அருந்ததி சிறீரங்கநாதன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கலாசூரி, தேசநேத்ரு அருந்ததி ஸ்ரீரங்கநாதன் (Arnuthathy Sri Ranganathan, 24 பெப்ரவரி 1946 – 17 பெப்ரவரி 2025) இலங்கையின் பிரபலமான கருநாடக இசைப் பாடகரும், இசையமைப்பாளரும், மெல்லிசைப் பாடகரும், வீணைக் கலைஞரும் ஆவார். இலங்கையில் ஒலிபரப்புத் துறையில் முன்னோடிகளில் ஒருவர். இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகவும் ஊடகத்துறை ஆலோசகராகவும் பணியாற்றியவர்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
அருந்ததி யாழ்ப்பாணத்தில் 1946 பெப்ரவரி 24 அன்று கந்தர்மடம் கே. சிவசுப்பிரமணியம், உடுவில் வீரலட்சுமி ஆகியோருக்குப் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஐந்து பெண்களில் இளையவர். கொழும்பு சைவ மங்கையர் கழகத்தில் தனது தொடக்கக் கல்வியைப் பெற்ற பிறகு, உயர்கல்விக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள வேம்படி மகளிர் கல்லூரியில் சேர்ந்தார். அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி 1967 இல் பொருளியலில் சிறப்புப் பட்டம் பெற்றார்.[1]
Remove ads
கலைகளில் ஆர்வம்
தனது வாழ்க்கையின் தொடக்கக் கட்டத்திலேயே, இசையிலும் நடனத்திலும் நிலையான ஆர்வத்தைக் காட்டிய அருந்ததி, கேரளத்தைச் சேர்ந்த அந்தோனி மாஸ்டரின் வழிகாட்டுதலின் கீழ் கருநாடக இசையையும், ஆந்திராவைச் சேர்ந்த மூத்த வீணைக் கலைஞர் திருமதி ராஜுவின் வழிகாட்டுதலின் கீழ் வீணையையும் கற்றுக்கொண்டார்.[1] பின்னர், ஜெயலட்சுமி கந்தையா, பாலசுந்தரி பிராதலிங்கம் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் பரத நாட்டியத்தையும் கற்றுக்கொண்டார். தொடர்ந்து மகாராஜபுரம் சந்தானம், கல்யாண கிருஷ்ண பாகவதர் ஆகியோரிடம் முறையே வாய்ப்பாட்டையும் வீணையையும் கற்றார். வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தரப் பரீட்சைக்குத் தோற்றி வாய்ப்பாட்டிலும் வீணையிலும் திப்புளோமாச் சான்றிதழ்களைப் பெற்றார்.[1]
பாடசாலை மட்டத்திலும் இலங்கை வானொலியின் கர்நாடக பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் இசையில் தனது முன்னோடி வாழ்க்கையைத் தொடங்கினார். இலங்கை வானொலித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, பாரம்பரிய குரல், பாரம்பரிய வீணை, பண்ணிசை, மெல்லிசை ஆகிய இசையின் நான்கு பிரிவுகளிலும் நிகழ்ச்சிகளை நிகழ்த்திய ஒரே தமிழ்க் கலைஞர் இவரே.[1]
Remove ads
ஒலிபரப்பாளர்
1974 இல் இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகத் தனது நீண்டகால வாழ்க்கையைத் தொடங்கினார். 1979 இல் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகவும், பின்னர் 1984 இல் பணிப்பாளராகவும் (இசை) ஆனார், இறுதியாக, 1994 இல் தமிழ்ச் சேவைப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.[1]
வானொலி நாட்களில் அவர் வானொலி வானம்பாடி என்று அழைக்கப்பட்டார். இலங்கை வானொலியின் 75-வது ஆண்டு விழாவில் 10 குறுவட்டுகளை இவர் வெளியிட்டார். இவரது பதவிக் காலத்தில், இலங்கைத் தீவு முழுவதும் வானொலி நாடக விழாக்களையும் வானொலி இசை விழாக்களையும் ஏற்பாடு செய்தார். அஷ்டலட்சுமி, இராமாயணம், சகுந்தலை, நள தமயந்தி, அன்பேசிவம், தஞ்சாவூர் பெரிய கோயில், ஸ்கந்த லீலா போன்ற 20க்கும் மேற்பட்ட நடன நாடகங்களுக்கு வசனம் எழுதி இசையமைத்துள்ளார்.[1]
இவர் தமிழ் மாணவர்களிடையே மட்டுமல்ல, சிங்கள மாணவர்களிடையேயும் கருநாடக இசையை கற்பிப்பதிலும் பிரபலப்படுத்துவதிலும் ஈடுபட்டார், கருநாடக இசையில் முதல் சிங்கள பட்டதாரிகளின் தொகுப்பை உருவாக்குவதில் முன்னோடியாக இருந்தார்.[1]
பட்டங்களும் விருதுகளும்
- கலாசூரி தேசிய விருது
- விசுவ பிரசாதினி
- தேச நேத்ரு
- பிரதீப பிரணம[2]
- கலைச்செம்மல்
- அடிப்படை சங்கீத நிகழ்ச்சித் திட்டத்துக்கான யப்பான் விருது
- சொண்டா சர்வதேசப் பெண்களமைப்பின் சாதனைப் பெண்மணி விருது
- இன்னிசைக் கலாநிதி
- சங்கீத கலாநிதி
- இசைஞான கலாநிதி
- சங்கீத சிரோன்மணி
கொழும்பு கட்புல அரங்காற்றுகைப் பல்கலைக்கழகம் இவரது தனித்துவ கலை சேவைக்காக கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது. மேலும் அவரது பெயரில் ஒரு தனித்துவக் கலைக்கூடப் பயிற்சி மண்டபத்தையும் திறந்து வைத்தது.[1]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
அருந்ததி சிறீரங்கநாதன் தனது இறுதிக் காலத்தில் புலம்பெயர்ந்து ஆத்திரேலியாவில் வாழ்ந்து வந்தார். இவர் 2025 பெப்ரவரி 17 இல் சிட்னியில் தனது 78-ஆவது அகவையில் காலமானார்.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads