மரக்கட்டைக் குடில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மரக்கட்டைக் குடில் (log cabin) என்பது மரக்கட்டைகளை ஒன்றுன் மீது ஒன்றாகப் பொருத்திக் கட்டப்பட்ட வீடு ஆகும். குறிப்பாக, இவை அதிக முடிப்புச் செய்யப்படாதவையும், கட்டிடக்கலை அடிப்படையில், சிக்கல் குறைந்த அமைப்புக் கொண்டனவும் ஆகும். மரக்கட்டை வீடுகளுக்கு ஐரோப்பாவில் மிகப் பழைய வரலாறு உண்டு. அமெரிக்காவில் இதன் வரலாறு, முதல் தலைமுறைக் குடியேற்றக்காரரின் வீடுகளோடு தொடர்புடையது. மரக்கட்டைகள் இலகுவாக அல்லது மலிந்த விலையில் கிடைக்குமாயின் இக்குடில்களைக் குறைந்த பொருட்செலவில் கட்டலாம். அமெரிக்காக்கங்களில் ஐரோப்பியர் முதலில் வந்த போது மரக்கட்டைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. அதனால் அவர்கள் இந்த வகைக் குடில்களையே பெரிதும் கட்டினார்கள்.
கொலராடோவின் தெற்குப் பாறை மலைகளில் உள்ள ஒரு மரக்கட்டைக் குடில்.
Remove ads
ஐரோப்பாவில் மரக்கட்டைக் குடிலின் வரலாறு
மரக்கட்டைக்குடில்கள் ஐரோப்பிய நாடுகளில் பண்டைக் காலத்தில் இருந்து கட்டப்பட்டு வந்திருக்கிறது. விட்ருவியசு தனது கட்டிடக்கலை தொடர்பான நூலில் மரக்கட்டைக் கட்டுமானங்களைக் குறித்து விளக்கியுள்ளார். இன்றைய வடகிழக்குத் துருக்கியான அன்றைய பான்டசு என்னும் இடத்து வீடுகள் கிடையாக மரக்கட்டைகளை அடுக்கி, இடைவெளிகளை மரச் செதுக்கல்களும் குழை மண்ணும் கலந்த கலவையால் அடைத்துக் கட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.[1]
மரக்கட்டைக் குடில்களின் மூலம் இசுக்கன்டினேவியா, கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகள் ஆகும். மக்கட்டை வீடுகளின் தொடக்கம் தெளிவற்றதாக இருந்தபோதிலும், முதல் மரக்கட்டை வீடுகள், வடக்கு ஐரோப்பாவில் வெண்கலக் காலத்தில் (ஏறத்தாழ கிமு 3500) கட்டப்பட்டிருக்கலாம். சி. ஏ. வெசிலாகர் என்பவர், ஐரோப்பியர்கள் மூலை மரப்பொருத்துக்கான பல முறைகளை அறிந்திருந்ததுடன், உருளை மரக்கட்டைகளையும், அரிந்த மரக்கட்டைகளையும் அவர்கள் பயன்படுத்தியதாகக் குறிப்பிடுகிறார். மரக்கட்டைக் கட்டிடங்கள் செப்பமுறாத சிறிய முகட்டுக்கூரைக் குடில்களிலிருந்து, சிக்கலான மூலைகளில் மரக்கட்டை வெளியே துருக்கிக்கொண்டிருக்கும் இரட்டைக் காடிப் பொருத்துடன் கூடிய சதுரக் கட்டைகளிலான கட்டிடங்கள் வரை படிவளர்ச்சி பெற்றன என்பது அவரது கருத்து.
மத்தியகால மரக்கட்டைக் குடில்கள் அசையக்கூடிய சொத்தாகவே கருதப்பட்டன என்பது, 1557ல் எசுப்பாபி ஊர் இன்னோரிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிகழ்விலிருந்து தெரிகிறது. கட்டிடங்கள் பிரிக்கப்பட்டுப் புதிய இடத்துக்கு அனுப்பப்பட்டன. அங்கே அவை மீண்டும் பொருத்தப்பட்டன. பூச்சிகளால் அரிக்கப்பட்ட தனி மரக்கட்டைகளை எடுத்துவிட்டுப் புதிய மரக்கட்டைகளை மாற்றுவதும் வழமையாக இருந்தது.
நார்வேயின் ரொன்ட்கெய்ம் என்னும் இடத்தில் உள்ள மர அருங்காட்சியகத்தில் பதினான்கு வகையான மரபுவழி அமைப்பு முறைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால், மரக்கட்டைக் கட்டுமானத்தின் அடிப்படை வடிவம் வடக்கு ஐரோப்பா, ஆசியா போன்ற பகுதிகள் முழுவதிலும் பயன்பட்டதுடன், பின்னர் அமெரிக்காவுக்கும் இறக்குமதி செய்யப்பட்டது.
Remove ads
ஐக்கிய அமெரிக்காவில் ஐரோப்பியக் குடியேறிகள்
இக்கால ஐக்கிய அமெரிக்காவில் மரக்கட்டைக் குடில்களைக் குடியேறிகள் முதன் முதலாக 1638ல் கட்டியிருக்கக்கூடும். வட அமெரிக்காவில் முதல் மரக்கட்டைக் குடில்கள் டெலாவெயர் ஆறு, பிரண்டிவைன் ஆறு ஆகியவற்றின் பள்ளத்தாக்குகளில் அமைந்த "நீயே சுவேரியே" (புதிய சுவீடன்) சுவீடியக் குடியேற்றத்திலேயே கட்டப்பட்டதாக வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். அக்காலத்தில் பின்லாந்து சுவீடனின் ஒரு பகுதியாக இருந்ததால், பெரும்பாலான குடியேற்றக்காரர்கள் காட்டு பின்னியர்களாக இருந்தனர். நியூ சுவீடன் (புதிய சுவீடன்) சிறிது காலமே நிலைத்திருந்தது. இது பின்னர் ஒல்லாந்தக் குடியேற்றமாகி நியூ நெதர்லாந்து ஆகியது. இதுவே பின்னர் ஆங்கிலக் குடியேற்றமானபோது நியூ யார்க் ஆனது. சுவீடிய பின்னியக் குடியேற்றக்காரருடைய விரைவான இலகுவான கட்டுமான நுட்பங்கள், தொடர்ந்தது மட்டுமன்றி அது மேலும் பரவியது.
பின்னர் செருமானிய, உக்ரேனிய குடியேறிகளும் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தினர். இசுக்காட்டியர்களும், இசுக்காட்டிய-ஐரியர்களும் மரக்கட்டைகளைக் கொண்டு கட்டிடம் கட்டுவது தொடர்பான மரபுரிமைகளைக் கொண்டிராதவர்கள். ஆனாலும், விரைவிலேயே அவர்கள் இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். முதல் ஆங்கிலக் குடியேறிகள் பரவலாக மரக்கட்டைக் குடிசைகளைப் பயன்படுத்தவில்லை.[2] 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த சில மரக்கட்டைக் குடில்கள் இன்றும் காணப்பட்டாலும், அவை பெரும்பாலும் நிரந்தரமான கட்டிடங்களாக அமைக்கப்படவில்லை. ஐக்கிய அமெரிக்காவில் இப்போதும் இருக்கும் மிகப் பழைய மரக்கட்டைக் குடில் சி. ஏ. நொத்னாகிள் மரக்கட்டை வீடு ஆகும் (1640).
Remove ads
வட அமெரிக்காவில் மரபுவழி மரக்கட்டைக் கட்டிடங்கள்
மரக்கட்டைகளை அடுக்கி முனைகளைக் காடிப்பொருத்து முறைமூலம் இணைத்து மரக்கட்டைக் குடிசைகள், கட்டப்படுகின்றன. சில மரக்கட்டைக் குடிசைகளில் காடிப்பொருத்து இல்லாமல் மரக்கட்டைகள் ஆணிகள் மூலம் பிணைக்கப்படுவது உண்டு. இது அமைப்பு அடிப்படையில் திறன்கொண்டது அல்ல. நவீன கட்டுமான வசதிகள் இக்குறுக்குவழிக்கு இடமளிக்கின்றன.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads