ஒலியொத்தவேகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வானூர்தியியலில், ஒலியொத்தவேகம் (Transonic speed) என்பது ஒரு வானூர்தியினை ஒட்டிய பாய்ம ஓட்டம் ஒலியின் விரைவை விட சில இடங்களில் சற்று குறைவாகவும் சில இடங்களில் சற்றதிகமாகவும் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும், அதாவது மாக் 0.8 - 1.4 (600-900 mph). இது வானூர்தியின் வேகத்தை மட்டும் பொருத்ததல்ல, வானூர்தியின் அண்மைச்சூழலில் காற்றின் வெப்பநிலை மற்றும் அடர்த்தியையும் பொருத்ததாகும். பொதுவாக ஒலியொத்தவேகம் என்பது, மாறுநிலை மாக் எண்ணிற்கும் (- பாய்வின் விரைவு ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மீயொலிவேகப் பாய்வாகவிருக்கும், மற்ற இடங்களில் குறையொலிவேகப் பாய்வாக இருக்கும்) வானூர்தியை ஒட்டிய மொத்த பாய்வும் மீயொலிவேகப் பாய்வாக மாறும் மாக் எண்ணிற்கும் இடையிலுள்ள பாய்வாகவும் குறிக்கப்படுகிறது.
நவீன, தாரைப் பொறி பொருத்திய வானூர்திகள் அனைத்தும் ஒலியொத்தவேகத்தில் செல்லுமாறு கட்டமைக்கப்படுகின்றன. ஒலியொத்தவேகத்தில் வானூர்தியின் வேகம் அதிகரிக்கும்போது, வானூர்தியின் இழுவை அதிக அளவு அதிகரிக்கிறது, ஆகையால் அவ்வேகங்களைத் தாண்டி செல்வதானால் இழுவையை ஈடுசெய்ய அதிக அளவு எரிபொருளை எரிக்க வேண்டி இருக்கும். அதிவேக வானூர்திகள் அனைத்திலும் அலை இழுவையைக் குறைப்பதற்கான முயற்சிகளைக் காணலாம்: முக்கியமாக வளைந்த இறக்கைகளின் பயன்பாடு, அதைத்தவிர்த்து முக்கியமான பயன்பாடு: விட்கோம்பு பரப்பு விதியின் விளைவாக குளவி-இடுப்பு வானுடல் கட்டமைப்புப் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]
ஒலியொத்த வேகங்களில் தீவிரமான நிலையின்மை ஏற்படக்கூடும். ஒலியின் வேகத்தில் அதிர்வலைகள் காற்றில் பயணிக்கும். காற்றில் ஒரு பொருள், இங்கு வானூர்தி, ஒலியின் வேகத்தில் செல்லும்போது அதிர்வலைகள் அனைத்தும் ஒன்றுகூடி வானூர்திமுன் ஒரு பெரிய அதிர்வலையாக உருவெடுக்கும். ஒரு வானூர்தி ஒலியொத்தவேகத்தைத் தாண்டி செல்லும்போது இத்தகைய பெரிய அதிர்வலைகளையும், வானூர்தியின் அண்மைச் சூழலில் காற்றின் விரைவு சில இடங்களில் மீயொலிவேகத்திலும் சில இடங்களில் குறையொலிவேகத்திலும் இருப்பதனால் உருவாகும் நிலையின்மையையும் திறம்பட சமாளிக்க வேண்டும்.
வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகளின் சுற்றகத் தகட்டு நுனிகளிலும் ஒலியொத்தவேகப் பாய்வுகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால், அத்தகட்டுகளின் வெவ்வேறு பாகங்களில் அதிகளவிலான சுமை ஏற்பட்டு அப்பாகங்களின் முறிவுக்கும் அதன் விளைவாக பயங்கர விபத்துக்களுக்கும் காரணமாகலாம். இத்தகைய விளைவு சுற்றகத் தகட்டுகளின் அளவையும் உலங்கு வானூர்திகளின் முன்செல் வேகத்தையும் கட்டுப்படுத்துகிறது.
Remove ads
உசாத்துணைகள்
- Theory of Transonic Astrophysical Flows. Sandip K. Chakrabarti, World Scientific Publishers, Singapore (1990)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads