திரித்துவம்

From Wikipedia, the free encyclopedia

திரித்துவம்
Remove ads

கிறித்தவ இறையியலின்படி கடவுள், இறைத்தன்மையில் ஒருவராகவும், ஆள்த்தன்மையில் தந்தை, மகன், தூய ஆவி[1] என மூவராகவும் இருக்கிறார். கடவுளின் இந்த இயல்பே திரித்துவம் (Trinity) அல்லது அதிபுனித திரித்துவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று இறை ஆட்களில் தந்தையும் கடவுள், மகனும் கடவுள், தூய ஆவியும் கடவுள். இருப்பினும் தந்தை, மகனிடமிருந்தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; மகன், தந்தையிடமிருந்தும் தூய ஆவியிடமிருந்தும் வேறுபட்டவர்; தூய ஆவி, தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் வேறுபட்டவர். எனவே, இவர்கள் ஒரே கடவுளின் மூன்று ஆட்கள்; மூவரும் மூன்று கடவுள்கள் அல்லர். எந்தவித வேறுபாடும் இன்றி, இந்த மூவருக்கும் ஒரே அன்புறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே இறைத்தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுளே. இதனால் கிறிஸ்தவ சமயத்தினர் கடவுளை மூவொரு இறைவன் என்று அழைக்கின்றனர்.[2]

Thumb
திரித்துவம் - தந்தை, மகன் (குழந்தை இயேசு), தூய ஆவி (புறா)
Thumb
திரித்துவத்தின் விளக்கச் சின்னம்
Remove ads

இறையியல்

அனைத்தையும் படைத்த ஒரே கடவுள் தமது இறைத்தன்மையில் ஒருவராகவும், ஆள்த்தன்மையில் மூவராகவும் விளங்குகிறார். இந்த ஒரே கடவுள் தம் எல்லையற்ற புனித இயல்பிலும், எல்லாம் வல்லத் தன்மையிலும், எல்லையற்ற ஞானத்திலும், பராமரிப்பிலும், சித்தத்திலும், அன்பிலும் ஒரே ஒருவராய் இருக்கிறார். தம்மையே மோசேக்கு வெளிப்படுத்தியது போன்று, இவர் தம்மிலே தாமாய் இருக்கிறார். திருத்தூதர் யோவான் நமக்கு போதிப்பது போல், இவர் அன்பாய் இருக்கிறார். இவர் எட்டாத ஒளியில் வாழ்பவர், எல்லாப் பெயர்களுக்கும் அனைத்துப் பொருட்களுக்கும், படைக்கப்பட்ட எல்லா அறிவுக்கும் அப்பாற்பட்டவர். எனினும் இவர் தம்மையே நமக்கு வெளிப்படுத்த விரும்பினார். தந்தை, மகன், தூய ஆவி என்று தம்மையே வெளிப்படுத்தும் கடவுள் ஒருவரே, இந்த இயல்பைப் பற்றிய சரியான நிறைவான அறிவை நமக்கு தர முடியும். புனிதம் மிகுந்த கடவுளின் உள் வாழ்வில் நிலவும் உறவே, அவரை நித்தியத்திற்கும் மூன்று ஆட்களாக அமைக்கின்றது.[3] மனித முறையில் நாம் சிந்திக்கக் கூடிய அனைத்திற்கும் இது அப்பாற்பட்டது. இவ்வாறு உடனொத்து நித்தியமானவர்களும், உடனொத்து சமமானவர்களுமான மூன்று இறை ஆட்களில், முற்றும் ஒரே ஒருவரான கடவுளின் வாழ்வும் இன்பமும் நிரம்பிப் பொங்குகின்றது. இவ்வாறே, படைக்கப்படாத பொருளுக்கு உரிய ஒப்பற்ற மாண்பும் மகத்துவமும் நிறைவு பெறுகின்றது. இவ்வுலகில் விசுவாசத்தின் தெளிவற்ற நிலையிலும், இறப்புக்குப் பின் நித்திய ஒளியிலும், கடவுளின் நித்திய உயிரில் பங்குபெற நாம் அழைப்பு பெற்றுள்ளோம்.

Remove ads

இறைத்தந்தை

இறைத்தந்தை அல்லது தந்தையாகிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத்தின் முதல் ஆளாவார். இறைவெளிப்பாட்டில் இவர் படைப்பாளராக காணப்படுகிறார்.[4] இறை வார்த்தையாகிய மகனை நித்தியத்திற்கும் (முடிவில்லாமல்) பிறப்பிப்பதால் இவர் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவர் எட்டாத ஒளியில் வாழ்கின்றார். விண்ணகமும், மண்ணகமும், நாம் காண்பவை, காணாதவை யாவும் இவராலே படைக்கப்பட்டன. இறைத்தந்தை தனது வார்த்தையின் வழியாக அனைத்தையும் படைத்து, தனது ஆவியின் வழியாக அவற்றுக்கு இயக்கம் அளித்தார்.

Remove ads

இறைமகன்

இறைமகன் அல்லது மகனாகிய கடவுள் என்பவர் அதிபுனித திரித்துவத்தின் இரண்டாம் ஆளாவார். இறைவெளிப்பாட்டில் இவர் மீட்பவராக காணப்படுகிறார். இறைத்தந்தையால் பிறப்பிக்கப்படும் நித்திய (முடிவில்லாத) வார்த்தையாக இருப்பதால் இவர் மகன் என்று அழைக்கப்படுகிறார். இவர் வழியாகவே விண்ணகத்தையும், மண்ணகத்தையும், நாம் காண்பவை, காணாதவை அனைத்தையும் தந்தையாகிய கடவுள் படைத்தார்; அனைத்தும் இவருக்காகவே படைக்கப்பட்டன.[5] மானிடரான நமக்காகவும், நமது மீட்புக்காகவும் விண்ணகத்திலிருந்து இறங்கினார்;[6] தூய ஆவியினால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். நமக்காக இவர் போன்சியு பிலாத்துவின் அதிகாரத்தில், சிலுவையில் அறையுண்டு, பாடுபட்டு, மரித்து[7] அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலின்படியே, மரணத்தை வென்று மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்; வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மீண்டும் வரவிருக்கிறார்.

தூய ஆவி

தூய ஆவி என்பவர் அதிபுனித திரித்துவத்தின் மூன்றாம் ஆளாவார். இறைவெளிப்பாட்டில் இவர் புனிதப்படுத்துபவராக காணப்படுகிறார்.[8] தந்தையாகிய கடவுளிடம் இருந்தும், மகனாகிய கடவுளிடம் இருந்தும் புறப்படும் நித்திய (முடிவில்லாத) அன்பாக இவர் இருக்கிறார். இறைத்தந்தையோடும் இறைமகனோடும் ஒன்றாக ஆராதனையும், மகிமையும் பெறும் இவர், ஆண்டவராகவும் உயிர் அளிப்பவராகவும்[9] இருக்கின்றார். முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே.

Remove ads

பழைய ஏற்பாட்டில்

கிறிஸ்தவ மறைநூலான விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் மூவொரு இறைவனைப் பற்றி சில மறைமுக குறிப்புகள் காணப்படுகின்றன.

உலகப் படைப்பை விவரிக்கும் நிகழ்வில், முதலில் மூவொரு இறைவனைக் காண்கிறோம். தந்தையாம் கடவுள், தூய ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்த வேளையில், தம் வார்த்தையால்[10] அனைத்தையும் படைத்தார்[11] என்று தொடக்க நூலின் முதல் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. தூய ஆவியின் அசைவாடல் என்பது இயக்கமளித்தலைக் குறிக்கிறது. கடவுள் தம் வார்த்தையால் அனைத்தையும் படைத்து, தம் ஆவியால் அவற்றுக்கு இயக்கம் அளித்தார் என்று இதற்கு நாம் பொருள் கொள்ளலாம். இங்கு வார்த்தை என்பது இயேசுவைக் குறிக்கிறது.[12]

ஆபிரகாமின் வாழ்வில் நடந்த பின்வரும் சம்பவத்தை மூவொரு இறைவனை அடையாளப்படுத்தும் நிகழ்வாக கூறலாம்: 'பின்பு ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, "என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்தாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக!" என்றார்.'[13]

Remove ads

புதிய ஏற்பாட்டில்

விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் மூவொரு இறைவனைப் பற்றிய குறிப்புகள் ஓரளவு தெளிவாக காணப்படுகின்றன.

இறைத்தந்தையின் திருவுளப்படி, தூய ஆவியின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் இறைமகன் மனிதராக கருவான நிகழ்வு மூவொரு இறைவனின் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதை லூக்கா நற்செய்தி பின்வருமாறு எடுத்துரைக்கிறது: 'வானதூதர் மரியாவிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்" என்றார்.' [14]

இயேசுவின் திருமுழுக்கின் போது, அங்கு தந்தையின் குரலையும், தூய ஆவியின் பிரசன்னத்தையும் மாற்கு நற்செய்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றது: 'அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கி வருவதையும் கண்டார். அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.'[15]

இயேசு சிலுவையில் அறையப்படும் முன் தம் சீடர்களுக்கு கூறியதாக யோவான் நற்செய்தியில் உள்ளது பின்வருமாறு: "தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்."[16]

இயேசு இவ்வுலகை விட்டு விண்ணகம் செல்லும் முன்பாக பின்வருமாறு தம் சீடர்களுக்கு கூறியதாக மத்தேயு நற்செய்தியில் காணப்படுகிறது: "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்"[17]

மூவொரு இறைவனைப் பற்றி திருத்தூதர் பேதுரு இவ்வாறு தன் திருமுகத்தில் குறிப்பிடுகிறார்: "தந்தையாம் கடவுளின் முன்னறிவின்படி, இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவும், அவரது இரத்தத்தால் தூய்மையாக்கப்படவும் நீங்கள் தூய ஆவியால் இறைமக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்."[18]

திருத்தூதர் பவுல் தனது திருமுகத்தில் மூவொரு கடவுளின் பெயரால் இவ்வாறு வாழ்த்துகிறார்: "ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!"[19]

Remove ads

ஆதாரங்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads