எம். கே. றொக்சாமி

From Wikipedia, the free encyclopedia

எம். கே. றொக்சாமி
Remove ads

எம். கே. றொக்சாமி (M. K. Rocksamy, 13 செப்டம்பர் 1932 - 30 நவம்பர் 1988) இலங்கையின் புகழ்பெற்ற ஒரு இசைக்கலைஞரும், இசையமைப்பாளரும் ஆவார்.

விரைவான உண்மைகள் எம். கே. றொக்சாமி, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

றொக்சாமியின் பெற்றோர் மரிய குழந்தைசாமி, அன்னமேரி பாண்டிச்சேரியில் இருந்து வந்து இலங்கையில் குடியேறியவர்கள். இவர்களின் ஆறாவது பிள்ளையாகப் பிறந்தவர் றொக்சாமி.[1] தந்தை வயலின் வாசிப்பதிலும், தாயார் ஆர்மோனியம் வாசிப்பதிலும் திறமையானவர்கள். றொக்சாமி தபேலா, சாக்சபோன் ஆகிய இசைக்கருவிகளை வாசிப்பதற்குப் பயிற்சி பெற்றார். சங்கரலிஙகம் என்பவரிடம் கருநாடக இசையை முறையாகப் பயின்றார்.[2]

இலங்கை வானொலியில் சிங்கள இசைக்குழுவில் சாக்சபோன் இசைக்கருவியை அறிமுகப்படுத்தினார்.[2] 1953 இல் இலங்கை வானொலி இசைக்குழுவில் வயலின் இசைப்பவராக பணியில் சேர்ந்தார். ஆர். ஏ. சந்திரசேனாவின் பல நிகழ்ச்சிகளில் இவர் வயலின் வாசித்துள்ளார்.[3] இந்தியாவில் இருந்து வருகை தரும் பல கலைஞர்களுக்கு வயலின் வாசித்துள்ளார். 1957 இல் முகம்மது ராஃபி, 1980 இல் வாணி ஜெயராமுக்கும் வயலின் வாசித்துள்ளார்.[1]

Remove ads

திரைப்படத் துறையில்

இலங்கையின் முதலாவது திரைப்படப் படப்பிடிப்பு நிலையம் 1950 இல் கந்தானையில் எஸ். எம். நாயகம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. சுந்தர முருகன் ஸ்டூடியோ என அழைக்கப்பட்ட இந்நிலையத்தின் திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த ஆர். முத்துசாமியுடன் தொடர்பு ஏற்பட்டது. முத்துசாமியின் அழைப்பை ஏற்று அவரது இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார்.[1] 1962 ஆம் ஆண்டில் தயாராகிக் கொண்டிருந்த சங்காரே என்ற சிங்களப் படத்தின் இசையமைப்பாளர் பெ. எஸ். பெரேரா திடீரெனக் காலமாகி விடவே, அப்படத்தின் மிகுதிப் பாடல்களுக்கு றொக்சாமி இசையமைத்துக் கொடுத்தார்.[1][3] 1963 இல் சுகத சொயுரா என்ற சிங்களப் படத்திற்கு முதன் முதலாக முழுமையாக இசையமைத்தார். இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது.[1]

சுஜாகே ரகச என்ற சிங்களப் படத்துக்கு டி. ஆர். பாப்பாவுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.[1] தெய்வம் தந்த வீடு என்ற இலங்கைத் திரைப்படத்தில் கண்ணன்-நேசம் இசையமைப்பாளர்களுடன் இணைந்து இசையமைத்தார்.[1] பொன்மணி (1977) என்ற இலங்கைத் தமிழ்த் திரைப்படத்திற்கு தனியாக இசையமைத்தார். இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. தொடர்ந்து மாமியார் வீடு, வி. பி. கணேசனின் நான் உங்கள் தோழன் ஆகிய தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். இறுதியாக ஜெய்சங்கர், ராதிகா நடித்த இரத்தத்தின் இரத்தமே இவர் இசையமைத்த கடைசித் தமிழ்ப் படமாகும். மலையாளத் திரைப்படம் ஒன்றுக்கும் றொக்சாமி இசையமைத்துள்ளார்.[1]

Remove ads

குடும்பம்

றொக்சாமி 1965 இல் இசையமைத்த சக் சயய என்ற சிங்களத் திரைப்படத்தில் பாடிய இந்திராணி என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆணும், இரு பெண்களுமாக மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[1] 1983 ஆடிக் கலவரத்தின் போது இவர் ஹெந்தளையில் வசித்து வந்த வீடு சிங்களவர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. 1988 நவம்பர் 30 இல் இவர் காலமானார்.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads