ந. பிச்சமூர்த்தி
தமிழ்ப்புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ந. பிச்சமூர்த்தி (ஆகத்து 15, 1900 - திசம்பர் 4, 1976) அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் பிச்சமூர்த்தி. தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி. சென்னை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றிய பிச்சமூர்த்தி, இந்து அறநிலையத்துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். நவ இந்தியா, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். சுதந்திரச் சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற இதழ்களில் தனது படைப்புகளை அளித்துள்ளார். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.[1]
Remove ads
வாழ்க்கை
கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக 1900 ஆகத்து 15 இல் பிச்சமூர்த்தி பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம்.[2] நடேச தீட்சிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டி மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யுமளவிற்குத் தேர்ச்சி பெற்றவர். சைவப் புராணப் பிரசங்கங்கள் செய்தவர்.
பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று, சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1925 முதல் 1938 வரை வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1939 முதல் 1959 வரை இந்து அறநிலையத்துறை அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
பிச்சமூர்த்தி, நவ இந்தியா பத்திரிகையில் சிறிது காலம் பணியில் இருந்தார். இவரின் எழுத்துகள் சுதேசமித்திரன், சுதந்திர சங்கு, தினமணி, மணிக்கொடி போன்ற பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின.
இந்தத் தத்துவ மரபில் வாழ்ந்து வந்த செழுமையின் உள்தூண்டல் அவரது படைப்பு மனோபாவத்தின் அடிநாதமாக இழையோடியது. "இலக்கியமும் நம்மைப் போல நம்மையறியாமலே - ஒருவேளை நம்மையும் மீறி - உந்தித் தள்ளும் சக்தி அல்லது எதுவோ..." என நம்பினார். இந்த நம்பிக்கையின் சோதனை முயற்சிகளாகவே பிச்சமூர்த்தியின் படைப்புகள் வெளிப்பட்டன.
Remove ads
படைப்புகள்
சிறுகதை
- பதினெட்டாம்பெருக்கு (1944)
- ஜம்பரும் வேஷ்டியும் (1947)
- மோகினி (1951)
- குடும்ப ரகசியம் (குறும்புதினம்) (1959)
- பிச்சமூர்த்தியின் கதைகள் (1960)
- மாங்காய் தலை (1961)
- இரட்டை விளக்கு (1967)
- காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள்) (1977)
- கஞ்சா மடம் (திசம்பர் 2022)
கவிதைத் தொகுப்புகள்
- காட்டுவாத்து (ஆக.1962)
- வழித்துணை (1964)
- குயிலின் சுருதி (1970)
கட்டுரைத்தொகுதி
- மனநிழல் (1977) (சிறுகதைகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது)
நாடகங்கள்
- காளி (1946)
Remove ads
ஆர்வமூட்டும் செய்திகள்
- பிச்சமூர்த்திக்கு அவரின் பெற்றோர் அவர் பிறந்தவுடன் இட்ட பெயர், வேங்கட மகாலிங்கம். இவருக்கு முன் பிறந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டன. அற்பமான பெயர்களைக் கொண்டு அழைத்து வந்தால் காலன் அவர்களை அழைத்துச் செல்லமாட்டான் என்ற நம்பிக்கையில் இவரை "பிச்சை" என்று அழைத்தனர். பின்னாளில் பிச்சை, பிச்சமூர்த்தி ஆனார்.
- பிச்சமூர்த்தி, ஸ்ரீராமானுஜர் என்னும் திரைப்படத்தில் ஆளவந்தார் வேடமேற்று நடித்திருக்கிறார்.
- பிச்சமூர்த்தி இயல்பிலேயே ஆன்மீக விஷயங்களிலும், துறவிலும் நாட்டம் கொண்டவராக இருந்திருக்கிறார். குடும்ப வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த பின்னரும் ஓர் ஆண்டு காலம் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சந்நியாசத்தை விரும்பி ஊர் ஊராக அலைந்திருக்கிறார். தன்னைத் துறவியாக்க வேண்டி, தனக்கு உபதேசம் செய்யுமாறு ரமண மகரிஷியிடமும் சித்தர் குழந்தைசாமியிடமும் அணுகி நின்றார். ஆனால் அவர்கள் இல்லற வாழ்க்கைதான் பொருத்தமானதென்று உபதேசித்திருக்கிறார்கள்.
சிந்தனைச் சிதறல்கள்
- "எனக்கு எப்பொழுதும் உணர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாவது இடம்தான் தருவேன். ஆகையால் எப்பொழுதுமே ஒரு திட்டம் போட்டு குறிப்பிட்ட கருத்தை வற்புறுத்துவதென்ற எண்ணத்துடன் ஒன்றுமே நான் எழுதவில்லை. உணர்வே என் குதிரையாகிவிட்டபடியால் நான் ஒரு சமயம் நட்சத்திர மண்டலத்தில் பொன்தூள் சிதறப் பறப்பேன். ஒரு சமயம் வெறும் கட்டாந்தரையில் "ஏபால்டில்" செய்வேன். என் மனதிலும் இந்த இரண்டு அம்சங்கள் பின்னிக்கிடப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு பகுதி சிறகு விரித்து, சொல்லுக்கு எட்டாத அழகு ஒன்றை நாடி எப்பொழுதுமே பறந்து கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியின் ஆட்சிக்கு உட்பட்ட போதெல்லாம் வெறும் கற்பனையாகவே கதைகள் வருகின்றன. மற்றொரு பகுதி எல்லோரையும் போல் மண்ணில் உழலுகிறது. அப்பொழுதெல்லாம் உலகின் இன்ப துன்பங்களைப் பற்றி இயற்கையை ஒட்டிய முறையில் எழுதுகிறேன்"
- "எழுதுவது ஒரு கலைஞனுக்கு இயல்பானது... மல்லிகை பூப்பது போல, விதைகள் விழுந்து மரமாவது போல... அறிவுக்குப் புலப்படாத பாலுணர்வின் தூண்டுதல் போல..."
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads