அரங்க. சீனிவாசன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அரங்க.சீனிவாசன் (செப்டம்பர் 29, 1920 - சூலை 31, 1996) தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். மகாத்மா காந்தியைத் கதைத்தலைவராய்க் கொண்டு மனித தெய்வம் காந்தி காதை என்ற காப்பிய நூலை எழுதியவர்.

விரைவான உண்மைகள் அரங்க. சீனிவாசன், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

சீனிவாசன் பர்மாவில் "பெகு" மாவட்டத்தின் "சுவண்டி" என்ற சிற்றூரில் அரங்கசாமி நாயுடு, மங்கம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார்.[1] மங்கம்மாள், நேதாஜியின் இந்தியத் தேசிய இராணுவத்தின் ஜான்சிராணி படைப்பிரிவில் துப்பாக்கி ஏந்திப் போரிட்டவர். 1942-இல் இரண்டாம் உலகப் போரின் போது பர்மாவிலிருந்து கால்நடையாக இந்தியா வந்தார். இடையில் குண்டர்களின் தாக்குதலால், கெளஹாத்தி மருத்துவமனையில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். இராஜா சர் முத்தையா செட்டியார் நிறுவிய தமிழ் - சமக்கிருத ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் ஆராய்ச்சி முனைவராகப் பணிபுரிந்தார். சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க் கல்லூரியில் சிறப்புப் பேராசிரியராகவும் பணி புரிந்துள்ளார். திண்டுக்கல் அருகே கோவிலூரில் வாழ்ந்து வந்தார். இரண்டு தன் வரலாற்று நூல்கள் எழுதினார்.

சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரின் படத்தை அரும்பாடுபட்டு ஊற்றுமலை ஜமீனில் கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தினார்.

அரங்க சீனிவாசன் மனைவி பெயர் பாப்பம்மா. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். விஜயலட்சுமி, திருவெங்கடம், மணிமேகலை, ராணி. அவரது பேரப்பிள்ளைகள்

தமிழ்நாடு மற்றும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அவர் ஒருபோதும் பணம் சம்பாதிக்க விரும்பவில்லை. அவரது புத்தகங்களின் உரிமை பணம் எங்கே போகிறது என்பது அவரது வாரிசுகளுக்கு கூட தெரியாது. அவர் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார்

Remove ads

எழுத்துலகில்

அரங்க. சீனிவாசன் பத்தாம் வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார். அவை "சுதேச பரிபாலினி", "பர்மா நாடு", பால பர்மர், "சுதந்திரன்", "ஊழியன்" என்ற இதழ்களில் வெளிவந்தன. 14ஆம் வயதில் தேசிய கீதம், சரஸ்வதி துதி முதலிய சிறு நூல்களை இயற்றினார். 15ஆம் வயதில், வடமலை சீனிவாச மாலை, மணவாள சதகம் முதலான பல பிரபந்தங்களை இயற்றினார்.

பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பழனி மாம்பழக் கவிராயரின் தலை மாணாக்கரான பழனி பக்கிரிசாமிப் பிள்ளை என்ற பரிபூரணானந்த சுவாமிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பயின்றார். திண்டுக்கல் "தோப்புச்சாமிகள்" என்ற பி.எஸ்.இராமானுச தாசரிடம் வைணவ நூல்களின் விளக்கங்களை அறிந்து கொண்டார்.

கொல்கத்தா பாரதி தமிழ்ச்சங்க உறுப்பினராகவும், தமிழ் எழுத்தாளர் சங்க நிறுவனராகவும் பணிபுரிந்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பட்டப்படிப்பு மாணாக்கர்களுக்குப் பாடம் நடத்தினார். அங்கிருந்து வெளிவந்த "ஜோதி" மாத இதழிலும், திருச்சி "தொழிலரசு" இதழிலும் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழகத்துக்கு வந்து முதன் முதலாக "சங்கரன்கோவில் கோமதி நான்மணிமாலை" என்ற நூலை இயற்றி, அரங்கேற்றிப் பரிசும் பணமும் பெற்றார். தமிழ், இந்தி, சம்ஸ்கிருதம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். "தியாக தீபம்" என்ற வரலாற்றுப் புதினத்தை எழுதினார். இதற்கு நாரண. துரைக்கண்ணன் அணிந்துரை எழுதினார்.

"மனித தெய்வம் காந்தி காதை" [2] என்ற காப்பிய நூலை திருச்சிராப்பள்ளி திருக்குறள் கழகத்தின் தலைவர் ஆ.சுப்புராயலு செட்டியாரின் ஆதரவில் எழுதினார். இது ஐந்து காண்டங்களில், எழுபத்தேழு படலங்களையும், 5,183 பாடல்களையும் கொண்டது.[3] தினமணி இதழில் பலநூறு கட்டுரைகளையும், நூல் மதிப்புரைகளையும் எழுதியுள்ளார். தினமணியில் இவர் எழுதிய சங்க நூல் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது. "சங்க இலக்கியங்களில் தேசியம்" என்ற இவரது நூலை தேசிய சிந்தனைக் கழகம் வெளியிட்டது. வைணவத் தத்துவ அடிப்படைகள், அருள் விளக்கு அரிவையர், அறிய வேண்டிய ஐம்பொருள், திருவரங்கத் திருநூல் ஆகியவற்றையும் எழுதியுள்ளார். "தேசிய கீதம்" முதலாக "நீலிப்பேயின் நீதிக்கதைகள்" வரை 29 நூல்களை எழுதியுள்ளார்.

தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் நிறுவிய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராகி, "தமிழ்க் கலைக் களஞ்சியம்" உருவாக ஒத்துழைத்தார்.[4]

Remove ads

பதிப்புப் பணியில்

பல ஆண்டு மலர்களுக்கும், நினைவு மலர்களுக்கும், பற்பல சிறந்த தமிழ் நூல்களுக்கும் பதிப்பாசிரியராகவும், உரையாசிரியராகவும் பணிபுரிந்தார். தமிழக அரசு தொல்பொருள் துறையின் "வானர வீர மதுரைப் புராணம்" என்ற நூலைத் திருத்திப் பதிப்பித்தார். "மண்ணியல் சிறுதேர்" முதலாக "அண்ணாமலையார் நினைவு மலர்" ஈறாக 12 நூல்களைப் பதிப்பித்துள்ளார். பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது, அண்ணாமலை ரெட்டியார் கவிதைகள், கூடற் கலம்பகம் ஆகிய பழந்தமிழ் நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். காவடிச்சிந்தை 20 ஆண்டுகள் ஆய்ந்து நல்ல காவடிச்சிந்து புகழ் சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் கவிதைத் தொகுப்பு (1989), காவடிச் சிந்தும் கவிஞர் வரலாறும் (1984) ஆகிய நூல்களை வெளியிட்டார்.

விருதுகள்

  • காந்தி காதை நூல் பாரதிய வித்யா பவனின் இராஜாஜி நினைவுப் பரிசும், பத்தாயிரம் ரூபாயும் பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்கம், கோவை இராமகிருஷ்ணா வித்தியாலயம் ஆகிய நிறுவனங்கள் வழங்கிய பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அஞ்சல்வழிப் பட்டப் படிப்புக்கும், பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டப் படிப்புக்கும், தன்னாட்சிக் கல்லூரிகள் சிலவற்றின் பட்டப் படிப்புக்கும், காந்தி காதை பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழகப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடநூலில் காந்தி காதைப் படலம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
  • "காவடிச் சிந்தும், கவிஞன் வரலாறும்" என்ற ஆய்வு நூல், தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது.
  • வங்கதேசப் போரைப் பற்றிய இவரது "வங்கத்துப் பரணி" என்ற நூல், பட்டப்படிப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
  • இவரது எழுத்துப் பணிகளைப் பாராட்டி, அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால், "அருட்கவி" என்ற விருது பெற்றர்.
  • ம.பொ.சி. தலைமையில் இயங்கிய நாமக்கல் கவிஞர் நினைவுக் குழுவினரால், "கவித்தென்றல்" என்ற பட்டமும் பரிசும் கேடயமும் பெற்றார்.
  • பொள்ளாச்சி மகாலிங்கத்திடமிருந்து பாராட்டும் பெருந்தொகையும் கேடயமும் பெற்றுள்ளார்.
  • கி. வா. ஜகந்நாதன் இவருக்குக் "கம்பன் வழிக் கவிஞர்" என்ற பட்டத்தைவழங்கிப் பாராட்டியுள்ளார்.
  • சென்னைத் தமிழ் வளர்ச்சி மன்றம் "கவிதைச் செம்மல்" என்ற விருதளித்துள்ளது.
  • திருச்சி கலைப்பண்ணை "கவிக்கடல்" என்ற பட்டம் அளித்தது.,
  • உலகப் பல்கலைக்கழகம் "டாக்டர்" பட்டமும் அளித்து கெளரவித்துள்ளது.
Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads