ஓரம்போகியார்
சங்ககாலப் புலவர்களில் ஒருவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஓரம்போகியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 110 உள்ளன. அனைத்துமே மருதத்திணைப் பாடல்கள். இவை மருதத்திணையில் என்னென்ன சொல்லப்படும் என்பதற்கு இலக்கணம் வகுப்பது போல் உள்ளன.
புலவர் பெயர் விளக்கம்
தலைவன் தலைவியை விட்டுவிட்டுப் பரத்தியிடம் செல்வது ஓரம் போதல்தானே?
பாடல்கள்
- அகநானூறு 286, 316
- ஐங்குறுநூறு 1 முதல் 100 எண்ணுள்ள மருதத்திணைப் பாடல்கள்
- குறுந்தொகை 10, 70, 122, 127, 384,
- நற்றிணை 20, 360[1]
- புறநானூறு 284
பாடல் சொல்லும் செய்திகள்
ஐங்குறுநூறு
அகம்
அகம் 286

காஞ்சிமர நிழலில் மணலை நெல்லெனக் குவித்துக் குற்றிக்கொண்டு சிறுமியர் விளையாடும்போது அவர்களின் குடிப் பெருமையை அவர்கள் பாடும் வள்ளைப் பாட்டைக் கேட்டுக்கொண்டே வரால் மீனை அருந்திய சிரல் பறவை அங்குள்ள மருத மரத்தில் உறங்கும்.
தலைவனைப் பெரியோய் என விளித்துத் தோழி கூறுகிறாள். அறமும் பொருளும் வழாமல் இருக்கிறாய் என்னும் உன் தகவுடைமையை அறிவோம். நீயே பொய்த்தால் மெய்யாண்டு உளது? என வினவுகிறாள். (சூளுரையைப் பொய்யாக்காமல் மணந்துக்கொள்ள வேண்டும் என்பது கருத்து)
அகம் 316
எருமைக்கடா பொய்கையில் ஆம்பலை மேய்ந்துவிட்டுப் பொழுது இறங்கும் நேரத்தில் வரால்மீன் எழுந்தோடும்படி தன் கொம்புகளில் பகன்றைப் பூங்கொடிகள் சுற்றிய கோலத்தில் போருக்குச் செல்லும் மள்ளர்களைப் போல வெளியேறும் ஊரன் தலைவன்.
அவனது கல்லா மகளிர் பரத்தைமை தாங்க முடியவில்லை என்று நீ புலத்தல் தகுமோ!என்கிறாள் தோழி தலைவியிடம். எப்போதும் புலந்துகொண்டே உன்னால் இருக்க முடியுமா? எனவும் வினவுகிறாள். உன்னிடமிருந்து செய்யோள்(திருமகளாகிய செல்வம்) நீங்குவிட்டாள். உன்னால் சரியாகச் சாப்பிடக்கூட முடியவில்லை. சிறிதே உண்கிறாய். அவருக்குப் போடமுடியாமல் நீயே சமைத்து நீயே உண்கிறாய். அதனால் பால் இல்லாத திரங்கு முலையைச் சுவைக்கும் குழந்தையையும் அவர் எண்ணிப் பார்க்கவில்லை. என்ன செய்யலாம்? உன்னை நாடி வந்திருக்கும் அவரை ஏற்றுக்கொள் - என்கிறாள் தோழி.
குறுந்தொகை
குறுந்தொகை 10

உழவர் வளைத்துப் பறித்துச் சூடிக்கொள்ளும் காஞ்சி. அது பயறு போல் மகரந்தக் காம்பினை உடையது. அந்தக் காஞ்சி மரங்கள் நிறைந்த ஊரன் தலைவன். தலைவி தாயாகி 'விழவுமுதலாட்டி' ஆகியுள்ளாள். எனவே தலைவனின் கொடுமையைத் தலைவி பொறுத்துக்கொண்டுள்ளாள் என்கிறாள் தோழி. (தலைவனுக்கு வாயில் மறுக்கிறாள்)
தாயானவளுக்கு விழா
'விழவு முதலாட்டி' என்பதில் உள்ள 'முதல்' என்னும் சொல் தலைவன் தலைவியரின் விதைமுதலாக வந்துள்ள குழந்தையைக் குறிக்கும். குழந்தைமுதல் தோன்றியுள்ளதை அக்காலத்திலேயே விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
குறுந்தொகை 70
தலைவியோடு உடலுறவு கொண்டு மீளும் தலைவன் சொல்கிறான்.
அவள் தன் நீர்மையால் என்னை அணங்கினாள்(வருத்தினாள்) இத்தகையவள் என்று அவளைப் புனைந்துரைக்க என்னால் முடியாது. அவன் குறுமகள். அவளைத் தழுவினால் சில சொற்களை மட்டும் மென்மையாகப் பேசுகிறாள்.
குறுந்தொகை 122


கொக்கு நிற்பது போல் ஆம்பல் கூம்பி நிற்கும் மாலை வந்துவிட்டது. நானும் கொக்கைப் போலவும், ஆம்பலைப் போலவும் (ஆனால்) தனியே நிற்கிறேன் - என்கிறாள் தலைவி.
குறுந்தொகை 127
தன்னைக் கொத்த வந்த குருகிடமிருந்து கெண்டைமீன் தப்பித்துகொண்டது. பின்னர் அருகில் பூத்திருந்த தாமரை மொட்டைப் பார்த்துக் கொக்கோ என மருண்டது. அது போல ஒரு பாணன் பொய் சொல்ல எந்தப் பாணனைப் பார்த்தாலும் பொய்யன் என்றே தோன்றுகிறது.
குறுந்தொகை 384
பரத்தை தலைவனைப்பற்றிப் பேசுகிறாள்.
பரத்தையர் உழுந்து போல் திரண்ட கழுத்தையும், கரும்பைப் போல் இனிக்கும் பருத்த தோளையும் உடையவர். அவர்களின் நலனை உண்டுவிட்டுத் துறந்து சென்றாயானால் 'பிரியமாட்டேன்' என்று பரத்தையரிடம் சொன்ன சூளுரை மிகவும் நன்றாயிருக்கிறது!
நற்றிணை
நற்றிணை 29
- மராம் = மரமல்லிகைப் பூ
பரத்தையை அறியேன் என்ற தலைவனுக்குத் தலைவி சொல்கிறாள்.
கூந்தலில் தொங்கும் மராம் பூ கமழ, கலிங்கம் என்னும் மேலாடை அசைந்துவர, வளையல் ஒலி கேட்கும்படி கைகளை வீசிக்கொண்டு அவள் தெருவில் மெல்ல மெல்ல அடியிட்டுச் சென்றாள். அவள் மேனியைச் சுணங்கு அழகு செய்தது. அதில் பூண் அணிந்திருந்தாள். நீ அவளது மார்பில் அழுத்திய பழம் புண்ணாகிய வடு அவளது தோள்களில் இருந்தது. அதனை அவள் அணிந்திருந்த காதுக்குழை தொட்டு மகிழ்ந்துகொண்டிருந்தது. (நானே பார்த்தேன். நீ இல்லை என்கிறாய்) - என்றாள்.
நற்றிணை 360
தலைமகள் ஊடல்.
நேற்று ஒரு பரத்தையிடம் சென்றாய். அவள் விழாக் கொண்டாட்டத்துக்குப் பின் (ஒப்பனை இல்லாமல்) மன்றில் கிடக்கும் சிலை போலக் கொட்டுமுழக்கம் இல்லாமல் இருக்கிறாள். இன்று நீ வேறொருத்தி மென்தோளை நாடிச் செல்கிறாய்.
- காழ் = அங்குசம்
பழக்குபவன் யானைமேல் இருந்துகொண்டு காழால் குத்தியதைப் பொறுக்கமாட்டாமல் அவனைக் கையால் எடுத்துக் கவளம்போல் வைத்திருக்கும் யானை போல நான் உன்னை வைத்திருக்கிறேன் - என்கிறாள்.
புறம் 284
வெற்றிச் செய்தியை வேந்தன் தன் நாட்டு மக்களுக்குத் தூதனிடம் சொல்லி அனுப்புகிறான். அச்செய்தியைக் கொண்டுவரும் தூதனை வாழ்த்திப் பாணன் பாடுகிறான்.
- நூலரி மாலை = நூலில் கோத்த முத்துமாலை
- மிறை = கொண்டி, பகையரசரிடம் பிடுங்கிக்கொண்ட பொருள்.
- (இறை = பகையரசர் பணிந்து தரும் பொருள்)
வருகதில் வல்லே! வருகதில் வல்லே! அரசன் விடுத்த நற்செய்தியைச் சொல்ல வருகதில் வல்லே! தூதன் நூலரிமாலையை மிறையாகத் தலையில் அணிந்துகொண்டு வருகிறான். பகையரசனின் பல்முத்து மாலை அது. தனியே வருகிறான். காலால் நடந்தே வருகிறான். அதனைப் பார்த்த வாட்படை ஒதுங்கி நின்று அவன் கோலத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் சிரிக்கிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads