தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர்
'தூய லூர்து அன்னை திருத்தலம்', பெரம்பூர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா. From Wikipedia, the free encyclopedia
Remove ads
தூய லூர்து அன்னை திருத்தலம்,[1] என்பது தமிழகத்தின் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில், பெரம்பூர் நகரிலுள்ளது. இத்திருத்தலம், பெரம்பூர் பகுதியில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் பங்கு ஆலயமாக விளங்குகிறது. தமிழகத்தில் வேறெங்கும் காணப்படாத வகையில், கீழ்த்தளம், மேல்தளம் என இரண்டடுக்கு கொண்ட கத்தோலிக்க ஆலயமாக இது கட்டப்பட்டுள்ளது. சுமார் 4,000 கிறிஸ்தவ குடும்பங்கள் இந்த ஆலயத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான மக்கள் லூர்து அன்னையை நாடி, இந்த ஆலயத்திற்கு திருப்பயணமாக வருகை தருகின்றனர். பிரான்சு நாட்டின் 'லூர்து' நகரில் காட்சி அளித்த இறையன்னை மரியாவின் உதவியால் பல்வேறு நன்மைகளைப் பெறுவதாக அவர்கள் நம்புகின்றனர்.

Remove ads
லூர்து அன்னை
பிரான்சு நாட்டின் லூர்து நகரில் பெர்னதெத் சுபீரு என்ற 14 வயது சிறுமிக்கு, 1858 பிப்ரவரி 11ந்தேதி முதல், அன்னை மரியா 18 முறைகள் காட்சி அளித்தார். ஆகவே, அவர் லூர்து அன்னை என்று அழைக்கப்படுகிறார்.[2][3] மசபியேல் என்ற குகையில் தோன்றிய மரியன்னை, தரையைத் தோண்டி தண்ணீர் அருந்துமாறு பெர்னதெத்துக்கு கட்டளையிட்டார். அதை ஏற்று, பெர்னதெத் தோண்டிய இடத்தில், ஊற்று ஒன்று உருவானது. அந்த ஊற்றின் நீரை அருந்திய பலரும் தங்கள் நோய்களில் இருந்து சுகம் பெற்றதாகக் கூறினார்கள். இதையடுத்து, அந்த இடம் அன்னை மரியாவின் புகழ்பெற்ற திருத்தலமாக மாறியது.[4] அதன் விளைவாக, உலகின் பல்வேறு பகுதிகளிலும் லூர்து அன்னையின் பெயரில் பல ஆலயங்கள் கட்டப்பட்டன.

Remove ads
பங்கின் வரலாறு
1800களில், சென்னை வேப்பேரி புனித அந்திரேயா ஆலயப் பங்கின் ஒரு பகுதியாக, பெரம்பூர் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த ஆலயத்தின் பங்குத்தந்தை ஹென்னசே, 1879ஆம் ஆண்டு பெரம்பூரில், 'லூர்து அன்னை' பெயரில் சிற்றாலயம் ஒன்றைக் கட்டியெழுப்ப முயற்சி எடுத்தார். 1880ல் சிற்றாலயம் புனிதம் செய்யப்பட்டதை அடுத்து, வேப்பேரி பங்கின் கிளைப்பங்காக பெரம்பூர் மாறியது.[5] பெரம்பூரில் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், 'லூர்து அன்னை ஆலயம்', 1903ஆம் ஆண்டு அருட்தந்தை பி.ஜே. கரோல் தலைமையில் தனிப்பங்காக உருவெடுத்தது. 1935ல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்தந்தை முரே, இந்த ஆலயத்தை, திருத்தலமாக உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார்.[6]
1947ஆம் ஆண்டு, பெரம்பூர் லூர்து அன்னை திருத்தலத்தின் பங்குத்தந்தை ஏ. மரியோட்டா ச.ச., முதல் தேசியத் திருப்பயணத்தைத் தொடங்கி வைத்தார். லூர்து நகரில் நடைபெறுவது போன்று நற்கருணை ஆசீருடன், நோயாளிகளுக்கு நலமளிக்கும் வழிபாட்டையும் அறிமுகம் செய்தார்.[6] 1951ல் தற்போதுள்ள ஆலயத்தின் தரைத்தளத்தைக் கட்ட அடித்தளம் இடப்பட்டது. 1953 பெப்ரவரி 22ந்தேதி, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் அப்போதைய பேராயர் லூயிஸ் மத்தியாஸ், கீழ்த்தள ஆலயத்தை, புனிதம் செய்து திறந்து வைத்தார்.[5] 1958ல் பங்குத்தந்தை ஜோசப் சந்தனம் ச.ச. முயற்சியால், மேல்தள ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 1953 பெப்ரவரி 11ந்தேதி, பேராயர் லூயிஸ் மத்தியாஸ், மேல்தள ஆலயத்தைப் புனிதப்படுத்தினார்.[5]
1968ஆம் ஆண்டு, ஆலயத்தின் இடது பக்கம், லூர்து அன்னையின் அழகிய கெபி கட்டியெழுப்பப்பட்டது. இதில், பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில், அன்னை மரியா காட்சி அளித்த இடத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கல் பதிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு ஆலயத்தின் இடது பக்கத்தில் நற்கருணை சிற்றாலயம் கட்டப்பட்டு, அக்டோபர் 11ந்தேதி சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் ஏ.எம். சின்னப்பா ச.ச. அவர்களால் புனிதம் செய்து திறந்து வைக்கப்பட்டது.
Remove ads
ஆலய அமைப்பு
பெரம்பூர் 'தூய லூர்து அன்னை திருத்தலம்', பிரான்சின் லூர்து நகரில் அமைந்துள்ள மரியன்னை ஆலயத்தை மாதிரியாகக் கொண்டு கட்டியெழுப்பப் பெற்றுள்ளது. கீழ்த்தளம், மேல்தளம் என இரண்டடுக்காக அமைந்துள்ள இந்தத் திருத்தல ஆலயம், கலைநயம் மிகுந்த தூண்களைக் கொண்டுள்ளது. கீழ்த்தள ஆலயத்தின் நடுப்பீடத்தில், பாடுபட்ட சுரூபமும், இடது பக்கத்தில் லூர்து அன்னை, வலது பக்கத்தில் புனித யோசேப்பு பீடங்களும் அமைந்துள்ளன. பக்கவாட்டுக் கதவுகளின் மேற்புறத்தில், அன்னை மரியாவின் பல்வேறு கண்ணாடி ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. சிலுவைப்பாதையின் 14 நிலைகளும், புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.
மேல்தள ஆலயத்தின் நடுப்பீடத்தில், லூர்தன்னை சுரூபமும், இடது பக்கத்தில் ஜான் போஸ்கோ, வலது பக்கத்தில் தோமினிக் சாவியோ பீடங்களும் இருக்கின்றன. இங்குள்ள சிலுவைப்பாதையின் 14 நிலைகளும், புடைப்புச் சிற்பங்களாகவே உள்ளன. மேல்தள ஆலயத்திற்குச் செல்ல, வளாக முகப்பில் இருந்து சறுக்குத்தளமும், கீழ்த்தள ஆலய முகப்பிலும், பின்புறத்திலிருந்து படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. திருத்தலத்தின் மத்திய கோபுரத்தின் நடுப்பகுதியில், பெர்னதெத் சுபீருக்கு அன்னை மரியா காட்சி அளித்ததை சித்தரிக்கும், எழில் மிகுந்த கண்ணாடி ஓவியம் இடம் பெற்றுள்ளது.
சிறப்பு நிகழ்வுகள்
மாதத்தின் முதல் வெள்ளி:
- இயேசுவின் திருஇதயத்தின் நாளான அன்று, நண்பகல் மற்றும் மாலைத் திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை நடைபெறுகிறது.
மாதத்தின் முதல் சனி:
- அன்னை மரியாவின் நாளான அன்று, மாலைத் திருப்பலி முடிந்த பிறகு, சிறப்பு செபமாலையுடன் தேர்பவனி நடைபெறுகிறது.
மாதத்தின் 2ஆம் சனி:
- பாவ மன்னிப்பு பெறும் ஒப்புரவு நாளாக சிறப்பிக்கப்பட்டு, மாலைத் திருப்பலியுடன், நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது.
மாதத்தின் 11ந்தேதி:
- லூர்து அன்னையின் சிறப்பு நாளான அன்று, காலையில் 200க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. மாலைத் திருப்பலிக்கு பிறகு நற்கருணை ஆசீருடன் நலமளிக்கும் வழிபாடு நடைபெறுகிறது.
மாதத்தின் 24ந்தேதி:
- கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் நினைவு நாளான அன்று, மாலைத் திருப்பலிக்குப் பிறகு தேர்பவனி நடைபெறுகிறது.
Remove ads
ஆலயத் திருவிழா
- பெரம்பூர் தூய லூர்து அன்னை திருத்தலத் திருவிழா பெப்ரவரி 11ந்தேதியை ஒட்டி வரும் ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது. பதினோரு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
