நெஸ்டோரியக் கொள்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நெஸ்டோரியக் கொள்கை (Nestorianism) என்பது இயேசு கிறிஸ்து யார் என்பதை விளக்குகின்ற இறையியல் துறையான கிறிஸ்தியல் (Christology) என்பதைச் சார்ந்த ஒரு கொள்கை ஆகும்.
இக்கொள்கையானது "நெஸ்டோரியுசு" (en:Nestorius) என்பவர் எடுத்துரைத்த கருத்துகளின் அடிப்படையில் உருவானதால் இப்பெயர் பெற்றது. இக்கொள்கை தவறானது என்று திருச்சபையின் பொதுச்சங்கங்களால் கண்டனம் செய்யப்பட்டது.
நெஸ்டோரியுசின் கருத்து
நெஸ்டோரியுசு என்பவர் காண்ஸ்டாண்டிநோபுளின் மறைமுதல்வராக கிபி 428-431 ஆண்டுக் காலத்தில் பதவி வகித்தார். அவர் அந்தியோக்கியா நகரை மையமாகக் கொண்டிருந்த ஓர் இறையியல் இயக்கத்தைச் (School of Antioch) சார்ந்த மொப்சுவேஸ்தியா தியடோர் என்பரின் அணுகுமுறையைத் தழுவியிருந்தார். அந்த இயக்கமானது இயேசு கிறிஸ்துவில் கடவுள் இயல்பும் (divine nature) மனித இயல்பும் (human nature) ஒன்றோடொன்று தொடர்பற்றனவாக உள்ளன என்ற கருத்தை முன்வைத்தது.

நெஸ்டோரியசின் கருத்தை எதிர்த்து வாதாடியவர்களுள் முக்கியமானவர் "அலெக்சாந்திரியா நகர் சிரில்" என்பவர். இவர் எகிப்தில் அமைந்த அலெசாந்திரியா நகரில் மறைமுதல்வராக இருந்தவர். அலெக்சாந்திரியா சபைக்கும் காண்ஸ்டாண்டிநோபுள் சபைக்கும் ஏற்கெனவே போட்டி இருந்துவந்தது. அதோடு இறையியல் தொடர்பான கருத்து வேறுபாடும் எழுந்ததால் சிரில் நெஸ்டோரியசைக் கடுமையாக எதிர்த்தார்.
சிரில் நெஸ்டோரியசு மீது சுமத்திய குற்றச்சாட்டு இது: கிறித்தவ திருச்சபையின் கொள்கைப்படி இயேசுவின் தாயான மரியா உண்மையிலேயே "கடவுளின் தாய்" ("தேவமாதா") (Theotokos) என்றிருக்க, நெஸ்டோரியசு மரியாவை வெறுமனே "கிறிஸ்துவின் தாய்" (Christotokos) என்று கூறியது தவறு. அக்கருத்து கண்டிக்கப்பட வேண்டும்; நெஸ்டோரியுசு மறைமுதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
எபேசு நகரில் 431இல் கூடிய பொதுச்சங்கம் (Council of Ephesus) நெஸ்டோரியுசின் கொள்கை "திரிபுக் கொள்கை" (heresy) என்று கூறி கண்டனம் செய்தது. அதுபோலவே 451இல் கூட்டப்பட்ட கால்செதோன் பொதுச்சங்கமும் (Council of Chalcedon) செய்தது.
பின்னர் நெஸ்டோரியுசின் ஆதரவாளர்கள் பாரசீகத்திற்குப் பெயர்ந்து சென்றனர். அங்கு சிறுபான்மையாக இருந்த கிறித்தவ சபை அவர்களுக்குப் புகலிடம் கொடுத்தது. அவ்வமயம் சாசானியப் பேரரசாக இருந்த பாரசீகத்தில் பெரும்பான்மையாக இருந்த சோராசுதிர சமயத்தவரும் பேரரசனும் கிறித்தவர்கள் வெளி அதிகாரிகளுக்கு விசுவாசமுள்ளவர்களாக இருப்பதை விரும்பவில்லை. எனவே பெரும்பான்மை சமயத்தவரின் பாதுகாப்பைப் பெறுவதற்காகவும் சிறுபான்மை கிறித்தவர்கள் அரச விருப்பத்திற்கு இணங்கி, தாம் தனி அதிகாரம் கொண்ட திருச்சபை என்று அறிக்கையிட்டனர். படிப்படியாக அத்திருச்சபை நெஸ்டோரியக் கொள்கையைத் தனதாக்கிக் கொண்டதால் மேற்கு திருச்சபையிலிருந்து பிரிந்தது (Nestorian Schism)
Remove ads
நெஸ்டோரியக் கொள்கையின் அம்சங்கள்
இக்கொள்கையானது, இயேசு கிறிஸ்துவில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் நெருங்கிய விதத்தில் இல்லாமல் பிரிந்த முறையிலேயே உள்ளன என்று கூறியது. அதற்கு நேர்மாறான கொள்கையானது இயேசுவிடத்தில் ஒரே தன்மைதான் உண்டு என்றும் அது இறைப்பண்பும் மனிதப்பண்பும் கொண்டுள்ளது என்றும் கூறியது (Monophysitism)
நெஸ்டோரியுசின் கருத்துப்படி, இயேசு கிறிஸ்து என்னும் மனிதர், கடவுளின் மகன் என்று கூறமுடியாது. மாறாக, அவர் மனிதர் என்ற முறையில் அவரோடு கடவுளின் மகன் இணைந்து அவரில் வாழ்கிறார். அவரது இயல்பு மனித இயல்பே.[1]
நெஸ்டோரியுசு கொள்கையும் அதற்கு நேர்மாறான "ஓரியல்புக் கொள்கையும்" (Monophysitism) தவறு என்று கால்செதேன் பொதுச்சங்கம் கண்டனம் செய்தது.
பாரசீகத்தில் குடியேறிய கிறித்தவர்களின் வருகையால் அங்கு நெஸ்டோரிய கொள்கை உருப்பெற்றது. அங்கிருந்து 7ஆம் நூற்றாண்டளவில் பலர் ஆசியா சென்று கிறித்தவத்தைப் பரப்பினர்.
எனினும் கீழைத் திருச்சபைகள் அனைத்தும் நெஸ்டோரியக் கொள்கைகளை ஏற்றன என்று கூறமுடியாது. எடுத்துக்காட்டாக, நெஸ்டோரியுசை ஏற்றாலும் அவர் பெயரால் வழங்கும் கொள்கையை அப்படியே ஏற்காத ஒரு சபை "கிழக்கு அசீரிய சபை" (Assyrian Church of the East) ஆகும்.
ஆசியாவுக்குப் பரவிய பாரசீக கிறித்தவ சபையின் வளர்ச்சி தடைபடுவதற்கு இசுலாமும் பவுத்தமும் செல்வாக்கு அடைந்தது ஒரு முக்கிய காரணம் ஆகும்.[2]
Remove ads
இயேசு கிறிஸ்து பற்றி திருச்சபை ஏற்கின்ற பொதுக் கொள்கை
நெஸ்டோரியுசுவின் கொள்கை தவறானது என்று கிறித்தவத்தின் பொதுச்சங்கங்கள் தெளிவாக வரையறுத்தன. அதன் பிறகும் இயேசுவின் இயல்பு, ஆளுமை போன்றவை பற்றிய விவாதம் தொடர்ந்தது.
கிபி 5ஆம் நூற்றாண்டில் வரையறுக்கப்பட்டு, இன்று கத்தோலிக்க சபை, கீழை கத்தோலிக்க மரபு சபைகள், ஆங்கிலிக்கம், லூதரனியம் போன்ற மைய நீரோட்ட புரட்டஸ்தாந்து சபைகள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பற்றி வரையறுக்கப்பட்ட கொள்கையை ஏற்கின்றன.
கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி சுருக்கம் என்னும் அதிகார பூர்வ போதனை ஏடு "இயேசு யார்" என்னும் கேள்விக்குப் பின்வருமாறு பதில் தருகிறது (எண்கள் 87-88):
“ | இயேசு கிறிஸ்து எவ்வாறு உண்மையான இறைவனாகவும், உண்மையான மனிதராகவும் உள்ளார்?
இறை ஆளாகிய இயேசு கிறிஸ்து பிரிக்க முடியாத வகையில் உண்மையான கடவுளாகவும், உண்மையான மனிதராகவும் உள்ளார். இறைமகனாகிய அவர் "பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருளானவர்." அதே வேளையில் அவர் முழுமையான மனிதராகவும், நம் சகோதரராகவும், கடவுள் நிலையிலிருந்து மாறாத நம் ஆண்டவராகவும் திகழ்கிறார். கி.பி. 451-ஆம் ஆண்டில் நடைபெற்ற கால்செதோன் பொதுச்சங்கம் இது பற்றி என்ன போதித்தது? "ஒரே மகனும் நம் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து, தமது மனிதத் தன்மையில் நிறைவானவர்; அவர் உண்மையான கடவுளும் உண்மையான மனிதரும் ஆவார்; அறிவார்ந்த ஆன்மாவும் உடலும் கொண்டவர்; தமது இறைத்தன்மையில் தந்தையோடு ஒரே பொருளானவர்; தமது மனிதத் தன்மையில் நம்மோடு ஒரே பொருளானவர்; 'பாவம் தவிர மற்ற எல்லா வகையிலும் நம்மைப்போல் உள்ளார்'(எபி 4:15). தமது இறைத்தன்மையில் காலங்களுக்கு முன்பே அவர் தந்தையிடமிருந்து பிறந்தவர். மனிதத் தன்மையைப் பொருத்தவரை இந்த இறுதி நாள்களில் நமக்காகவும், நம் மீட்புக்காகவும் இறைவனின் அன்னையாகிய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தவர்" என்று கால்செதோன் பொதுச்சங்கம் போதித்தது. |
” |
குறிப்புகள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads