வி. ஆர். கிருஷ்ணய்யர்

முன்னால் இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் From Wikipedia, the free encyclopedia

வி. ஆர். கிருஷ்ணய்யர்
Remove ads

வி. ஆர். கிருஷ்ணய்யர் (15 நவம்பர் 1914-4 டிசம்பர் 2014)[1] , இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் வழக்குரைஞர், சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயல்பாட்டாளர் எனப் பல பொறுப்புகளை இவர் வகித்துள்ளார்[2]. இவருக்கு இந்திய அரசால் 1999 ஆம் ஆண்டு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.

விரைவான உண்மைகள் வி. ஆர். கிருஷ்ணய்யர், பிறப்பு ...
Remove ads

பிறப்பும், ஆரம்ப வாழ்க்கையும்

அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியான கேரளத்தின் பாலக்காட்டில் அவர் பிறந்தார். அவரின் குடும்பம் கேரளத்தின் குயிலாண்டிக்கு இடம்பெயர்ந்தது. புகழ்வாய்ந்த ஒரு வழக்குரைஞரின் மகனாக வளர்ந்த அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பின் சென்னை சட்டக் கல்லூரியிலும் கல்வியை முடித்தார். பிறகு, வழக்குரைஞராக மலபார், கூர்க் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் பொதுவுடைமை மற்றும் தொழிற்சங்க இயக்கத்தவருக்கு அவர் தொடர்ந்து வாதாடிவந்தார். இந்தியா விடுதலை அடைந்த சமயம், பொதுவுடைமை இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணய்யர் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளின் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதிட்டதால், கோபத்துடன் இருந்த காவல் துறையினர், தலைமறைவு கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 1948 மே மாதத்தில் வழக்குப் பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்து கண்ணனூர் சிறையில் அடைத்தது. சிறையின் அவலங்களையும், கைதிகளின் நிலையையும் அவர் நேரடியாக உணர இது உதவியது.[2]

Remove ads

பொதுவுடைமை இயக்கத்தில் பங்கு

பொதுவுடைமை இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்கள் 1952 தேர்தலில் போட்டியிட்டபோது, வி. ஆர். கிருஷ்ணய்யர் குத்து பரம்பா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக நின்று, பொதுவுடைமை இயக்கத்தின் ஆதரவில் வெற்றிபெற்று, சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். மலபார் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதும், ஒட்டுமொத்த சென்னை மாகாணப் பிரச்சினைகளுக்காக அவர் குரலெழுப்பினார். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரத்தின் ராயல்சீமா மக்களுக்குக் கஞ்சித் தொட்டி நிர்வகிப்பது குறித்தும், மலபார் நெசவாளர்களின் நிலைகுறித்தும் சட்டமன்றத்தில் அவர் குரலெழுப்பினார். பஞ்சத்தையும் வறுமையையும் மக்கள் எதிர்கொண்ட நிலையில், அன்றைய முதல்வர் ராஜாஜி, அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சலுகை அறிவித்தார். அரசு ஊழியர்களைக் கைக்குள் வைத்துக்கொள்ள சலுகை அறிவிக்கும் ஆங்கிலேய அரசின் தொடர்ச்சியாக சுதேசி அரசும் இருப்பதை, வி. ஆர். கிருஷ்ணய்யர் 1952 ஜூலையில் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரை சுட்டிக்காட்டியது.[2]

Remove ads

முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் அமைச்சர்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, கேரள மாநிலத்தில் 1957-ல் அவர் தலைச்சேரி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 முதல் 1959 வரை ஆட்சிபுரிந்த ஈ. எம். எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில், சட்டம், சிறை நிர்வாகம், உள்துறை, மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம், சமூக நலத் துறை அமைச்சராகவும் பதவிவகித்தார். இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தார். பாசனத் துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், கோவை மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைக் கிழக்குப்புறமாகத் திருப்பிவிட்டுத் தமிழகமும் கேரளமும் சேர்ந்து பயன்பெறுவதற்கான பரம்பிக்குளம் திட்டம்தான் இது. கேரள முதல்வர் நம்பூதிரிபாடும் வி. ஆர். கிருஷ்ணய்யரும் இதற்குச் சம்மதித்தனர். ஆனால், கேரளத்தின் அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ், வி. ஆர். கிருஷ்ணய்யர் தமிழர் என்பதால், தமிழகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறிப் பிரச்சினையை ஏற்படுத்தினர். காமராஜர் தலையீட்டால் பிரச்சினை பெரிதாகாமல் திட்டம் நிறைவேறியது. இந்தக் காலகட்டத்தில் கேரளாவில், சிறியதும் பெரியதுமான நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றைத் தொலைநோக்குப் பார்வையோடு வி. ஆர். கிருஷ்ணய்யர் திட்டமிட்டார். ‘உழைப்பு தானத் திட்டம்’ என்ற பெயரில், இன்றைய நூறு நாள் வேலைத் திட்டம் போல, தினம் ரூ 50 கூலி தரும் திட்டம் செயல்பட ஆலோசனை வழங்கினார். மேலும், சட்ட அமைச்சர் என்ற அளவில், வரதட்சிணை ஒழிப்புச் சட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக அவர் அறிமுகம் செய்தார். சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகச் செயல்பாடுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டன. சிறைக் கைதிகள் கண்ணியத்தோடு நடத்தப்பட, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.[2]

நீதிமன்றப் பணிகள்

1959-ல் அவர் பங்கேற்றிருந்த மந்திரி சபை நேருவால் கலைக்கப்பட்டது. அதன் பின் 1960-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஏழு வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதையும் வாக்களிக்கும் வயதே வராதவர்களை வைத்துக் கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதையும் அறிந்து, அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்தார். இரண்டரை ஆண்டுகள் கழித்து, இறுதியில், ஐந்து வாக்கு வித்தியாசத்தில் கிருஷ்ணய்யர் வெற்றிபெற்றதாக நீதிமன்றம் அறிவித்தது. மீண்டும் சட்டமன்றம் சென்றார். இந்தச் சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முக்கியத் தலைவர்கள் பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கியதும், கட்சி பிளவுபட்ட சூழலில் 1965-ல் தேர்தலைச் சந்தித்து வி. ஆர். கிருஷ்ணய்யர் தோல்வியடைந்தார். அதன் பின்பு, அரசியலிலிருந்து விலகி உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணிபுரிய ஆரம்பித்தார். 1968-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக வி. ஆர். கிருஷ்ணய்யர் பொறுப்பேற்றார். உயர் நீதிமன்ற நீதிபதிகள் நடந்து வரும்போது செங்கோல் ஏந்தி 'உஸ்' என்று ஒலி எழுப்பி, ஊழியர் ஒருவர் நீதிபதிக்கு முன்னே வரும் பழக்கம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலேய நீதிபதிகள், இந்தியர்களைக் காட்டிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டுவதற்காகப் பின்பற்றிய அந்த வழக்கம் சனநாயக சமூகத்துக்கு ஏற்றதல்ல என்று வி. ஆர். கிருஷ்ணய்யர் அதை மறுத்தார்.[2]

Remove ads

நெருக்கடி நிலை காலம்

1971-ல் மத்திய சட்ட கமிஷன் உறுப்பினராக அவர் தேர்வுசெய்யப்பட்டார். பின் 1973-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1975-ல், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தேர்தல் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி வி. ஆர். கிருஷ்ணய்யர் முன் வந்தது. இந்திரா காந்தி பிரதமராகத் தொடரலாம் என்றும் ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் வாக்களிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பால் ஆறு மாதத்தில் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் இந்திரா காந்திக்கு உருவானது. இதன் தொடர்ச்சியாகத்தான், 1975 ஜூன் 24-ம் தேதி நெருக்கடி நிலையை அவர் அறிவித்தார்.[2]

Remove ads

மறைவு

2014, நவம்பர் 24 அன்று கொச்சியிலுள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாரடைப்பு, சிறுநீரகம் செயலிழந்தது, மூச்சுக்குழலழற்சி போன்றவற்றால் அவர் உயிர் டிசம்பர் 4 அன்று பிரிந்தது என்று மருத்துவர் அறிவித்தார். [3]

கிருஷ்ணய்யர் விருது

இவரின் பெயரில் ஆண்டுதோறும் சிறந்தகல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு கிருஷ்ணய்யர் விருதுகள் சோக்கோ அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.[4]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads