மூன்றாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)

From Wikipedia, the free encyclopedia

மூன்றாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)
Remove ads

திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் (இலத்தீன்: Sixtus/Xystus III, இத்தாலியம்: Sesto III) கத்தோலிக்க திருச்சபையின் 44ஆம் திருத்தந்தையாக சூலை 31, 432 முதல் ஆகத்து 16, 440 வரை பணியாற்றினார்.[1]

விரைவான உண்மைகள் திருத்தந்தை புனித மூன்றாம் சிக்ஸ்துஸ், ஆட்சி துவக்கம் ...
Remove ads

உறவுப் பாலம் உருவாக்கியவர்

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருச்சபையில் கொள்கை தொடர்பாகக் கடுமையான விவாதங்கள் நடைபெற்றபோது, திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் வெவ்வேறு தரப்பினரோடும் கலந்துரையாடி அமைதி கொணர உழைத்தார். இவ்வாறு, "திருத்தந்தை" (இலத்தீன்: Pontifex - ஆங்கிலம்: Pontiff - bridge builder) என்னும் தம் பெயருக்கு ஏற்ப நடந்துகாட்டினார்.

பெருங்கோவில்கள் கட்டியவர்

திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் பணிப்பொறுப்பை ஏற்ற வேளையில் உரோமை நகரம் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்திருந்தது. கி.பி. 410இல் உரோமைக்கு வடக்கிலிருந்து அலாரிக் (Alaric) தலைமையில் படையெடுத்துவந்த விசிகோத்து (Visigoths) இனத்தவர்கள் பெரும் சேதம் இழைத்திருந்தனர்.

உரோமைப் பேரரசிடமிருந்து பெற்ற நிதி உதவியைக் கொண்டு திருத்தந்தை செயல்படுத்திய கட்டட வேலைகள் இவை:

  • உரோமையில் அமைந்துள்ள இலாத்தரன் பெருங்கோலின் திருமுழுக்குக் கூடத்தை மாற்றியமைத்துக் கட்டினார். அது எண்கோண வடிவில் அமைக்கப்பட்டது. அத்திருமுழுக்குக் கூடத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாசகம் திருமுழுக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மனிதர் மீட்படைய கடவுளின் அருள் எத்துணை இன்றியமையாதது என்பதையும் குறிப்பிடுகிறது. மேலும் பெலாஜியுசு என்பவர் மனிதர்கள் தம் சொந்த முயற்சியாலேயே மீட்படைய முடியும் என்று கூறிய திரிபுக் கொள்கையும் இவ்வாறு கண்டனத்திற்கு உள்ளாகியது.
  • உரோமையில் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதன்மைக் கோவிலாகிய புனித மரியா பெருங்கோவிலை முற்றிலுமாகப் புதுப்பித்துக் கட்டினார். இக்கோவிலில் பதிக்கப்பட்ட கற்பதிகை ஓவியங்கள் கிறித்தவ விசுவாசக் கொள்கைகளைப் பறைசாற்றுகின்றன. எபேசு நகரில் 431இல் நடந்த பொதுச்சங்கத்தின்போது நெஸ்டோரியசு என்பவரின் திரிபுக் கொள்கை கண்டனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து உண்மையான கிறித்தவக் கொள்கை பறைசாற்றப்பட்டது அந்த ஓவியங்கள் வழியாக அளிக்கப்படுகின்றன. அதாவது, இயேசு கிறித்துவின் தாயான அன்னை மரியா இயேசு என்னும் மனிதருக்கு மட்டுமே தாயாவார் என்றும் அவரைக் "கடவுளின் தாய்" என்று அழைப்பது தவறு என்றும் நெஸ்டோரியசு கூறியிருந்தார். இதை மறுத்து, திருச்சபை மரியா உண்மையிலேயே இயேசு கிறித்துவின் தாய் என்றும், இயேசு மனிதத் தன்மையையும் இறைத்தன்மையையும் கொண்டவர் ஆதலால் அவருடைய தாயான மரியாவை "கடவுளின் தாய்" என்று அழைப்பது பொருத்தமே என்றும் எபேசு பொதுச்சங்கம் அறிக்கையிட்டது. இந்த வரலாறு அக்கோவிலின் கற்பதிகை ஓவியங்கள் வழியாகக் கூறப்படுகிறது.
  • விசிகோத்து இனத்தவர் உரோமைக் கோவில்களிலிருந்து சூறையாடிச் சென்ற பொன் மற்றும் வெள்ளி அணிகளுக்கு மாற்றாக வேறு அணிகள் வழங்கும்படி திருத்தந்தை சிக்ஸ்துஸ் உரோமைப் பேரரசன் வாலன்டீனியனிடம் கேட்டுக்கொண்டார். பேரரசனும் அவ்வேண்டுகோளுக்கு இணங்கி, புனித பேதுரு பெருங்கோவில், புனித பவுல் பெருங்கோவில், புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் போன்ற கோவில்களை அணிசெய்ய நன்கொடை வழங்கினார்.
  • திருத்தந்தை சிக்ஸ்துஸ் உரோமையின் ஆப்பியன் சாலையில் புனித செபஸ்தியார் துறவற இல்லத்தை நிறுவினார்.
Remove ads

திருச்சபையின் ஒற்றுமைக்காக உழைத்தவர்

திருத்தந்தை சிக்ஸ்துஸ் திருச்சபையின் ஒற்றுமையைப் பாதுகாத்து வளர்த்திட உறுதியோடு உழைத்தார். 431இல் நடந்த எபேசு பொதுச்சங்கம் பதவி நீக்கிய அந்தியோக்கு மறைமுதல்வர் யோவான் என்பவரை மீண்டும் திருச்சபை ஒன்றிப்பில் கொணர்வதற்கு சிக்ஸ்துஸ் வழிவகுத்தார். அவர் யோவானிடம் கேட்டது ஒன்றே ஒன்றுதான்: அதாவது, நெஸ்டோரியுசு கைக்கொண்ட திரிபுக் கொள்கையை அவர் ஏற்றல் ஆகாது. சமயக் கொள்கைகளை விவாதிக்கும்போது எழக்கூடிய சிக்கல்களை சிக்ஸ்துசு நன்றாகவே அறிந்திருந்தார். அதாவது, திருத்தந்தைப் பணியை ஏற்பதற்கு முன் சிக்ஸ்துஸ் பெலாஜியுசு என்பவரின் திரிபுக் கொள்கைக்கு ஆதரவு அளித்திருந்தார்.[2] ஆனால் திருத்தந்தை சோசிமஸ் பெலாஜியுசின் கொள்கை தவறு என்று அறிவித்ததுமே சிக்ஸ்துஸ் திருச்சபையின் அதிகாரப்பூர்வ கொள்கையை ஏற்றுக்கொண்டார். அதற்கு புனித அகுஸ்தீனாரின் தூண்டுதலும் உதவியாயிற்று.

பண்டைய திருச்சபையில் நிலவிய இரு இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட திருத்தந்தை வழிவகுத்தார். அதாவது, இயேசுவின் இறைத்தன்மையை வலியுறுத்தி அவருடைய மனிதத்தன்மையைக் குறைத்து மதிப்பிட்டது அலெக்சாந்திரிய இயக்கம். அதற்கு நேர்மாறாக, இயேசுவின் மனிதத்தன்மையை வலியுறுத்தி அவருடைய இறைத்தன்மையைக் குறைத்து மதிப்பிட்டது அந்தியோக்கு இயக்கம். அந்த இருதரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சற்றே விட்டுக்கொடுத்து, ஒன்றிப்பு ஆவணத்தில் 433ஆம் ஆண்டு கையெழுத்து இட்டனர்.

கீழைத் திருச்சபைக்கும் மேற்குத் திருச்சபைக்கும் இடையே இழுபறி

கீழைத் திருச்சபையில் காண்ஸ்டான்டினோப்பிளின் மறைமுதல்வராக இருந்த புரோக்குல் என்பவர், திருத்தந்தையின் ஆளுகைகு உட்பட்டிருந்த இல்லீரிக்கம் என்னும் பகுதியைத் தமது ஆட்சிப்பகுதியோடு சேர்த்துக்கொள்ள முயற்சி செய்தார். இதைத் தடுக்க விழைந்த திருத்தந்தை சிக்ஸ்துஸ் உடனேயே இல்லீரிக்கம் பகுதி ஆயர்களுக்குத் தகவல் கொடுத்து அவர்கள் புரோக்குலின் செயலுக்கு உடன்படலாகாது என்றும், மாறாக, தமது பதிலாளாக தெசலோனிக்காவில் ஆயராக இருந்தவரையே ஏற்கவேண்டும் என்று ஆணையிட்டார்.

Remove ads

இறப்பும் அடக்கமும்

திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துஸ் 440, ஆகத்து 18இல் இறந்தார். அவருடைய உடல் புனித இலாரன்சு கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் மக்கள் அவருக்கு வணக்கம் செலுத்தத் தொடங்கினர். ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த "மறைச்சாட்சிகள் நூலில்" அவருடைய பெயர் இடம்பெற்றது.

திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துசின் திருவிழா மார்ச்சு 28ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads