உழவர் சந்தை (தமிழ்நாடு)
இடைத் தரகர்கள் யாருமின்றி உற்பத்தியாளர்கள் நேரடியாக விற்பனை செய்வதற்கான இடம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
உழவர் சந்தை என்பது தமிழ்நாடு அரசால் 1999 ஆண்டு முதல் காய்கறிகள், பழங்கள் பயிரிடும் விவசாயிகள் அவர்கள் பயிர் செய்தவற்றை அவர்களே இடைத் தரகர்கள் யாருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக தமிழகத்தின் பல இடங்களில் அமைத்த சந்தைகள் ஆகும்.
வரலாறு
1998இல் ‘விவசாய உற்பத்திச் சந்தைப்படுத்துதல் வரி மீளாய்வுக் குழு’ என்ற குழு ஒன்றை அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அமைத்தார். அந்தக் குழுவின் உறுப்பினராக தமிழ்நாடு வர்த்தக மற்றும் தொழில்துறைகளின் சங்கத்தின் அப்போதைய தலைவர் எஸ். ரத்தினவேலு இருந்தார். அவர் பல்வேறு மாநிலங்களில், விவசாயிகள் எவ்வாறு தங்களின் விளைபொருட்களை விற்பனை செய்கிறார்கள் என்பதை ஆய்வுசெய்தார்.
பயணங்களை முடித்த பிறகு சண்டிகரில் ‘அப்னே மண்டி’ என்ற பெயரிலான பகுதியில் உழவர்கள் தங்களின் உழுவைகளில் அமர்ந்துகொண்டு, விளைபொருட்களை, நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதைப் பற்றி முதலமைச்சர் மு. கருணாநிதியிடம் சொன்னார். இதே போன்றதொரு விற்பனை முறை, ஆந்திராவில் இயங்கி வருவதையும் குறிப்பிட்டார். இவற்றை அடிப்படையாகக் கொண்ட அறிக்கை ஒன்றை தயாரிக்கச் சொல்லிய கருணாநிதி, அந்த அறிக்கை தன் கையில் கிடைத்த அன்றே, உழவர் சந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மாநிலத்தின் முதல் உழவர் சந்தை மதுரை அண்ணா நகரில் திறக்கப்பட்டது. அவரின் 1999-2000 ஆட்சிக் காலத்தில் மாநிலம் முழுவதும் 103 உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு இத்திட்டத்தில் தோய்வு ஏற்பட்டபோதும், மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்டபோது மேலும் பல இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. தற்சமயம் தமிழகம் முழுவதும் 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.[1] இடைக் கால இந்திய வரலாற்றில் குறிப்பாக அலாவுதீன் கில்ஜி தன்னுடைய ஆட்சிக்காலத்தில் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சந்தை கட்டுப்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அத்திட்டத்தின்படி இடைத் தரகர்கள் இன்றி விவசாயிகளே தங்கள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக சந்தையில் விற்பனை செய்யலாம். பொருட்களின் விலையை அரசு நியமித்த அதிகாரிகள் தீர்மானிப்பார்கள். மேலும் சரியான அளவில் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதையும் அவர்கள் கண்காணிப்பர். இத்திட்டத்தின் மறுவடிவமாக இன்று உழவர் சந்தைத் திட்டம் விளங்குகிறது.
Remove ads
உழவர்சந்தை பற்றிய குறிப்புகள்
- உழவர் சந்தைகள் காலை 5.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படுகின்றன.
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மூலம் குறிப்பிட்ட நேரங்களில், அருகிலுள்ள சில பகுதிகளிலிருந்து உழவர் சந்தைக்குப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. உழவர் சந்தைக்கான பேருந்துகளில் சுமைக்கட்டணம் இல்லை.
- உழவர் சந்தையில், ஒவ்வொரு விவசாயிக்கும் தனியே இடம் ஒதுக்கப்பட்டு, இலவசமாக எடைக் கருவிகள் வழங்கப்படுகின்றன.
- உழவர் சந்தையில் விற்பனை மேற்கொள்ள விவசாயிகளுக்குத் தனி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெற்றவர் தவிர அவருடைய குடும்ப உறுப்பினர்கள் சந்தைக்கு உற்பத்திப் பொருட்களைக் கொண்டு வரக்கூடும் என்கிற நோக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் படமும் அந்த அடையாள அட்டையில் இடம் பெற்றுள்ளன.
- உழவர் சந்தை ஒவ்வொன்றிற்கும் தனி அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உழவர் சந்தையில் சுமார் 4 இடங்களில் விலைப்பட்டியல் கொண்ட பலகை வைக்கப்பட்டுள்ளன.
- உழவர் சந்தை விலைகளை அதற்காக நியமிக்கப்பட்ட குழு நாள்தோறும் நிர்ணயிக்கிறது.
Remove ads
புதுமொழிகள்
உழவர் சந்தை குறித்த புதுமொழிகள் சில.
- உழவர் சந்தை; உங்கள் சந்தை
- விளைய வைப்பதும் உழவரே; விலையை வைப்பதும் உழவரே.
- நல்ல காய்கறிகள் நல்கிடும் உழவர்க்குக் கொள்ளை லாபம் குறிக்கோள் அல்ல.
- புத்தம்புதுக் காய்கறிகள், என்ன விந்தை! நித்தம் வழங்கிடும் உழவர் சந்தை!!
- இடைத்தரகர் இல்லாமல் காய்கறிக் கடை விரித்தனர் உழவர்.
- வாடிக்கையாளருக்கு வாடாத காய்கறிகள் தேடிக் கொணர்ந்த தொல்லுழவர்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads