவில் கட்டாயக் கல்வியானது தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளை உள்ளடக்கியதாக உள்ளது. 6 மற்றும் 15 வயதுகளுக்கு இடையில் ஒன்பது ஆண்டுகளுக்கு இவை பயிற்றுவிக்கப்படுகின்றன.[487] பெரும்பாலான கல்லூரிகளுக்குள் செல்ல ஒரு தேவையான நுழைவுத் தேர்வாக சீனாவின் தேசியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான கவோகவோ உள்ளது. நடு நிலை மற்றும் மூன்றாம் நிலைகளில் மாணவர்களுக்குத் தொழில் முறைக் கல்வியானது கிடைக்கப் பெறுகிறது.[488] ஒவ்வொரு ஆண்டும் தொழில் முறைக் கல்லூரிகளில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட சீன மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர்.[489] 2023-இல் மாணவர்களில் சுமார் 91.8% பேர் ஒரு மூன்றாண்டு மேல்நிலைப் பள்ளியில் தங்களது கல்வியைத் தொடர்ந்தனர். அதே நேரத்தில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களில் 60.2% பேர் கல்லூரியில் சேர்ந்தனர்.[490]
உலகின் மிகப் பெரிய கல்வி அமைப்பை சீனா கொண்டுள்ளது.[491] 2023-இல் சுமார் 29.1 கோடி மாணவர்கள், 1.892 கோடி முழு நேரப் பணியுடைய ஆசிரியர்கள் ஆகியோரை 4,98,300-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இந்நாடு கொண்டிருந்தது.[492] 2003-இல் ஐஅ$50 பில்லியன் (₹3,57,580 கோடி)க்கும் குறைவாக இருந்த வருடாந்திர கல்வி முதலீடானது 2020-இல் ஐஅ$817 பில்லியன் (₹58,42,857.2 கோடி)யை விட அதிகமானது.[493][494] எனினும், கல்விக்குச் செலவிடுவதில் ஒரு சமமற்ற நிலையானது இன்னும் தொடர்கிறது. 2010-இல் பெய்சிங்கில் ஒரு நடுநிலைப் பள்ளி மாணவருக்கான வருடாந்திரக் கல்விச் செலவீனமானது மொத்தமாக ¥20,023 ஆகவும், அதே நேரத்தில் ஏழ்மையான மாகாணங்களில் ஒன்றான குயிசூவில் இது வெறும் ¥3,204 ஆகவும் மட்டுமே இருந்தது.[495] 1949-இல் வெறும் 20%-இல் இருந்து 1979-இல் 65.5%-ஆக சீனாவின் எழுத்தறிவு வீதமானது பெருமளவு அதிகரித்துள்ளது.[496] 2020-இல் 15 வயதுக்கு மேற்பட்டோரில் 97% பேர் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர்.[497]
2023-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்நாடானது கண்டப் பகுதி சீனாவில் 3,074க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களை 4.76 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கையுடன் கொண்டுள்ளது.[498][499] இது உலகில் மிகப் பெரிய உயர் கல்வி அமைப்பை சீனாவுக்குக் கொடுக்கிறது. 2023-ஆம் ஆண்டின் நிலவரப்படி உலகின் முதல் தரப் பல்கலைக் கழகங்களில் அதிகப்படியான எண்ணிக்கையை சீனா கொண்டிருந்தது.[500][501] உலகின் மிக அதிக நபர்களால் பின்பற்றப்படும் மூன்று பல்கலைக்கழகத் தர நிலைகளின் (ஏ. ஆர். டபுள்யூ. யூ.+கியூ. எஸ்.+டி. ஏச். இ.) ஆகியவற்றின் ஓர் ஒன்றிணைந்த தர நிலை அமைப்பான முதல் தரப் பல்கலைக்கழகங்களின் ஒன்றிணைந்த தர நிலை 2023இன் படி முதல் 200 பல்கலைக்கழகங்களின் பட்டியல்களில் பிரதிநிதித்துவங்களின் அடிப்படையில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்குப் பிறகு மூன்றாவது இடத்தில் தற்போது சீனா உள்ளது.[502] டைம்ஸ் ஹையர் எஜுகேசன் வேர்ல்ட் யுனிவர்சிட்டி ரேங்கிங்க்ஸ்[503] மற்றும் அகாதெமிக் ரேங்கிங் ஆப் வேர்ல்ட் யுனிவர்சிட்டீஸ்[504] ஆகியவற்றின் படி ஆசியா மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் முதல் இரு தர நிலையையுடைய பல்கலைக்கழகங்களுக்கு (சிங்குவா பல்கலைக்கழகம் மற்றும் பீக்கிங் பல்கலைக்கழகம்) சீனா தாயகமாக உள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்கள் சி9 குழுமத்தின் உறுப்பினர்களாகும். சி9 என்பது அகல் விரிவான மற்றும் முன்னணிக் கல்வியை அளிக்கும் மேனிலை சீனப் பல்கலைக்கழகங்களின் ஒரு கூட்டணி ஆகும்.[505]
சுகாதாரம்

தேசிய சுகாதார ஆணையமானது உள்ளூர் ஆணையங்களில் இதன் சக அமைப்புகளுடன் இணைந்து மக்களின் சுகாதாரத் தேவைகளை மேற்பார்வையிடுகிறது.[506] 1950-களின் தொடக்கத்தில் இருந்து பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கான ஒரு முக்கியத்துவமானது சீன சுகாதாரக் கொள்கையின் அம்சமாக இருந்து வந்துள்ளது. பொதுவுடைமைவாத கட்சியானது தேசப்பற்று சுகாதார செயல் திட்டத்தைத் தொடங்கியது. துப்புரவு மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல், மேலும் பல நோய்களுக்குச் சிகிச்சை அளித்தல் மற்றும் தடுத்தல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு இச்செயல் திட்டமானது தொடங்கப்பட்டது. சீனாவில் முன்னர் பரவலாக இருந்த வாந்திபேதி, குடற்காய்ச்சல் மற்றும் செங்காய்ச்சல் போன்ற நோய்களானவை இந்த செயல் திட்டத்தால் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுவிட்டன.[507]
நாட்டுப் புறங்களில் இருந்த இலவச பொது மருத்துவ சேவைகளில் பல மறைந்த போதிலும் 1978-இல் டங் சியாவுபிங் பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடங்கி வைத்ததற்குப் பிறகு சீன பொது மக்களின் சுகாதாரமானது துரிதமாக மேம்பட்டது. இதற்கு மேம்பட்ட ஊட்டச்சத்து காரணமாகும். சீனாவில் சுகாதாரச் சேவையானது பெரும்பாலும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது. தரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது. 2009-இல் அரசாங்கமானது ஒரு மூன்று-ஆண்டு பெரும்-அளவிலான சுகாதார சேவை முற்காப்புத் திட்டத்தை ஐஅ$124 பில்லியன் (₹8,86,798.4 கோடி) மதிப்பில் தொடங்கியது.[508] 2011 வாக்கில் இந்த செயல் திட்டமானது சீன மக்கள் தொகையில் 95% பேர் அடிப்படை சுகாதாரக் காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறுவதற்குக் காரணமானது.[509] 2022 வாக்கில் சீனா தன்னைத் தானே ஒரு முக்கியமான மருந்து உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக நிலை நிறுத்திக் கொண்டது. 2017-இல் செயல்பாட்டு மருந்து மூலக் கூறுகளில் சுமார் 40%-ஐ இந்நாடு உற்பத்தி செய்தது.[510]
2023-ஆம் ஆண்டு நிலவரப்படி பிறப்பின் போது ஆயுட்கால எதிர்பார்ப்பானது 78 ஆண்டுகளைத் தாண்டுகிறது.[511](பக்.163) 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி குழந்தை இறப்பு வீதமானது 1,000 குழந்தைகளுக்கு 5 என்று இருந்தது.[512] 1950-களிலிருந்து இந்த இரு அளவீடுகளும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளன.[u] ஊட்டக்குறையால் ஏற்படும் ஒரு நிலையான வளர்ச்சி குன்றலின் வீதங்களானவை 1990-இல் 33.1%-இலிருந்து 2010-இல் 9.9%-ஆகக் குறைந்துள்ளன.[515] சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மற்றும் மேம்பட்ட மருத்துவ சேவைகளின் கட்டமைப்பு உள்ள போதிலும் பரவலான காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுவாச நோய்கள்,[516] தசம கோடிக் கணக்கான புகை பிடிப்பவர்கள்[517] மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் மத்தியிலான அதிகரித்து வரும் உடற் பருமன் போன்ற அதிகரித்து வரும் பொது சுகாதார பிரச்சினைகளை சீனா கொண்டுள்ளது.[518][519] 2010-இல் சீனாவில் காற்று மாசுபாடானது முதுமைக்கு முன்னரே ஏற்படும் 12 இலட்சம் இறப்புகளுக்குக் காரணமானது.[520] சீன மனநல சுகாதாரச் சேவைகள் போதாதவையாக உள்ளன.[521] சீனாவின் மிகப் பெரிய மக்கள் தொகை மற்றும் அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்ட நகரங்கள் 2003-இல் ஏற்பட்ட சார்சு போன்ற கடுமையான நோய்ப் பரவலுக்குக் காரணமாகி உள்ளன. எனினும், தற்போது இந்த நோயானது பெருமளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.[522] கோவிட்-19 பெருந்தொற்றானது திசம்பர் 2019-இல் சீனாவின் ஊகான் நகரத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்டது.[523][524] இந்தத் தீநுண்மியை முழுவதுமாக ஒழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அரசாங்கம் கடுமையான பொது சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு இந்தத் தொற்றானது வழி வகுத்தது. இக்கொள்கைக்கு எதிராக போராட்டங்களுக்குப் பிறகு திசம்பர் 2022-இல் இந்த குறிக்கோளானது இறுதியாகக் கைவிடப்பட்டது.[525][526]
Remove ads
பண்பாடும், சமூகமும்

பண்டைக் காலங்களில் இருந்தே சீனப் பண்பாடானது கன்பூசியத்தால் கடுமையான தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. பதிலுக்குச் சீனப் பண்பாடானது கிழக்காசியா மற்றும் தென்கிழக்காசியா மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.[527] நாட்டின் அரசமரபு சகாப்தத்தின் பெரும்பாலான காலத்திற்கு மதிப்பு மிக்க ஏகாதிபத்தியத் தேர்வுகளில் சிறந்த செயல்பாட்டால் சமூக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்ற நிலை இருந்தது. இந்தத் தேர்வுகளானவை அவற்றின் தொடக்கத்தை ஆன் அரசமரபின் காலத்தில் கொண்டுள்ளன.[528] தேர்வுகளின் இலக்கிய முக்கியத்துவமானது சீனாவில் பண்பாட்டுத் தூய்மையாக்கத்தின் பொதுவான பார்வை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நடனம் அல்லது நாடகத்தை விட கையழகெழுத்தியல், கவிதை மற்றும் ஓவியம் ஆகியவை உயரிய கலை வடிவங்கள் என்ற நம்பிக்கை போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். ஆழமான வரலாறு குறித்த ஓர் உணர்வு மற்றும் ஒரு பெரும்பாலும் உள்நோக்கித் திரும்பிய பார்வையையுடைய தேசியக் கண்ணோட்டம் ஆகியவற்றுக்குச் சீனப் பண்பாடு நீண்ட காலமாக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது.[529] தேர்வுகள் மற்றும் ஒரு தகுதியின் அடிப்படையிலான பண்பாடானது சீனாவில் இன்றும் மிகப் பெரிய அளவுக்கு மதிக்கப்படுவதாகத் தொடர்கிறது.[530]
தற்போது சீன அரசாங்கமானது பாரம்பரியச் சீனப் பண்பாட்டின் ஏராளமான காரணிகளை சீன சமூகத்தின ஓர் அங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளது. சீன தேசியவாதத்தின் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுப் புரட்சியின் முடிவுடன் பாரம்பரிய சீனக் கலை, இலக்கியம், இசை, திரைத்துறை, புது நடைப் பாணி மற்றும் கட்டடக் கலையின் வேறுபட்ட வடிவங்களானவை ஒரு வலிமையான புத்தெழுச்சியைக் கண்டுள்ளன.[532][533] நாட்டுப்புற மற்றும் வேறுபட்ட கலைகள் குறிப்பாக தேசிய அளவில் மற்றும் உலக அளவிலும் கூட ஆர்வத்தைத் தூண்டியுள்ளன.[534] அயல் நாட்டு ஊடகங்களுக்கான வாய்ப்பானது இந்நாட்டில் தொடர்ந்து கடுமையாக வரம்பிடப்பட்டுள்ளது.[535]
கட்டடக்கலை
சீனக் கட்டடக் கலையானது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. கிழக்காசியக் கட்டடக் கலையின் வளர்ச்சியின் மீது நிலையான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கருத்தடமான ஆதாரமாக இது தொடர்ந்து இருந்து வந்துள்ளது.[536][537][538] சப்பான், கொரியா மற்றும் மங்கோலியா உள்ளிட்ட நாடுகளை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.[539] மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து. லாவோஸ், கம்போடியா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை உள்ளடக்கிய தென் கிழக்கு மற்றும் தெற்காசியக் கட்டடக் கலையின் மீது சிறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.[540][541]
சீனக் கட்டடக் கலையானது ஈரிணைவான இருபுறம், அடைக்கப்பட்ட திறந்த வெளிகளின் பயன்பாடு, பெங் சுயி (எ. கா. நேரான படி நிலை அமைப்பு),[542] கிடைமட்டத்துக்கு அளிக்கப்படும் ஒரு தனிக் கவனம், மற்றும் பல்வேறு அண்ட அமைப்புகளை மறைமுகமாகக் குறிப்பது, தொன்மம் சார்ந்த அல்லது பொதுவான குறியீட்டு ஆக்கக் கூறுகள் ஆகியவற்றை இயற்பண்புகளாகக் கொண்டுள்ளது. அடுக்குத் தூபிகள் முதல் அரண்மனைகள் வரை சீனக் கட்டடக் கலையானது கட்டட அமைப்புகளை பாரம்பரியமாக அவற்றின் பாணிகளின் படி வகைப்படுத்துகிறது.[543][539]
சீனக் கட்டடக் கலையானது நிலை அல்லது தொடர்பை அடிப்படையாகக் கொண்டு பரவலாக வேறுபடுகிறது. எடுத்துக்காட்டாக இக்கட்டடங்கள் பேரரசருக்காகவோ, பொதுமக்களுக்காவொ அல்லது சமயப் பயன்பாட்டுக்காகவோ கட்டமைக்கப்பட்டது என வேறுபடுகின்றன. வேறுபட்ட புவியியல் பகுதிகள் மற்றும் வேறுபட்ட இனப் பாரம்பரியங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய உள்ளூர் பாணிகளில் சீனக் கட்டடக் கலையின் பிற வேறுபட்ட வடிவங்கள் காட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக தெற்கில் உள்ள கல் வீடுகள், வட மேற்கில் உள்ள யாவோதோங் கட்டடங்கள், நாடோடி மக்களின் யூர்ட் வீடுகள் மற்றும் வடக்கின் சிகேயுவான் கட்டடங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.[544]
இலக்கியம்
சீன இலக்கியமானது அதன் தொடக்கத்தை சோவு அரசமரபின் இலக்கியப் பாரம்பரியத்தில் கொண்டுள்ளது.[545] நாட்காட்டி, இராணுவம், சோதிடம், மூலிகையியல் மற்றும் புவியியல், மேலும் பல பிற போன்ற ஒரு பரவலான எண்ணங்கள் மற்றும் கருத்துருக்களைச் சீனாவின் பாரம்பரியச் செந்நூல்கள் கொண்டுள்ளன.[546] மிக முக்கியமான தொடக்க கால நூல்களில் ஐ சிங் மற்றும் சூசிங் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். இவை ஐந்து செவ்வியல் இலக்கியங்களின் ஒரு பகுதியாகும். அரசமரபுக் காலங்கள் முழுவதும் அரசால் புரவலத் தன்மை பெற்ற கன்பூசிய உள்ளடக்கத்தின் ஆதாரப் பகுதிகளாக இந்த நூல்கள் உள்ளன. சீ சிங்கிலிருந்து பெறப்பட்ட பாரம்பரிய சீனக் கவிதையானது அதன் செயல்பாட்டுக் காலத்தைத் தாங் அரசமரபின் காலத்தின் போது மேம்படுத்தியது. லி பை மற்றும் டு ஃபூ ஆகியவை முறையே அகத்திணை மற்றும் மெய்யியல் வழியாகக் கவிதை வட்டாரங்களில் பிரிவு வழிகளைத் திறந்து விட்டன. சீன வரலாற்றியலானது மதிப்புக்குரிய வரலாற்றாளரின் ஆவணப் பதிவுகளில் இருந்து தொடங்குகிறது. சீனாவின் வரலாற்றியல் பாரம்பரியத்தின் ஒட்டு மொத்தக் கருது பொருள் பரப்பெல்லையானது 24 வரலாறுகள் எனக் குறிப்பிடபடுகிறது. சீனத் தொன்மவியல் மற்றும் நாட்டுப்புறக் கதைகளுடன் சேர்த்து சீனப் புனைவுகளுக்கான ஒரு பரந்த மேடையை இது அமைத்துக் கொடுத்தது.[547] மிங் அரசமரபில் ஒரு செழித்து வந்த குடிமக்கள் வர்க்கத்தினரால் உந்தப்பட்டு சீனப் புனைவியலானது வரலாற்றியல்சார், பட்டணம்சார் மற்றும், கடவுள்கள் மற்றும் பேய்கள் குறித்த புனைவுகள் ஆகியவற்றின் ஓர் அளவுக்கு ஒரு பெரு வளக்கக் காலத்திற்கு வளர்ச்சியடைந்தது. இவை நான்கு சிறந்த செவ்விய புதினங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. இப்புதினங்களில் வாட்டர் மார்ஜின், மூன்று இராச்சியங்களின் காதல், மேற்கு நோக்கிய பயணம் மற்றும் சிவப்பு அறைக் கனவு ஆகியவை உள்ளடங்கியுள்ளன.[548] சின் யோங் மற்றும் லியாங் யுசேங் ஆகியோரின் உக்சியா புனைவுகளுடன் சேர்த்து[549] சீனச் செல்வாக்குப் பகுதிகளில் பிரபலமான பண்பாட்டின் நீடித்த ஆதாரமாக இது இன்னும் தொடர்ந்து உள்ளது.[550]
சிங் அரசமரபின் முடிவுக்குப் பிறகு புதுப் பண்பாட்டு இயக்கம் தொடங்கப்பட்ட நேரத்தில் சீன இலக்கியமானது சாதாரண பொது மக்களுக்காக எழுதப்பட்ட பேச்சு வழக்கு சீன மொழியுடன் சேர்த்து ஒரு புதிய சகாப்தத்தில் பயணிக்க ஆரம்பித்தது. ஊ சீ மற்றும் லூ சுன் ஆகியோர் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளாவர்.[551] மூடு பனிக் கவிதை, தழும்பு இலக்கியம், இளம் வயது வந்தோருக்கான புனைவு மற்றும் சுங்கென் இலக்கியம் போன்ற பல்வேறு இலக்கிய வகைகள்[552] பண்பாட்டுப் புரட்சியைத் தொடர்ந்து உருவாயின. சுங்கென் இலக்கியமானது மந்திர இயல்புடன் கூடிய இயற்கை வழுவாச் சித்தரிப்பால் தாக்கம் பெற்றுள்ளது. ஒரு சுங்கென் இலக்கிய எழுத்தாளரான மோ யான் 2012-இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.[553]
இசை
பாரம்பரிய இசை முதல் நவீன இசை வரையிலான ஓர் உயர் வேறுபாடுடைய இசையை சீன இசையானது கொண்டுள்ளது. சீன இசையானது ஏகாதிபத்திய காலங்களுக்கு முந்தைய காலத்தில் இருந்து காலமிடப்படுகிறது. பயின் (八音) என்று அறியப்படும் எட்டு வகைகளாக பாரம்பரிய சீன இசைக் கருவிகள் பொதுவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பாரம்பரிய சீன இசை நாடகம் என்பது சீனாவின் இசை அரங்கின் ஒரு வடிவமாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை மேம்படுத்தப்பட்டு வந்துள்ளன. பெய்சிங் மற்றும் கன்டோனிய இசை நாடகம் போன்ற பிராந்திய வடிவங்களை இது கொண்டுள்ளது.[554] சீன பாப் இசையானது மாண்டோபாப் மற்றும் காண்டோபாப் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. சீன ஹிப் ஹாப் மற்றும் ஆங்காங் ஹிப் ஹாப் போன்ற இசை வடிவங்கள் பிரபலமானவையாக இந்நாட்டில் உருவாகியுள்ளன.[555]
புது நடைப் பாணி
சீனாவின் ஆன் மக்களின் வரலாற்று ரீதியான உடை ஹன்பு ஆகும். சிபாவோ அல்லது சியோங்கசம் என்பது சீனப் பெண்களுக்கான ஒரு பிரபலமான சீன உடையாகும்.[556] ஹன்பு இயக்கமானது சம காலங்களில் பிரபலமானதாக இருந்து வந்துள்ளது. ஹன்பு உடைகளுக்குப் புத்துயிர் கொடுப்பதை இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.[557] சீன புது நடைப் பாணி வாரமானது நாட்டின் ஒரே ஒரு தேசிய அளவிலான புது நடைப் பாணி விழாவாக உள்ளது.[558]
திரைத்துறை
திரைப்படமானது சீனாவுக்கு முதன் முதலில் 1896-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் சீனத் திரைப்படமான திங்சுன் மலையானது 1905-இல் வெளியிடப்பட்டது.[559] 2016-ஆம் ஆண்டிலிருந்து உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளை சீனா கொண்டுள்ளது.[560] 2020-ஆம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய திரைச் சந்தையாக சீனா உருவானது.[561][562] 2023-ஆம் ஆண்டு நிலவரப் படி சீனாவில் மிக அதிகம் வசூலித்த முதல் மூன்று திரைப்படங்களானவை த பேட்டில் அட் லேக் சங்சின் (2021), ஓல்ப் வாரியர் 2 (2017), மற்றும் ஹாய், மாம் (2021) ஆகியவையாகும்.[563]
சமையல் பாணி

சீன சமையலானது அதிகளவு வேறுபட்டதாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் சமையல் வரலாறு மற்றும் புவியியல் வேறுபாட்டிலிருந்து இது இவ்வாறு உருவாகியுள்ளது. சீன சமையல் பாணியில் மிகத் தாக்கம் ஏற்படுத்திய சமையல் முறைகளானவை "எட்டு முதன்மையான சமையல் முறைகள்" என்று அறியப்படுகின்றன. இவை சிச்சுவான், காண்டோனியம், சியாங்சு, சாண்டோங், புசியான், குனான், அன்குயி, மற்றும் செசியாங் சமையல் பாணிகள் ஆகியவை ஆகும்.[564] சீன சமையல் முறையானது சமையல் செயல் முறைகள் மற்றும் மூலப்பொருட்களின் பரந்த தன்மைக்காக அறியப்படுகிறது.[565] சீனாவின் அடிப்படை உணவாக வடகிழக்கு மற்றும் தெற்கில் அரிசியும், வடக்கில் கோதுமையை அடிப்படையாகக் கொண்ட ரொட்டித் துண்டுகளும், நூடுல்ஸ் உணவுகளும் உள்ளன. டோஃபூ மற்றும் சோயா பால் போன்ற பயறுப் பொருட்கள் புரதத்திற்கு ஒரு பிரபலமான ஆதாரமாகத் தொடர்கின்றன. சீனாவில் மிகப் பிரபலமான மாமிசம் தற்போது பன்றி இறைச்சியாகும். நாட்டின் ஒட்டு மொத்த மாமிச நுகர்வில் சுமார் நான்கில் மூன்று பங்காக இது உள்ளது.[566] சைவம் சார்ந்த பௌத்த சமையல் உணவுகள் மற்றும் பன்றி இறைச்சி சேர்க்காத சீன இசுலாமிய உணவுகளும் கூட இங்கு உள்ளன. பெருங்கடல் மற்றும் மிதமான சூழ்நிலைக்கு அருகில் இருப்பதன் காரணமாக சீன சமையல் பாணியானது ஒரு பரவலான வேறுபட்ட கடல் உணவுகள் மற்றும் காய்கறிகளையும் உள்ளடக்கியுள்ளது. சீன உணவுகளின் பிரிவுகளான ஆங்காங் உணவுகள் மற்றும் அமெரிக்க சீன உணவுகள் போன்றவை வெளிநாடு வாழ் சீனர்கள் மத்தியில் உருவாகியுள்ளன.
விளையாட்டுகள்
சீனா உலகின் மிகப் பழமையான விளையாட்டுப் பண்பாடுகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. விற்கலையானது (செசியான்), மேற்கு சோவு அரசமரபின் காலத்தின் போது பழக்கமாக இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. வாள் சண்டை (சியான்சு), மற்றும் சுஜூ ஆகிய விளையாட்டுகளும் கூட சீனாவின் தொடக்க கால அரசமரபுகளின் காலத்திற்குக் காலமிடப்படுகின்றன.[567] சுஜு என்ற விளையாட்டிலிருந்தே தற்போதைய கால்பந்து விளையாட்டு உருவானது.[568]
உடல் நலத் தகுதியானது சீனப் பண்பாட்டில் பரவலாக முக்கியத்துவம் மிக்கதாகக் குறிப்பிடப்படுகிறது. சிகோங் மற்றும் தை சி போன்ற காலை உடற்பயிற்சிகளானவை பரவலாக பின்பற்றப்படுகின்றன.[569] வணிக ரீதியிலான உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் தனியார் உடல் நலத் தகுதி மன்றங்கள் ஆகியவை பிரபலமடைந்து வருகின்றன.[570] சீனாவில் மிகப் பிரபலமான பார்வையாளர் விளையாட்டாகக் கூடைப்பந்து உள்ளது.[571] சீனக் கூடைப்பந்துக் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்கா என். பி. ஏ.வும் கூட சீன மக்களிடையே ஒரு மிகப் பெரிய தேசிய அளவிலான பார்வையாளர்களைக் கொண்டுள்ளன. சீனாவில் பிறந்த மற்றும் என். பி. ஏ.வில் விளையாடும் சீன விளையாட்டு வீரர்களுடன் யாவ் மிங் மற்றும் யி சியாங்லியான் போன்ற நன்றாக அறியப்பட்ட வீரர்கள் தேசிய அளவில் வீடு தோறும் பிரபலமானவர்களாக உயர் மதிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.[572] சீன சூப்பர் லீக் என்று அறியப்படும் சீனாவின் தொழில் முறை சார்ந்த கால்பந்துப் போட்டியானது கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய கால்பந்து சந்தையாக உள்ளது.[573] சண்டைக் கலைகள், மேசைப்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், நீச்சற் போட்டி மற்றும் மேடைக் கோற்பந்தாட்டம் உள்ளிட்டவை பிற பிரபலமான விளையாட்டுகளாகும். சீனா ஒரு பெரும் எண்ணிக்கையிலான மிதிவண்டி உரிமையாளர்களுக்குத் தாயகமாக உள்ளது. 2012-ஆம் ஆண்டு நிலவரப் படி 47 கோடி மிதிவண்டிகள் சீனாவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[574] உலகின் மிகப் பெரிய மின் விளையாட்டுச் சந்தையும் சீனா தான்.[575] டிராகன் படகுப் போட்டி, மங்கோலியப் பாணியிலான மல்யுத்தம் மற்றும் குதிரைப் பந்தயம் போன்ற பல மேற்கொண்ட பாரம்பரிய விளையாட்டுகளும் கூட இந்நாட்டில் பிரபலமானவையாக உள்ளன.
1952-ஆம் ஆண்டில் தான் சீன மக்கள் குடியரசாக பங்கெடுத்து இருந்தாலும், சீனா 1932-ஆம் ஆண்டிலிருந்தே ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறது. சீனா 2008-ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை பெய்சிங்கில் நடத்தியது. இப்போட்டிகளில் இந்நாட்டின் விளையாட்டு வீரர்கள் 48 தங்கப் பதக்கங்களை வென்றனர். அந்த ஆண்டில் பங்கெடுத்த எந்த ஒரு நாடும் பெற்ற மிக அதிக எண்ணிக்கையிலான பதக்கங்கள் இதுவாகும்.[576] 2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளிலும் கூட சீனா மிக அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வென்றது. மொத்தமாக 231 பதக்கங்களை வென்றது. இதில் 95 தங்கப் பதக்கங்களும் அடங்கும்.[577][578] 2011-க்கான கோடைக்கால உலகப் பல்கலைக் கழகப் போட்டிகளை சீனாவின் சென்சென் நகரமானது நடத்தியது. சீனா 2013-ஆம் ஆண்டு கிழக்காசியப் போட்டிகளை தியான்சினிலும், 2014-ஆம் ஆண்டு கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகளை நான்சிங்கிலும் நடத்தியது. பொதுவான மற்றும் இளையோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஆகிய இரண்டையுமே நடத்திய முதல் நாடு சீனா தான். பெய்சிங்கும், அதன் அருகிலுள்ள நகரமமுமான சங்சியாகோவும் சேர்ந்து 2022-ஆம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தின. கோடைக்கால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகிய இரண்டையுமே நடத்திய முதல் இரட்டை ஒலிம்பிக் நகரமாக பெய்சிங் இதன் காரணமாக ஆனது.[579][580] 1990 (பெய்சிங்), 2010 (குவாங்சோவு), மற்றும் 2023 (கங்சோவு) ஆகிய நகரங்களில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சீனா நடத்தியுள்ளது.[581]
Remove ads
குறிப்புகள்
- UN figure for mainland China, which excludes Hong Kong, Macau, and Taiwan.[5] It also excludes the Trans-Karakoram Tract (5,180 km2 (2,000 sq mi)), Aksai Chin (38,000 km2 (15,000 sq mi)) and other territories in dispute with India. The total area of China is listed as 9,572,900 km2 (3,696,100 sq mi) by the Encyclopædia Britannica.[6]
- எளிய சீனம்: 中国; பின்யின்: Zhōngguó
- எளிய சீனம்: 中华人民共和国; பின்யின்: Zhōnghuá rénmín gònghéguó
- China's border with Pakistan is disputed by India, which claims the entire காஷ்மீர் region as its territory. China is tied with Russia as having the List of countries and territories by number of land borders
- The total area ranking relative to the அமெரிக்க ஐக்கிய நாடுகள் depends on the measurement of the total areas of both countries. See பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் for more information. The following two primary sources represent the range of estimates of China's and the United States' total areas. # The பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் lists China as world's third-largest country (after Russia and Canada) with a total area of 9,572,900 km2,[6] and the United States as fourth-largest at 9,525,067 km2.[13]
- The CIA World Factbook lists China as the fourth-largest country (after Russia, Canada and the United States) with a total area of 9,596,960 km2,[8] and the United States as the third-largest at 9,833,517 km2.[14]
Notably, the Encyclopædia Britannica specifies the United States' area (excluding coastal and territorial waters) as 9,525,067 km2, which is less than either source's figure given for China's area.[13] Therefore, it is unclear which country has a larger area including coastal and territorial waters.
The United Nations Statistics Division's figure for the United States is 9,833,517 km2 (3,796,742 sq mi) and China is 9,596,961 km2 (3,705,407 sq mi). These closely match the CIA World Factbook figures and similarly include coastal and territorial waters for the United States, but exclude coastal and territorial waters for China.வார்ப்புரு:Overly detailed inline - According to the Encyclopædia Britannica, the total area of the United States, at 9,522,055 km2 (3,676,486 sq mi), is slightly smaller than that of China. Meanwhile, the CIA World Factbook states that China's total area was greater than that of the United States until the coastal waters of the அமெரிக்கப் பேரேரிகள் was added to the United States' total area in 1996. From 1989 through 1996, the total area of US was listed as 9,372,610 km2 (3,618,780 sq mi) (land area plus inland water only). The listed total area changed to 9,629,091 km2 (3,717,813 sq mi) in 1997 (with the Great Lakes areas and the coastal waters added), to 9,631,418 km2 (3,718,711 sq mi) in 2004, to 9,631,420 km2 (3,718,710 sq mi) in 2006, and to 9,826,630 km2 (3,794,080 sq mi) in 2007 (territorial waters added).
- China's border with Pakistan and part of its border with India falls in the disputed region of காஷ்மீர். The area under Pakistani administration is claimed by India, while the area under Indian administration is claimed by Pakistan.
- Some of the chips used were not domestically developed until சன்வே தைஹுலைட் in 2016. China TOP500#Large machines not on the list
Remove ads
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads