பக்சுட்டன் நினைவு நீரூற்று
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பக்சுட்டன் நினைவு நீரூற்று (Buxton Memorial Fountain) என்பது, ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் உள்ள ஒரு நினைவுச் சின்னமும், குடிநீர் ஊற்றும் ஆகும். தற்போது விக்டோரியா கோபுரப் பூங்காவில் அமைந்துள்ள இது பிரித்தானியப் பேரரசில் 1834 ஆம் ஆண்டில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதை நினைவுகூரும் முகமாக அமைக்கப்பட்டது.

வரலாறு
நாடாளுமன்ற உறுப்பினர் சார்லசு பக்சுட்டன் என்பவர் இதனைக் கட்டுவித்துத் தனது தந்தையாரான தாமசு போவெல் பக்சுட்டனுக்கும், அவருடன் சேர்த்து வில்லியம் வில்பர்ஃபோர்சு, தாமசு கிளார்க்சன், தாமசு பாபிங்டன் மக்கோலே, என்றி புரூகம், இசுட்டீபன் லுசிங்டன் ஆகியோருக்கும் அர்ப்பணம் செய்தார். இவர்கள் அனைவரும் அடிமைத்தன ஒழிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவர்கள் ஆவர். 1865 ஆம் ஆண்டில் கோதிக் கட்டிடக்கலைஞரான சாமுவேல் சான்டர்சு தெயுலோன் என்பவர் இதனை வடிவமைத்தார். இவ்வாண்டிலேயே மேற்கத்திய அடிமை வணிகத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கான 13 ஆவது திருத்தம் நிறைவேறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.[1]
இது முதலில் இலண்டனில் உள்ள நாடாளுமன்றச் சதுக்கத்தில், 1,200 பவுன்கள் செலவில் அமைக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இச் சதுக்கம் திருத்தி அமைக்கப்பட்டபோது இந்த நினைவுச்சின்னம் அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டது. 1957 ஆம் ஆண்டிலேயே இது இதன் தற்போதைய இடமான விக்டோரியா கோபுரப் பூங்காவில் நிறுவப்பட்டது.[2] இந்த நினைவுச் சின்னத்தில் பிரித்தானியாவின் ஆட்சியாளர்களின் ஏழு அலங்கார உருவங்கள் இருந்தன. இவற்றுள் நான்கு 1960 ஆம் ஆண்டிலும், ஏனைய நான்கும் 1971 ஆம் ஆண்டிலும் களவு போயின. இவ்விடங்களில் பின்னர் கண்ணாடியிழை நெகிழியியாலான உருவங்கள் வைக்கப்பட்டனவாயினும் 1980 ஆம் ஆண்டில் இவையும் காணாமல் போய்விட்டன. குடிநீர் ஊற்றும் தற்போது இயங்கும் நிலையில் இல்லை. 2006 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்துக்கும் 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கும் இடையில் திருத்த வேலைகள் செய்யப்பட்டன. அடிமை வணிகம் ஒழிக்கப்படதன் 200 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்நினைவுச் சின்னம் 2007 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மீண்டும் திறந்துவைக்கப்பட்டது.[3]
Remove ads
அமைப்பு
இதன் அடிப்பகுதி 12 அடி விட்டம் கொண்ட எண்கோண வடிவமான தள வடிவம் கொண்டது. எட்டுப் பக்கங்களிலும், டோவன்சயர் பளிங்குக் கற்களால் ஆன இரட்டைத் தூண்கள் கூர் வளைவு முகப்புகளைத் தாஙுகின்றன. எண்கோணத்தின் மையத்தில் வட்ட வடிவ வெட்டுமுகம் கொண்ட பெரிய தூண் ஒன்று உள்ளது. இதன் நாற்புறங்களிலும் கருங்கல்லால் ஆன நான்கு குடிநீரூற்றுத் தொட்டிகள் பொருத்தப்பட்டு உள்லன. இதன் மேற் பகுதியில் எண்கோணத்தின் கோணத் திசைகளோடு பொருந்தும் வகையில் வெண்கலத்தினால் ஆன, இங்கிலாந்தின் பழைய ஆட்சியாளர்களின் உருவங்கள் பொருத்தப்பட்டிருந்தன. பிரிட்டனிய ஆட்சியாளர்களைக் குறிக்க கரக்டாக்கசு, ரோமன்களைக் குறிக்க கான்சுட்டன்டைன், டேனியர்களைக் குறிக்கக் கனூட், சக்சன்களைக் குறிக்க ஆல்பிரட், நோர்மன்களைக் குறிக்க வெற்றியாளன் வில்லியம், இறுதியாக விக்டோரியா அரசி ஆகியோரது உருவங்கள் இவற்றுள் அடங்குவன. இச் சின்னத்தின் நோக்கங்களைக் குறிக்கும் கல்வெட்டுக்கள் இதன் அடிப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன.
Remove ads
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads