தாலந்துகள் உவமை

From Wikipedia, the free encyclopedia

தாலந்துகள் உவமை
Remove ads

தாலந்துகள் உவமை (Parable of the Talents) என்பது இயேசு சொன்ன சிறு கதைகளுள் ஒன்று. கடவுள் ஒவ்வொருவருக்கும் கொடுத்துள்ள திறமைகளை சரியாக பயன்படுத்தி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்பட இக்கதையை இயேசு மக்களுக்கு கூறினார். இறைவன் அளித்த திறமைகளை சரியாக பயன்படுத்துவோர்க்கு இறைவன் மென்மேலும் திறமைகளை வழங்குவான். அவற்றை பயன்படுத்தாதவர்களிடம் இருக்கும் திறமையும் மங்கிப் போகும் என்னும் பொருள் பட இயேசு கூறிய "உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" என்பதை முக்கிய குறிக்கோள் வசனமாகக் குறிப்பிடலாம். இது புனித விவிலியத்தில் மத்தேயு 25:14-30 இல் எழுதப்பட்டுள்ளது.[1]

Thumb
எசமானிடம் கணக்கு கொடுத்தல்
Listen to this article
(2 parts, 5 minutes)
  1. Part 2
Spoken Wikipedia icon
These audio files were created from a revision of this article dated
Error: no date provided
, and do not reflect subsequent edits.
Remove ads

தாலந்துகள்

இங்கு தாலந்துகள் என்பது "talanton" என்ற கிரேக்கச் சொல்லின் நேரடி எழுத்துப் பெயர்ப்பாகும். இது கிறிஸ்துவுக்கு முன்னரான காலந்தொடங்கி கிரேக்கம், உரோம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட நிறை மற்றும் நாணயத்தின் அலகாகும்.[2] இச்சொல்லே பின்னர் பழைய ஆங்கிலத்தில் "talente" என மருவி இன்று "Talents" எனவும் மருவி திறமை என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. முதலில் உருவான விவிலியத் தமிழ் மொழிபெயர்ப்புகள் இச்சொல்லை தாலந்து என மொழிபெயர்த்தன. இது தமிழ் பேசும் கிறித்தவரிடையே "கடவுளின் கொடைகள்" என்ற பொருள்பட வேரூன்றி விடவே பின்னர் வந்த தமிழ் விவிலிய மொழி பெயர்ப்புகளும் தாலந்து என்ற இதே சொல்லையே கையாள்கின்றன.

Remove ads

உவமை

நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து ஒவ்வொரு பணியாளரின் திறமைக்கு ஏற்ப, ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து மேலும் ஐந்து தாலந்து ஈட்டினார். அதே போன்று, இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஆனால், ஒரு தாலந்தைப் பெற்றவரோ அதை நிலத்தில் புதைத்து வைத்தார்.

எசமான் திரும்பினார்

நீண்ட நட்களுக்கு பிறகு அந்த எசமானர் திரும்பிவந்து, பணியாளர்களிடத்தில் தான் அவர்களுக்கு கொடுத்த தாலந்துகளுக்கு கணக்குக் கேட்டார். அப்பொழுது, ஐந்து தாலந்தை பெற்றவர், மேலும் ஐந்து தாலந்துகளைக் கொண்டுவந்து: “ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்" என்றார். எசமானர் அவரை நோக்கி: “நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்” என்றார். இரண்டு தாலந்துகளைப் பெற்றவரும் வந்து: ஐயா நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாருங்கள், மேலும் இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன் என்றார். எசமானர் அவரை நோக்கி: "நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும்" என்றார்.

முயற்சியற்றவனின் முடிவு

ஒரு தாலந்தைப் பெற்றவரோ வந்து: “ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது" என்றார்.

அவனுடைய எசமான் மறுமொழியாக: "சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் அல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்" என்று கூறினார். எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். உள்ளவர் எவருக்கும் மேலும் கொடுக்கப்படும். அவர்களும் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற பணியாளனாகிய இவனை வீட்டுக்கு வெளியே இழுத்து போய் வெளியே தள்ளுங்கள் என்றார்.[3][4]

Remove ads

கருத்து

தாலந்துகள் உவமை சொல்லும் கருத்து : கடவுள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளில் கொடுத்துள்ள திறமையை மென்மேலும் வளர்க்க முயல வேண்டும். அவ்வாறு செய்தால் கடவுள் மேலும் திறமைகளைக் கொடுப்பார். திறமையை வளர்க்காது இருந்தால் கொடுக்கப்பட்ட சிறிய திறமையும் மங்கி மறைந்து விடும்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads