தியோனீசியுஸ் (திருத்தந்தை)
259 முதல் 268 வரை உரோமின் ஆயராகவும் திருத்தந்தையாகவும் இருந்தவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தந்தை தியோனீசியுஸ் (Pope Dionysius) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் 259 சூலை 22ஆம் நாளிலிருந்து 268 திசம்பர் 26ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.[1] அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ். திருத்தந்தை தியோனீசியுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 25ஆம் திருத்தந்தை ஆவார்.
- தியோனீசியுஸ் என்னும் பெயர் (பண்டைக் கிரேக்கம்: Διονύσιος; இலத்தீன்: Dionysius) கிரேக்க சமயத்தின் ஒரு கடவுள் பெயராகும்.
Remove ads
பணிகள்
திருத்தந்தை தியோனீசியுஸ் "பெரும் கிரேக்க நாடு" (இலத்தீன்: Magna Graecia) என்று அழைக்கப்பட்ட இத்தாலியத் தென்பகுதியில் பிறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இவர் கிபி 3ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய திருத்தந்தையருள் ஒருவர் ஆவார். சிறந்த நிர்வாகத்திறமை கொண்டிருந்த அவர் பல அன்புப் பணி அமைப்புகளை நிறுவினார். மூவொரு இறைவன் பற்றிய திருச்சபைப் போதனையைத் தெளிவுபடுத்தினார்.
தியோனீசியுசுக்கு முன் பதவியிலிருந்த திருத்தந்தை இரண்டாம் சிக்ஸ்துஸ் என்பவர் உரோமைப் பேரரசனான வலேரியனால் கொல்லப்பட்டு, ஓராண்டுக்குப் பின்னரே தியோனீசியுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறித்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து கொடுமைகள் இழைக்கப்பட்டதும், பல குருக்கள் கொல்லப்பட்டதும் இந்தத் தாமதத்துக்குக் காரணம்.
மேலும், இரண்டாம் சிக்ஸ்துசுக்குத் துணையாக இருந்த ஏழு திருத்தொண்டர்களும் வலேரியன் மன்னனால் கொல்லப்பட்டுவிட்டதால், அந்த இடைக்காலத்தில் எஞ்சியிருந்த குருக்கள் உரோமைத் திருச்சபையை வழிநடத்தினர். வலேரியன் மன்னன் இன்றைய துருக்கி நாட்டில் உள்ள எதேஸ்ஸா என்னும் நகரில் பாரசீக மன்னனால் பிடிக்கப்பட்டு, சிறைக்கைதியாக இறந்துபட்டார் என்னும் செய்தியை கேட்ட பிறகுதான் உரோமைக் குருக்கள் திருத்தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்று உறுதிசெய்துவிட்டு தேர்தலுக்கு ஏற்பாடு செய்தார்கள்.
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தியோனீசியுஸ் எதிர்கொண்ட சவால்கள் பல. வலேரியன் மன்னன் கிறித்தவர்களைத் துன்புறுத்தி பலரைக் கொன்றுபோட்டதால் திருச்சபை மிகவும் பலமிழந்து இருந்தது. வலேரியனின் மகன் கல்லியேனுஸ் என்பவர் தம் தந்தை கிறித்தவர்களைக் கொடுமைப்படுத்திய அணுகுமுறையை மாற்றினார். திருச்சபையிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களையும் கல்லறைத் தோட்டங்களையும் திருப்பிக் கொடுக்குமாறு ஆணை பிறப்பித்தார்.
திருத்தந்தை தியோனீசியுஸ், வலுவிழந்திருந்த உரோமைத் திருச்சபையைப் பல மறைமாவட்டப் பகுதிகளாக (பங்குகள்) பிரித்து, அவற்றிற்கு ஆயர்களை நியமித்தார். கிறித்தவ வழிபாட்டு சமூகங்களுக்கு குருக்களைத் தலைமையாக ஏற்படுத்தினார். கல்லறைத் தோட்டங்களுக்கு பொறுப்பாக குருக்களை நியமித்தார்.
மேலும், தியோனீசியஸ் உரோமைக்கு வெளியிலிருந்த கிறித்தவ சமூகங்களை ஊக்குவிக்கும் வகையில் கடிதங்கள் அனுப்பினார். செசாரியா நகரத் திருச்சபை "கோத்" இனத்தவரின் படையெடுப்பின் காரணமாகத் துன்புற்றபோது அதற்கு ஊக்கமூட்டினார். இன்றைய துருக்கி நாட்டின் நடுப்பகுதியில் அமைந்திருந்த கப்பதோச்சியா பகுதியில் கிறித்தவர்கள் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டபோது, அவர்களை மீட்பதற்கு நிதி உதவி செய்தார்.
Remove ads
மூவொரு இறைவன் பற்றிய கொள்கை விளக்கம்
திருத்தந்தை தியோனீசியுசின் ஆட்சியின்போது அலெக்சாந்திரியா நகர் ஆயராக தியோனீசியுஸ் என்னும் அதே பெயர்கொண்டவர் இருந்தார். மூவொரு இறைவன் பற்றி அந்த ஆயர் வழங்கிய போதனையில் குறைபாடுகள் இருந்ததாக அத்திருச்சபை மக்கள் திருத்தந்தை தியோனீசியுசுக்கு கடிதம் எழுதினார்கள். அதில் தங்கள் நகர ஆயராகிய தியோனீசியுஸ் மூவொரு இறைவனின் இரண்டாம் ஆளாகிய மகன் தந்தையாம் இறைவனால் படைக்கப்பட்டவர் என்று கூறினார் என்றும், மகன் தந்தையாம் இறைவனின் தன்மையைக் கொண்டுள்ளார் என்பதை எடுத்துரைக்க ஆயர் முன்வரவில்லை என்றும் குறைகூறினார்கள்.
இதை அறிந்த திருத்தந்தை தியோனீசியுஸ் உரோமை நகரில் 260இல் ஒரு சங்கத்தைக் கூட்டினார். அச்சங்கம் மூவொரு இறைவன் பற்றிய திருச்சபைப் போதனையைத் தெளிவுபடுத்தியது. அதன்படி, மகன் தந்தையாம் இறைவனால் படைக்கப்பட்டவர் என்று கூறுவது தவறு; மகனும் தந்தையாம் கடவுளின் தன்மையைக் கொண்டவரே; ஆக, மூவொரு இறைவன் என்னும் போது கடவுள் ஒருவரே என்பதும் ஏற்கப்பட வேண்டும். இவ்வாறு மூவொரு இறைவன் பற்றிய உண்மைக் கொள்கையைத் திருத்தந்தை தியோனீசியுஸ் எடுத்துரைத்தார்.
அவர் தனிப்பட்ட முறையில் அலெக்சாந்திரியா நகர் ஆயராகிய தியோனீசியுசுக்குக் கடிதம் எழுதி, அவர்மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டார். அலெக்சாந்திரியா நகர ஆயர் அளித்த விளக்கத்தில் குறையில்லை என்று திருத்தந்தை கண்டார். மகனாகிய கடவுள் தந்தையாம் இறைவனின் அதே தன்மை கொண்டவராக விளங்குகிறார் என்னும் உண்மை இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டது.
Remove ads
உரோமை ஆயரின் தலைமை
மூவொரு இறைவன் பற்றிய கொள்கை விளக்கம் அளித்த போது, உரோமை ஆயராக ஆட்சிசெய்த தியோனீசியுஸ் அலெக்சாந்திரியாவின் ஆயராக இருந்த தியோனீசியுஸ் பற்றிக் கூறப்பட்ட குறையை விசாரித்து, தீர்ப்பு வழங்கியதன் வழியாக உரோமைத் திருச்சபையும் அதன் ஆயரும் பிற கிறித்தவ சபைகளின் மீது அதிகாரம் கொண்டிருந்தது தெளிவாகிறது. இந்த நிகழ்வைத் திருத்தந்தை முதலாம் ஜூலியுஸ் (ஆட்சி: 337-352) என்பவர் 340இல் சுட்டிக்காட்டினார்.
இறப்பும் அடக்கமும்
திருத்தந்தை தியோனீசியுஸ் 268ஆம் ஆண்டு, திசம்பர் 26ஆம் நாள் இறந்தார். அவர்தம் உடல் உரோமை நகரில் ஆப்பிய நெடுஞ்சாலையில் அமைந்த கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
திருவிழா
புனித தியோனீசியுசின் திருவிழா அவர் இறந்த திசம்பர் 26ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது. கலையில் அவர் திருத்தந்தையின் உடைகளை அணிந்தவராகவும், கையில் புத்தகத்தைப் பிடித்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
