விளாதிமிர் வெர்னாத்ஸ்கி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விளாதிமீர் இவனோவிச் வெர்னத்ஸ்கி (Vladimir Ivanovich Vernadsky, உருசியம்: Влади́мир Ива́нович Верна́дский; 12 மார்ச் [யூ.நா. 28 பெப்ரவரி] 1863 – 6 சனவரி 1945) உருசியாவைச் சேர்ந்த ஓர் உக்ரைனிய புவிஉயிர்வேதியியலாளரும், கனிமவியலாளரும் ஆவார்.]],[1][2][3] இவர் புவிவேதியியல், புவிஉயிர்வேதியியல், அணுக்கருப் புவியியல் ஆகிய துறைகளையும் உக்ரைனிய அறிவியல் கல்விக்கழகம் (இன்று உக்ரைனியத் தேசிய அறிவியல் கல்விக்கழகம்) எனும் அமைப்பையும் உருவாக்கியவர்.,உயிர்க்கோளத்திற்கும் புவியியலுக்குமான தொடர்புகளை ஆராய்ந்த முன்னோடி அறிவியலாளர் இவர்.[4] இவர் 1926இல் வெளியிட்ட “உயிர்க்கோளம்” என்ற நூலுக்காக பெரிதும் போற்றப்படுபவர்.இதி அவர் உயிரினம் புவியை உருமாற்றும் முதன்மையான விசையெனக் கூறியுள்ளார். இவரது உணர்திறக் கோளம் பற்றிய எண்ணங்கள் சுற்றுச் சூழலியல் அறிஞர்கள், மாந்தரினப் படிமலர்ச்சி மெய்யியலாளர்கள், படிமலர்ச்சி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், அண்டவெளியில் உயிரின் சாத்திய கூறுகளை ஆராயும் அறிவியலாளர்கள் ஆகிய அனைவருமே கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்று உயிரியலில் முன்னணி கருதுகோளாக கருதப்படும் கயா (Gaia) கருதுகோளின் தன்மையில், இவரது ஆய்வுகளும் பார்வையும் அமைந்திருந்ததாக கயா கருதுகோளை முன்வைத்தவர்களுள் ஒருவரான நுண்ணுயிரியலாளர் இலின்மர்குலிசு கருதுகிறார்.இவர் 1943இல் இசுட்டாலின் பரிசைப் பெற்றார்.
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
Remove ads
வாழ்க்கை


வெர்னத்ஸ்கி உருசியப் பேர்ரசில் இருந்த புனித பீட்டர்சுபர்கில் 1863 மார்ச் 12 |ஃபிப்ரவரி 28இல் பிறந்தார். குடும்ப வரலாற்றின்படி இவரது தந்தையர் ஒரு சப்போரோழியக் கொசாக்கு இனக்குழுவினர்.[5] புனித பீட்டர்சுபர்குக்கு வரும் முன்பு அவர்கீவ் நகரில் அரசியல் பொருளியல் பேராசிரியராக இருந்துள்ளார். இவரது தாயார் உக்ரைனியக் கொசாக்கு வழிவந்த உருசியப் பெண்மணி ஆவார்.[6]
தனது பதினேழாவது பிறந்தநாட் பரிசாக சிறுவனான வெர்னத்ஸ்கி தன் தந்தையிடம் டார்வினின் நூல்களை பரிசாக கேட்டதிலிருந்து அவரது தேடல் தொடங்கிவிட்டது எனலாம். வெர்னத்ஸ்கியின் தந்தையால் ' எனது அன்பு மகனுக்கு 'என கையெழுத்திடப்பட்ட அந்நூல் இன்று மாஸ்கோவில் வெர்னத்ஸ்கியின் நூலக அறையில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. வெர்னத்ஸ்கியின் இல்லமே காட்சியகமாக உள்ளது. இளைஞன் வெர்னத்ஸ்கி தன் 21 ஆம் வயதில் பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் கலைகளுக்கான மாணவர் அமைப்பில் சமர்ப்பித்த கட்டுரையொன்றில் பின்வருமாறு எழுதியிருந்தான்.
,
'ஆனால் உயிர் என்றால் என்ன ? மேலும் உறழ்திணைப்பொருள்-என்றென்றும் தொடர்ச்சியான விதிக்களூக்குட்பட்ட இயக்கங்களுடன், முடிவற்ற ஆக்கமும் அழிவும் ஓய்வற்ற தன்மையும் கொண்ட அந்த உறழ்பொருள் உயிரற்றதா ? இப்பெரும் புடவியில் காண இயலாத ஒரு சிறு புள்ளியின் மேல் மிக மெதுமென்மையாக படர்ந்திருக்கும் ஓர் சிறு படலத்தில் மட்டுமே அத்தனி சிறப்பியல்புகள் உள்ளனவா ? அப்பால் இருக்கும் பெரும் பரப்பனைத்தும் உயிரற்ற உறழ்திணைப் பொருளே அரசாள்கிறதா ? ...காலம் மட்டுமே இக்கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். அறிவியல் ஒருநாள் இக்கேள்விகளுக்கு விடையளிக்கும். '
அத்தேடலும் தேடலில் ஏற்பட்ட காட்சித் தெறிப்புகளுமே வெர்னத்ஸ்கியின் வாழ்வின் அரும்பணியாக விளங்கின. பெரும் மெய்யியல் கேள்விகள் மனதில் சுழன்றாட தனது தேடலின் பாதையை இயற்கை அறிவியலில் தொடங்கினார்
இவர் 1885இல் புனித பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். அப்போது அப்பல்கலைக்கழக கனிமவியல் பதவி வெற்றிடமாக இருந்துள்ளது. மண்ணியலாளரான வாசிலி தோகுசேவ் என்பவரும் புவியியலாளரான அலெக்சி பாவ்லோவ் என்பவரும் சிலகாலம் அங்கு கனிமவியலில் பாடம் எடுத்துள்ளனர். வெர்னத்ஸ்கி கனிமவியலில் நுழைய விரும்பினார். இவர் 1888இல் சுவிட்சர்லாந்தில் இருந்த தன் மனைவி நடாஷாவுக்குப் பின்வருமாறு எழுதியுள்ளார்:
...இன்று பலர் செய்வதைப் போல தரவுகளுக்காகவே தகவல்களை நிறைய திரட்டலாம்.திட்டமோ நோக்கமோ ஏதுமின்றி,ஒரு சிறு வினாவாவது எழுப்பி அதற்குப் பதிலாகவோ அன்றி இப்படி செய்வதில் எனக்கு ஆர்வமேதும் இல்லை. வேதித் தனிமங்களின் சிக்கல்களையும் அவற்றி திரலைல் நிகழும் ஒழுங்குமுறையையும் பார்க்கும்போது இன்னமும் இங்கே கண்டறிய பல கமுக்கங்கள் மறைந்துள்ளன.புவியில் பல்வேறு களங்களில் நிகழும் இவை குறிப்பிட்ட விதிகளின்படி தான் விளைகின்றன. ஒருநால் இவ்விதிகள் நமக்கு நன்கு தெரியவரும். அப்போது நாம் புவியடைந்த பொது மாற்றங்களுக்கும் புவியின் அண்டவியல் பொதுவிதிகளுக்கும் இடையே ஒரு நுண்ணிழை ஊடுபாவுவதை நாம் அறிவோம்....
மேலும் வெர்னத்ஸ்கி. 25 ஆவது வயதில் தன் வாழ்க்கை துணைவிக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் வெர்னத்ஸ்கி குறிப்பிட்டார்,
' வாழ்க்கை வியப்பு மிக்கது. மானுட வரலாற்றிலும், கணிதவியலிலும் எனக்குமுதலில் ஈர்ப்பு உண்டாயிற்று. எனினும் நான் இயற்கை அறிவியலை என் ஆய்வின் வழித்தடமாக மேற்கொண்டேன். இயற்கையின் வரலாற்றிலிருந்து மாந்தரின வரலாற்றுக்கு முன்னேறக் கருதினேன். கணிதவியலை பொறுத்தவரை எனக்கே என் திறமையில் அவ்வளவாக நம்பிக்கையில்லை... '
தனது முப்பதாம் வயதில் அவர் டால்ஸ்டாயைச் சந்தித்தார். அச்சந்திப்பின் தாக்கம் அவர் வாழ்வு முழுவதுமாக இருந்ததை நாம் உணர முடிகிறது.ஏப்ரல் 23, 1892 இல் வெர்னத்ஸ்கி பின்வருமாறு எழுதுகிறார்,
' இன்று டால்ஸ்டாய் எங்களை காண வந்திருந்தார்.நெடு நேரம் நாங்கள் அறிவியல் கருத்துக்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். ... நான் முதலின் நினைத்திருந்ததைக் காட்டிலும் டால்ஸ்டாயின் எண்ணங்களில் பெரும் ஆழம் உள்ளது. அந்த ஆழம் எவை குறித்ததென்றால்:
- 1. நம் வாழ்வின் அடிப்படை, உண்மையினைத் தேடுவதாக இருக்க வேண்டும்.
- 2. ஒருவரது வாழ்வின் நோக்கம் தான் கண்டறியும் உண்மையை எவ்வித தயக்கமும், பரிசுகளின் எதிர்பார்ப்புமின்றி வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.'
வெர்னத்ஸ்கியின் குருவே வெர்னத்ஸ்கியின் அறிவியல் ஆளுமையின் மதிப்பீடுகளை பெரிதும் உருவாக்கியவர். அவர் புகழ் பெற்ற உருசிய மண்ணியலாளரான தோகுசேவ்(1846-1903) என்பவர் ஆவார். ஆனால் மண்ணியலைக் காட்டிலும் விரிவாக சென்ற அறிவியல் பார்வை தோகுசேவினது. சுற்றுப்புற சூழலியலின் உலகத்தரம் வாய்ந்த பாடநூலாக விளங்கும் சூழலியலின் அடிப்படைகள் ஆசிரியரான ஓதம், தோகுசேவினை 'சூழலியலின் முன்னோடி அறிவியலாளர் ' என்றே குறிப்பிடுகிறார். பல தொடர்பற்றதாக தோன்றும் துறைகளிலிருந்து பெறப்பட்ட ஆராய்ச்சி விளைவுகளை அழகிய மெய்யியல் இழைகளால் ஒருங்கிணைத்து உயிக்கோளம் குறித்து புதியதோர் பார்வையை அறிவியல் சார்ந்து முன்வைத்தவர் வெர்னத்ஸ்கி. அப்பார்வையின் மூலம் புதிய இயற்கை உறவுகளை நாம் கண்டடைய முடியும். இயற்கை குறித்த நம் அறிவியல் பார்வை ஆழமும் அகலமும் கொண்டு முன்னகர முடியும். புவிவேதியியலே வெர்னத்ஸ்கியின் துறை. உயிரியல் அல்ல. இன்று போல தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத, மேலும் அரசியல் சுவர்களும் இரும்புத் திரைகளும் விடுதலையின் மூச்சுவளையை நெறித்த அக்கால கட்டத்தில், உலகெங்கும் உள்ள புவிவேதியியல் அறிஞர்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். வெர்னத்ஸ்கி மிகப்பரவலும் ஆழமும் கொண்ட புவிவேதியியல் ஆராய்ச்சிகள் மூலம் இயற்கையின் சில அடிப்படை உண்மைகளை கண்டறிந்தார்.1916 இல் உருசியாவில் யுரேனியக் கனிமத் தாதுவினை அவர் முதன்முதலில் கண்டுபிடித்தார். 1918 இல் ரேடியம் உருசியாவில் தயாரிக்கப்பட்டது. 1922 இல் பீட்டர்சுபர்க்கில் ரேடியம் மையத்தை உருவாக்கினார். 1938 வரை அதன் இயக்குநராக விளங்கினார். இம்மையத்தின் தொடக்க உரையில் அவர் 'அணு ஆற்றல் அளப்பரிய ஆற்றலை நம் கையில் வைத்துள்ளது. அதனை ஆக்கத்துக்குப் பயன்படுத்துகிறோமா அல்லது மானுட இன அழிவுக்கு பயன்படுத்துகிறோமா என்பது நம் கையில் உள்ளது. அளப்பரிய ஆற்றலுடன் விளங்கும் அறிவியலுக்கு விழுமியங்களின் இன்றியமையாத தேவையும் ஏற்பட்டுள்ளது. ' என குறிப்பிட்டார். இது 1922 இல் ! 1922 இல் அவர் விண்கற்கள் குறித்த ஆய்வினையும் தொடங்கினார். அது குறித்து ஆய்வுக் கட்டுரைத் தொடரினையும் அவர் வெளியிட்டார்.விண்கல் ஆய்வு கழகத்தையும் உருவாக்கினார். தன் வாழ்நாள் முழுவதும் அக்கழக செயல்பாடுகளின் வழிகாட்டியாக இருந்தார். அறிவியலுக்கு வெர்னத்ஸ்கியின் வாழ்வின் மிகப் பெரிய பங்களிப்பு, 1926 இல் இலெனின்கிராடில் (பழைய மற்றும் இன்றைய புனித பீட்டர்சுபர்க்) மிக அமைதியாக 2000 பிரதிகளே வெளியிட்ட 'உயிரிக்கோளம்'(The Biosphere) எனும் நூல்தான். 1929 இல் இதன் பிரெஞ்ச் பதிப்பு பாரிசில் வெளியாகியது. 1986 இல்தான் முதல் ஆங்கில பதிப்பு வெளியிடப்பட்டது.வெர்னத்ஸ்கி 1922-23 இல் சோபோர்னில் நடைபெற்ற புவிவேதியியல் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது அவரது உரைகளை ஒரு பிரெஞ்சு துறவியும் மற்றொரு பிரெஞ்சு கணிதவியலாளரும் கேட்டனர். லெ ராய் எனும் அந்த தத்துவ அறிஞருடனும்,தெயில் ஹார்ட் தி சார்டின் எனும் அந்த துறவியுடனும் வெர்னத்ஸ்கி நட்பு கொண்டார். நூஸ்பியர் எனும் உணர்திறக் கோளம் குறித்த உருவாக்கத்தில் அவர்கள் இணக்கம் கொண்டனர்.(சான்று தேவை) வெர்னத்ஸ்கி இறுதியாக எழுதியது 'உணர்திறக்கோளம் (Noosphere) குறித்து சில வார்த்தைகள்' எனும் கட்டுரையே. முதலில் உருசிய மொழியில் வெளிவந்த அது பின்னர் 1945 இல் அமெரிக்கன் சயிண்டிஸ்ட் இதழில் 'உயிர்க்கோளமும் உணர்திறகோளமும் ' எனும் தலைப்பில் வெளிவந்தது. 'மானுடம் முழுமையுமாக ஒரு மகத்தான புவியியல் இயங்காற்றலாக படிமலர்ந்துள்ளது ' என அதில் குறிப்பிடுகிறார் வெர்னத்ஸ்கி. தனது 82 ஆவது வயதில் காலமானார்.
Remove ads
அறிவியல்-கோட்பாடுகள்
வெர்னாட்ஸ்கி மிகப்பரவலும் ஆழமும் கொண்ட புவிவேதியியல் ஆராய்ச்சிகள் மூலம் இயற்கையின் சில அடிப்படை உண்மைகளை கண்டறிந்தார். புவியின் மேல்தோட்டில் காணப்படும் பருப்பொருளை அவர் பின்வருமாறு பகுப்பு செய்தார்: இப்பகுப்பு புவிவேதியியல் அடிப்படையில் செய்யப்பட்டது என்பதனை கருத்தில் கொள்க:
- உயிர்களில் உறையும் உயிர் வாழும் பருப்பொருள்கள்
- உயிர்களால் உருவாக்கி உருமாற்றம் செய்யப்பட்டதான உயிரி ஆக்கும் பருப்பொருள்கள்
- உயிர்கள் பங்கு பெறாத பருப்பொருள்கள்
- உயிர்களாலும் , உயிரற்ற வினைகளாலும் உருவாகும் உயிர்திணை-உறழ்திணைப் பருப்பொருள்கள்
- இயற்கை கதிரியக்க விளைவுப் பருப்பொருள்கள்
- துகளாக்கப்படும் பருப்பொருள்கள்
- புவியில் காணப்படும் அண்டவெளிப் பருப்பொருள்
இன்று இந்த பகுப்பு நமக்கு எளிதான ஒன்றாக தோன்றக் கூடும். ஆனால் புவிவேதியியலும் உயிரியக்கங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டிராத எல்லைகளுடன் விளங்கிய ஒரு காலகட்டத்தில் இப்பார்வை புரட்சிகரமான ஒன்றாகும். இன்றும் வளிமண்டல வேதியியல், உயிரியல்,நீரியல் ஆகிய துறைகளிடையே ஒருமித்த இழைகளை நிறுவுதலென்பது எளிதானதல்ல. செங்கடலோரம் வெட்டுக்கிளிக் கூட்டம் குறித்து ஆய்வுசெய்த கர்த்தூசரின் ஆய்வுகள் அடிப்படையில் காலத்துடன் தொடர்புடைய உயிர்வாழும் பருப்பொருளின் புவிபரவலும் இடம்பெயர்தலும் குறித்த வெர்னத்ஸ்கியின் வரிகள் அவரது பார்வையின் தன்மையை நமக்கு தெளிவாக்குகின்றன.
'உயிர்-புவி-வேதியியல் நோக்கில் ஒரு பெரும் வெட்டுக்கிளி படை என்பது என்ன ? அதி ஊக்க வேதித்தன்மையுடன், திண்மையற்ற பாறைகள் இயக்க நிலையில் நிலவுவதேயாகும்.'
வெர்னத்ஸ்கிக்கு முன் ஒரு வேதியியலாளரும் இவ்வாறு உயிரை கண்டதில்லை. இன்றைய அறிவியல் கண்ணோட்டத்திலிருந்தும் கூட இப்பார்வை துணிச்சலானதுதான். ஒற்றைப்படை தன்மை கொண்ட உயிர் பருப்பொருட் குழுக்களையும், (காட்டாக, ஒரு பேரினத்தைச் சார்ந்த உயிரினங்கள்), மாறாக பன்மைத்தன்மை கொண்ட உயிர் பருப்பொருட் குழுக்களையும் அவர் வேறுபடுத்திக் காட்டினார். வெர்னத்ஸ்கி புவியின் பரப்பில் பெருமளவு 'கடந்த கால உயிரிக்கோளம் ' (Bygone Biosphere) என வரையறுத்தார். நுண்ணுயிர்கள் ஒரு பெரும் புவிவேதி இயக்கப் படையாக இந்தக் கோளம் முழுமையிலும் திகழ்வதை கணித்த முதல் அறிவியல் அறிஞர் அவரே. அவரது வார்த்தைகளில், 'இப்புவியின் பரப்பானது பல டசன் கிலோமீட்டர்களுக்கு பலவித புவியியல் போர்வைகளால் பொதியப்பட்டுள்ளது. இவ்வாறு போர்த்தியிருக்கும் படலங்களில் பல கடந்த கால உயிரிக்கோளங்களாகும். ...இப்போது இவை அனைத்துமே உயிர்க்கோளத்திலிருந்து உருவானவை என்பது தெளிவு. இவை கடந்த கால உயிரிக்கோளங்கள். ' உயிரினங்களுக்கும் புவியின் வேதி அமைப்பிற்குமான தொடர்பினை குறித்து சிந்தித்த முதன்மையான உயிரியலாளர்களில் சார்ல்ஸ் டார்வின் ஒருவராவார். ஒரு செ.மீ மண் புவி மீதுற 50 வருட காலமாகும். மண் மீது ஒவ்வொரு வருடமும் மண் புழுக்கள் தம் உடல்-வேதிவினைகளால் 4 மி.மீ படலத்தை இங்கிலாந்தில் மட்டும் சேர்க்கின்றன என கணித்தார் டார்வின். வெர்னத்ஸ்கி தன்னால் அறியப்பட்ட ஏறத்தாழ அனைத்து உயிரின-சூழல் உறவுகளினுடையவும் புவி-வேதி தாக்கத்தை காலத்தின் பிரவாகத்தில் கணித்தார்.
இக்கணிப்புகளின் அடிப்படையில் அவரால் ஒரு புதிய அறிவியல் புலமே உருவாக்கப்பட்டது. 'உயிர்-புவி-வேதியியிலே ' (Biogeochemistry) அது. இப்புலத்தின் அடிப்படை விதிகளாக (இவை திட்டவட்ட மாற்ற இயலாத விதிகளல்ல, மாறாக திசைகாட்டிகள் என கொள்ளுதலே நலம்.) அவர் பின்வரும் மூன்றையும் கண்டறிந்தார்.
- 1. உயிரிவழிப் புலம் பெயர்தலுக்கு (Biogenic migration) உட்படுத்தப்படும் தனிமங்களின் அணுக்கள் உயிரிகோளத்தில் தம் அறுதிப் பேரளவு வெளிப்பாட்டைப் பெறும் வகையில் இயங்குகின்றன.
- 2.புவியியல் காலவோட்டத்தில் (Geological time) உயிரினங்களின் படிமலர்ச்சி எந்தத் திசை நோக்கி நகருமென்றால், எத்தகைய அமைப்புகள் உயிர்வழிப் புலம் பெயர்தலினைப் பேரளவில் ஏற்கின்றனவோ அத்தகைய அமைப்புகள் உருவாகும் திசை நோக்கியதாக அமையும்.
- 3.முன்-காம்பிரிய புவியூழிக்குப் பின் உடனடியாக அப்போது உயிர்வழிப் புலம் பெயர்தலுக்கு உட்படுத்தப்பட்ட அணுக்கள் தம் அறுதிப் பேரளவு வெளிப்பாட்டினை எட்டும் வகையில் உயிரின எண்ணிக்கை விளங்கியது.
பல படிமலர்ச்சிப் புதிர்களுக்கான விடைகளை நாம் தேட வேண்டிய திசைகளை வெர்னத்ஸ்கி நமக்கு தந்துள்ளார். தொல்பழங்கால உறைந்த உயிர் ஆராய்ச்சியாளரான ஸ்டாபன் ஜே கோல்ட் மிகவும் பிரபலபடுத்திய ஒரு உயிரியல் உண்மை காம்பிரியப் புவியூழியில் ஏற்பட்ட மாபெரும் உயிர் அமைப்பு மாற்றம். இன்று நாம் அனைத்து உயிரினங்களிலும் காணும் அடிப்படை அமைப்பு ஒற்றுமைகள் காம்பிரியப் ' உயிர்ப்பெரு வெடிப்பில் ' (Big Bang of Life) தான் தொடங்கியது. இதற்கான காரணிகளை படிமலர்ச்சி அறிவியலாளர்கள் ஆராய்ந்த வண்ணம் உள்ளனர். இதில் புவி-வேதி காரணிகளின் பங்கினை - அப்பங்கு நிச்சயம் தீர்மான பங்காகவே இருக்க கூடும்- அறிய வெர்னத்ஸ்கியின் விதிகள் நமக்கு பெருமளவில் உதவக்கூடும். கதிரியக்கச் சிதைவினை மனிதர்கள் கட்டுப்படுத்தி ஆற்றலுக்கு பயன்படுத்த முடியும் என கூறிய முதல் அறிவியலாளர் வெர்னத்ஸ்கியே. வெர்னத்ஸ்கி உயிரிக்கோளத்தில் மானுட எண்ணத்தின் தாக்க இழைகள் ஓடும் பகுதியை உனர்திறக்கோளம் என்றார். இந்த உணர்திறக்கோளத்தின் செயல்பாடுகளினால் ஏறபடும் புவிவேதி மாற்றங்களை உயிரிக்கோளத்துடன் இணைவித்து பார்க்கும் முயற்சியை அவர் மேற்கொண்டார்.
Remove ads
கயா (Gaia) கருதுகோளும் வெர்னத்ஸ்கியும்
அண்மையில் வெளியான கட்டுரை ஒன்றில், லின் மர்குலிசின் வார்த்தைகளில், 'வெர்னத்ஸ்கி மற்றும் லாபோ (வெர்னத்ஸ்கியை குறித்து பிரபல அறிவியல் நூல்கள் எழுதிய புவியியலாளர்) குறித்து அறியாமலே ஜேம்ஸ் லவ்லாக் தன் உருசிய முன்னோடிகளின் சாராம்சத்துடன் இசைவுடைய ஒரு புதிய கோட்பாட்டினை அளித்துள்ளார். அவை இரண்டுமே பிரபஞ்சத்திலியங்கும் இப்புவியின் உள்ளார்ந்த தன்மையாக உயிரினை காண்கின்றன. லவ்லாக் உயிரியங்கு தன்மையுடன் புவியினை காண்கிறார். வெர்னத்ஸ்கி உயிரினை (புவியின் மிக முக்கியமான) புவிவேதி ஆற்றலாகக் காண்கிறார். ' உதாரணமாக வெர்னத்ஸ்கி ' உயிர்-புவி வேதியியலில் சில ஆய்வுகள் ' எனும் தன் நூலில் பின்வரும் முடிவுக்கு வருகிறார், 'உயிர் தான் சார்ந்திருக்கும் சூழலிற்குத் தகுந்தாற் போல தகவமைத்துக் கொள்வதோடு அவ்வுயிரின் சூழலும் உயிருக்கு தகுந்தாற் போல தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. ' உயிர்களின் அதி உயிரி தன்மையை வெளிக்கொணரும் ஆய்வு முடிவுகளை வெர்னத்ஸ்கி இலக்கியத்தில் எங்கெங்கும் காண முடியும். இது புவியின் கடல் குறித்து, ' பன்மைத்தன்மை வாய்ந்த உயிர்பொருளின் இருப்பினாலும் இயக்கத்தாலும் கடலின் உயிர்களனைத்தையும் மொத்தமாக கடலின் வேதித்தன்மையை மாற்றும் ஓர் தனி பெரும் உயிரியக்கமாக காணவேண்டும். ' பாஸ்பரம்,மாக்னீசியம், சிலிக்கான் என அனைத்து வேதிப்பொருட்களின் புவிச்சுழல்களிலும் உயிரின் பங்கினை வெர்னத்ஸ்கி கடுமையான ஆய்வுகளால் கண்டறிந்தார். எனவே வெர்னத்ஸ்கியின் அறிவியல் 'கயா ' கோட்பாட்டுமுறை அறிவியற் செயல்பாட்டிற்கான திசைகாட்டியாக விளங்குகிறது.
இவர் 1930களிலும் 1940களின் தொடக்கத்திலும் சோவியத் அணுகுண்டுத் திட்ட்த்தில்அறிவுரையாளராகப் பணீயாற்றினார். அணுக்கரு மின்திறன் உருவாக்கத்துக்கு வன்மையாக குரல் எழுப்பினார். சோவியத் ஒன்றிய யுரேனியம் வள ஆய்வை மேற்கொண்டார். இவர் தனது ரேடியம் நிறுவனத்தில் அணுப்பிளவு ஆய்வை மேற்கொண்டார். என்றாலும் முழுத்திட்டமும் கண்காணித்து நிறைவேறுவதற்குள் இவர் இயற்கை எய்தினார்.
சமயம் பொறுத்தமட்டில் இவர் ஒரு நாத்திகர்.[7] என்றாலும் இவர் இந்துமதம், ரிக் வேதம்அகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார்.[8][9]
வெர்னத்ஸ்கியின் இந்திய மெய்யியல் ஈடுபாடு
வெர்னத்ஸ்கி தன் கிறிஸ்தவ இறையியல் சூழலை குறைபாடுடையதாகவே உணர்ந்துள்ளார். தனது 29 ஆவது வயதிலேயே அவர் எழுதிய கடிதமொன்றில் பின்வருமாறு கூறியிருந்தார், 'நாம் உடல்-மனது எனும் குறுகிய கிறிஸ்தவ இரட்டைத்தன்மையை கைவிட வேண்டும். உண்மையான ஆன்மிக வாழ்வு, மிக உயர்ந்த ஆதர்சங்களுடனான வாழ்வென்பது உடல் மற்றும் ஆன்மாவின் மிக உன்னத இயல்புகள் இணைந்தியங்குவதிலேயே உள்ளது.' 1920 களிலிருந்து வெர்னத்ஸ்கி மேலும் மேலும் பாரத தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். 1920 லில் அவர் ஒரு ரஷிய தத்துவவியலாளரை அவரது நூலில் பாரத தத்துவத்திற்கு உரிய இடம் கொடுக்காததற்காக கடிந்து எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிடுகிறார்,
'ஹிந்துக்களின் சமய மற்றும் தத்துவ சிந்தனைகள் மூலம் நாம் பெறுவது நம்முடைய யூதேய-கிறிஸ்தவ சிந்தனைகளிலிருந்து நாம் பெற்றதை காட்டிலும் அதிகம் என கருதுகிறேன்.'
மேலும் அவர் பிற்கால கடிதம் ஒன்றில் வேத உபநிஷதங்களை குறித்த அவர் புலமையும் ஈடுபாடும் தெள்ளத்தெளிவாகிறது,
'தெய்சினின் மொழிபெயர்ப்பில் உள்ள ரிக்வேத பாடல் ஒன்றினை அனுப்பியுள்ளேன். இம்மொழிபெயர்ப்பு அதன் மூல பாடலிற்கு நம்பிக்கையானதென்றே கருதுகிறேன். இக்கவி புத்தருக்கு நெடுங்காலம் முன்பும் ஏசுவிற்கு பல நூற்றாண்டுகள் முன்பும், சாக்ரட்டாசிற்கும் அனைத்து கிரேக்க சிந்தனைகளுக்கும் அறிவியலுக்கும் பன்னெடுங்காலம் முன்பும் இயற்றிய பாடலிது. ஆனால் இப்பாடல் நம்முள் எழுப்பும் சிந்தனைகள் இன்றைக்கும் பொருந்துகிறது.இப்பாடல் எத்தகைய உயர்ந்த எண்ணங்களை நம்முள் உருவாக்குகிறது! படைப்புக் கடவுளைக் குறித்து பெரும் ஐய வினாக்களை எழுப்புகிறது....இதுவே இதயத்தின் உள்தேடல். இதுவே அன்பின் உணர்ச்சி '.
உருசிய இந்தியவியலாளர் அலெக்சாந்தர் செக்னிவிச்சின் கூற்றின் படி வெனத்ஸ்கி (அர்னால்ட் தாயின்பீ போன்றே) இந்நூற்றாண்டில் மாந்தரினம் தன் பண்பாட்டுப் பன்மையையும் மக்கட்பண்பு மதிப்பீடுகளையும் காப்பாற்ற இந்திய மெய்யியலின் துணையினைப் பெறத் திரும்பும் எனக் கருதியதாக கூறுகிறார். தன் இறுதிக்காலத்தில் வெர்னத்ஸ்கி சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளால் மிகத் தீவிரமாகக் கவரப்பட்டார் எனத் தெரிகிறது. 1936 இல் பெங்களூரில் இயங்கி வந்த உயிர் வேதியியல் கழகத்தில் (Society for Biochemistry) இவர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரானார்.
இவரது மகனான ஜார்ஜ் வெர்னத்ஸ்கி (1887–1973) அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கு அவர் இடைக்கால், இக்கால உருசிய வரலாற்றில் பல நூல்களை வெளியிட்டார்.
Remove ads
தகைமைகள்
இவருக்கு மதிப்பு நல்க, மாஸ்கோ வளாகமொன்றான உக்ரைன் தேசிய நூலகமும் கிரீமியாவில் உள்ள தாவரிதா தேசியப் பல்கலைக்கழகமும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.
பன்னாட்டவையின் கல்வி, அறிவியல், பண்பாட்டுநிறுவனம் (யுனஸ்கோ) "Globalistics-2013", எனும் பன்னாட்டுக் கருத்தரங்கை மாஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் 2013 அக்தோபர் 23–25ஆகிய நாட்களில் இவரது 150ஆம் ஆண்டு நினைவாக நடத்தியது.
தேர்வு நூல்கள்
- புவிவேதியியல், உருசிய மொழியில் 1924இல் வெளியிடப்பட்ட்து.
- உயிர்க்கோளம், உருசிய மொழியில் முதலில் 1926இல் வெளியிடப்பட்ட்து. ஆங்கில மொழிபெயர்ப்புகள்:
- Oracle, AZ, Synergetic Press, 1986, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-907791-11-5, 86 pp.
- tr. David B. Langmuir, ed. Mark A. S. McMenamin, New York, Copernicus, 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-98268-X, 192 pp.
- புவிவேதியியல், உயிர்க்கோளக் கட்டுரைகள், tr. Olga Barash, Santa Fe, NM, Synergetic Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-907791-36-0, 2006
நாட்குறிப்புகள்
- Dnevniki 1917–1921: oktyabr 1917-yanvar 1920 (Diaries 1917–1921), Kiev, Naukova dumka, 1994, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-12-004641-X, 269 pp.
- Dnevniki. Mart 1921-avgust 1925 (Diaries 1921–1925), Moscow, Nauka, 1998, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-02-004422-9, 213 pp.
- Dnevniki 1926–1934 (Diaries 1926–1934), Moscow, Nauka, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-02-004409-1, 455 pp.
- Dnevniki 1935–1941 v dvukh knigakh. Kniga 1, 1935–1938 (Diaries 1935–1941 in two volumes. Volume 1, 1935–1938), Moscow, Nauka, 2006,பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-02-033831-1,444 pp.
- Dnevniki 1935–1941 v dvukh knigakh. Kniga 2, 1939–1941 (Diaries 1935–1941. Volume 2, 1939–1941), Moscow, Nauka, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-02-033832-X, 295 pp.
Remove ads
மேலும் காண்க
- கயா கருதுகோள்
- உணர்திறக்கோளம்
- வெர்னத்ஸ்கி ஆய்வு நிறுவனம்
மேற்கோள்கள்
உசாத்துணை
- "Science and Russian Cultures in an Age of Revolutions" பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-253-31123-3
- Lapo, Andrei V. (March 2001). "Vladimir I. Vernadsky (1863–1945), founder of the biosphere concept". Int. Microbiol. 4 (1): pp. 47–9. doi:10.1007/s101230100008. பப்மெட்:11770820 இம் மூலத்தில் இருந்து 2016-01-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160108203203/http://www.im.microbios.org/13march01/09%20Lapo%20(P).pdf.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads