2024 கோபா நிலச்சரிவுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2024 கோபா நிலச்சரிவுகள் (2024 Gofa landslides) என்பது சூலை 2024 இல், எத்தியோப்பியாவில் தெற்கு எத்தியோப்பியா பிராந்திய மாநிலத்தில் இரண்டு கிராமங்களை மண்ணில் புதைத்த இரண்டு நிலச்சரிவுகளைக் குறிக்கிறது. இந்தப் பேரிடரில் 257 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர்.[1] இரண்டாவது நிலச்சரிவு முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உதவ வந்தவர்களை புதைத்தது. எத்தியோப்பிய வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவுகளாக இவை கருதப்படுகின்றன.

Remove ads
பின்னணி
கோஃபா, தெற்கு எத்தியோப்பியா பிராந்திய மாநிலத்தில், தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து சுமார் 450 கிலோமீட்டர்கள் (280 மை) தொலைவில் அமைந்துள்ளது, மகிழ்வுந்தில் இத்தொலைவைக் கடக்க சுமார் 10 மணிநேரம் ஆகும். உள்ளூர்வாசிகளின் அறிக்கையின்படி, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி தொலைதூர, கிராமப்புற மலைப்பகுதி ஆகும். இப்பகுதியில் உள்ள மண் நிலையற்றதாக அறியப்படுகிறது, மேலும் கனமழையும் நிலச்சரிவும் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பு சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது.[2] 2016 ஆம் ஆண்டில், தெற்கு எத்தியோப்பியாவில் உள்ள வோலைட்டாவில் பெய்த கனமழை நிலச்சரிவுக்கு வழிவகுத்தது, இதில் 41 பேர் கொல்லப்பட்டனர்.[3] மே 2024 இல், தற்போதைய நிகழ்வு நடைபெற்ற இதே பகுதியில் நிலச்சரிவில் 50 பேர் கொல்லப்பட்டனர்.[4]
Remove ads
பேரிடர் நிகழ்வு
கெசே கோஃபாவில் உள்ள கெஞ்சோ-சாச்சா பகுதியில் கனமழையைத் தொடர்ந்து, சூலை 21 அன்று மாலை முதல் நிலச்சரிவு ஏற்பட்டது, நான்கு வீடுகள் புதைக்கப்பட்டன.[5][6][7] அடுத்த நாள் காலை சுமார் 10:00 எத்தியோப்பிய திட்ட நேரம் (07:00 ஒ.அ.நே), உயிர் பிழைத்தவர்களை மீட்க மக்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது, இது கூடுதல் இறப்புகளுக்கு வழிவகுத்தது.
இந்த நிலச்சரிவில் 148 ஆண்கள், 81 பெண்கள் உட்பட 257 பேர் இறந்துள்ளனர்.[1] இது எத்தியோப்பியாவின் மிக மோசமான நிலச்சரிவாகக் கருதப்படுகிறது.[2] இறந்தவர்களில் அப்பகுதியின் நிர்வாகியும் அடங்குவார்.[4] மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகம் இறப்புகளின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டக்கூடும் என்று கூறுகிறது.[1]
Remove ads
கெடுவிளைவுகள்
எத்தியோப்பிய மாநில இணைவு பெற்ற ஊடகப்பிரிவு முகநூலில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் பேரிடர் நிகழ்ந்த இடத்தில் தங்களது வெறுங்கைகளைக் கொண்டும் மண்வெட்டிகளைக் கொண்டும் தோண்டிக் கொண்டிருக்கும் ஒளிப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.[8] சூலை 23-ஆம் நாளன்று கோபா மண்டல தேசியப் பேரிடர் பதிலளிக்கும் முகமையின் தலைவர் மார்க்கோசு மெலிசு ராய்ட்டர்சுக்கு பதிலளிக்கும் போது முதல் கட்டப்பணியில் ஈடுபட்டுள்ளோர் இன்னும் உடல்களை மீட்டுக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.[9] அதேநாளில், குறைந்தது 10 பேர் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.[10]
முதற்கட்ட மீட்புப்பணிியல் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டோரின் உடல்களை அடையாளம் கண்டு குடும்பத்தினர் பெற்றுக்கொள்வதாகவும் அடையாளம் காணப்படாத மற்றும் கோரப்படாத உடல்கள் எரியூட்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் ஒருவர் ஊடகத்திற்குத் தெரிவிக்கும் போது மீட்கப்பட்ட உடல்கள் ஒரு கூடாரத்தில் வைக்கப்படுவதாகவும் பின்னதாக இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். முதற்கட்ட மீட்புப்பணிகளின் போது போதிய மீட்பு இயந்திரங்கள் இல்லாமல் போனது தேடுதல் முயற்சிகளுக்குத் தடையாக இருந்துள்ளது.[11] மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் கூற்றுப்படி குறைந்தது 15,515 எண்ணிக்கையிலான மக்கள் இந்தப் பேரிடரில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இங்குள்ள மக்களை தொடர் மழையினால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கு உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் தேவையும் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.[12][13]
மறுமொழி (அ) எதிர்வினை
சமூக ஊடகங்களில், எத்தியோப்பிய தலைமை அமைச்சர் அபிய் அகமது தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் அவசர கால உதவிகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.[14] இவர் சூலை 26-ஆம் நாளன்று நிலச்சரிவு நிகழ்ந்த இடத்தைப் பார்வையிட்டார்.[15] கூட்டாண்மை பாராளுமன்ற அவையானது சூலை 27 முதல் 29 வரை துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாக அறிவித்தது.[16]
ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர் மவுசா ஃபக்கி மகமது சமூக ஊடகங்களில் பாதிக்கப்பட்டோருக்கு தனது ஆறுதலைத் தெரிவித்ததோடு காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் இடம் பெயர்ந்தோருக்கு உதவுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.[17]
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோசு அதானோம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது இரங்கலையும் துக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார், மேலும் உடனடி சுகாதாரத் தேவைகளை எதிர்கொள்வதற்காக உலக சுகாதார அமைப்பின் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.[18]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads