ஆகாய் (நூல்)

திருவிவிலிய நூல் From Wikipedia, the free encyclopedia

ஆகாய் (நூல்)
Remove ads

ஆகாய் (Haggai) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.[1][2][3]

Thumb
ஆகாய் இறைவாக்கினர். உருசிய படிம ஓவியம். உருவாக்கப்பட்ட காலம்: 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி. காப்பிடம்: கிசி துறவியர் இல்லம், வடக்கு உருசியா.

பெயர்

ஆகாய் என்னும் நூல் மூல மொழியாகிய எபிரேயத்தில் חגי (Haggài) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் Αγγαίος (Aggaíos) என்றும் இலத்தீனில் Aggaeus என்றும் உள்ளது. இப்பெயருக்குக் "திருப்பயணம் செய்வோன்" என்று பொருள்.

உள்ளடக்கம்

கி.மு. 520இல் ஆகாய் இறைவாக்கினர் மூலம் ஆண்டவர் அருளிய இறைவாக்குகளின் தொகுப்பாக இத்திருநூல் அமைந்துள்ளது. பாபிலோனிய அடிமைத்தனத்தினின்று இசுரயேலர் எருசலேமுக்குத் திரும்பி, சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் ஆண்டவரது கோவில் இன்னும் கட்டியெழுப்பப்படவில்லை. அதை விரைவில் மீண்டும் கட்டியெழுப்புமாறு இந்த இறைவாக்குகள் தூண்டுகின்றன. தூய்மையாக்கப்பட்டுப் புத்துயிர் பெற்றுள்ள மக்களுக்குச் செழுமையையும் அமைதியையும் அருள்வதாக ஆண்டவர் வாக்களிக்கிறார்.

இந்நூலில் இரண்டு அதிகாரங்களே உள்ளன. ஆகாய் என்னும் பெயரில் அமைந்த இந்நூலில் அதன் ஆசிரியரின் வாழ்க்கை விவரக் குறிப்புகள் இல்லை. ஆயினும் "தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அது யூதாவின் ஆளுநரும் செயல்தெயேலின் மகனுமாகிய செருபாபேலுக்கும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவுக்கும் அருளப்பட்ட செய்தி" (1:1) என்னும் தகவல் உள்ளது. இதிலிருந்து ஆகாய் இறைவாக்கினருக்கு ஆண்டவரின் வாக்கு கி.மு. 520ஆம் ஆண்டு ஆகத்து இறுதியிலிருந்து திசம்பர் நடுவுக்குள் வழங்கப்பட்டது எனத் துல்லியமாக அறியமுடிகிறது.

ஆகாய் இறைவாக்கினர் பாபிலோனிய அடிமைத்தனக் காலத்திற்கு (கி.மு.587-538) பிற்பட்டவர். மக்கள் அடிமைகளாக்கப்பட்டது கடவுளின் "தண்டனை" என்று முன்னாளைய இறைவாக்கினர் அறிவித்தனர். பின்னர், அடிமைத்தனத்தின்போது மக்களுக்கு "ஆறுதல் செய்தி" வழங்கினர். விடுதலைக்குப் பிறகு, "மறுவாழ்வு" செய்தி அளித்தனர். இந்த இறுதிக்காலக் கட்டத்தில் எழுந்த ஆகாய் மக்களைக் கடவுள் நம்பிக்கையில் உறுதிப்படுத்துவதில் ஈடுபட்டார்.

ஆண்டவருக்குப் புதியதொரு கோவில் கட்டியெழுப்ப வேண்டும் என்று கருதிய மக்கள் தளர்வுற்ற நிலையில், ஆகாய் அவர்களுக்கு ஊக்கம் அளித்தார். யூதாவின் ஆளுநர் செருபாபேல், தலைமைக் குரு யோசுவா ஆகியோருக்கும் தூண்டுதல் அளித்து, கோவில் கட்டிட உந்துதல் தந்தார் ஆகாய். கோவில் கட்டும் வேலை கி.மு. 520 செப்டம்பர் மாதம் தொடங்கியது (ஆகாய் 1:15). ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நிறைவுற்றது.

Remove ads

ஆகாய் உரைத்த இறைவாக்கு நிறைவேறுதல்

கோவில் என்பது கடவுளின் உடனிருப்புக்கு அடையாளம். அதுவே மக்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் அமையும். மேலும், எருசலேம் கோவில் கட்டியெழுப்பப்படும்போது கடவுளின் வாக்குறுதிகள் ஒருநாள் நிறைவேறும் என்பதற்கு அடையாளமாக அது திகழும்.

கடவுளின் கோவில் கட்டியெழுப்பப்படும்போது அது வருங்காலத்தில் மெசியா புதியதொரு கோவிலைக் கட்டியெழுப்புவார் என்பதற்கு அடையாளம் என்பது புதிய ஏற்பாட்டில் பல இடங்களில் காணக்கிடக்கின்றது. இதோ ஒரு சில இடங்கள்:

1) கடவுள் வாக்களித்த மீட்பரை ஏற்போர் கடவுளின் கோவில்: 1 கொரிந்தியர் 3:16; எபேசியர் 2:20-22.
2) புதிய எருசலேம் கடவுள் உறையும் கோவில்: திருவெளிப்பாடு 21:9-22:5.
3) மெசியா கடவுளின் கோவில்: யோவான் 1:14; 2:19-21.
4) கடவுள் தம் மக்களோடு தங்கியிருப்பார்: மத்தேயு 1:23; உரோமையர் 8:9-10.
5) கடவுளின் மாட்சி மெசியாவில் துலங்கும்: யோவான் 1:14; திருவெளிப்பாடு 21:22-23.

நூலிலிருந்து ஒரு பகுதி

ஆகாய் 1:3-8


"அப்பொழுது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக
ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது.
இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில்,
நீங்கள் மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா?
ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்:
'உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள்.
நீங்கள் விதைத்தது மிகுதி, அறுத்ததோ குறைவு.
நீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை.
நீங்கள் குடிக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை...'
'எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்;
என் இல்லத்தைக் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்;
அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்' என்று சொல்கிறார் ஆண்டவர்."

Remove ads

உட்பிரிவுகள்

மேலதிகத் தகவல்கள் பொருளடக்கம், நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads