நடுத்தர வர்க்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நடுத்தர வர்க்கம் அல்லது நடுத்தர வகுப்பு என்பது, சமூகப் படிநிலை அமைப்பில் நடுவில் உள்ள வகுப்பினரைக் குறிக்கும். வெபரிய சமூக-பொருளாதாரச் சொற் பயன்பாட்டின்படி, தற்காலச் சமூகத்தின் சமூக-பொருளாதார அடிப்படையில், தொழிலாளர் வகுப்புக்கும், உயர் வகுப்புக்கும் இடையில் இருக்கும் பரந்த அளவு மக்கள் கூட்டத்தைக் குறிக்கிறது. நடுத்தர வர்க்கம் என்பதைத் தீர்மானிக்கும் அளவு கோல் வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு விதமாகக் காணப்படுகிறது.
நடுத்தர வர்க்கத்தினர், நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரக்கூடிய பொருளாதார வசதியைப் பெற்ற அல்லது பெற வல்ல மக்கள் குழுவினர் ஆவர். இவர்கள் மேட்டுக் குடியினர் அளவுக்கு அதிகாரத்தை அல்லது செல்வாக்கை குவியப்படுத்திக் கொண்டிருப்பதில்லை. பொதுவாக தொழிற்துறை வல்லுனர்கள், புலமையாளர்கள், அரச சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள் இந்த வர்க்கத்தில் அடங்குவர். பொருளாதார, வாழ்கைத்தர நிலைமைகளைப் பொறுத்து விவசாயிகளும் தொழிலாளர்களும் கூட இந்த வரையறைக்குள் வரக்கூடும்.
Remove ads
கருத்துருவின் வரலாறு
நடுத்தர வர்க்கம் என்பதற்கு ஈடான ஆங்கிலச் சொல் middle class என்பது 1745 ஆம் ஆண்டில் சேம்சு பிராட்சா என்பவரால் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.[1][2] எனினும், இச்சொல் பல பொருள்களில், சில வேளைகளில், முரண்பட்ட பொருள் தரும்படி பயன்பட்டது. ஒரு காலத்தில் ஐரோப்பாவில், இச்சொல், பிரபுக்களுக்கும், குடியானவர்களுக்கும் இடையில் உள்ள மக்களைக் குறிக்கப் பயன்பட்டது. பிரபுத்துவ வகுப்பினர் நாட்டுப்புற நிலங்களுக்கு உடமையாளர்களாக இருந்தனர். குடியானவர்கள் அவர்களுடைய நிலங்களில் வேலை செய்தனர். இவ்வகுப்புக்களுக்குப் புறம்பாகப் புதிதாக உருவான, வணிகச் செயற்பாடுகளோடு தொடர்புள்ள நகர வாசிகள், நடுத்தர வகுப்பினராகக் கருதப்பட்டனர். இன்னொரு வரைவிலக்கணப்படி, பிரபுத்துவ வகுப்பினரோடு போட்டியிடக் கூடிய அளவுக்கு மூலதனம் வைத்திருந்த முதலாளிகள் நடுத்தர வகுப்பினர் எனப்பட்டனர். தொழிற் புரட்சிக் காலத்தில், பெருமளவு மூலதனத்தைக் கொண்ட இலட்சாதிபதிகளாக இருப்பதே நடுத்தர வகுப்பினருக்குரிய தகுதியாக இருந்தது. பிரெஞ்சுப் புரட்சியை நிகழ்த்தியவர்கள் நடுத்தர வகுப்பினரே.[3]
நடுத்தர வகுப்பு என்பதற்கான தற்காலப் பொருளுடன் கூடிய பயன்பாடு முதலில் 1913 ஆம் ஆண்டின் ஐக்கிய இராச்சியப் பதிவாளர் நாயகத்தின் அறிக்கையில் காணப்பட்டது. இதில் புள்ளியியலாளர், டி. எச். சி. இசுட்டீவன்சன், நடுத்தர வகுப்பினரை உயர் வகுப்பினருக்கும் தொழிலாளர் வகுப்பினருக்கும் இடைப்பட்டவர்களாகக் குறிப்பிட்டார். உயர்தொழில் வல்லுனர்கள், மேலாளர்கள், மூத்த அரச அதிகாரிகள் போன்றோர் நடுத்தர வகுப்பினராகக் கொள்ளப்பட்டனர்.
முதலாளித்துவத்தில், நடுத்தர வகுப்பு என்பது, பூர்சுவாக்களையும், சிறு பூர்சுவாக்களையுமே குறித்தது. ஆனால், பெரும்பாலான சிறு பூர்சுவாக்கள் ஏழைகளாகவும், பாட்டாளிகளாகவும் ஆனதாலும், நிதி முதலாளித்துவத்தின் வளர்ச்சியாலும், உயர்மட்டத் தொழிலாளர், உயர்தொழில் வல்லுனர், அலுவலகப் பணியாளர் போன்றோர் நடுத்தர வகுப்பினராகக் கருதப்படுகின்றனர்.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads