மலை மாதா பெருங்கோவில் (மும்பை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலை மாதா பெருங்கோவில் (Basilica of Our Lady of the Mount) அல்லது வழக்கமாக மரியா மலைக் கோவில் (Mount Mary Church) என்று அழைக்கப்படுகின்ற வழிபாட்டிடம் மும்பை உயர்மறைமாவட்டத்தில், மேற்கு மும்பையின் பாந்த்ரா (Bandra) பகுதியில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் அன்னை மரியாவின் பிறந்த நாள் திருவிழாவான செப்டம்பர் 8ஆம் நாளை அடுத்துவருகின்ற ஞாயிற்றுக் கிழமையன்று மலை மாதா பெருங்கோவிலில் திருவிழா தொடங்கும். அவ்விழா எட்டு நாள்கள் நீடிக்கும். அதற்கு முன்னால் ஒன்பது நாள் இறைவேண்டல் "நவநாள்" கொண்டாட்டமாக நிகழும். இவ்வாறு இக்கோவிலின் ஆண்டுக் கொண்டாட்டம் 17 நாள்கள் நடைபெறும்.
Remove ads
பாந்த்ரா திருவிழா
மலை மாதா கோவில் திருவிழா காலத்தில் பாந்த்ரா நகர் முழுவதுமே விழாக் கோலம் பூண்டிருக்கும். பல்லாயிரக் கணக்கான மக்கள் விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர். உணவுப் பொருள்கள், கலைப் பொருள்கள், நூல்கள், விளையாட்டுப் பொருள்கள், ஒப்பனைப் பொருள்கள், துணிகள் போன்று எண்ணிறந்த பொருள்களை விற்பனை செய்கின்ற சிறுசிறு கடைகள் எழுப்பப்பட்டு வாணிகம் கணிசமாக நிகழும்.
திருவிழாவில் கிறித்தவர்களைத் தவிர இந்துக்கள், இசுலாமியர் போன்ற பிற சமயத்தவரும் பேரெண்ணிக்கையில் கலந்துகொள்வர்.[1][2]
Remove ads
அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்
அன்னை மரியா கோவில், கடல்மட்டத்திலிருந்து 80 மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு குன்றின்மேல் கட்டப்பட்டுள்ளது. எனவேதான் அது "மலை மாதா கோவில்" என்ற பெயரைப் பெற்றது. கோவிலில் திருவிழா நடைபெறும் போது மட்டுமன்றி, ஆண்டு முழுவதுமே அக்கோவிலில் சென்று பல சமய மக்களும் வேண்டுதல்கள் நிகழ்த்துகின்றனர்.
அன்னை மரியாவிடம் வேண்டுவதால் தங்களுக்குப் பல நன்மைகள் கிடைப்பதாக அத்திருப்பயணிகள் சான்றுபகர்கின்றனர்.
மராத்தர்களின் படையெடுப்புக் காரணமாக இக்கோவில் 1738இல் அழிவை சந்தித்தது.
Remove ads
அன்னை மரியாவின் திருச்சிலை

இப்போது உயர்ந்து எழுகின்ற கோவில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் இக்கோவில் கட்டப்படுவதற்கு மூல காரணமாக அமைந்த மரியா திருச்சிலையின் வரலாறு 16ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடங்குகிறது.
16ஆம் நூற்றாண்டில் இயேசு சபையைச் சார்ந்த போர்த்துகீசிய மறைபரப்பாளர்கள் தம் நாட்டிலிருந்து அன்னை மரியா திருச்சிலையைக் கொண்டுவந்தார்கள். பாந்த்ராவில் ஒரு சிற்றாலயம் கட்டி அத்திருச்சிலையை நிறுவினார்கள். சிலையின் தங்க முலாம் திருடர்களைக் கவரவே அவர்கள் அச்சிலையின் வலது கையை வெட்டிச் சென்றார்கள்.
1760ல் கோவில் மீண்டும் கட்டப்பட்டது. பழைய மரியா சிலைக்குப் பதிலாக, கடற்பயணிகளின் அன்னை என்னும் மரியா சிலை வைக்கப்பட்டது. இச்சிலை அங்கு வந்தது பற்றி ஒரு வரலாறு உள்ளது. அதாவது, கோலி இனத்தைச் சார்ந்த ஒரு மீனவர் 1700ஆம் ஆண்டளவில் ஒருநாள் ஒரு கனாக் கண்டார். அக்கனவில் அவர் கடலில் அன்னை ஒரு சிலை மிதப்பதைக் கண்டார். விடிந்ததும் கடலுக்குச் சென்று கனவில் அறிந்ததுபோலவே அச்சிலையைக் கண்டெடுத்தார்.
இந்த வரலாறு 1669இல் இயேசு சபையினர் வெளியிட்ட ஒரு நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீனவரால் கண்டெடுக்கப்பட்ட சிலையை அப்பகுதி மக்கள் "மோத் மவுலி" (Mot Mauli) என்று பெயரிட்டு அழைத்தனர். மோத் என்பது "முத்து" என்றும், மவுலி என்பது "அம்மா, தாய்" என்றும் பொருள்படும் எனவே கடலில் கண்டெடுக்கப்பட்ட மரியா சிலை "முத்தம்மா" என்று மக்களால் அழைக்கப்படுகிறது.
இருப்பினும், கோவிலில் முதலில் வைக்கப்பட்டிருந்த மரியா சிலை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பழைய இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது. அத்திருச்சிலையின் முன் நின்று மக்கள் தம் வேண்டுதல்களையும் நேர்ச்சைகளையும் நிகழ்த்துகின்றனர்.
இக்கோவிலுக்குச் சென்று வழிபடுவோர் பல சமயங்களைச் சார்ந்தவர்கள். 2011ஆம் ஆண்டில் பா.ஜ.கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி அங்கு சென்று வழிபட்டது குறிப்பிடத்தக்கது.[3]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads